Wednesday, November 18, 2015

எதை மேலும் சொல்ல இருக்கிறது யுத்தம் பற்றி!


 - 31 -

சிரியாவின் உள்நாட்டு யுத்தம் பிராந்திய யுத்தமாக மாறி உலக யுத்தமாக மாற்றம் பெற்று வருகிறது. யுத்தம் என்பதன் அர்த்தம் துயரம் என்பதுதான்.

யுத்தம் பற்றிப் பேசும் பல்லாயிரக் கணக்கான கவிதைகள் வெளிவந்திருக்கின்றன. வந்து கொண்டுமிருக்கின்றன. சிரிய யுத்தத்தின் கொடுமையை இரண்டு தினங்கள் நேரில் கண்டு ஒரு கவிஞர் எழுதிய கவிதையை இன்று பகிர்ந்து கொள்கிறேன். அந்தனி ஜே. மார்செலா என்ற கவிஞர் இந்தக் கவிதையை 2013 ஆகஸ்ட்டில் எழுதியிருந்தார். யுத்தம் பற்றிய ஆழ்ந்த சிந்தனையை விரிக்கும் கவிதை இது என்று உணர்கிறேன்.

ஏற்கனவே சொல்லப்படாத
ஏற்கனவே எழுதப்படாத
ஏற்கனவே பாடல்களில் பாடப்படாத
செய்யுள்களில் ஓதப்படாத
காவியக் கதைகளில் பகிரப்படாத
எதை மேலும் சொல்ல இருக்கிறது 
யுத்தம் பற்றி

தலை சிறந்த நடிகர்களைக் கொண்டு
குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய 
திரைப்படங்களில் 
கொடிகளின் அசைவுகளுக்கு மத்தியில்
பெருமையுடன் சண்டையிட்டும் செத்தும்
சித்தரிக்கப்படாத
எதை மேலும் சொல்ல இருக்கிறது
யுத்தம் பற்றி? 

அல்லது
கவனமாகச் செம்மைப்படுத்தப்பட்ட
புகைப்படங்கள் கொண்டு
எழுத்துக்கள் கொண்டு
இடையறாத சோக இசைக்கு மத்தியில்
துன்பமளிக்கும் வார்த்தைகளிலான
புலம்பல்கள் கொண்டு
தயாரிக்கப்பட்ட ஆவணப்படங்களில்
காட்டப்படாத எi மேலும் சொல்ல இருக்கிறது
யுத்தம் பற்றி?

ஏற்கனவே சலவைக் கற்களில்
செதுக்கப்படாத
கித்தான்களில் வரையப்படாத
ஈர்க்கும் வர்ணங்களிலும்
கருப்பு - வெள்ளைப் புகைப்படங்களிலும்
இரத்தம் சிவப்பு நிறத்திலும்
எலும்பு வெள்ளை நிறத்திலும்
மரணம் முடிவுறாதது என்றும் காட்டப்படாத
எதை மேலும் சொல்ல இருக்கிறது
யுத்தம் பற்றி?

ஏற்கனவே
தப்பிப் பிழைத்த வீரர்களின்
மனதிலும் உடலிலும் பதியப்படாத
பொது மகனால் பொறுத்துக் கொள்ள முடியாத
பிடிக்கப்பட்ட சிறைக் கைதிகளின்
வெளித்தெரியும் காயங்களும்
வெளித் தெரியாத காயங்களும் சொல்லாத
எதை மேலும் சொல்ல இருக்கிறது
யுத்தம் பற்றி

சூரிய ஒளியினாலும் நிழலினாலும் மூடப்பட்டு
தேசிய மரண நிகழ்வுகளில்
அர்ப்பணிப்புக்கான கௌரம் வழங்கப்பட்ட
உடல்களுக்கென
ஏற்கனவே தயாரிக்கப்பட்ட
கிரனைற் நடுகற்களில் செதுக்கப்படாத
எதை மேலும் சொல்ல இருக்கிறது
யுத்தம் பற்றி

கதாநாயகர்களையும் வில்லன்களையும்
சிப்பாய்களையும் தளபதிகளையும்
மாவீரர்களையும் சொங்கிகளையும்
சுதந்திரப் போராளிகளையும்
பயங்கரவாதிகளையும்
பாதிக்கப்பட்டவர்களையும்
ஆதரவாளர்களையும்
மன்னிப்புக் கோரலையும்
இழப்பீடு வழங்குதலையும்; பற்றி
ஏற்கனவே சொல்லப்படாத
எதை மேலும் சொல்ல இருக்கிறது
யுத்தம் பற்றி

பழிவாங்கல், ஆதிக்கம், மேலாண்மை,
நன்னடத்தைக் கடமைகள், பொறுப்பு,
வாய்ப்புகளையும் வளங்களையும் மேம்படுத்தல்,
கட்டுப்படுத்தலுக்கும் அதிகாரத்துக்குமான பேராசை,
தீமை பயத்தல், பெருஞ்சிறப்பு...
இத்தியாதி வார்த்தைகளால் சொல்லப்படாத
எதை மேலும் சொல்ல இருக்கிறது
யுத்தம் பற்றி

உயிர்கள் காவு கொள்ளப்படுகிற
சிந்ததைகள் சிதைக்கப்படுகிற
வாட்டர்லூ, பலூஜா போன்று
வெற்றி கொண்டோரின் பக்கச்சார்பான சொற்கள் கொண்டு
வரலாற்றாசிரியர்கள் வடிவப்படுத்துகிற
யுத்தகளங்கள் புகழப்படாத 
எதை மேலும் சொல்ல இருக்கிறது
யுத்தம் பற்றி

யுத்தத்தில் வெற்றியாளர் என்று
யாரும் கிடையாது!

எவ்வளவோ எழுதப்பட்டும்
எவ்வளவோ பேசப்பட்டும்
எவ்வளவோ செதுக்கப்பட்டும்
யுத்தத்தின் பாடங்கள் 
தொடர்ந்து அலட்சியப்படுத்தப்படுவதும்
தொடர்ந்து மறுக்கப்படுவதும்
தொடர்ந்து திரித்துக் கூறப்படுவதும்
ஏன்?

இதோ... இன்று சிரியா....

(நன்றி - மீள்பார்வை)
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: