கடந்த மாத வலம்புரி கவிதா வட்ட நிகழ்வில் வாசிக்கப்பட்ட
நான் மொழிபெயர்த்த கவிதை. படம் - நன்றி மேமன்கவி.
அழகு
பார்த்தவ் நாதிரி
(ஆப்கானிஸ்தான்)
தூரக் கிராமப் பெண்ணைப் போன்றது
உனது குரல்
அவள்
மலைகளில் உள்ள
பைன் மரங்களும் அறிந்த
உயரமும் உடல் நேர்த்தியும் கொண்டவள்
அந்திக் கருக்கலில்
நிலவின் சிறு குடையின் கீழ்
சுவர்க்கத்தில் குளித்த
பெண்ணைப் போன்றது
உனது குரல்
அவள் அதிகாலையில்
வீட்டின்
சுத்தமான ஓர் ஒளிக் குடுவையொத்தவள்
அவள் சூரிய அருவியிலிருந்து
மிடர் மிடராக அருந்துபவள்
தூரக் கிராமப் பெண்ணைப் போன்றது
உனது குரல்
அவள்
சிற்றருவியின் பாடல்களால் ஆன
கொலுசு அணிந்தவள்
அவள்
மழையின் கிசுகிசுப்பைக் கொண்டு
உருவாக்கப்பட்ட
காதணி அணிந்தவள்
அவள்
ஒரு நீர் வீழ்ச்சியின்
பட்டு கொண்டு நெய்யப்பட்ட
கழுத்து மாலை அணிந்தவள்
இவையனைத்துமே
பல்வர்ணங் கொண்ட
காதலின் மலர்ச்சிக்கு
சூரியனின் தோட்டத்துக்குக் கிடைத்த
கருணையாகும்
நீயுங்கூட அழகானவள்தான் -
உனது குரலைப் போல!
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
No comments:
Post a Comment