Tuesday, December 29, 2015

வில்பத்துவும் விவாதமும்!


வில்பத்துக் காடு அழிக்கப்படுவது நாட்டின் சுக, சுவாத்தியங்களுக்கு தீர்க்கவே முடியாத பிரச்சனையாகும் என்று கதையாடிய ஆனந்த தேரோவிடம் 'யார் யாராலோவெல்லாம் சிதைக்கப்படுகின்ற, சீரழிக்கப்படுகின்ற ஏனைய காடுகளைப் பற்றி அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பத்திரிகை ஆதரங்களைச் சுட்டிக் காட்டிய போது வில்பத்துப் பிரச்சனைக்குப் பின்னால் மறைகரங்கள் பல செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதைப் புத்தியுள்ள எவராலும் புரிந்து கொள்ள முடியுமாக இருந்ததைத் தொட்டுக் காட்டலாம்.

நேற்றிரவைய விவாதம் அல்லது பிரச்சனை பற்றிய ஹிரு தொலைக்காட்சி நிகழ்ச்சி விடுதலைப் புலிகளால் துரத்தப்பட்ட வடபுல முஸ்லிம்களின் குடியேற்றம் குறித்து முழு நாட்டுக்கும் நாட்டுக்கு வெளியில் உள்ளவர்களுக்கும் ஒரு தெளிவான விளக்கத்தை வழங்கியிருக்கிறது.

அமைச்சருக்கெதிராக ஆனந்த தேரர் முன்வைத்த விடயங்களில் சில அமைச்சருக்கெதிரான அரசியல் வன்மம் கொண்டவர்கள் கடந்த காலங்களில் கூவித்திரிந்தவையும் அடங்குகின்றன. குறிப்பாக இந்தக் குழுவுக்குள் ஆனந்த தேரருக்கு ஆதாரம் சமர்ப்பித்தவர்களில் அமைச்சருக்கெதிரான முஸ்லிம் அரசியல் போராளிகளும் உள்ளார்கள் என்பதையும் புரியக்கூடியதாக இருந்தது. அமைச்சருடனான தனிப்பட்ட பொறாமையும் இதற்குள் அடங்குகிறது.

சட்டப்படியான ஏற்பாடுகளுடன் முஸ்லிம்களில் ஒரு பங்கினரே குடியேற்றப்பட்டுள்ளார்கள் என்பதுவும் மீதி நான்கு பங்கினர் இன்னும் அகதி முகாம்களிலும் சொந்த இடங்களுக்கு வெளியேயும் வாழ்ந்து வருகிறார்கள் என்ற உண்மைக்கு தேரரிடமோ வினாவெழுப்பியவர்களிடமோ பதில் இருக்கவில்லை. அங்கு எந்தவிதப் பிரச்சனையுமே கிடையாது, இது அமைச்சராகவே தனது பிரபல்யத்துக்காக ஏற்படுத்திக் கொண்டது என்ற அவரது அரசியல் எதிரிகளது கூற்றும் பொய்யாகியிருக்கிறது.

மீள்குடியேற்ற அமைச்சர் என்ற வகையில் சட்டபூர்வமாகத் தமிழர்களைக் குடியேற்றியதைப் பற்றியோ சட்டத்தை மதியாமல் வேறு இடங்களில் சிங்களவர்களை அரசு குடியேற்றியதை எதிர்க்காமல் இருந்தமை பற்றியோ சர்ச்சைகள் எழவில்லை.

கடந்த காலங்களில் அப்பிரதேச முஸ்லிம்கள் வாழ்ந்ததற்கான காணி உறுதிகள், ஒப்பினைகள், உடைந்து சிதைத்திருக்கும் பாடசாலைகள், பள்ளிவாசல்கள், பாடசாலைகள் நிறுவப்பட்ட காலங்கள் பற்றிய ஆதாரங்கள் அனைத்தையும் காட்டிய பிறகும் உரிய மக்கள் அங்கு வாழவில்லை அல்லது அப்படியான கிராமங்கள் இருக்கவில்லை என்பவனும் அவனுக்கு ஒத்துழைப்பு வழங்குபவனும் ஒன்றில் குருடனாக, செவிடனாக புத்திசுவாதீனம் அற்றவனாக இருக்க வேண்டும் அல்லது ஏதோ ஒரு சக்தியின் பின்னணியில் இயங்குபவனாக இருக்க வேண்டும்.

மீள்குடியேற்ற அமைச்சராக இருந்து தமது மக்களைக் குடியேற்ற முடியாமல் குழப்பியடித்துக் கொள்கிறார் என்று குற்றம் சுமத்தியவர்கள் விவாதம் நடைபெறப் போகிறது என்றதும் 'இது வீண் வேலை, மற்றொரு தேரரை அரங்குக்கு கொண்டு வரும் தவறை அமைச்சர் செய்யப்போகிறார், மேலிடத்துடன் பேசி முடித்துக் கொள்ள வேண்டிய கருமம்' என்று புதுப்பாட்டுப் பாட ஆரம்பித்திருந்தார்கள். இவர்களுடை கவலை துரத்தப்பட்ட முஸ்லிம்கள் பற்றியதோ அவர்களது எதிர்காலம் பற்றியதாகவோ அவர்களது பரம்பரையின் கல்வி நடவடிக்கைகள் பற்றியதோ அல்ல. அமைச்சர் முஸ்லிம் அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத தடத்தைப் பதிந்து விடுவார் என்பதே.

விடுதலைப் புலிகளின் முஸ்லிம் வெறுப்பு மற்றும் முஸ்லிம் நிராகரிப்புக் கொள்கைளை முன்னெடுத்துச் செல்வோரின் கையாட்கள் என்று சந்தேகிக்கப்படும் முஸ்லிம்கள் ஒரு சிலரின் முகநூல் பதிவுகள் மற்றும் கருத்துப் பரிமாறல்களிலிருந்து 'அமைச்சர் தேவையற்ற காரியத்தில் இறங்கியிருக்கிறார்' என்பதை மட்டுமே படித்துக் கொள்ளக் கூடியதாக இருந்தது.

முஸ்லிம்களின் குடியேற்றம் பற்றி உக்கிரமாக எதிர்ப்புக் காட்டிய இரண்டாவது தேரர் ஆனந்த தேரர். முறைப்படி ஞானசார தேரரே இதை முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனால் அவரைச சந்தைப் படுத்த முடியாத நிலைமை இருக்கின்ற காரணத்தால் புதிய ஒரு தேரரைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

முஸ்லிம்கள் எங்கெல்லாம் சென்று வாழ்கிறார்களோ அங்கெல்லாம் இரண்டு பெரும்பான்மைளிலும் சில குழுக்கள் அவதானித்துக் கொண்டிருக்கின்றன, பிரச்சனைகளை ஏற்படுத்துவதற்குத் தருணம் பார்த்துக் கொண்டிருக்கின்றன என்பதையும் இந்த நிகழ்ச்சி சொல்லிச் சென்றிருக்கிறது.

டெய்ல் பீஸ்;:- நான்கைந்து அரசியல் பிரமுகர்களைக் கொண்டு விவாதம் நடத்த் தொலைக் காட்சி சார்பில் பெரும்பாலும் ஒருவரே நியமிக்கப்படுவதுண்டு. இந்த நிகழ்ச்சிக்கு மூவர் வந்திருந்ததானது ஒரு வகைப் பயத்தின் வெளிப்பாடாவே தெரிந்தது.
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: