டாக்டர் இஸ்ஸதுன்னிஸா
(இந்தக் கட்டுரை சகோதரி டாக்டர் இஸ்ஸதுன்னிசாவால் எழுதப்பட்டு அவரது முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டிருந்தது. அவரது அனுமதியுடன் எனது வலைப்பூவில் பதிவிட்டிருக்கிறேன்.)
பெண் கத்னா அல்லது female circumcision என்ற விடயம் எமக்கிடையே தற்போது பேசு பொருளாக மாறியுள்ள இக்காலத்தில் இரண்டு நோக்கங்களில் இரு பகுதிகளாக இக்கட்டுரை எழுதப்படுகிறது.
முதலாவது அது சார்ந்த மருத்துவ நோக்கிலும் (Medical aspect) அடுத்து சமூக நோக்கிலுமாக (Social aspect) சில விடயங்களை மாத்திரம் நான் சுட்டிக்காட்ட நினைக்கிறேன்.
மார்க்க மற்றும் கலாசார நோக்கு (Religious and cultural aspect) என்னால் இக்கட்டுரையில் அணுகப்படவில்லை. பொருத்தமானவர்கள் அப்பணியை தொடரலாம்.
பகுதி 1.
Female circumcision தொடர்பான மருத்துவ நோக்கு.
WHO இன் வரைவிலக்கணப்படி, female circumcision நான்கு வகைப்படுத்தப்படுகிறது.
Type 1- Removal of the prepuce of clitoris.
அதாவது, கிளிட்டோரிஸின் முற்தோலை நீக்குவது. இது முழுவதுமாக male circumcision இற்கு ஒப்பான removal of the penile prepuce என்ற முற்தோல் அகற்றல் முறையாகும்.
Type 2-4/ Female genital mutilation (FGM) :
removal or extraction of labia minora, labia majora and clitoris.
அதாவது, l.minora , l.majora and clitoris போன்ற பகுதிகளை அகற்றுதல் அல்லது சிதைத்தல் என்று பொருள்படும்.
இதில் எமது நாட்டிலும் ஏனைய இஸ்லாமிய நாடுகளிலும் இஸ்லாமிய வழக்காறாக நடைமுறையில் இருக்கும் நடைமுறை மேற்குறிப்பிட்ட type 1 அதாவது கிளிட்டோரிஸின் முற்தோல் நீக்கம் ஆகும். இதற்கு ஆதரவாக காட்டப்படும் ஹதீஸ்கள் முற்தோல் நீக்கத்தையே ஆகுமாக்கியதாகவும் ஏனைய சிதைத்தல் அல்லது அகற்றுதல் ஹராம்(தடுக்கப்பட்டவை)யாகவும் குறிப்பிடுகிறது.
ஏனைய வகை சிதைப்பு அல்லது அகற்றுதல் என்பது ஆப்பிரிக்க மற்றும் ஆசியாவின் ஏனைய சில பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படுவதாகும்.
ஆக, முற்தோல் நீக்கம் எனப்படும் விடயம் female circumcision எனவும் ஏனைய வகையறாக்கள் FGM எனவும் பிரித்து நோக்கப்படுகிறது. அதே நேரம் முறையான பாதுகாப்பில் female circumcision எனப்படும் முதலாம் வகையறா குறிப்பிடத்தக்க சுகாதார ஸ்தளங்களில் சட்டபூர்வமாக்கப்பட்டிருக்கின்றது.
(பார்க்க: இதழ் we eradicate HIV/ நாள் 2017.05.17.
இணைப்பு
http://www.pgspl.net/we-eradicate-hiv/our-press-release/why-female-circumcision-is-legally-not-a-part-of-female-genital-mutilation-fgm.html
ஒரு வைத்தியராக நான் இந்த 'நீக்கல் முறை'யை (technique of the removal procedure)அணுகிய போது அந்த குறித்த கத்னாவை மேற்கொள்வோர் பிரயோகித்த பதங்கள் 'சுரண்டுதல், நோண்டுதல், வழித்துவிடல், கீறியெடுத்தல் என்ற வகையறாக்களினுள்ளேயே அடங்கியது. மருத்துவத்தில் இவ்வார்த்தைகளை நாங்கள் abrasion or superficial cutting என்போம்.
இது laceration, extraction, removal எனப்படும் ஆழ்ந்த காயப்படுத்தல், சிதைத்தல், நீக்குதல் என்ற முறைமைகளில் இருந்தும் முற்றிலும் வேறுபட்டது என்பதை இதற்கான வார்த்தைப் பிரயோகங்களை பாவிப்போர் கவனத்தில் கொள்ள வேண்டும். சிதைத்தல் என்ற FGM உள்வாங்கும் வார்த்தைப் பிரயோகம் circumcision என்ற முதல் வகையறாவிலிருந்தும் முற்றிலும் வேறுபட்டது.
இங்கு விரிவாக இல்லாவிட்டாலும் இச்சமூக வழக்காறின் மார்க்கப் பின்னணியை கொஞ்சம் தொட்டுக்காட்டுவது பொருத்தமாகும்.
இஸ்லாமிய வழக்காறில் உள்ள கிளிட்டோரிஸ் முற்தோல் நீக்கம் என்பது சில ஹதீஸ்களின் பிற்பாடாய் வந்ததாக அடையாளப்படுத்தப்படுகிறது. பிரதானமாக இரு ஹதீஸ்களை இதற்கு சார்பானவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதே நேரம், இச்செயல் இஸ்லாமிய வலியுறுத்தல் இல்லை. இது ஒரு சமூகத்தின் கலாசார வழக்காக வந்ததே என தம் வாதத்தை முன் வைக்கும் நபர்கள் அந்த இரு ஹதீஸ்களும் ஆதாரபூர்வமாக மிகப் பலவீனமானவை. ஆக, பலவீனமான நிலையில் உள்ள ஹதீஸ்களுக்கான இஸ்லாமிய சட்டங்கள் அத்துடன் சமூக விழுமியங்கள் என்பவற்றை கருத்திற் கொண்டு இச்செயற்பாட்டை முற்றாய் கண்டிக்கின்றனர். தவிர்க்கப்பட வேண்டியதாய் அடையாளப்படுத்துகின்றனர்.
இலங்கை முஸ்லீம்களை பொறுத்தவரை, ஆரம்பத்தில் சாதகமாக முதலாம் தரப்பினருள் உள்வாங்கப்பட்ட (not an obligation) இந்த விடயம் பிற்பாடு இரண்டாம் தரப்பாரின் வாதத்திற்கு உள்வாங்கப்பட்டு குறிப்பிடத்தக்களவு தவிர்க்கப்பட்டது. இன்றளவும் அந்தத் தோரணையிலேயே பகிரங்க விழிப்புணர்வுகளும் அதற்கெதிரான மார்க்க உபன்னியாசங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த இரண்டு நிலைப்பாடுகளுக்கும் மத்தியிலேயே இலங்கை முஸ்லிம்களின் இந்த female circumcision தொடர்பான நிலமை உள்ளது என்பதே உண்மை. சரியான ஆய்வுகள் ஏதும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்பதால் இது தொடர்பான நிகழ்தகைமைகளை சரியாகக் கணிக்க முடியாதிருப்பினும் பல தரப்பட்ட கருத்தாடல்கள் மற்றும் எதிர்விளைவுகளானது அத்தகைய செயற்பாடு ஒரு வழக்காறின் இயல்பாக இன்னும் நடைமுறையில் ஆங்காங்கே இருந்து வருவதாகவும் அதே நேரம் பெருமளவில் குறைந்து வரும் ஒன்றாகவும் மிகக் குறுகிய காலத்தில் மருவிப் போய்விடக் கூடியதாகவுமே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, female circumcision இனது மருத்துவ சாதக பாதகங்களை அலசும் போது,
அதை சாதகமாகப் பேசுவோர்,
- அது தங்கள் குழந்தைக்கு வழங்கும் சுகாதாரப் பெறுமதி (hygienic measure) எனவும்
- சிறுனீர் வழி தொற்றுகளில் இருந்து(urinary tract infection) பாதுகாக்கிறது எனவும்
- HPV எனும் human papilloma virus இனால் ஏற்படக் கூடிய வாய்வழி மற்றும் கருப்பைக் கழுத்து (oral and cervical cancer) புற்று நோய்களில் இருந்தும் காக்கிறது எனவும்
- முற்தோலுக்கு கீழே தேங்கும் சுரப்பினால் ஏற்படும் அவிந்த முட்டை போன்ற நாற்றத்தையும் (unpleasant foul smelling because of the secretion beneath the prepuce) அதனால் ஏற்படும் அசெளகரியங்களையும் தடுக்கிறது எனவும்
- தேவையற்ற வகையில் எழும் மேலதிக பாலியல் ஆசையை (excessive libido) குறைக்கிறது எனவும்
- தேவையற்ற சாதாரணமாக அன்றாடம் நிகழும் முற்தோல் தூண்டுதலால் ஏற்படும் சதை வளர்ச்சியையும் அதனால் ஏற்படும் வலி மற்றும் பாலியல் அசெளகரியங்களையும் ( enlargement of the size of the clitoris because of excessive stimulation of the prepuce) தவிர்க்கிறது எனவும்
தமது வாதங்களை முன் வைக்கின்றனர்.
மருத்துவ ரீதியாக இதன் பாதகங்களை முன் வைப்போர்,
-இது சிறுவர் துஷ்பிரயோகம் (child abuse) என்ற வாதத்தை பிரதானமாகவும்
- பாலியல் ரீதியாக பெண்களுக்கு எதிராக நிகழும் துஷ்பிரயோகம் (sexual abuse against women) என்பதையும்
-பாதுகாப்பற்ற முறையில் மேற்கொள்ளப்படும் சுகாதாரமற்ற வழக்கம் ( unsafe and unhygienic measure) எனவும்
-கலாசார அடையாளமாய் திணிக்கப்படும் ஒரு வன்முறை (a cultural violence) எனவும் தமது வாதத்தை முன் வைக்கின்றனர்.
மேற்கூறப்பட்ட சாதக பாதக காரணிகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக ஆங்காங்கே ஆய்வுக்குட்படுத்தப்பட்டிருப்பினும் குறிப்பிடத்தக்க தொடரான ஆய்வுகளையும் அதன் முடிவுகளையும் வேண்டி நிற்பவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
எது எவ்வாறிருப்பினும், இதற்கெதிராய் எழுந்துள்ள 'சிறுவர் துஷ்பிரயோகம்' என்ற பிரதான வாதமானது அதே முறையில் நடந்தேறும் ஆண் குழந்தைகளுக்கான male circumcision இனை சிறுவர் துஷ்பிரயோகமாக தட்டிக் கேட்கத் தவறியமையினாலும் அதையும் அதன் மூலமான மருத்துவ நன்மைகளை மருத்துவ உலகம் அங்கீகரித்து அதை ஊக்குவிப்பதனாலும் அர்த்தமற்றுப் போகின்றது என்றே சுட்டிக் காட்ட வேண்டி இருக்கிறது.
இதன் சாதக பாதகங்கள் தனித்தனியாக முழுமையாக ஆய்வுக்குட்படுத்தப்படாத வரை மருத்துவ உலகு இவ்வழமையை முற்றாக அங்கீகரிக்கவோ முற்றாக மறுதலிக்கவோ இயலாத நிலையிலேயே இருக்கின்றது என்பதும் மறுக்க முடியாதது.
அடுத்து,
திடீரென இப்போது எழுத்தாளர்களிடையே இது பேசுபொருளாக்கப்பட்டதன் பின்னணியும் அது சார்ந்த சில சமூக நோக்கையும் வேறொரு பாணியில் குறிப்பிடுகிறேன்.
பகுதி 2:
சமூக நோக்கு.
Female circumcision என்ற சமூகக் கொடுமையைப் பற்றி அக்கறை கொண்டு பொங்கியெழுந்துள்ள அந்த நபர்களுக்கு, எங்கள் மீதான உங்கள் சமூக அக்கறைக்கு நன்றி.
நீங்கள் அடிக்கடி பச்சாதாபப்படுகின்ற அந்த 'பாவப்பட்ட' சமூகத்தை சேர்ந்த ஒருத்தியாய் நான் இதை எழுதுகிறேன்.
ஒரு மருவிச் செல்லும் கலாசாரப் பழக்கத்தில் நிகழும் எங்களுக்கான அனீதியைக் கூட காண்பதற்கு உங்கள் நெஞ்சங்கள் பொறுக்கவில்லை என்பதை நினைக்கையில் மெத்தப் பெருமிதம் எமக்கு. சொல்லப்போனால் ஏனைய சமூகப் பெண்களை விடக் கொடுத்து வைத்தவர்கள் நாங்கள். கொஞ்சமென்றால் ஓடோடி வந்து குரல் கொடுக்க உலகமே கொள்ளிக் கண்கொண்டு நோக்கிக் கொண்டிருப்பது நாங்கள் செய்த அதிஷ்டமன்றி வேறில்லை.
விடயத்திற்கு வருகிறேன்.
நீங்கள் பேசிக் கொண்டே செல்கிறீர்கள். எம் சமூகத்து ஆண்களும் மூச்சு முட்ட பதில் தந்து கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் எங்கள் மீது கொண்டிருப்பது நிஜமான அக்கறையல்ல என்பதாய் தெரிந்திருக்கிறது. அதையும் தாண்டிய உங்களது அப்பட்டமான சில சுய நலங்களுக்காய் நாங்கள் அல்லது எங்களது கிளிட்டோரிஸ் பயன்படுவதை ஆங்காங்கே துகிலுரிக்கவும் தவறவில்லை அவர்கள்.
இலங்கை முஸ்லிம் சமூகத்தில் அதிலும் குறிப்பாக நான் வாழும் கிழக்குப் பகுதி முஸ்லிம்கள் பற்றிய ஒரு மிகப் பெரும் பிழையான பிம்பத்தை கட்டியெழுப்பி இருக்கிறீர்கள் நீங்கள் அனைவரும்.
சொல்லப்போனால், உங்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும். நீங்கள் பேசு பொருளாக மாற்றியுள்ள அந்த பெண் கத்னா விடயம் எத்தனை சதவீதம் நடைமுறையில் தற்போது இருக்கின்றது என்பது. சத்தியமாய் உங்கள் அனைவருக்கும் தெரியும்.
என்னால் ஒன்று அல்லது இரண்டு தசாப்தத்திற்கும் மேல் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். அப்போது கிட்டத்தட்ட நூறு சதவிகிதம் ஆட்கொண்டிருந்த அந்த நடைமுறை இப்போது எவரும் மறுக்க இடமின்றி கிட்டத்தட்ட மிகச் சில, (உதாரணத்திற்கு 5-10) வீதங்களுக்கு குறைந்திருக்கின்றதென்றால் சத்தியமாய் அதற்குக் காரணம் நீங்களோ அல்லது உங்களது எழுத்தோ அல்ல. மார்க்க மற்றும் கலாசார விழிப்புணர்வூட்டல்கள் மாத்திரமே அதற்குக் காரணமாய் அமைந்தது. இப்போதும் அமைகிறது.
நிலமை அவ்வாறிருக்க, தொக்கிக் கொண்டிருக்கின்ற குறைந்தது அடுத்த ஓரிரு தசாப்தத்திற்கிடையே அடையாளமிழக்கப் போகின்ற அந்தச் சிறியதோர் வீதத்திற்காய் தடாலடியாய் நீங்கள் சிலர் களத்தில் குதித்திருப்பது பெருத்த ஆச்சரியத்தையும் பலத்த சந்தேகத்தையும் சாதாரணமாகவே உருவாக்கிவிட போதுமாயிற்று. நீங்கள் சார்ந்த ஒரு சில பின்புலங்கள் அந்த சந்தேகங்களை உறுதியும் படுத்துவதாயும் தோன்றுகிறது.
ஆக, அந்த ஒரு சில வீதங்களுக்காக யார் குரல் கொடுப்பது என்ற உங்கள் பெருங்கருணை புரிகிறது. நல்லது, அந்தத் தூய்மையான நோக்கத்திற்காக அப்பணியை நீங்கள் தொடர்ந்து செய்யுங்கள். அது கட்டாயம் செய்யப்பட வேண்டியதே. ஆனால் அதற்கு முதல் உங்களிடம் சுட்டிக்காட்டியே ஆக வேண்டிய ஒரு சில விடயங்கள் கிடப்பில் கிடக்கின்றன. நீங்கள் யாரும் அவை பற்றி பேசுவதாய் தெரியவில்லை. கிளுகிளுப்பில் இருக்கும் ஆர்வம் காத்திரமான விடயங்களில் இல்லை என்பது ஒரு வகையில் நிஜம்தானே.
இதோ -
இலங்கை (குறிப்பாக கிழக்கு) முஸ்லிம் பெண்களுக்கெதிரான கொடுமை ஒன்றிற்காய் போர்க்கொடி தூக்கி இருக்கிறீர்கள். ஆனாலும் இந்த சமூகத்தை ஆட்கொண்டிருக்கின்ற மிகப் பாரதூரமான வன் கொடுமைகளை உங்களது எழுத்துக்கள் அடையாளம் காணவில்லை. காணப்போவதும் இல்லை.
எங்களுக்கெதிரான வன்முறைகளை அடையாளப்படுத்தும் போது பூதாகாரமாய் தலை தூக்கி சிரிக்கிறது அந்த 'சீதனம்' எனும் அத்துமீறிய பொருளாதார ஒழுங்கு. அதைத்தாண்டி பேசவே முடியாதளவு விகாரங்களையும் அகோரங்களையும் இங்கு அது ஏற்படுத்தி இருக்கிறது. அதைப் பற்றி நான் இங்கு விளாவாரியாய் குறிக்கவில்லை. ஆனாலும் உங்கள் கண்கள் அவற்றை கண்டு கொள்வதில்லை. இரண்டே இரண்டு காரணம் அதற்கு. உங்கள் மூலதனமான ஆபாசம் அதில் உள்ளடங்கவில்லை. அத்தோடு உங்களை போசிப்பவர்களின் அடியாய் வந்த அடுத்த இன கலாசார வழக்கம் அது. ஆக அதற்கெதிரான சலசலப்பை விவாதத்தை நீங்கள் எம் சமூகத்திற்கு கொண்டு வரப் போவதில்லை.
அடுத்து, சாதியப் பிரிவினை.
என்ன சொல்ல. யானை போன வழி அறியாது எலிப்புழுக்கை போன வழி பற்றி கதை அமைத்துக் கொண்டிருப்பவர்கள் நீங்கள். எங்களுகெதிராய் நீங்கள் வெளிக்கிளம்பும் போதெல்லாம் சப்தமேயில்லாமல் சிரித்துக் கொண்டு உங்களோடு சேர்ந்து எங்கள் கரிசனை(?)க்காய் ஒப்பாரி வைக்கும் எங்களை அடுத்து வாழும் சக சமூகத்தின் மிகப் பெரிய பிரச்சனை இது. இலங்கைப் பெண்களுக்கு மீண்டும் குறிப்பாக கிழக்குப் பெண்களுக்கு நிகழும் அடுத்த கொடுமைகளுள் ஒன்றான சாதிய வேறுபாட்டால் நிகழும் மூப்பேறிய வயது, திருமணமாகாமலேயே வாழ்தல், தவறான பாலியல் தொடர்புகள், தற்கொலைகள், வன்முறைகள்,போன்றன இந்த சமூகப் பெண்களில் குடும்பங்களில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றன என்பது பற்றி உங்கள் எழுத்துக்கள் கோஷமெழுப்பப் போவதில்லை. கிளிட்டோரிஸ் மீது நிகழும் அனீதிக்காய் கொதித்துப் போயுள்ள உங்களுக்கு இந்தக் கேவலமான சமூக சமய கலாசார ஆதிக்கங்கள் பற்றி கிஞ்சிற்றும் கவலை இல்லை. அதில் பாதிக்கப்பட்டு வீட்டுக்குள் அடங்கிப் போய் தன் ஆயுளை முடித்துக் கொள்ளும் நூற்றுக் கணக்கான ( கவனிக்க: நூற்றுக்கணக்கான) பெண்களைப் பற்றி எந்த மனப்புளுக்கமும் இல்லை.
ஆமாம். நீங்கள் அவை பற்றி எல்லாம் கவலைப் படவே கூடாது. அவ்வாறுதான் உங்களுக்கான அஜெண்டா தயாரிக்கப்பட்டிருக்கிறது. உங்கள் காரியங்கள் சரியாக வேண்டுமென்றால் நீங்கள் தொட்டெழுத வேண்டிய விடயங்கள் ஏற்கனவே தொகுக்கப்பட்டிருக்கின்றன. அந்த ஒழுங்கில் தான் நீங்கள் பயணிக்க வேண்டும். வேறு வழியில்லை. ஏனெனில் யாரோ ஒரு நபர் கருத்திட்டதைப் போல் பல நேரங்களில் உங்கள் பெண்ணியல்வாத செயற்பாடுகள் 'முஸ்லிம் பெண்கள்' என்ற வட்டத்தை தாண்டிச் செல்லக் கூடாது என்பது மறைமுகமான ஆனாலும் அனைவரும் அறிந்த விதியாய் இருக்கிறது.
இதையும் தாண்டி,என் நாட்டு என் பிரதேச பெண்களின் ஆரம்பக் கல்வி, உயர் கல்வி, குடும்ப ஒழுங்கு, தொழில், வியாபாரம், அரச வேலை, பொழுது போக்கு, குடும்பப்பாரம், வெளி நாட்டு வேலை, காதி நீதிமன்ற செயற்பாடுகள், இள வயது திருமணம், விதவை மறுவாழ்வு, பிரயாணம், அரசியல், தலைமைத்துவம் போன்ற பல விடயங்களை தொட்டுக் காட்டி அவற்றின் முக்கியத்துவத்தையும் எந்த கிளுகிளுப்பும் இல்லாமையினால் உங்களைப் போன்றவர்களால் கண் நோக்கப்படாமல் கிடப்பிலேயே கிடக்கும் அவலத்தையும் விவரிக்க முடியும். விரிவஞ்சி தவிர்க்கிறேன்.
(இவ்விடத்தில் இவற்றையெல்லாம் ஆங்காங்கே பேசித்தானிருக்கிறோம் என்று கிளம்பி வந்து விட வேண்டாம். அப்படியாயின் உங்களுடைய அந்தப் பேச்சுக்கள் குறித்த அவ்விடயங்களில் ஏற்படுத்தியுள்ள பூச்சிய வீத மாற்றங்கள் பற்றியும் நாங்கள் மறுத்துப் பேச வேண்டி வரும்)
மிகச் சரியான உரிமைப் போராட்டமாய் அமைந்த அந்த பெண்ணியல்வாதம் , இன்று ஒரு வகையில் கடுமையாய் விமர்சிக்கப்படுவதற்கு உங்களைப் போன்றவர்களது இத்தகைய சின்னத்தனங்களும் சுய நலங்கள் பெருக்கெடுத்த பொது நலமுமே மிக முக்கியமாய் இருக்கிறது.
ஆக, முஸ்லிம் பெண்களின் நலவுகள் பற்றியே இரவும் பகலும் சிந்தித்துக் கொண்டும் துப்பறிந்து கொண்டும் இருக்கும் நல்லவர்களே.
நீங்கள் தொட்டுச் சென்றுள்ள அந்த 'கிளிட்டோரிஸ் சிதைப்பு' பற்றி நீங்கள் மேலும் பேசுங்கள். உங்கள் இலக்குகள் எய்யப் பெறும் வரை நீங்கள் பேசிக் கொண்டும், எம் இளைஞர்களை உசுப்பேத்திக் கொண்டும், அவர்களது உணர்ச்சிகளையும் கோபங்களையும் உங்கள் மூலதனமாக்கிக் கொண்டும் உங்கள் பாதையில் பயணித்துக் கொண்டே இருங்கள்.
ஆனால், அடையாளமிழக்கப்போகின்ற அந்த விடயத்தை 'நாங்கள்தானே பேசு பொருளாக்கினோம்' என்ற பெருமையைக்கூட நீங்கள் பெற்றுக் கொள்ள முடியாதளவு அதன் பின் விளைவுகள் இந்த சமூகத்தை வந்தடையச் செய்யும் ஒரு காலத்தில் நீங்கள் இதை பேசு பொருளாக்கி இருக்கிறீர்கள்.
சிறுபாண்மை சமூகமான எங்களை கருவறுக்க காத்திருக்கும், கருவறுத்துக் கொண்டிருக்கும் அந்த தீய சக்திகளுக்கு மீண்டுமொரு தீனியை அள்ளிக் கொடுத்திருக்கிறீர்கள். அந்த ஏக்கத்தையும் பதை பதைப்பையும் அது ஏற்படுத்தப் போகும் விளைவுகளின் எதிர்வுகூறலையும் அந்த மிகப் பெரும் எழுத்தாளரின் பேராசிரியரின் பதிவில் காணக் கிடைத்தது. கவலைப்பட நேர்ந்தது.
ஈடு செய்ய முடியாத சமூகத் துரோகம் அது. அவர் அவரது சமூகத்திற்காக அஞ்சுவதாய் தெரிந்தாலும் இங்கே இந்த நாட்டிலும் நாங்கள் அதே ஒடுக்கலைத்தான் எதிர் நோக்கி இருக்கின்றோம். இன்னும் தீவிரமாக எதிர் நோக்குவோம் என்பதை அவரது கவலையோடு சேர்த்து எமக்கான கவலையாகவும் மாற்றிக் கொள்கின்றோம்.
கருத்துரிமை, கருத்துச் சுதந்திரம் என்பவற்றைக் கடந்து நீங்கள் எடுத்தியம்பிக் கொண்டிருக்கும் இத்தகைய விடயங்கள் யார் யாருக்கு உபயோகமாய் போய்ச் சேருகிறது என்பது காலப்போக்கில் ஆவணங்களாய் தெரிய வரும்.
அந்த வகையில், கிளிட்டோரிஸ் சிதைப்பு என்ற பரிதாபத்தை கடந்து, அது ஒட்டு மொத்த சமூகத்திற்கு கொண்டு வந்து சேர்த்துள்ள இன்னுமின்னும் கொண்டு வரப்போகின்ற 'அந்த' வன்முறைக்குத்தான் என் முதற்கட்ட பரிதாபங்கள். அவற்றை நாங்கள் அனுபவிக்கும் காலமெல்லாம்
'ஏதோ ஒரு பொதுப்பெயர்' கொண்டு உங்கள் அனைவரையும் நாம் நினைவுறுத்திக் கொள்வோம். அந்த நேரங்களில் நீங்கள் உல்லாசமாய் உங்கள் பொழுதுகளை களித்துக் கொண்டிருப்பீர்கள்.
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
No comments:
Post a Comment