Monday, October 9, 2023

கஸ்ஸான் கனபானியின் வெய்யில் மனிதர்கள்” - எனது பார்வை - பிஸ்தாமி அகமட்


கஸ்ஸான் கனபானியின் ்வெய்யில் மனிதர்கள்” - எனது பார்வை


பிஸ்தாமி அகமட்

رجال في الشمس
எனும் தலைப்பில் பாலஸ்தீனிய இலக்கிய எழுத்தாளரும் அரசியல் செயற்பாட்டாளருமான கஸ்ஸான் கனபானியின் அரபு நூலை ஹிலரி பெட்ரிக் இன் Men in the Sun ஆங்கில மொழிபெயர்ப்பு வழியாக அழகிய தமிழுக்குள் கொண்டுவந்துள்ளார் பிரபல கவிஞரும் ஊடகவியலாளருமான அஷ்ரப் ஷிஹாப்தீன் அவர்கள். மூல நூலில் உள்ள கவித்துவமும் மொழிச்செழுமையும் நொருங்காமல் கலையாமால் அப்படியே அதே உணர்வுடன் இங்கும் படர விட்டிருப்பதை வாசகர்கள் முதல் பந்தியிலிருந்து இறுதி வரி வரை உணரலாம்.
அஷ்ரப் ஷிஹாப்தீன் இலங்கையின் மூத்த முன்னோடி இலக்கிய படைப்பாளி. பன்னூலாசிரியர். ஊடகவியலாளர். எழுத்தாளர். விமர்சகர். இலக்கிய மொழிபெயர்ப்பாளர்.
வெய்யில் மனிதர்கள் என்ற தலைப்பே அனைத்தையுமே தொலைத்து இழந்து பெருந்தவிப்பும் அங்கலாய்ப்பும் அலைச்சலும் சகிதம் வெறுங்கையுடன் உயிரை மாத்திரம் பணயம் வைத்து வெயிலின் அகோரத்தை, உஷ்ணத்தை, ஜீரணித்து நீண்ட நெடும் பயணத்தில் தம்மை ஈடுபடுத்தி ஏதோ ஒன்றை நோக்கி சென்று கொண்டே இருக்கும் மனிதர்களை அடையாளப்படுத்தும் குறியீடு symbol என்பதை புரியலாம்.
கஸ்ஸான் தன் எழுத்துக்கள் வழியாக குறியீடுகளைத் தான் பிரதான அடையாளங்களாக கையாள்கிறார்.
கஸ்ஸான் Ghassan Kanafani (1936–72) வரையான 36 வருடங்கள் உலகில் வாழ்ந்தவர். 20 ம் நூற்றாண்டின் செல்வாக்கு மிக்க பாலஸ்தீனிய எழுத்தாளர் கண்பானியின் மிகத்தரமானதும் காத்திரமானதுமான படைப்பாக இதனை கருதமுடியும். 1972 களில் கார் குண்டு வெடிப்பின் மூலம் அவரது உயிர் காவுகொள்ளப்பட்டது. பிறகு மொசாட் அதற்கு உரிமை கோரியது.
அவரது சிறுகதைகளும் சிறார் கதைகளும் நாவல்களும் இலக்கிய படைப்புகள் மீதான செறிவான விமர்சனங்களும் அரசியல் பத்திகளும் கனங்காத்திரமானவை. மரணத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் Popular Front for the Liberation of Palestine (PFLP) பிரச்சாரகராக செயற்பட்டதுடன் al-Hadaf (The Goal). பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் செயற்பட்டார். அவரது எழுத்துக்களில் சிறுகதை நாவல் இலக்கியங்களின் நவீன பாணிகளை நுட்பங்களை போக்குகளை துல்லியமாக அவதானிக்கலாம். கதாபாத்திரங்கள், அவர்களின் உணர்வுகள், உதிரும் வார்த்தைகள், ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள், அபிலாசைகள், அவஸ்தைகள் என அனைத்திலுமே அவை வெளிப்படுகின்றன.(மொழிபெயர்ப்பிலும் கூட அத்தகைய நுட்பங்களை மொழிபெயர்ப்பாளர் கவனமாக கையாண்டு நூலின் உயிர்ப்பை தக்க வைத்துள்ளார்) அதன் வழியாக பாலஸ்தீனிய பூர்வீக மக்களுக்கான இருப்பு, அடையாளம், அடையாள நெருக்கடி என்பவற்றை தனது புலம்பெயர் இலக்கிய வகையறா எதிர்ப்பிலக்கிய வகையறா போர்க்கால இலக்கிய வகையறா விடுதலை இலக்கிய வகையறா போன்றவற்றின் வழியே வெளிக்கொணர்கிறார்.
உரிமைக்கும் உயிருக்கும் இருப்புக்குமான அறைகூவலாக அவரது எழுத்துக்கள் உள்ளமை குறிப்பிடதக்கது. மத்திய கிழக்கின் வாழ்வியலை பாலஸ்தீன அகதிகள் வழியாக சர்வதேச தளம் நோக்கி மிகக்கவனமாக நுணுக்கமாக, உணர்வு பூர்வமாக, உயிரோட்டமாக நகர்த்த தனது மொழியாற்றலை, இலக்கிய புனைவை, வரலாற்றுணர்வை பயன்படுத்தி வரலாற்றில் பதியவைத்துள்ளார். கஸ்ஸான் அவரது எழுத்துக்களின் வெற்றி இதுவே.
1950 க்கு பின்னரான போர்க்கால சூழலில் வாழ்ந்த மக்களின் உணர்வுகள் தான் இங்கு வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படுகின்றன.வேறுபட்ட பரம்பரையை பிரதிநிதித்துவம் செய்யும் மூன்று பாலஸ்தீனியர்கள் தென் ஈராக்கிலிருந்து குவைத் நோக்கி சட்டரீதியற்ற முறையில் புலம்பெயர்வதுடன் கதை ஆரம்பமாகிறது. பஸ்ரா வரை சுதந்திரமாக வந்து அதன் பிறகு கடத்தல்காரர்களது உதவி பெற்று எல்லைப்பகுதிகளை நோக்கி பயணிக்கின்றனர். பூர்வீக நிலத்தின் வாசனையை விட்டு பிரிந்து, வலிகளை சுமந்து பயணிக்கும் அனுபவம் மரண வேதனை தான்.
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றிலும் 1600 களில் கோட்டை முஸ்லிம்கள் காலனித்துவத்தின் ஆயுத முனையில் நேரம் வரையறுக்கப்பட்டு பூர்வீக நிலத்திலிருந்து பலவந்தமாக பிடுங்கப்பட்டது முதல் 90 களில் வடபுலத்திலிருந்து வெளியேற்றப்பட்டது, 2000 ஆண்டுகளின் முதல் தசாப்தத்தில் கிழக்கின் மூதூரில் இருந்து வெளியேற்றப்பட்டது போன்ற கசப்பான துன்பியல் இருண்ட வரலாற்று நினைவுச்சுமைகளும் இங்கு நினைவு கூறத்தக்கவை. ஆக்கிரமிப்பின் விளைவால் வரும் விரக்தியே இத்தகைய உணர்வை தருகின்றன. விடுதலைக்கான குரல்களாக இவை அமையட்டும். இந்த நிமிடம் கூட பாலஸ்தீனம் குமுறிக்கொண்டு தான் உள்ளது சுதந்திர காற்றை ஒரு முறையாவது சுவாசிக்க
பாலஸ்தீனக்கவி மஹ்மூத் தர்வீஷின் ஒரு கவிதை இங்கு நினைவுக்கு வருகிறது.
அவர்கள் பின்னால் திரும்பிப்பார்க்கவில்லை.
அவர்கள் பின்னால் திரும்பிப்பார்க்கவில்லை
அகதி வாழ்வுக்கு விடையளிக்க
ஏனென்றால் எதிரே இருப்பதும் அகதி வாழ்வுதான்.
வட்டசாலையில் கைகாட்டி இருக்கிறார்கள்.
எனவே முன்னும் இல்லை. பின்னும் இல்லை.
வடக்கும் இல்லை, தெற்கும் இல்லை.
அவர்கள் நாடு பெயர்கிறார்கள்
வேலியிலிருந்து தோட்டத்துக்கு
முற்றத்தின் ஒவ்வொரு மூன்றடிக்கும்
ஓர் உயிலை விட்டுச்செல்கின்றார்கள்
நினைவில் வைத்திருப்பாய்
எங்களுக்குபிறகு
வாழ்வை மட்டும்.
அவர்கள் பயணிக்கிறார்கள்.
பட்டு விடியலிலிருந்து உச்சித்தூசிக்கு
இராமையின்(இல்லாமையின்) பொருட்கள் நிறைந்த
பெட்டிகளைச் சுமந்தபடி
அவர்கள் புறப்படுகிறார்கள்
வீடுகளிலிருந்து தெருக்களுக்கு
காயம் பட்ட வெற்றிச்சின்னத்தை விரித்தபடி
காண்போருக்கெல்லாம் கூறியபடி
நாங்கள் இன்னும் உயிரோடிருக்கின்றோம்
எனவே எங்களை நினைவு கூற வேண்டாம்
அவர்கள் வரலாற்றிலிருந்து வெளியேறினார்கள்
சுவாசிக்கவும் சூரியனில் குளிக்கவும்
அவர்கள் கனவு காண்கிறார்கள்
எவ்வாறு உயரே பறப்பதென்று

ஒரு நல்ல நூல் அதன் முதல் வரியினதும் இறுதி வரியினதும் உயிரோட்டத்திலும் உத்வேகத்திலும் வருடலிலும் தான் உயிர்வாழும்...
அந்த வகையில் கஸ்ஸான் கனபானியின் கலைநுட்பம் கதைசொல்லும் பாணி வாசகர்களை கட்டிப்போட்டுவிடும்
வேறெல்லா புலச்சிதறல்களையும் விட்டு கதைக்குள் குவியப்படுத்திவிடும்
கவலைகளை கரைபுரண்டோட வைக்கும்
காலப்பொருத்தம் மிக்க ஒரு நூலாக இதனை வாசகர்களுக்கு பரிந்துரைக்கலாம்
மத்திய கிழக்கின் சமகால நிலை கொதிப்பும் குமுறலும் கொந்தளிப்பும் நிறைந்ததாக உள்ளது. பாலஸ்தீனத்தை கலைவழியாக புரிய அழகான தருணம் இது. கல்பை அப்படியே உருகி ஓட வைக்கும் தன்மை நூலின் கனதியை வலிதாக்கிவிடுகிறது. வலிகளுக்கும் வலிமை சேர்க்கிறது
ஏனைய நாவல்கள் போலவே இங்கும் மனித இயல்புகள் பட்டுத்தெறிக்கின்றன. மகாத்மா காந்தி சொல்வது போல "பசியோடிருப்பவன் ரொட்டித்துண்டில் கடவுளைக்காண்பான்" என்பது எவ்வளவு தத்ரூபமாக இங்கு காட்சியாக்கப்படுகிறது.
ஆசைகள் திருமணம் இழப்பு நோய் வருத்தம் கடன்சுமை எதிர்காலம் என எல்லாமே சுழல்கிறது. ஆனாலும் அந்த துன்பியல் சக்கர சுழற்சி மட்டும் எல்லா பக்கமும் புடைசூழ்ந்து வருகிறது
அபூகைஸ் கைஸூரான் தவிர உள்ள எல்லோருமே யதார்த்தத்தின் அடையாளங்கள் குறியீடுகள் தான்
பாலஸ்தீன மக்களின் முக்கால பரிணாமம் தான் பிரதான கதாபாத்திரங்கள். அவை காலத்தின் நீட்சிக்கான சான்றுகள். முடிவோ முற்றுப்புள்ளியோ இன்றி தொடரும் அவலங்கள்
எத்தனை தலைமுறையாக இந்த அவலத்தை சுமந்து திரிவது...அந்த மக்கள்
கனரக வாகனம் என்பதே கதிரியக்க அறையின் உஷ்ணத்தை எதிரொலிக்க வைக்கிற நிலையில் எப்படி அந்த மூவரும் தம் வாழ்வை அதற்குள்ளே ரணமாகவும் மரணமாகவும் நிலைமாற்றிவிடுகிறார்கள். அதற்காக எத்தனை பகீரதப் பிரயத்தனங்கள். அதற்கான ஏற்பாடுகள். கடத்தல் பேர்வழிகள் கூட புலம்பெயர்வை எவ்வளவு சமயோசிதமாக லாபகரமான வியாபாரமாக்கியுள்ளனர். சட்டத்தில் எத்தனை ஓட்டைகள். அந்த ஓகஸ்ட் மாத கர்ண கொடூர வெயில் போலத்தான் பாலஸ்தீனத்துக்கெதிரானவர்களது மனங்களும். சுட்டுப்பொசுக்கி சாகடிக்கவே காத்திருக்கும். இதுவே இது நூலில் கதைக்கான கருவாக இருப்பினும் அங்கு காலங்காலமாக கண் முன்னே இப்படியான கவலைக்கிடமான மரணங்களைத்தானே விலை கொடுத்து வாங்கி வாழ்கின்றார்கள்.
சுதந்திரத்தின் பெறுமதியை உணர்த்த மரணத்தை உதாரணமாக காட்டியாக வேண்டியுள்ளது.
நிம்மதியின் பொருளுணர்த்த அவலத்தை அலைச்சலை காட்டியாக வேண்டியுள்ளது.
இருப்பின் பொருளுணர்த்த இல்லாமையே நோக்கி பயணித்தாக வேண்டியதை சொல்ல வேண்டி ஏற்படுகிறது
இன்னுமின்னும் சொல்லிக்கொள்ள முடியாத சோகம் படர்கிறது... நாவலை மெல்ல மெல்ல முடிக்க நகர்கையில்
நாடி நாளமெல்லாம் புல்லரிப்பு ஏற்பட்டு விடும். மொழிபெயர்ப்பின் சொற்களுக்குள் அகப்படாத சோகம் ஊடுருவும். அது உணர்வை நிச்சயம் கசக்கிப்போடும். ஆக்கிரமிப்புக்கும் ஆயுதத்துக்கும் அழிவுண்டாக்க சாபத்தை கொட்ட கக்க தூண்டும்.
வார்த்தைகளுக்குள் அகப்படாத ஒரு வலி
உங்களையும் ஆட்கொள்ளும். பாலஸ்தீன விடுதலை குறித்த தெளிவை புரிதலை தரும்.
மனிதாபிமான உணர்வை சர்வதேச எல்லை வரை பீறிட்டு பிரவாகித்து அநீதிக்கெதிராக குரல்கொடுத்து உண்மையை உரத்துச்சொல்ல தூண்டும். புலம்பெயர்தல் என்பதன் பின்னால் உள்ள சுமக்க முடியாத கனதியான சுமை குறித்து குறிப்பாலுணர்த்தும்.
அத்தனைக்குள்ளும் நாவலுக்கு நயம்தருவதாக
மொழியும் அரசியலும் மானுட உணர்வும் மனிதாபிமானமும்
சர்வதேச நாடுகளுக்கிடையிலான
கொள்கை கோட்பாடுகள்
எல்லைத்தகராறுகள் என ஏராளமான
பூடகங்களை
கட்டுடைத்து
கடந்து விடுகிறது
சொல்லிக்கொள்ள ஒன்றே ஒன்று
அல்லாஹ் கேட்பது போல
இறைவனது நில எல்லை விசாலமாக
இல்லையா
அதனை நோக்கி நீங்கள் நகரக்கூடாதா
என்பதற்கப்பாலும்
நீங்கள் என் வாய்திறக்காத மௌனிகளாக
உள்ளீர்கள்
ஒரே ஒரு வார்த்தை பேசி இருந்தால்
வாழந்திருக்கலாமல்லவா.... என்று கூறுவதாக உள்ளது
எட்வட் செய்த் சொல்வது போல
Speaking truth to the power
அதிகாரத்தின் முன் உண்மையை உரத்து பேசுவதன்
ஆக குறைந்த தரமாக
அவசியத்தின் போது வாய்களையாவது
கொஞ்சம் திறந்தால்
உயிரையாவது
காத்துக்கொள்ளலாம்
வாயைத்திறந்தால் வங்காளம் வரை போகலாம் என்பார்கள்
அந்த மூவரும்
அந்த எல்லைக்கு அப்பால் கூட போயிருக்கலாம்.... வாயை திறந்திருந்தால்
ஆனால் நாமோ அந்த கவ்கப் மீது பழியை போட்டு அமைதிகாக்கிறோம்
தட்டி ஒலியெழுப்புங்கள்
அவர்களது கல்புகள் இனியாவது திறந்துகொள்வதற்காக

(பிஸ்தாமி அகமட் எழுதிய முகநூல் கட்டுரை. நன்றியுடன் பகிரப்படுகிறது.)