Monday, December 16, 2024

அஷ்ரஃப் சிஹாப்தீனின் 'சுவர்களில் உருவாகும் சுவர்க்கங்கள்'

 


சுமையா ஷரிப்தீன்

'காணாமல் போனவர்கள்', 'என்னைத் தீயில் எறிந்தவள்', 'தேவதைகள் போகும் தெரு' ஆகிய மூன்று சிறந்த கவிதைத் தொகுதிகளை அடுத்து அஷ்ரஃப் சிஹாப்தீன் நமக்குத் தந்திருக்கும் கவிதைத் தொகுதி 'சுவர்களில் உருவாகும் சுவர்க்கங்கள்.' இக்கவிதை நூலானது உருவ ரீதியாகவும் உள்ளடக்க ரீதியாகவும் மிகவும் காத்திருமான ஒரு படைப்பாகும். ஐம்பது கவிதைகளையும் எட்டுக் குறும்பாக்களையும் கொண்டுள்ள இக் கவிதைத் தொகுதியின் உள்ளடக்கம் குறித்து கவிஞர் தனது முற்குறிப்பில் பின் வருமாறு குறிப்பிடுகிறார்:-

'கடந்த ஐந்து வருடங்களுக்குள் கோவிட் வைரஸ், நாட்டின் அரசியல் சூழல், பொருளாதார வீழ்ச்சி ஆகியன நம்மை நடமாட முடியாத நிலைமைக்குத் தள்ளிய போது முடங்கிக் கிடந்த காலங்களில் உருவான கவிதைகளே இவை.' அவர் இப்படிக் குறிப்பிட்டிருந்தாலும் அவற்றைத் தாண்டிய பல உள்ளடக்கச் சிந்தனைகளை நாம் இக்கவிதை நூலில் காணக் கிடைக்கிறது. மிகையான புனைவுகளோ வார்த்தை ஜாலங்களோ வீணான சொல்லடுக்குகளோ ஏதுமின்றி வாழ்வியல் யதார்த்தங்களைப் பாடு பொருள் ஆக்கியுள்ளார் கவிஞர். .,இனவாதம், வரறுமை, பேச்சுரிமை, விளிம்பு நிலை மக்கள் என்ற அடிப்படையில் இவடைய கவிதைகளை நாம் நோக்கலாம். 

பன்மைத்துவ சமூகம் ஒன்றில் இனவாதம் இன்று தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. நாம் அனைவரும் இனவாதத் தீயினால் கருகியவர்கள். மோனாலிஸா முகங்களும் அருகில் நிற்பவரும், பான்மைகளின் இடைவெளி, நடத்தை ஆகிய கவிதைகள் இனவாதிகள் குறித்து அதிகம் பேசுகின்றன.  நடத்தை என்ற கவிதை இனவாதிகளுக்கான சாட்டையடியாகவே அமைந்திருக்கிறது. அதன் இறுதி வரிகள் இவ்வாறு அமைகின்றன.

'அவமதிக்கும் சொற்களை
கறள்பிடித்த கத்திகள் போல் 
பயன்படுத்தி
நீ என்னை அவ்வப்போது
குத்திக் கொண்டேயிருக்கிறாய்

அனுபவித்துக் கொண்டே
அமைதியாக இருக்கிறேன் என்பதால்
ரோஷமற்றுப் போய் விட்டேள்
என்று அர்த்தமல்ல

நான் பெரும்பான்மையாகவுள்ள
ஒரு தேசத்தில் வாழ நேர்ந்து
எனது மார்க்கம்
என்னைப் பண்படுத்தவில்லையென்றால்
நானும் நடந்து கொண்டிருப்பேன்
உன்னைப் போலவே.'

மேலும் இனவாத சமூகத்துக்குள் நின்று கொண்டு தேசப் பற்று குறித்து 'தேசம் மீதான நேசம் என்ற கவிதையில் ; இவ்வாறு பேசியுள்ளார்:-

'யாரது இரத்தத்தின் மீதும்
யாரது கண்ணீர் மீதும்
யாரது வியர்வை மீதும்
இன்னொருவரால்
தன்னுடையதென்று
நிரூபிக்கப்படுவதற்கானது அல்ல
ஒரு மனிதனின் தேசத்தின் மீதான நேசம்'

இன்று பெரும்பான்மையினரில் பலர் இவ்வாறு மார்தட்டிக் கொண்டிருப்பதை மறுத்துரைக்கிறார் கவிஞர். எவ்வளவு உணர்வுபூர்வமான வரிகள் இவை.

வைத்தியர் ஷாபி மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாதத் தீ குறித்தும் அவர் ஒரு குறும்பாவில்  பேசியுள்ளார். அரசியல் இலாபங்களுக்காக சிறுபான்மையினர் மீது கட்டவிழ்த்து விடப்படுகிற வன்முறைகளுக்கு எதிராக வாய்ப்பான ஊடகமாகத் தனது கவிதைகளைப் பயன்படுத்தியுள்ளார் அஷ்ரஃப் சிஹாப்தீன். ஜனநாயக நாடுகளிலும் கூட சாதாரணின் பேச்சுரிமை மறுக்கப்பட்டே வருகிறது. 'இரண்டிலொரு பாவம்',  'ஒரு கவிதையின் பயணம்' ஆகிய கவிதைகளில் இவர் பேச்சுரிமை குறித்து அதிகம் பேசுகிறார். 'இரண்டிலொரு பாவம்' இவ்;வாறு பேசுகிறது: -

'கழிவு நீர் அதிகம் ஓடாத தெருக்கானில்
அவனில் தங்கியிருந்த குப்பைகளுடன்         
சிதிலமாய்க் கிடந்தான்

நேற்றிரவு அல்லது அதிகாலை
நிகழ்ந்திருக்கலாம்

தெருவில் நடந்து வந்தவர்களில் சிலர்
எட்டி நின்று
எட்டிப் பார்த்துப் போனார்கள்

மற்றும் சிலர் எதுவும் நடவாததுபோல்
விரைவாகக் கடந்து போனார்கள் 
தெருவின் அடுத்த பக்கத்தால்

இடத்திலிருந்து சற்று விலகி
சலசலத்துக் கொண்டிருந்தவர்களில்
அறுபது வயது மதிக்கத்தக்க ஒருவர்
பக்கத்தில் நின்றிருந்தவரிடம் சொன்னார்

பாவம்
உண்மை பேசியிருப்பான்
அல்லது கேள்வியெழுப்பியிருப்பான்!

'ஒரு கவிதையின் பயணம்' என்ற கவிதையில் ஓர் எளிய கவிதைப் பிரதியின் பயணம் பற்றிக் குறிப்பிட்டு அது இறுதியில் ஒரு பிரசங்கியின் கரங்களைப் போய்ச் சேருகிறது. அவ்வாறு சென்று சேர்ந்த பிரதியின் கதியை இவ்வாறு குறிப்பிடுகிறார்:-

'ஒரு பிரசங்கியின் கூட்டத்துள் நுழைந்து
பிரசங்கியைப் பழித்துக் காட்டிற்று
அவரது அடியார்கள்
அதைக் கைப்பற்றினர்
ஆத்திரத்தோடு கிழித்துக் கீழே போட்டு
தும்புத் தடியால்
கூட்டித் தள்ளினர் வெளியே'

இவ்வாறுதான் நமது பேச்சுரிமை நமது சமூகத்துக்கு மத்தியிவ் காணப்படுகிறது.

பின்நவீனத்துவ காலத்தில் வறுமை குறித்துப் பாடாத கவிஞர்கள் இல்லை என்று சொல்வோம். 8 அந்த வகையில் அஷ்ரஃப் சிஹாப்தீனும் வறுமை குறித்துத் தனது நூலில் பாடியுள்ளார். அழியாத கோடு என்ற கவிதையில்  யாராலும் அழிக்க முடியாத கோடு  வறுமைக் கோடு என்ற சமூக நியதியைப் பேசுகிறார். மேலும் வெட்கக் கேடு எனும் கவிதையில் கவதை எவ்வாறு இருக்க வேண்டும் என்ற தன்னுடைய கருத்தைக் கூடதெளிவாகச் சொல்லி வைக்கிறார்:- 

'பசித்த மானுடம் குறித்துப் பேசும் 
ஒரு கண்ணீர் வார்த்தை கூட 
அவற்றில் இல்லை  
மக்களின் வறுமை ஆகற்றாத 
மக்கள் விரோதிகளுக்கு முன்னால் 
நெருப்புப் பொறி போல் 
ஒரு சொல்லை வீச முடியவில்லை எனில் 
நமது கவிதைகள் 

வெட்கப்பட வேண்டியவை.' என மனிதத் தன்மை நிறைந்த ஒரு நல்ல மனிதராகத் தன்னை இக்கவிதையில் வெளிப்படுத்தியுள்ளார் அஷ்ரபஃ சிஹாப்தீன். 

அன்றாட அவலங்களை தமது கவிதைகளில் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்ற கவிஞர் சர்வதேச ரீதியில் அரங்கேறியுள்ள அக்கிரமங்களையும் பாடு பொருளாக்கியுள்ளார். கிறிஸ்ட் சேர்ச் தாக்குதல், பொள்ளாச்சி இளம் பெண்கள் பாலியல் பலாத்காரம் ஆகியவற்றையும் தமது கவிதைகளில் அலசியுள்ளார்.

இவை எல்லாவற்றையும் தாண்டி அஷ்ரஃப் சிஹாப்தீன் எனும் கவிஞரை நான் சிலாகித்து வியந்து ரசித்து வாசிக்கக் காரணம் அவர் விளிம்பு நிலை சார்ந்த மக்கள், அவர்களது வாழ்க்கை இன்னல்கள் குறித்து அதிகமதிகம் தனது கவிதைகளில் பேசியுள்ளார் என்பதுதான்.சமூக அமைப்பில் மையம், விளிம்பு நிலை என்ற இரண்டு விடயங்கள் என்றுமே இருந்து வந்துள்ளன. மையம் அதிகாரத் தன்மையுடையதாகவும் விளிம்பு ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ளதாகவும் அறியப்பட்டவை. ஆதிக்க வெறியர்களால் ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்கள் தம் கோபத்தையும் உரிமை வேட்கைகளையும் அரசியல் உணர்வையும் வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பான ஊடகமாகக் கவிஞர் தனது கவிதைகளைக் கையாண்டிருக்கிறார். எனது கவலை எனும் கவிதை பின்வருமாறு பேசுகிறது:-

'ஒவ்வொரு கணமும் 
யாரோ ஒருவன்
யாரோ ஒருத்தி
ஏதோ ஓரிடத்தில்
அதிகாரங்களின் கீழ்
அவமானப்படுத்தப் படுகிறார்கள்
ஆக்கிளைக்குள்ளாகிறார்கள்

அரசியலின் பெயரால்
ஆன்மீகத்தின் பெயரால்
இனத்தின் பெயரால்
மொழியின் பெயரால்
அராஜகம் ஒன்றை
அரங்கேற்றிக் கொண்டேயிருக்கிறார்கள்

அதிகாரங்களால் ஒடுக்கப்படும் விளிம்பு நிவைச் சமூகத்தை வெளிவர முடியாத வார்த்தைகள் எனும் கவிதையில் மிக அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

அங்கிங்கெனாதபடி
எல்லா இடங்களிலும்
சுழன்று கொண்டேயிருக்கின்றன
வரி வடிவிலோ உச்சரிப்பிலோ
வெளிப்படுத்த முடியாத சில வார்த்தைகள்

அநேகமாகவும் 
வினாக்களாகவே அமைந்து விடுகின்ற
அவ்வார்த்தைகளுக'குள்
உண்மைகளைத் தவிர
வேறேதும் இருப்பதில்லை 

அதிகார மையங்களை நோக்கி
ஒரு புயலைப் போல் 
சுழன்றெழும் இவ்வார்த்தைகள்
உரிய இடங்களில்
எப்போதும் எவ்வடிவிலும்
வெளிப்படுவதில்லை

அதற்கான காரணம் என்னவென்று அவரே சொல்கிறார்:-

உண்மைகளைப் பேசப் பயமெதற்கு
என்பவர்கள்
உண்மைகளைப் பேசியவர்களின்
கதையறியாக் கற்றுக் குட்டிகள்

உண்மைகளைப் பேசியவர்களின் நிலை, ஒடுக்கப் பட்டோருக்கு நேர்ந்த கதி, உண்மை பேசியோருக்கு இழைக்கப்பட்ட அநீதி எல்லாம் அனுபவசாலிகளுக்குத்தான் தெரியும். இவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் புரட்சிகரமான வரிகள் மூலம் குரல் கொடுத்திருக்கிறார் அஷ்ரப் சிஹாப்தீன்.

பொதுவாக இவரது கவிதைகள் யதார்த்தத்தைப் பேசி நிற்கின்றன. அத்தகைய யதார்த்தங்களில் ஒன்றுதான் முதுமை. அனைவரும் எட்டவேண்டிய ஒன்று முதுமை. இவருடைய முதுமைப் பேறு எனும் கவிதையைப் படிக்கும் போது வைரமுத்துவின் காதலித்துப் பார் எனும் கவிதை ஞாபகம் வருகிறது. காதல் ஏற்பட்டால் என்னென்ன மாற்றங்கள் உண்டாகுமோ அவ்வாறு முதுமை அடையும் போது ஏற்படும் மாற்றங்களை மிக அழகாக எடுத்துச் சொல்கிறார். 

நாற்பதினைத் தாண்டுகையில் நரையரும்பும்
நான்கைந்து சொல்லில் வாய் துரை ததும்பும்
நேற்றுரைத்த வார்த்தை இன்று மறந்து போகும்
நடுமண்மை திறந்தவெளி அரங்கமாகும்
காற்புள்ளி கண்ணுக்கு மறைந்து போகும்
காதில் விழும் புதுப்பாடல் ஊளையாகும்

ஆனாலும் நாட்டில் ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சனை ஆட்சியாளர்களின் அதிகார நிலை, ஏழை மக்கள் அரசினால் எவ்வாறு வஞ்சிக்கப்பட்டார்கள் என்ற விடயங்கள் பற்றியும் அவர் பேசத் தவறவில்லை. அதற்குக் கெட்ட  நாமும் கெடாத காலமும் எனுங் கவிதையில் தொடர் மின்வெட்டு, பெற்றோல் வரிசை, பொருட்கள் சேவைகளின் அசாதாரண விலையுயர்வு என்பவற்றை இவ்வாறு காட்சிப்படுத்துகிறார்:-

முதற் சொல்லை எழுதுகையில்
முதற் செயலைத் தொடங்குனையில்
மின்சாரம் துண்டிக்கப்பட்டு விடுகிறது

தெருவோரங்களில் 
வரிசையில் நகர்கிறார்கள் மக்கள்
எறும்புக் கூட்டம் போன்று

வயிறும் மார்பும் வற்றிய தாய்மாரின் 
கண்களிற் குளங்கள்

பணங்கொடுத்துப் பொருள் வாங்குவது கூடப்
பிச்சை எடுப்பது போலாயிற்று

என்று நம்நாடு கடந்து வந்த துயர நிலையை இவ்வாறு காட்சிப் படுத்துகிறார்.

'செத்துக் கொண்டிருக்கும் தெரு' எனும் கவிதையில்:-

அனுமர் வாலாக நீளும் வரிசைகளில்
சோற்றுக் கனவுககோடு 
நின்றிருக்கிறார்கள் மனிதர்கள் - 
மண்ணெண்ணெய்க்காக
பெற்றோலுக்காக
இராணுவ உதைக்காக

என்று யதார்த்தத்தைத் தன் கவிவரிகளில் சொல்கிறார் அஷ்ரஃப் சிஹாப்தீன்.

இந்தக் கவிதைத் தொகுதியிலே அவர் சிறந்த புனை திறன் உத்திகளையும் கையாண்டிருக்கிறார். படிமம், குறியீடு, அங்கதம் முதலான உத்திகள் மூலம் இந்த நூல் மேலும் செழுமை பெறுகிறது. எறும்புகள், பூட்டுகள், மேய்ப்பனும் எருமைகளும், சிம்மாசன உரை ஆகியன குறியீட்டுக் கவிதைக்கான சில உதாரணங்களாகும். எறும்புகள் என்ற கவிதை சுரண்டல் குறித்துப் பேசுகின்ற ஒரு கவிதை. அக்கவிதையை வாசிக்கும் போது அது எறும்புகள் குறித்துப் பேசுகிறது என்று மட்டும் அர்த்தமல்ல. உள்ளார்ந்த அர்த்தம் என்னவெனில் ; மக்கள் எவ்வாறெல்லாம் அதிகார மையங்களால் சுரண்டப்படுகிறார்கள் என்பதையே கவிஞர அழகுற எடுத்துக் காட்டுகிறார்:- 

ரொம்ப மோசம் இந்த எறும்புகள்
இவற்றின் உணர்திறன் அதிகம் என்பதால்
எல்லாவற்றுக்குள்ளும்
நுழைந்துண்ண முயல்கின்றன

யாருடைய பொருட்கள்
அவை என்பது
அவற்றுக்கு ஒரு பொருட்டே அல்ல
ரோசங் கெட்டதுகள்

..........................

பார்ப்பதற்கே பரவசம் தரும்
அவற்றின் பயணம் 
ஒன்றில் திருட்டை நோக்கி
அல்லது திருடிக் கொண்டு
திரும்பிச் செல்வது என்பது
பின்னர்தான் நமக்குத் தெரிய வருகிறது.

அவை ஒற்றுமையை நமக்குக் காட்டுகின்றன
அந்த ஒற்றுமையே திருடுவதற்குத்தான்
என்பதைத்தான்
நாம் கவனிக்கத் தவறி விடுகிறோம்.

இந்தத் தொகுதியல் சிம்மாசன உரை என்ற தலைப்பில் அஷ்ரஃப் சிஹாப்தீன் ஓர் அழகான குறியீட்டுக் கவிதையைப் படைத்துள்ளார். நமது முன்னாள் ஜனாதிபதி ஒருவர் பற்றிப் பேசுகிறது அக்கவிதை.

நேற்று
குகையிலிருந்து வெளியே வந்தது
கிழட்டுச் சிங்கம்

அதன் கண்களில் தெரிந்தது
ஒரு முயலின் தலிப்பு

அசைவுகளில்
ஓர் ஆட்டுக் குட்டியின் பயமிருந்தது

ஓநாய்களுக்கும் குட்டிகளுக்கும்
சிறப்புத் தேவையுடைய நரிகளுக்கும்
சுரத்தற்ற குரலில்
அது உபன்னியாசம் வழங்கிற்று

அப்பாலிப் பிராணிகள்
அன்றாடம் அவதிப்படுவதையிட்டு
தளுதளுத்த குரலில்
கவலை வெளியிட்டது.

அவற்றின் நலன் காக்குமாறு
ஓநாய்களிடமும் நரிகளிடமும்
பரிந்துரை செய்தது

நாடு பற்றி எரிவது பற்றியோ
பறவைகளும் பிராணிகளும்
அவலக் குரல் எழுப்பி
அலைமோதுவது பற்றியோ
தாகந் தணிக்கத் 
தண்ணீருக்கலைவது பற்றியோ
எதுவும் சொல்லாமல்
யாரும் அறிந்திராத தனது குகைக்குள்
மீண்டும் புகுந்து கொண்டது.

அடுத்து அவரது அங்கதம் பற்றியும் சொல்ல வேண்டும். இக் கவிதை நூலில் மாற்றம், வடை மான்மியம் ஆகியவை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய அங்கதக் கவிதைகளாக இடம்பெற்றிருக்கின்றன. நாட்டில் நிலவிய எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை சுவைக்கத் தக்க அங்கத்தோடு சொல்லிச் செல்கிறார். அக்காலப் பிரிவில் எரிவாயு சிலின்டர் ஒன்றைப் பெற்றுக் கொள்ள ஆண்கள் பட்ட பாட்டை யாவரும் அறிவர். எரிவாயு சிலின்டர் கடைப் பெண் ஓர் அரசி போல் மாறிவிட்டிருந்ததாகச் சொல்லுகிறார்.

இவ்வாறு அரசியல், சமூக? பொருளாதார விடயங்களை அவ்வப்போது பதிவு செய்திருப்பதை ஓரட ஆவணமாகப் பார்க்கும் போதுதான் இந்தக் கவிதைத் தொகுதியின் கனதியை எம்மால் கண்டு கொள்ள முடிகிறது. 


(தர்ஹா நகரில் நடைபெற்ற நூல் அறிமுக விழாவில் ஆசிரியை சுமையா ஷரிப்தீன் வழங்கிய நயவுரையின் எழுத்து வடிவம். 15.12.2024 அன்று தினகரன் வாரமஞ்சரியில் பிரசுரமான ஆக்கம்.)



இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: