Saturday, March 1, 2025

'கழுதை மனிதன்' மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்


பஸ்லி ஹமீட்

சிறுகதைகள் வாசகர்களின் சிந்தனையை மேம்படுத்துகின்றன. அத்தோடு தன்னம்பிக்கை,  மனிதாபிமானப் பண்புகளை வளர்க்கவும் உதவுகின்றன. சிறுகதைகளுக்கான கதைக் கருக்கள் சமுதாயத்திலிருந்தே பெறப்படுகின்றன. ஒரு எழுத்தாளன் எப்போதும் தான் சார்ந்த சமுதாயத்தை அவதானித்துக் கொண்டே இருக்கிறான். அச்சமுதாயத்தின் முக்கிய அசைவுகளை கதைகளாகப் பதிவு செய்து அவற்றைப் பிறிதொரு சமூதாயமும் அறிந்து கொள்ளும்படி செய்கிறான். இவ்வாறு எழுதப்படும் கதைகள் அவற்றின் மூல மொழிகளைத் தாண்டி வேறு மொழிகளிலும் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டு உலகளவில் கொண்டு செல்லப்படுகின்றன.

அந்த வகையில் அஷ்ரஃப் சிஹாப்தின் அவர்கள் அண்மையில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ள 'கழுதை மனிதன்' சிறுகதைத் தொகுப்பில்  மேற்சொன்ன விடயங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள் ஏற்கனவே பல மொழிபெயர்ப்பு நூல்களைத் தந்து அவரது மொழிபெயர்ப்பு ஆற்றலுக்காக அரச சாகித்ய விருது பெற்றவர். ஆகவே இந்நூல் வாசகர் மனங்களில் முன்கூட்டிய ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்த எதிர்பார்ப்பை ஈடேற்றுவதுபோல் அற்புதமான ஒன்பது சிறுகதைகளைத் தெரிவு செய்து இதில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார் அவர்.

நூலின் முதற்கதையான ஆஷாபூர்ணா தேவி எழுதியிருக்கும் தீப்பெட்டிகள் என்ற கதை ஒரு மனைவியின் சுயகௌரவம் பற்றிப் பேசுகிறது. எந்தப் பெண்ணும் கணவனிடத்திலானாலும் தனது சுயத்தைத் தக்கவைத்துக் கொள்ளவே விரும்புவாள். ஆனாலும் நடைமுறை வாழ்வில் அனேகமான பெண்கள் கணவன்மாரிடத்தில் தமது சுயத்தை இழந்தே வாழ்கின்றனர். அர்களால் சுயமாகத்த் தீர்மானம் எடுக்க முவதில்லை.  தமது அந்தரங்கங்களை பேணவும் முடிவதில்லை.  திருமணம் என்ற பந்தத்தின் மூலம் இப்படிப்பட்ட பெண்ணின் மீது முழு அதிகாரத்தையும் செலுத்துவதற்கு ஆண்  எப்படி உரிமை பெறுகிறான்? அவன் தானாக எடுத்துக் கொள்கிறானா? அல்லது சமுதாயம் வழங்கியுள்ளதா?

மனைவிக்கு வரும் கடிதங்களை எந்தவிதக் குற்ற உணர்ச்சியும் இன்றி அவளுக்குத் தெரியாமல்ய படித்துப் பார்க்கும் ஒரு கணவனுக்கும் அந்தக்  கீழ்த்தரச் செயலை அறிந்து கொண்ட மனைவிக்கும் இடையில் நடக்கும் ஒரு வாக்குவாதமே இந்தக் கதையின் பிரதான பகுதி. இக்கதையில் பெண்களைத் தீப்பெட்டிகளுக்கு ஒப்பிடுறார் கதாசியர். தீப்பெட்டி தானாக ஒருபோதும் எரிவதில்லை. அதனை யாராவது உரசும் போதே அது நெருப்பைக் கக்குகிறது. .அது போன்றுதான் பெண்களும். அவர்கள் பூமியைப் போன்று பொறுமையானவர்கள். அவர்களின் உணர்வுகளை உரசிப் பார்க்கும் போதுதான் அவர்களிடமிருத்து பூகம்பம் வெடிக்கத் தொடங்குகிறது. என்பதைக் கதையில் அழகாக உணர்த்துகிறார் கதாசிரியர். அதே நேரம் கணவன்மார் தத்தமது மனைவியரை எப்பொழுதும் கைக்கடக்கமாக தீப்பெட்டிகள் போன்றே வைத்திருக்கின்றனர். மனைவிமார் நெருப்பாய் சீரிப் பாய்ந்தாலும் தமது மூச்சுக் காற்றினாலேயே அதன் சுவாலையை ஊதியணைத்து விடுகிறார்கள். இதனாலேயே பெண்கள் பூகம்பமாக எழுந்தாலும் அடுத்த நிமிடமே கணவன்மாரின் சுயத்தைப் பாதுகாக்க விளைகிறார்கள். என்பதையும் இக்கதை சொல்லி நிற்கிறது.

இரண்டாவது கதையான வெள்ளைப் பாம்பு கதையும் பெண்களின் குணத்தைப் பற்றியே பேசுகிறது. அதை ஒரு மூட நம்பிக்கையை வைத்து வாசகர்களுக்கு விளக்கியிருக்கிறார் கதாசிரியர். இக்கதையை ஜயன்த ரத்னாயக்க என்பவர் எழுதியுள்ளார். கீரியும் பாம்பும் போலிருந்த இரண்டு பெண்கள் ஒரு வெள்ளைப் பாம்பைக் கண்ட பின்பு அது தமக்கு அதிஷ்டத்தைக் கொண்டு தருவதாகச் சொல்லி நட்பாகி விடுகிறார்கள். காலாகாலமாக சண்டையிட்டுக் கொண்டிருந்த அவர்கள் நட்பாகி இணைந்ததும் அவர்களுக்கு சாதகமாகவே தொடர்ச்சியாக சில விடயக்ககள் நடைபெரறுகின்றன. இவற்றின் முழுப் பெறுமதியும் வெள்ளைப் பாம்பையே சென்றடைகின்றது. நடப்பு வாழ்வில் நாமும் அப்படித்தானே? எமது சொந்த முயற்சியால் பலவிடயங்கலைச் செய்திருப்போம் ஆனாலும் அதன்பெறுமதியை இன்னொருவர் பெற்றுக் கொண்டிருப்பார். இக்கதையின் முடிவில் கதாசியர் மூட நம்பிக்கையைத் தெளிவுபடுத்திக் காட்டுகிறாரா? அல்லது அதை நம்பும்படி வாசகர்களை அறிவுறுத்துகிறாரா? என்பதை வாசகர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

அஸீஸ் நெஸின் எழுதியிருக்கும் 'கழுதை வணிகம்' கதையைப் படித்தவுடன் இரத்தினபுரிக்கு மாணிக்கக் கல் வாங்கச் சென்ற ஒருவர் அடுப்புக் கல்லை விலை பேசி அதில் பானையை முட்டுக் கொடுத்து வைத்திருந்த பெறுமதி மிக்க மாணிக்கக் கல்லையும் சேர்த்து வாங்கிய சம்பவமே ஞாபகத்திற்கு வந்தது. அந்த வியாபாரி இக்கதையில் வரும் துருக்கியில் ஒரு கிராமத்தில் கழுதைகள் விற்கும் வயோதிபரைப் போன்று இருந்திருத்தால் இந்நேரம் பெரும் கோடீஸ்வரராக மாறியிருப்பார். உண்மையில் கதையில் வரும் கிழவர் கழுதை வியாபாரத்தில் யாரையும் ஏமாற்றவில்லை. அவர் விற்பதற்காக வைத்திருக்கும் கழுதை பற்றிய உண்மைத் தகவல்களையே சொல்லி விற்கிறார். இருந்தாலும் தெரிந்தோ தெரியாமலோ ஒரு தந்திரம் செய்கிறார். ஆனால் இந்தத் தந்திரத்தைப் புரிந்து கொள்ளாமல் கிழவரிடம் கழுதை வாங்க நினைப்பவர்களே அவரை ஏமாற்ற நினைத்துத் தாம் ஏமாந்து போய் விடுகின்றனர்.  இக்கதையில் ஒருவரை ஏமாற்றிப் பொருள் வாங்குவது அவ்வளவு இலகுவான காரியம் அல்ல என்பதனை கதாசிரியர் நகைச்சுவை ததுதும்ப விபரிக்கிறார். 

பாரி மன்ஸூரி அவர்கள் 'வானவில்' என்ற கதையினூடாக யுத்தத்தின் கடும் தன்மையை எடுத்துக் காட்டுகிறார்.  யுத்தம் கொடூரமானது அது கறுப்பு நிறமானதுஇ வானவில் அழகானது அது பல வர்ணங்களைக் கொண்டது. தொடர் யுத்தம் கக்கிய கடும் கரும் புகை மண்டலங்கள் அழகான வானவில்லை மறைத்து விட்டிருந்தன. புத்தகங்களில் அல்லது கண்ணாடிக் கோலிக் குண்டு (டீக்போல்) வைத்து விளையாடும் சிறுவர்கள் அவற்றைக் கண்ணருகில் வைத்து சூரியனைப் பார்க்கும்போது மட்டுமே வாவில் தெரிகின்றது. யுத்தம் வாழ்க்கையில் அழகான பக்கங்களை எப்படிக் கறுப்பு நிறமாக மாற்றி வைத்துள்ளது என்ற சிந்தனையை வாசகர் மனங்களில் ஏற்படுத்துகிறார் கதாசிரியர்.

அடுத்து புத்ததாஸ ஹேவகே எழுதியுள்ள 'ஒரேயொரு எதிர்பார்ப்பு'  என்ற கதை ஒரு தந்தையின் பாசத்தைப் பற்றிப் பேசுகிறது. கதையில் வரும் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் அதிபர் தனது காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த தந்தை பிற்காலத்தில் மனநோயினால் பாதிக்கப்பட்டிருந்த போது அவரை உதாசீனம் செய்கிறார். ஆனால் அந்தத் தந்தையோ மனநிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் தனது பிள்ளைகள் நல்ல நிலையில் இருப்பதைப் பார்க்க ஆசைப்படுகின்றார். இக்கதை வாசகர்களைப் பல கோணங்களில் சிந்திக்கச் செய்கின்றது.

வறுமையின் கோரப்பிடியில் சிக்கியிருப்பவர்களுக்கு ஒவ்வொரு காலைப் பொழுதும் கசப்பாகத்தான் பிறக்கும். கதையில் வரும் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள். குழந்தைகளை சரியான முறையில் வளர்த்துக் கொள்ள வழியில்லாத தந்தை வறுமையிலிருந்து மிள்வதற்குத் தனது சிறுநீரகம் ஒன்றை விற்க முடிவு செய்கிறார். அதனை விரும்பாத தாய் தமது குழந்தைகளில் ஒன்றைத் தத்துக் கொடுக்கலாம் என்கிறாள். இப்படி வாழ்வோடு போராடி வறுமையை வென்றிட அத்தம்பதியினர் எடுக்க விளையும் முயற்சிகளை மனம் உருகும் விதத்தில் கதையாக்கியிருக்கிறார் மஹ்மூத் ஸயீத் 'கசந்த காலை' என்ற இந்தக் கதையை ஏழு மாதக் குழந்தையின் இனிமையான சில்மிசங்களுடனேயே ஆரம்பித்து வைக்கிறார் கதாசிரியர்.

மிருனாள் பாண்டேயின் 'பெட்டை நாய்' என்ற கதை இந்தியாவில் உள்ள மூட நம்பிக்கைகளைப் பற்றிக் கதைக்கிறது. குடும்ப தோசத்தைக் கழிப்பதற்காக நான்கு வயதுச் சிறுமியை ஒரு நாய்க்குத் திருமணம் செய்து வைக்கின்றனர். இச் செய்தி பத்திரிகையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த போதிலும் குறிப்பிட்ட மூட நம்பிக்கையைச் சார்ந்த சமூகத்தில் இது ஒரு பெரிய விடயமாகப் பார்க்கப்படுதில்லை. இதைவிடவும் பல பாரிய மூட நம்பிக்கைகள் அச்சமூகத்தாரிடம் மலிந்து காணப்படுகின்றன என்ற உண்மை இக்கதையினூடே தெரியப்படுத்துகிறார் கதாசிரியர்.

அடுத்து நூலின் மகுடக் கதையாகிய முஹம்மத் நஸருல்லாஹ் கான் எழுதீயிருக்கும் 'கழுதை மனிதன்' என்ற கதை சாதீய ஏற்றத் தாழ்வுகளின் கொடுமைகளையும் விளைவுகளையும் எடுத்துக் காட்டுகிறது. ஹுஸைனி பவ்லி என்ற தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவன் உயர் குலத்து ஒருவரின் வீட்டில் மிருகங்களோடு மிருகமாய் வளர்க்கப்பட்டு வருகிறான் அவனது வாழ்வைச் சுற்றியே நகர்கிறது கதை. பாகிஸ்தானிய பவ்லிகள்   தாழ்த்தப்பட்ட இனத்தினர். இவர்ஙள் தண்ணீர் இறைப்பது, மந்தைகளை மேய்ப்பது. கூலி வேலை செய்வது போன்ற தொழில்களையே செய்து வருகின்றனர். கதையில் வரும் ஹுஸைனி பவ்லி அனுபவிக்கும் கொடுமைகள் வாசகரின் மனங்களைத் தைக்கின்றன. அதிகாரம் மிகுந்தவர்களுக்கு மத்தியில் குரலற்று இருப்பவர்கள் எத்தனை சித்திரவதைகளை அனுபவிக்க வேண்டியுள்ளது? எமது சமூகத்திலும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தயார்படுத்தப்படும் சிறுவர்களும் ஹுஸைனி பவ்லிகள் போன்றவர்களே. அவர்களது சின்னஞ்சிறு மனங்களில் இருக்கின்ற ஆதங்கங்களை அதிகாரத்துடன் ஆதிக்கம் செலுத்தும் பெற்றோரிடம்  வெளிப்படுத்த முடியாமல் சதா புத்தகங்களுடனேயே உறவாடி புத்தகங்களுடனேயே உறங்க லேண்டிய நிலைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கழுதை மனிதனை வாசித்து முடிக்கும் போது ஹுஸைனி பவ்லி என்ற அந்தக் கதாபாத்திரம் வெறும் கற்னைப் பாத்திரமாகவே இருக்கட்டும் என்ற எண்ணமே மனதில் எழுகின்றது.

'ஸ்தெபன்வூல்ஃப்' (ளுவநிpநறெழடக) என்பது ஜெர்மன் எழுத்தாளர் ஹேர்மன் ஹெஸ்ஸே எழுதிய ஒரு புகழ்பெற்ற நாவல். இது ஒரு உலவியல் நாவல்.

இந்த நாவலின் மூன்று பிரதிகளை வாங்கிக்கொண்டு லன்டன் ஹீத்ரூ விமான நிலையத்திலிருந்து நிவ்யோர்க் சென்று அங்கிருந்து சென் பிரான்சிஸ்கோ நகருக்கு தொடரூந்தில் பிரயாணம் செய்யும் ஒருவரின் பயண அனுபவங்களைச் சொல்லும் கதையே நூலின் இருதியில் உள்ள 'சென்பிராஸிஸ்கோ செல்லும் ஸ்தெப்பன்வூல்ஃப்'. இதை சாமுவெல் ஷிமொன் எழுதியுள்ளார். லன்டனில் வாங்கிய ஸ்தெப்பன்வூல்ஃப் மூன்று பிரதிகளுக்கும் என்ன நடந்தன? என்ற கேள்விக்கான பதிலுடன் மேலைத்தேய  மக்களின் இயல்புஇ அவர்களது சிந்தனைஇ வாழ்க்கை முறை போன்ற பல விடயங்களை இக்கதையில் அனுபவிக்கலாம்.

இச்சிறுகதைகள் அனைத்தும் தரத்தில் உயர்ந்து நிற்பதற்கான காரணம் அவற்றில் உள்ள கதைகள் சொல்லப்பட்ட (முன்வைப்பு)  விதமே.  தேர்ந்தெடுக்கப்பட்ட கதைக் கருக்களுக்கு பொருத்தமான கதா பாத்திரங்களையும் அவைகளைக் கொண்டு நிகழ்த்தப்பட்ட நேர்த்தியான உரையாடல்களையும் தேவைக்கு மீறாத காட்சியமைபுகளையும் (வர்ணனை) இக்கதைகள் கொண்டிருக்கின்றமையே. தொடர்ச்சியாக இக்கதைகளை வாசிக்காமல் ஒவ்வொன்றாக நிறுத்தி நிறுத்தி வாசிப்போமேயானால் இக்கதைகள் தரும் பாதிப்பு மனதில் நீண்ட நேரத்திற்குத் தங்கி நிற்பதை உணரலாம்.

அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களின் மொழிபெயர்ப்பு ஆற்றலைப் பற்றி அலாதியாகச் சொல்வதற்கில்லை. அவர் அப்பணியை மிக நுணுக்கமாகச் செய்பவர். அவருடைய வசனங்கள் வாசிப்பற்கு மிகவும் இன்பமாக இருக்கும்.  அவர் ஒருபோதும் கடினமான சொற்களை வசனங்களில் பயன்பத்தாமையே அதற்கான காரணமாக இருக்கலாம். 'தீப்பெட்டிகள்' என்ற கதையில் முதன் முதலாக 'கடிதத் கூடு' என்ற சொல்லை வாசித்தேன். கடித உறை என்றே பழக்கப்பட்டிருந்த என்னை அந்தச் சொல் அந்த இடத்தில் சற்று தாமதிக்கச் செய்தது. அந்த இடத்திற்கு அந்தச் சொல் மிகவும் பொருத்தமாகவும் அழகாகவுமே இருந்தது. அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள் சொற்களைத் தேர்ந்தெடுக்கும் போது எவ்வளவு மெனக்கிடுகிறார் என்பதை இது எனக்கு உணர்த்தியது. இது போன்று பல இடங்களில் அவர் பயன்படுத்தியிருக்கும் சொற்கள் அந்தந்த வசனங்களை மெருகூட்டி நிற்பதைக் காணலாம்.

அதே போன்றே நூலின் கடைசிப் பகுதியில் கதாசிரியர்களைப் பற்றிய குறிப்புகளைத் தந்திருப்பது வாசகர்களுக்கு அவர்களைப் பற்றிய அறிமுகத்தைப் பெற்றுக் கொள்ளவும் அவர்களின் ஏனைய படைப்புகளைத் தேடிப்படிப்பதற்கும் வசதியாக உள்ளன.

மொத்தம் 110 பக்கங்களுக்கும் கைக்கு அடக்கமான சிறிய இத்தொகுப்பில் குறைகள் என்று சொல்வதற்குப் பெரிதாக ஒன்றுமில்லை. ஓரிடத்தில் ஒரு வாக்கியத்தில் ஓரே சொல் திருப்பத் திரும்ப இரண்டு முறைகள் வந்திருப்பதையும் வேறு சில இடங்களில் சொற்களில் ஒரெழுத்து தவற விடப்பட்டிருப்பதையும் காண முடிந்தது. எழுத்துக்கள் அளவில் சிறியதாக இருக்கின்றன. இது சிலருக்கு வாசிப்பதில் தாமதத்தை ஏற்படுத்தலாம். ஆனாலும் இவை எதுவும் புத்தகத்தின் தரத்தைப் பாதிப்பதாய் இல்லை.

மொத்தத்தில் சிறுகதைப் பிரியர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய ஒரு நூலாக இது இருக்கின்றது. 

அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களை வாழ்த்துவதோடு அவர் இது போன்ற இன்னும் பல மொழிபெயர்ப்பு நூல்களைத் தர வேண்டும்.  அல்லாஹ் அவருக்கு அதற்குரிய திறனையும் தேகாரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் வழங்குவானாக எனப் பிரார்த்திக்கின்றேன்.

Wednesday, January 1, 2025

பெரிய கோடு - 01



தொடர்ந்து நூல்களைப் படிப்போருக்குக் குறிப்பிட்ட சில புத்தகங்கள் மிகப் பிடித்தமானவையாக இருக்கும். நூல் பேசும் விடயம், அது பேசப்படும் விதம், அதை எழுதிய எழுத்தாளர் என்ற அடிப்படையில் அவரவர் வாசிப்பு அளவுக்கேற்ப இது ஆளுக்காள் வேறுபடும். காலத்துக்குக் காலம் இப்படியல் வேறுபடுவதும் உண்டு. அவ்வாறான புத்தங்களில் சில மீள மீள வாசிப்புக்குள்ளாவதும் உண்டு.

வேறு யாரோவால் எழுதப்பட்ட சில புத்தகங்களை எனக்கும் பிடிக்கும். பட்டியல் அப்படியொன்றும் நீண்டது அல்ல. அவற்றில் எச்.ஏ.எல். க்ரெய்க் எழுதிய 'பிலால்' என்ற நூல் என்றைக்கும் மாறுபடாத எனக்குப் பிடித்த நூல்கள் பட்டியலில் முதலிடயத்தைப் பிடிக்கிறது. இந்த நூலை கவிஞரும் எழுத்தாளருமான அல் அஸூமத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். பலமுறை இந்நூல் மீள்பதிப்புப் பெற்றது. 

இங்கே நான் வேற மூன்று நூல்களைக் குறிப்பிட விரும்புகிறேன். அவற்றில் ஒன்று தோழர்கள். மற்றையது தோழியர். இரண்டு நூல்களையும் எழுதியவர் எழுத்துப் பாரம்பரியம் மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவரான அமெரிக்காவில் வசிக்கும் சகோதரர் நூருத்தீன். தோழர்கள் என்ற நூல் முகம்மது நபி (ஸல்) அவர்களது தோழர்களான ஸஹாபிகள் பற்றியும் தோழியர்; ஸஹாபாப் பெண்மணிகள் பற்றியும் பேசுகின்றன. தோழர்கள் 2011ஆம் ஆண்டு 20 ஸஹாபாக்கள் பற்றியும் தோழியர் 17 ஸஹாபாப் பெண்கள் பற்றியும் விபரமாக எடுத்துச் சொல்கின்றன. (என்னிடம் இருப்பவை முதற் பதிப்புகள். மேலும் சேர்க்கப்பட்ட பிரதிகள் வெளிவந்த தகவலும் அறிந்தேன்.)

ஒவ்வொரு ஸஹாபியையும் பற்றிய ஒரு வரலாற்றுச் சம்பவத்தோடு தொடங்குகிறார் நூருத்தீன். சம்பவம் குறிப்பிடப்பட்ட பிறகு அந்த ஸஹாபியின் விபரம் சொல்லப்படுகிறது. குறிப்பிட்ட ஸஹாபியின் வரலாற்றையும் வாழ்க்கையையும் அவர் நபிகளாருடன் கொண்டிருந்த தொடர்பையும் சந்Nதுகமற தெயிவான மொழியில் எடுத்துச் சொல்கிறார். சகட்டுமேனிக்கு எழுதும் பழைய பாணியைத் தவிர்த்து ஆர்வமூட்டும் விதத்தில் ஒரு சிறுகதையைச் சொல்வது போல நூலாசிரியர் எழுதியிருப்பது குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய அம்சம்.



மற்றையது பலஸ்தீள எழுத்தாளர் அத்ஹம் ஷர்காவி எழுதிய அல் குர்ஆன் சொல்லும் செய்யதிகள் என்ற நூல். இந்நூலை முகம்மது இம்தியாஸ் நளீமி அழகுற மொழிபெயர்ப்புச் செய்துள்ளார். மிக அண்மையில் வெளிவந்த நூல் இது. 

பொதுவாக எல்லா மனிதர்களுக்கும் சரியான நீதி கிடைக்க வேண்டும் என்றும் எல்லாரும் ஒன்று போல் மதிக்கப்பட வேண்டும் என்றே விரும்புகிறார்கள். ஆனால் தனக்கென்று வரும்போது 'தனக்குத் தனக்கு என்றால் சுளகு படக்கு படக்கு என்குமாம்' என்பதைப் போல நடந்து கொள்கிறார்கள். இது இழிவு மனோ நிலை. அவரவர் தக்வபவுடன் சம்பந்தப் படும் விடயமாக இதைக் கருதலாமா என்று எனக்குத் தெரியாது. அப்படிப் பார்த்தோமானால் - நம்மை நாம் ஒரு சுயவிமர்சனத்துக்கு உட்படுத்தும் போது நாம் எந்த அளவுக்கு மோசமான மனோ நிலையோடு இருக்கிறோம் என்பது புரியும்.

இந்த இடத்தில்தான் இந்தப் புத்தகம் மகிமை பெறுகிறது. ஒவ்வொரு மனிதனது தக்வாரவ அளந்து பார்க்கவும் சுய நலத்துடன் தோதவும் மிக அழகான வார்த்தைகள் கொண்டு சொல்லித் தருகிறது. ஒரு ஆல்குர்ஆன் வசனத்தை வைத்துக் கொஞ்சமாக எழுதப்பட்டுள்ள விடயம் நம் மனதுக்குள் ஏறி உட்கார்ந்து கொண்டு இதமாக ஆனால் அழுத்தமாக அலையெழுப்பிக் கொண்டேயிருக்கிறது. ஆயீன் ஷைத்தான் நிரந்தரமாகக் கட்டில் போட்டுப் படுக்கும் மனிதனின் உள்ளத்தை விட கொஞ்சமாவது இறை நம்பிக்கை உள்ள மனிதனின் உள்ளத்துடன் வலிமையாகப் பேசவல்லது இந்நூல். இன்னும் சொல்வதானால் இறை நம்பிக்கை உள்ளவன் என்று தன்னைத் தான் நினைத்திருக்கும் மனிதன் தன்னைத் தானே அளந்து பார்க்க வழிகாட்டக் கூடியது.

சிகாலங்களுக்கு முன் தனக்கு மஹராக ஒரு தொகை நூல்களை வாங்கித் தரக் கோரிய மணமகள் பற்றிய ஒரு தகவரல்; பெரு வரவேற்போடு சமூக ஊடகங்களில் பரவியிருந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். திருமணம் ஒன்றுக்குச் செல்பவர்கள் ஒரு நல்ல நூலை வாங்கி மணமக்களுக்கு அன்பளிப்புச் செய்வது ஒரு காலத்தில் வழக்கத்தில் இருந்தது. 

குடும்பததில் ஒருவர் மரணித்தால் அதன் பிறகு நடக்கும் வைபவங்களில் கலந்து கொள்வோருக்கு யாஸீன் கிதாபுகளும் மன்ஸில் கிதாபு (கிதாபு என்றால் புத்தகம்) வழங்குவது இன்னும் வழக்கத்தில் உள்ளது. இவ்வாறு வழங்கப்படும் கிதாபுகள் பல வீடுகளில் மூலை முடுக்குகளில் அழுக்கடைந்து கிடக்கின்றன. (மரண வீட்டு நிகழ்வுகள் பற்றிய சரி, பிழைகளை நான் பேசவரவில்லை.)

இவ்வாறான சந்தர்ப்பங்களில் நான் மேற்சொன்ன நூல்களைப் போன்ற நூல்களையும் வாசிக்கும் மனிதருக்குப் பிரயோசனம் தரும் என நாம் கருதும் புத்தகங்களையும் பயன்படுத்துவது சாலப் பொருத்தமாக இருக்கும்.


01.01.2025