கடந்த பெப்ரவரி மாதம் 3ம் திகதி ஞாயிற்றுக் கிழமை லங்காதீப பத்திரிகையில் 'சிங்கள முஸ்லிம் பழங்கால உறவு' எனும் தலைப்பில் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் வரலாற்றுத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளரான நன்த தர்மரத்ன அவர்கள் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் இது.
தற்போது இலங்கையில் பொதுபல சேனா மற்றும் சிஹல உறுமய போன்ற சிங்கள் இனவாத மதவாத அமைப்புகள் முஸ்லிம்களின் இந்நீண்ட வரலாறுகளை பகிரங்கமாகவே மறுத்துவருவதுடன் மார்க்க கிரிகைகளையும் கலாசார விழுமியங்களையும் கேலிக்கூத்தாக்கி வருகின்றனர்.
இந்நிலையில் மனிதத்தன்மையுடனும் நடுநிலை தன்மையுடனும் நடந்து கொள்ளும் நல்லுள்ளம் படைத்த பௌத்த மக்களும் இருக்கத்தான் செய்கின்றனர். காலத்தின் நிலவரங்களை கவனத்தில் கொண்டு மறைக்கப்படும் முஸ்லிம்களின் வரலாற்று உண்மைகளை வெளிகொண்டுவரும் நோக்கில் சிரேஷ்ட விரிவுரையாளரான நன்த தர்மரத்ன அவர்கள் இக்கட்டுறையை எழுதியுள்ளார். அவர்களுக்கு எமது நன்றிகள்.
-தமிழில் எம். இம்தியாஸ் யூசுப் ஸலபி-
சகோதரத்துவம் எனும் உறவு சிங்கள முஸ்லிம்களுக்கிடையில் மிகவும் பிணைக்கப்பட்டு இருந்ததாக வரலாறு சாட்சி சொல்கிறது.
முஸ்லிம்களின் வரலாற்றை ஆராய்கையில் பழங்காலங்தொட்டே இலங்கையுடனும் இலங்கையின் ஆட்சியாளர்களுடனும் உறவுகளை பேணி நடந்தமைக்கான சாட்சி வரலாற்றில் காணப்படுகிறது. அந்த உறவு பொருளாதார மற்றும் அரசியல் உறவுகள் என இருவகைப் படுகிறது. 7-8 நூற்றாண்டு ஆகுகையில் அராபியர்கள் எனும் முஸ்லிம்கள் வர்த்தகத்தை மையமாக வைத்து இந்நாட்டுடன் மிக பலமான உறவை கட்டியெழுப்பியிருந்தனர். அதுமட்டு மன்றி அராபியர்கள் இலங்கை பற்றி எழுதிய நூற்களை பார்க்கையில் அவர்கள் இலங்கை சம்பந்தமாக மிகவும் கவனம் செலுத்தியுள்ளதாக சாட்சி காணப்படுகிறது.
இஸ்லாம் மார்க்கம் வருவதற்கு முன் நீண்ட காலம் தொட்டே அரபியர்கள் எனும் முஸ்லிம் இனத்தவர்கள் இலங்கைப் பற்றி அறிந்திருந்தனர். கிரேக்கர்களும் ரோமர்களும் இந்நாட்டின் விடயங்களை அராபி பயணிகள் மூலமே அறிந்து கொண்டனர். அப்படியிருந்தும் அராபியர்கள் எனும் முஸ்லிம்கள் மூலம் எழுதப்பட்ட நூற்களில் இலங்கைபற்றிய செய்திகள் இஸ்லாம் தோன்றிய பின்பே எழுதப்பட்டுள்ளது. முதலில் சுலைமான் என்பவர் மூலமே இந்நாடு பற்றி எழுதப்பட்டது. கி:பி: 950ம் ஆண்டு ஸில்ஸிலா அல்கவாரி எனும் நூலில் இலங்கைப்பற்றிய செய்திகள் உள்ளடக்கபட்டது. அதன் பின் இலங்கைப்பற்றி மிக முக்கிய வர்ணனைகள் வழங்கியவர் இப்னு பதூதா என்ற எழுத்தாளர் ஆவார். இவ்வெல்லா விடயங்களையும் உள்ளடக்கி 10ம் நூற்றாண்டில் மஸ்கினர் எனும் எழுத்தாளர் இன்னுமொரு நூலை எழுதினார் அதன் பின் மக்தஸி எனும் எழுத்தாளரும் இலங்கைப்பற்றி சுருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
பிற்காலத்தில் அபுல்தீதா போன்ற புவியிலாளர்கள் கூட இலங்கைப்பற்றி குறிப்பிட்டுள்ளார்கள். இந்த முஸ்லிம் எழுத்தாளர்களுக்கு மத்தியில் மிகவும் முக்கியமானவர் 15ம் நூற்றாண்டில் இந்நாட்டில் பயணித்தவரான இப்னு பதூதாவுடைய செய்தியாகும். குறிப்பாக 7ம் நூற்றாண்டு ஆகையில் மேற்கு திசை கடற்மார்கங்களில் முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தியிருந்தனர். தென் இந்தியாவில் சோழ பாண்டிய ஆட்சி விழுந்ததுடன் அராபிய ஆட்சி வளம் பெற்றது.
அதன் பலனாக கி:பி: 949ம் ஆண்டு ஆகையில் அராபிய கப்பல் வர்த்தக நிமித்தம் இலங்கைக்கு வந்தனர். 8ம் நூற்றண்டிலிருந்து பெறுமளவில் முஸ்லிம்கள் இலங்கையில் வளர்ச்சியடைந்தனர். இலங்கையில் இருந்த இம்முஸ்லிமகள் இலங்கை முஸ்லிம்கள் என்றும் கடலோரப்பகுதி முஸ்லிம்கள் என்றும் அறியப்பட்டனர்.