Showing posts with label என்.எம்.நூர்தீன். Show all posts
Showing posts with label என்.எம்.நூர்தீன். Show all posts

Sunday, September 14, 2014

நூர்தீன் என்றொரு இசைக் காற்று!


(“இசைக்கோ” அல்ஹாஜ் என்.எம். நூர்தீன் அவர்கள் நேற்று இரவு 9.00 மணியளவில் இவ்வுலகைப் பிரிந்தார். ஜனாஸா நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது.
2008ம் ஆண்டு அன்னாரைப் பற்றி நான் எழுதிய கட்டுரை இது. அன்னாரைப் பற்றிப் பலரால் எழுதித் தொகுப்பட்ட நூலில் இக்கட்டுரை இடம்பெற்றிருக்கிறது. அன்னாரது இழப்பு மிகவும் மனத்துயரை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு நல்ல கலைஞனாக, ஒரு சிறந்த மனிதாபிமானியாக வாழ்ந்து மறைந்து விட்டார் அல்ஹாஜ் நூர்தீன் அவர்கள்.)

அல்ஹாஜ் நூர்தீனுடனான எனது முதல் சந்திப்பு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் நிகழ்ந்தது. எண்பதுகளின் நடுப் பகுதியாக அது இருக்கும். அப்போது அங்கு அறிவிப்பாளனாக நான் இருக்கவில்லை. அவ்வப்போது நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் பங்கு கொள்வதற்கும் சென்று வந்த காலப் பகுதி அது. அவ்வாறான வேளைகளில் கலைஞர்ளைச் சந்திப்பது கூட மகிழ்ச்சிக்குரிய விடயமாக இருந்தது.

இசைக் கலைஞராக மாத்திரமே நான் அறிந்திருந்த நூர்தீன் ஹாஜியாரை உழைத்து முன்னேறி ஓர் ஆல விருட்சமாக இருப்பவர் என்று பின்னாளில் எனக்குச் சொன்னவர் என் மனைவியின் தந்தையார்.   எனக்கு அவர் அறிமுகமான காலப் பகுதிக்கும் என் மாமனார் தந்த தகவலுக்குமிடையில் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் இடை வெளி இருந்தது. இந்த நீண்ட காலப் பகுதிக்குள் ஒரு சந்தர்ப்பத்திலேனும் செல்வப் பகட்டையோ அதற்கேயுரிய அலட்சியத்தையோ அவரிடம் நான் கண்டதில்லை. ஒரு மெல்லிய காற்றுப் போல வந்து வெளியேறிப் போகும் மனிதராக அவரை நான் அப்போது அடையாளம் கண்டிருந்தேன். ஆனால் அவசியமாயின் அவர் சூறாவளியாகவும் இருப்பார் என்பதை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் நான் அறிந்து கொண்டேன். அது பற்றிப் பின்னால் சொல்கிறேன்.

நூர்தீன் ஹாஜியுடன் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பத்தை சென்னையில் 1999ல் நடந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு ஏற்படுத்தித் தந்தது. அங்குதான் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் தோற்றுவிக்கப்பட்டது. நிதிச் செயலாளராக அவரை ஏகமனதாக நாம் தேர்ந்தெடுத்தோம். இலங்கை திரும்பியதும் வரலாற்றுப் புகழ் மிக்க (எங்களைப் பொறுத்தவரை) அதன் முதலாவது கூட்டத்தை அவருக்குச் சொந்தமான மருதானை - பவுன்டைன் ஹவுஸ் வீதியில் உள்ள அவரது வீட்டில் நடத்தினோம். 2002ல் கொழும்பில் நடத்தப்பட்ட உலக இஸ்லாமிய மாநாட்டுக்கான முதலாவது திட்டமிடல் கூட்டம் அதுவாக இருந்தது. ஒரு வருடத்துக்கும் மேலாக அந்த முகவரியே ஆய்வகத்தின் அலுவலக முகவரியாகவும் இருந்தது.

கொழும்பில் நடைபெற்ற மாநாடு அவருடனான நெருக்கத்தை அதிகரித்தது, எங்கள் அனைவரிலும் மூத்தவராக அவர் இருந்தார். அவரை சிரமப்படுத்தக் கூடாது என்று நாங்கள் முடிவெடுத்திருந்தோம். ஆனால் ஓர் இளைஞனின் உற்சாகத்தோடு அவர் தோள் கொடுத்து நின்றார். இம்மாநாட்டில் முக்கியமான சில பணிகளை அவர் ஆற்றினார்.

மாநாட்டில் கலைஞர்களுக்கு வழங்குவதற்கான விருதுச் சின்னங்களை வடிவமைத்துத் தருவதற்கு கொழும்புக் கோட்டையில் உள்ள நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைத்திருந்தோம். கோட்டையில் சில பாதைகளில் எவ்வித வாகனமும் செல்ல முடியாது என்பது உங்களுக்குத் தெரிந்ததுதான். அப்படியான ஓரிடத்தில்தான் அந்த நிறுவனம் அமைந்திருந்தது. பொதுவாக எந்தவொரு விடயத்துக்குச் செல்வதாக இருந்தாலும் எந்தத் தீர்மானத்தை எடுப்பதானாலும் அமைப்புக் குழு அங்கத்தவர்களில் நால்வருக்குக் குறையாமல் பங்கு கொள்வது வழக்கம். சில வேளைகளில் தனித்தனியே வௌ;வேறு விடயங்களுக்கு ஓடித்திரிய வேண்டிய கட்டாயங்களும் ஏற்பட்டதுண்டு. விருதுகளின் மாதிரி வடிவங்களை எடுத்து வரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு சென்று திரும்பி காரியாலய அறைக்குள் நுழைந்த நூர்தீன் ஹாஜியைக் கண்டு அதிர்ந்து விட்டேன். திடீர் மழைக்குள் அகப்பட்டு நனைந்து கொடுகியபடி பொதியைச் சுமந்து வந்து அவர் நின்றிருந்ததைக் கண்டதும் என் மனம் மிகுந்த சஞ்சலத்துக்குள்ளானது. அந்தக் காட்சி இன்று வரை என் மனதை விட்டு அகலவில்லை. மாநாடு சம்பந்தமாக யாத்ரா 18ல் நான் எழுதிய கட்டுரையிலும் இந்த விடயத்தை நான் பதிவு செய்திருக்கிறேன்.

இம்மாநாட்டில் அத்தனை கலைஞர்களுக்கும் கௌரவம் செய்ய வேண்டும் என்ற ஆசை எங்களுக்கிருந்தது. ஆனால் இலக்கியவாதிகளின் பட்டியல் மிக நீண்டதாக இருந்ததாலும்  வரையறுக்கப் பட்ட பணத் தொகைக்குள் யாவற்றையும் செய்ய வேண்டியிருந்ததாலும் இசைக் கலைஞர்களையும் நாடகக் கலைஞர்களையும் தவிர்ப்பது என்று முடிவெடுத்தோம். இசைக் கலைஞர்களுக்காக நூர்தீன் ஹாஜி போர்க் கொடி தூக்கினார். சாதக பாதகங்களை அவருடன் அலசி அசாத்தியம் பற்றிய புரிதல் ஏற்பட்ட போது இசையரங்கை தன்னிடம் ஒப்படைத்து விடும்படி வேண்டுகோள் விடுத்தார். நாம் மிக்க மகிழ்ச்சியடைந்தோம். அதன் விளைவாக எங்களுக்கு வேறு காரியங்களில் கவனம் செலுத்துவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. இதை விட முக்கியமான விடயம் நூர்தீன் ஹாஜி தனது சொந்தச் செலவில் இசைக் கலைஞர்களுக்கு ஞாபகச் சின்னம் வழங்கி கௌரவித்தார் என்பதுதான். இதனை அந்த அரங்குக்குள்ளேயே அவர் நிறைவேற்றித் தந்தார். இசைத் துறையோடு ஈடுபாடு கொண்ட நூர்தீன் ஹாஜி போல நாடகத்துறைக்கு ஒருவர் இருந்திருந்தால் நாடகக் கலைஞர்களையும் கௌரவித்திருக்கலாம் என்ற ஆதங்கம் எனக்கு ஏற்பட்டது. அது ஒரு கவலையாக இன்றும் மனதுக்குள் உட்கார்ந்திருக்கிறது.