Sunday, September 14, 2014

நூர்தீன் என்றொரு இசைக் காற்று!


(“இசைக்கோ” அல்ஹாஜ் என்.எம். நூர்தீன் அவர்கள் நேற்று இரவு 9.00 மணியளவில் இவ்வுலகைப் பிரிந்தார். ஜனாஸா நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது.
2008ம் ஆண்டு அன்னாரைப் பற்றி நான் எழுதிய கட்டுரை இது. அன்னாரைப் பற்றிப் பலரால் எழுதித் தொகுப்பட்ட நூலில் இக்கட்டுரை இடம்பெற்றிருக்கிறது. அன்னாரது இழப்பு மிகவும் மனத்துயரை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு நல்ல கலைஞனாக, ஒரு சிறந்த மனிதாபிமானியாக வாழ்ந்து மறைந்து விட்டார் அல்ஹாஜ் நூர்தீன் அவர்கள்.)

அல்ஹாஜ் நூர்தீனுடனான எனது முதல் சந்திப்பு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் நிகழ்ந்தது. எண்பதுகளின் நடுப் பகுதியாக அது இருக்கும். அப்போது அங்கு அறிவிப்பாளனாக நான் இருக்கவில்லை. அவ்வப்போது நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் பங்கு கொள்வதற்கும் சென்று வந்த காலப் பகுதி அது. அவ்வாறான வேளைகளில் கலைஞர்ளைச் சந்திப்பது கூட மகிழ்ச்சிக்குரிய விடயமாக இருந்தது.

இசைக் கலைஞராக மாத்திரமே நான் அறிந்திருந்த நூர்தீன் ஹாஜியாரை உழைத்து முன்னேறி ஓர் ஆல விருட்சமாக இருப்பவர் என்று பின்னாளில் எனக்குச் சொன்னவர் என் மனைவியின் தந்தையார்.   எனக்கு அவர் அறிமுகமான காலப் பகுதிக்கும் என் மாமனார் தந்த தகவலுக்குமிடையில் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் இடை வெளி இருந்தது. இந்த நீண்ட காலப் பகுதிக்குள் ஒரு சந்தர்ப்பத்திலேனும் செல்வப் பகட்டையோ அதற்கேயுரிய அலட்சியத்தையோ அவரிடம் நான் கண்டதில்லை. ஒரு மெல்லிய காற்றுப் போல வந்து வெளியேறிப் போகும் மனிதராக அவரை நான் அப்போது அடையாளம் கண்டிருந்தேன். ஆனால் அவசியமாயின் அவர் சூறாவளியாகவும் இருப்பார் என்பதை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் நான் அறிந்து கொண்டேன். அது பற்றிப் பின்னால் சொல்கிறேன்.

நூர்தீன் ஹாஜியுடன் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பத்தை சென்னையில் 1999ல் நடந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு ஏற்படுத்தித் தந்தது. அங்குதான் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் தோற்றுவிக்கப்பட்டது. நிதிச் செயலாளராக அவரை ஏகமனதாக நாம் தேர்ந்தெடுத்தோம். இலங்கை திரும்பியதும் வரலாற்றுப் புகழ் மிக்க (எங்களைப் பொறுத்தவரை) அதன் முதலாவது கூட்டத்தை அவருக்குச் சொந்தமான மருதானை - பவுன்டைன் ஹவுஸ் வீதியில் உள்ள அவரது வீட்டில் நடத்தினோம். 2002ல் கொழும்பில் நடத்தப்பட்ட உலக இஸ்லாமிய மாநாட்டுக்கான முதலாவது திட்டமிடல் கூட்டம் அதுவாக இருந்தது. ஒரு வருடத்துக்கும் மேலாக அந்த முகவரியே ஆய்வகத்தின் அலுவலக முகவரியாகவும் இருந்தது.

கொழும்பில் நடைபெற்ற மாநாடு அவருடனான நெருக்கத்தை அதிகரித்தது, எங்கள் அனைவரிலும் மூத்தவராக அவர் இருந்தார். அவரை சிரமப்படுத்தக் கூடாது என்று நாங்கள் முடிவெடுத்திருந்தோம். ஆனால் ஓர் இளைஞனின் உற்சாகத்தோடு அவர் தோள் கொடுத்து நின்றார். இம்மாநாட்டில் முக்கியமான சில பணிகளை அவர் ஆற்றினார்.

மாநாட்டில் கலைஞர்களுக்கு வழங்குவதற்கான விருதுச் சின்னங்களை வடிவமைத்துத் தருவதற்கு கொழும்புக் கோட்டையில் உள்ள நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைத்திருந்தோம். கோட்டையில் சில பாதைகளில் எவ்வித வாகனமும் செல்ல முடியாது என்பது உங்களுக்குத் தெரிந்ததுதான். அப்படியான ஓரிடத்தில்தான் அந்த நிறுவனம் அமைந்திருந்தது. பொதுவாக எந்தவொரு விடயத்துக்குச் செல்வதாக இருந்தாலும் எந்தத் தீர்மானத்தை எடுப்பதானாலும் அமைப்புக் குழு அங்கத்தவர்களில் நால்வருக்குக் குறையாமல் பங்கு கொள்வது வழக்கம். சில வேளைகளில் தனித்தனியே வௌ;வேறு விடயங்களுக்கு ஓடித்திரிய வேண்டிய கட்டாயங்களும் ஏற்பட்டதுண்டு. விருதுகளின் மாதிரி வடிவங்களை எடுத்து வரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு சென்று திரும்பி காரியாலய அறைக்குள் நுழைந்த நூர்தீன் ஹாஜியைக் கண்டு அதிர்ந்து விட்டேன். திடீர் மழைக்குள் அகப்பட்டு நனைந்து கொடுகியபடி பொதியைச் சுமந்து வந்து அவர் நின்றிருந்ததைக் கண்டதும் என் மனம் மிகுந்த சஞ்சலத்துக்குள்ளானது. அந்தக் காட்சி இன்று வரை என் மனதை விட்டு அகலவில்லை. மாநாடு சம்பந்தமாக யாத்ரா 18ல் நான் எழுதிய கட்டுரையிலும் இந்த விடயத்தை நான் பதிவு செய்திருக்கிறேன்.

இம்மாநாட்டில் அத்தனை கலைஞர்களுக்கும் கௌரவம் செய்ய வேண்டும் என்ற ஆசை எங்களுக்கிருந்தது. ஆனால் இலக்கியவாதிகளின் பட்டியல் மிக நீண்டதாக இருந்ததாலும்  வரையறுக்கப் பட்ட பணத் தொகைக்குள் யாவற்றையும் செய்ய வேண்டியிருந்ததாலும் இசைக் கலைஞர்களையும் நாடகக் கலைஞர்களையும் தவிர்ப்பது என்று முடிவெடுத்தோம். இசைக் கலைஞர்களுக்காக நூர்தீன் ஹாஜி போர்க் கொடி தூக்கினார். சாதக பாதகங்களை அவருடன் அலசி அசாத்தியம் பற்றிய புரிதல் ஏற்பட்ட போது இசையரங்கை தன்னிடம் ஒப்படைத்து விடும்படி வேண்டுகோள் விடுத்தார். நாம் மிக்க மகிழ்ச்சியடைந்தோம். அதன் விளைவாக எங்களுக்கு வேறு காரியங்களில் கவனம் செலுத்துவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. இதை விட முக்கியமான விடயம் நூர்தீன் ஹாஜி தனது சொந்தச் செலவில் இசைக் கலைஞர்களுக்கு ஞாபகச் சின்னம் வழங்கி கௌரவித்தார் என்பதுதான். இதனை அந்த அரங்குக்குள்ளேயே அவர் நிறைவேற்றித் தந்தார். இசைத் துறையோடு ஈடுபாடு கொண்ட நூர்தீன் ஹாஜி போல நாடகத்துறைக்கு ஒருவர் இருந்திருந்தால் நாடகக் கலைஞர்களையும் கௌரவித்திருக்கலாம் என்ற ஆதங்கம் எனக்கு ஏற்பட்டது. அது ஒரு கவலையாக இன்றும் மனதுக்குள் உட்கார்ந்திருக்கிறது.



இந்த இசையரங்கை நடத்துவதற்கு மாநாட்டுக் குழு ஒதுக்கிய பணம் வெறும் 25,000.00 ரூபாய்கள் மாத்திரமே. இந்தப் பணத்தைப் பெற்றுக் கொள்ளும் விடயத்தில்தான் நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி அவர் புயலாய் மாறிய கட்டம் நிகழ்ந்தது. பெரிய இசைக் குழுவை அமர்த்துவதற்கு பெருந் தொகை தேவையென்பதால் சிறிய ஒரு குழுவை அவர் ஏற்பாடு செய்தார். அரச திணைக்களக் கணக்காளர் இசைக் குழுவின் பெயரில் காசோலையை எழுதி விட்டார். இசைக்குழுவுக்கு வங்கிக் கணக்கு இல்லை என்பதால் அதில் உள்ள ஒருவரின் பெயருக்கு காசோலையை எழுதும்படி நூர்தீன் ஹாஜி வேண்டுகோள் விடுத்தார். அவ்வாறு எழுத முடியாத அரச நிதிக் கோவைப் பிரமாணங்களை கணக்காளர் பேசினார். அமைச்சுச் செயலாளரின் முன்னிலையிலேயே கணக்காளரை நோக்கிக் காசோலையை வீசி எறிந்து விட்டு எழுந்து நடந்தார் நூர்தீன் ஹாஜி. நாங்கள் ஒரு கணம் ஸ்தம்பித்துப் போனோம். விடயங்களை செயல்படுத்துவதற்கு சில நெகிழ்வுகள் தேவை என்பதை ஒருவாறு எடுத்துச் சொல்லி செயலாளர் அனுமதியுடன் அக்காசோலைப் பிரச்சினையை தீர்த்து வைத்தோம்.

முதன் முதலாக அவரது பவுன்டைன் ஹவுஸ் லேன் வீட்டுக்குள் நுழைந்ததும் அங்கு ஓர் ஆச்சரியம் இருந்தது. அந்த வீட்டின் ஓர் அறை இசைக் கருவிகளுடன் கூடிய ஓர் ஒலிப்பதிவுக் கூடமாக  அமைந்திருந்தது. ஒரு கட்டத்தில் தனது செலவில் பிராந்தியம் பிராந்தியமாகச் சென்று பாடகர்களைத் தேர்ந்து அவர்களைப் பாடச் செய்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபன முஸ்லிம் சேவையில் ஒலிபரப்ப ஏற்பாடு செய்திருந்தார். இது பின்னர் ஏன் விடுபட்டது என்பது எனக்குத் தெரியவில்லை. அவர் பாடிய பல இஸ்லாமிய கீதங்களை அவரே இயற்றியும் இருந்தார். அவற்றைத் தொகுத்து ஒரு நூலாகவும் வெளியிட்டுள்ளார். பொருளாதார ரீதியில் அவர் தன்னிறைவு கண்டவராக இருந்த போதும் பணத்துக்குப் பின்னால் அவர் ஓடித்திரியவில்லை. அவரது மனசு இஸ்லாமியக் கீதங்களோடுதான் ஒன்றிக் கிடந்தது, கிடக்கிறது.

சகோதரி நூர்ஜஹான் மர்ஸூக் தனது இறுவெட்டு வெளியீட்டு விழாவில்  என்னை விமர்சனத்துக்கு அழைத்திருந்தார். அந்த உரைக்காக இலங்கை இஸ்லாமிய கீதப் பாடகர்கள் பற்றிய தகவல்கள் தேவைப்பட்ட போது எனக்குக் கைகொடுத்தது நூர்தீன் ஹாஜி 2002 மாநாட்டு மலரில் எழுதியிருந்த கட்டுரை. இலங்கையின் இஸ்லாமிய கீதங்கள் பற்றியும் பாடகர்கள் பற்றியும் இது வரை யாரும் எங்கும் குறித்து வைக்கவில்லை என்பது அப்போதுதான் உறைத்தது. மிக அவசரமாகச் செய்யப்பட வேண்டிய ஒரு பணியாக நம்முன்னே அது காத்திருக்கிறது. ஆகக் குறைந்த அடிப்படைத் தகவல்களையாவது நூர்தீன் ஹாஜி தனது கட்டுரையில் தந்திருக்கிறார் என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் ஆறுதலையும் தந்தது.
முஸ்லிம் கலைஞர் ஒன்றியம் என்ற அமைப்பினை ஆரம்பித்து அதன் மூலம் கலைஞர்களைக் கௌரவிக்க சில வருடங்களுக்கு முன் ஓர் அமைச்சரைத் தொடர்புற்றிருந்தார் நூர்தீன் ஹாஜி. உலக வர்த்தக மையத்தில் அமைந்திருந்த அந்த அமைச்சில் இரண்டு மூன்று கூட்டங்கள் கூட நடந்தன. டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன், கலைவாதி, தாஸிம் அகமது, புர்;க்கான் பீ இப்திகார், டோனி ஹஸன், நான் உட்பட இன்னும் பலர் அக்கூட்டங்களில் கலந்து கொண்டோம். கௌரவ அமைச்சர் அவர்கள் நூர்தீன் ஹாஜியின் இம்முயற்சிக்கு ஆதரவளிப்பதில் அக்கறை காட்டாத காரணத்தால் அதை நானே நடத்தின் காட்டுகிறேன் என்று உறுதி கொண்டார். கொழும்பு நவரங்கஹல மண்டபத்தில் சிறப்புற அதை நடத்தியும் காட்டினார். இவ்வமைப்பு மூலம் 2007ல் சஸக்காவ மண்டபத்தில் இரண்டாவது பாராட்டு விழாவை நடாத்தினார். அதில் கௌரவம் பெற்றவர்களில் அடியேனும் ஒருவனாவேன். பொதுவாக பொன்னாடை, பட்டங்கள் பெறுவதில் கூச்ச உணர்வு கொண்டவனாக இருந்த போதும் நூர்தீன் ஹாஜியின் அன்புக்கு நான் பணிந்து போகும் கட்டாயத்தில் இருந்தேன். அந்த நிகழ்வில் தவிர்க்க முடியாத காரணத்தால் கலந்து கொள்ள முடியாது போன விருதுக்குரியவர்களை வௌ;வேறு சந்தர்ப்பங்களில் வேறு விழாக்களில் அழைத்து அவர் கௌரவித்து வருவதை அவதானித்து வருகிறேன். தன்னை விடப் பெரிய கலைஞன் யாருமில்லை என்று கருதிக் கொண்டு பேசியும் செயல்பட்டும் வருகிற கலைஞர் கூட்டத்துள் மற்றவரைக் கனம் பண்ணி மகிழும் விசால மனங் கொண்ட வித்தியாசமான மனிதர் நூர்தீன் ஹாஜி
சில காலங்களுக்கு முன்னர் நானும் நூர்தீன் ஹாஜியும் ஒரு குறுந்தூர வாகனப் பயணம் செய்து கொண்டிருந்த போது, சிஹாப்தீன்... நான் ஒரு வானொலிச் சேவை தொடங்கும் எண்ணத்தில் இருக்கிறேன். நீங்கள் எந்தளவுக்கு எனக்கு உறுதுணையாக இருப்பீர்கள்? என்று கேட்டார். நூறு வீதம் உங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவேன் என்று அவருக்குப் பதில் சொன்னேன். பின்னால் அவருக்கு ஏற்பட்ட தனிப்பட்ட  சிக்கல்களினால் அல்லது தவறான புரிந்து கொள்ளலினால் அம்முயற்சி கைவிடப்பட்டதாக யாரோ சொல்லக் கேள்விப் பட்டுப் பெருங் கவலைக்குள்ளானேன். இம்முயற்சி கைவிடப்பட்டதன் காரணமாக காலங் காலமாக காற்றிலே காசு பண்ணும் ஒரு பெரும் வரப்பிரசாதத்தை அவரது குடும்பம் இழந்தது. தங்களது குரலாக ஒலிக்கவிருந்த ஒரு வானொலிச் சேவையை இலங்கை முஸ்லிம் சமுதாயம் இழந்தது. அவரது சக்திக்கு அப்பால் இம்முயற்சி சென்று விட்டதாகவே என்னால் உணர முடிந்தது. இல்லையென்றால் அதனையும் அவர் சாதித்துக் காட்டி சரித்திரத்தில் பதிவாகி இருப்பார்.

மனித சமூகத்தின் சுந்தரமான நினைவுகளில் வாழும் தகுதியை ஒரு மனிதன் பெற்று விட்டான் என்றால் அவனது வாழ்க்கை அழகும் அர்த்தமும் நிரம்பியதாக மாறிவிடுகிறது. அந்தத் தகுதியை ஹாஜி நூர்தீன் பெற்றிருக்கிறார் என்று நிச்சயமாக நான் நம்புகிறேன்.


இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: