Showing posts with label தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழா. Show all posts
Showing posts with label தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழா. Show all posts

Thursday, August 8, 2013

தனிநாயகம் அடிகளாரும் தமிழ் நேசன் அடிகளாரும்!


மன்னார்த் தமிழ்ச் சங்கம் நடத்திய
தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழாவில்
கௌரவம் பெற்றோர்


'அஷ்ரஃப்... நான் ஃபாதர் தமிழ் நேசன் பேசுகிறேன்...!'

'சொல்லுங்க ஃபாதர்!'

'மன்னார்த் தமிழ்ச் சங்கத்தால தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழாக் கொண்டாடுகிறோம். தெரியும்தானே...!'

'தெரியும் ஃபாதர்... அமுதன் முகநூலில் அழைப்பிதழ் போட்டிருக்கிறார்!'

'நீங்களும் கலந்து கொள்ள வேண்டும்...!'

'.................'

'4ம் திகதி விழாவின் கடைசி நாள்...! அன்றைக்கு உங்களைக் கௌரவிக்க விரும்புகிறோம்!'

'ம்!'

'.............. ஆகியோர் பங்கு கொள்கிறார்கள். ஒரு நாள் மட்டுமாவது கட்டாயம் வாங்கோ... நீங்கள் ஆம் என்றால்தான் நான் அடுத்த கட்டத்துக்குப் போக முடியும்! என்ன சொல்கிறீர்கள்...?'

மன்னார்த் தமிழ்ச் சங்கத் தலைவராக இயங்கும் அருட்திரு. ஃபாதர் தமிழ் நேசனுக்கும் எனக்குமிடையிலான தொலைபேசி உரையாடல் இது.

இந்த உரையாடலுக்கு சில தினங்களுக்கு முன்னர் குறுந்தகவலில் எனது முகவரி கோரிய தம்பி மன்னார் அமுதன் தனது இரண்டாவது குறுந்தகவலில் ஃபாதர் தமிழ் நேசன் உங்களிடம் பேசுவார் என்று மட்டும் சொல்லியிருந்தார். விபரங்கள் எதுவும் இல்லை.



ஃபாதர் தமிழ் நேசன் மீது எனக்குத் தனி மரியாதை உண்டு. 2010ல் மன்னார்த் தமிழ்ச் சங்கம் மூலம் செம்மொழி மாநாடு ஒன்றை வெகு விமரிசையாகவும் கோலாகலமாகவும் நடத்தியவர். மாநாடு நடைபெற்ற அனைத்துத் தினங்களிலும் விருந்தினர்கள், பேராசிரியர்கள், படைப்பாளிகள் அனைவரையும் தங்கவைத்து நலனோம்பிய மனிதர். 

2011 சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் கடைசி வரை பங்கு பற்றியவர். தமிழ்ச் சங்கம் 2012ல் நடத்திய இலக்கிய மாநாட்டில் அவரது உரையைச் செவி மடுக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இச் சந்தர்ப்பங்களில் அவரைப் பற்றிய நல்லெண்ணம் மனமெங்கும் நிரம்பியிருந்தது.

அருட்திரு தமிழ் நேசன் அவர்கள் என்னை மன்னாருக்கு அழைத்த அந்த நாட்களில் நான் தனிப்பட்ட வேறு ஒரு தூரப் பயணத்தைத் திட்டமிட்டிருந்தேன். 

என்ன சொல்கிறீர்கள்? என்ற அவரது கேள்விக்கு 'ஆம்.. வருகிறேன்' என்பதைத் தவிர வேறு எந்தப் பதிலை என்னால் சொல்ல முடியும். அதையே சொன்னேன். இன்னொரு விடயத்தைத் தாண்டியும் அவருக்கு இந்தப் பதிலைத் தெரிவித்திருந்தேன் என்பது இங்கு குறிப்பிட்டேயாக வேண்டியிருக்கிறது.

அதுதான் விருதும் பொன்னாடையும் பெறுவது!

2000மாம் ஆண்டு எனக்கு முதலாவது பொன்னாடையைப் போர்த்தியவர் மாத்தளை பீர் முகம்மத்!

மாத்தளையில் தனது சொந்தச் செலவில் 'யாத்ரா' சஞ்சிகைக்கான அறிமுக விழாவை ஏற்பாடு செய்து நடத்திய பீர் முகம்மத் எனக்கே தெரியாமல் இப்படியொரு ஏற்பாட்டைச் செய்திருந்தார். பொன்னாடை போர்த்தும் அந்தக் கணத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட சகோதரர் ரவூப் ஹக்கீம் 'அஷ்ரஃப்! உங்களுக்குப் பொன்னடை போர்த்தப் போகிறார்கள்!' என்று எனது காதுக்குள் சொல்லும் வரை எனக்கு இவ்விடயம் தெரிந்திருக்கவில்லை. அந்த இடத்தில் நான் அதை ஏற்றுக் கொள்ளாதிருப்பது பொருத்தமாக இருக்கப் போவதில்லை என்பதால் ஏற்றுக் கொண்டேன்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு திரும்பும் போது டாக்டர் ஜின்னாங் ஷரிபுத்தீன் சொன்ன வார்த்தைகள் இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது,

'நீங்கள் அதை மறுக்காமல் விட்டவரைக்கும் எனக்கு மகிழ்ச்சி. உங்கள் சஞ்சிகைக்காக ஒரு விழாவை ஏற்பாடு செய்த மனிதர், உங்களது நட்பையும் எழுத்தையும் கௌரவிக்கும் விதத்தில் ஒரு பொன்னாடையைப் போர்த்துவதில் மகிழ்ச்சியடைகிறார் என்றால் அதைத் தவிர்ப்பது மிகவும் பிழையானது!'

அன்று அப்பொன்னாடையை ஏற்றுக் கொண்ட போதும் பொன்னாடை விடயத்துடன் எனக்கு பெரிய உடன்பாடு எப்போதும் இருந்ததில்லை. 

2002ல் அரச அனுசரணையுடன் நடந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் அம்மாநாட்டை நடத்துவதில் முன்னின்ற எனக்கும் டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன், டாக்டர் தாஸிம் அகமது ஆகியோருக்கும்; பொன்னாடை போர்த்துவதற்காக வர்த்தகப் பிரமுகரும் சஞ்சிகையாளரும் எழுத்தாளருமான ஹாஜி ஏவி.எம். ஜாபர்தீன் மூன்று பொன்னாடைகளை இந்தியாவிலிருந்து கொண்டு வந்து கையில் வைத்துக் காத்திருந்தார். நாங்கள் அவற்றை ஏற்றுக் கொள்ள மறுத்தோம். 

2011ல் சர்வதேச எழுத்தாளர் மாநாட்டைக் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடத்திய போது பொன்னடை என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற முடிவுக்கு மாநாட்டுக் குழுவில் இருந்த நாம் அனைவரும் முடிவுக்கு வந்து அப்படியே செய்தும் காட்டினோம். 

அதே வேளை 2007ல் இசைக்கோ நூர்தீன் தலைமையில் இயங்கிய ஸ்ரீலங்கா முஸ்லிம் கலைஞர் முன்னணி வழங்கிய 'நவயுக கலைச்சுடர்' விருதையும் பொன்னாடையையும் 2011 நடுப்பகுதியில் காயல்பட்டினத்தில் நடந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் வழங்கப்பட்ட 'தமிழ்மாமணி' விருதையும் பொன்னாடையையும் ஏற்றுக் கொண்டேன்.

மொத்தமாகச் சிந்தித்துப் பார்த்தால் சில கௌரவங்களை மறுப்பதன் மூலம் நல்ல சில உள்ளங்களைக் காயப்படுத்தாமல் தவிர்த்திருக்கிறோம் என்பதையும் சிலவற்றை மறுப்பதன் மூலம் நாம் காயப்படாமல் தப்பியிருக்கிறோம் என்ற முடிவுக்கும்தான் என்னால் வர முடிகிறது! இதுக்குமேல் இது பற்றிப் பேச எதுவுமில்லை.

ஏற்பதும் தவிர்ப்பதும் கலைஞனின் படைப்பாளியின் சுயகௌரவம் சார்ந்த, தீர்மானம் சார்ந்த விடயம்!

மூன்று நாள் நிகழ்வுகளிலும் பல நல்ல அம்சங்கள் நடைபெற்றிருந்தன. தனிநாயகம் அடிகளார் பற்றிய ஆய்வரங்கு, கவியரங்குகள், சுழலும் சொற்போர், பட்டி மண்டபம், வகை வகையான கலை நிகழ்ச்சிகள், சிறப்புரைகள் என்று விழா களைகட்டியிருந்தது. 

மன்னார்த் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்யும் நிகழ்வுகளில் எப்போதும் எல்லாப் பாடசாலைகளையும் கலை நிகழ்வுகளில் ஈடுபடுத்தி வருவதைக் காண்கிறேன். மாணாக்கருக்கான புறக்கிருத்தியச் செயற்பாடுகளில் பாடசாலைகள் ஈடுபடுகின்றவோ இல்லையோ மன்னார்த் தமிழ்ச் சங்கம் அதைச் செவ்வனே செய்து வருவதை கடந்த 3 வருடங்களில் இரண்டு முறை பார்த்து விட்டேன். ஆக ஏனைய பிரதேசங்களை விட இவ்விடயத்தில் மன்னார்த் தமிழ்ச் சங்கம் ஈடுபடுவதைக் கொண்டு பிரதேசத்தவர்கள் மன்னார்த் தமிழ்ச் சங்கத்துக்குத் தனியே ஒரு பாராட்டு விழா நடத்த வேண்டும். தவிர, ஏனைய பிரதேச தமிழ்ச் சங்கங்கள், கலை, இலக்கிய அமைப்புகள் தமது செயற்பாடுகளை மன்னார்த் தமிழ்ச் சங்கத்துடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளவும் வேண்டும்.

மன்னார்த் தமிழ்ச் சங்கத்தில் பெரும்பாலும் இளைஞர்களும் யுவதிகளும் இயங்கிக் கொண்டிருப்பது இன்னொரு சிறப்பு. மூத்தோர் முதல் பாடசாலைச் சிறுமியர் வரை இந்நிகழ்வுகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பது மற்றொரு சிறப்பு. இதுவெல்லாவற்றுக்கும் காரணம் அருட்திரு தமிழ்நேசனின் செயற்றிறண் என்;று சொல்வதில் தப்பேதுமில்லை.

நிகழ்வு முடிந்து கவிஞர் அமல்ராஜ் வீட்டில் தேநீர் அருந்திக் கொண்டிருந்த போது அருட்திரு. தமிழ் நேசன் நிகழ்ச்சிகளை மட்டுமன்றி சில முக்கியஸ்தர்களைக் கையாண்ட விதம் குறித்தும் விதந்து பேசிக் கொண்டிருந்த போது அமல்ராஜ் சொன்னார்:-

'அண்ணா, இந்த மனுசனுக்குக் கணக்கு விட ஏலாது. ஒவ்வொருத்தரையும் அவங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புக்களையும் எப்படித்தான் இவர் ஞாபகம் வைத்திருக்கிறார் என்று ஆச்சரியமாக இருக்கிறது. ஐந்து நிமிசத்துக்குள்ள நாலுபேரை செல்போனில் கூப்பிட்டு அலர்ட் பண்ணிக்கிட்டே இருப்பார்...'

யாரை எப்படிக் கையாள வேண்டும், எதை எப்படி அணுக வேண்டும் என்கிற நுணுக்கமும் அறிவும் அவரிடம் இருப்பதால்தான் சிக்கல்கள் ஏதுமின்றி எப்போதும் மிக லாகவமாக நிகழ்வுகளை அவர் நடத்திச் செல்கிறார்.

அங்கே சென்று மேடைக்கு அழைக்கும் வரை வேறு யார் யார் கௌரவம் பெறுகிறார்கள் என்கிற விசயம் கௌரவம் பெறும் மற்றொருவருக்குத் தெரிந்திருக்கவில்லை.

இன்னின்னார் கௌரவம் பெறுகிறார்கள் என்பது தெரிய வரும்போது பல சிக்கல்களை விழா நடத்துனர்கள் எதிர்கொள்ளுவார்கள். விருது, பாராட்டு என்றால் இரண்டு கேள்விகள் எழுவது வழக்கம் என்று நண்பர் கலைவாதி கலீல் குறிப்பிடுவது உண்டு. 'நான் ஏன் பட்டியலில் இல்லை? அவர் ஏன் பட்டியலில் இருக்கிறார்?' இதுதான் எழுப்பப்படும் வினா!

நீண்டகாலம் என்னுடன் பழகிய மன்னார்த் தமிழ்ச் சங்க நிர்வாகச் செயலாளராகத் தற்போது இயங்கும் மன்னார் அமுதன் கூட அங்கு செல்லு முன்னரும் சென்ற பின்னரும் கூட இது பற்றி என்னுடன் ஒரு வார்த்தை பேசவில்லை. எங்களுடன் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்ட அங்கு என்னுடன் அளவளாவிய நண்பர் நாவலாசிரியர் உதயணன் கூட இது பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. ஊர்வலத்தில் எம்முடன் இணையாமல் ஒதுங்கித் தெருவோரத்தே தம்பி லோசன் நின்றிருந்தார். மிகக் கட்டுப்பாடாக வளர்க்கப்பட்ட பிள்ளை அவர். மூத்தோருக்குக் கனம் பண்ணுவது எப்படி என்பதை லோசனிடம் இளையவர்கள் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். அதுகூட எனக்கு ஓர் ஆச்சரியமாகவே இருந்தது. சங்கத்தைச் சேர்ந்த எல்லோருக்கும் யார் யார் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட இருக்கிறார்கள் என்பது தெரிந்தே இருந்தது. ஆனால் எதுவுமே தெரியாத மாதிரி இயல்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

நிகழ்ச்சிகளுக்கு அறிவுப்புகளைச் செய்வது கூட மிக அழகாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டிருந்தது. என்னென்ன துறையை யார் யார் செய்வார்கள் என்பதைப் பகிர்ந்து வழங்கியிருந்தமையைத் தெளிவாக என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

கௌரவிப்பு நிகழ்வுதான் இறுதியாக நடந்தது. விருது பெறும் ஒவ்வொருவராக அழைத்து அவர்களது செயல்பாடு, சாதனைகளை எந்த அவதியும் இல்லாது அறிவிப்புச் செய்து விருதுகளை வழங்கினார்கள். 

முதலில் அழைக்கப்பட்டவர் வெற்றிச் செல்வி எனப்படும் வேலு சந்திரிகா.