Thursday, August 8, 2013

தனிநாயகம் அடிகளாரும் தமிழ் நேசன் அடிகளாரும்!


மன்னார்த் தமிழ்ச் சங்கம் நடத்திய
தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழாவில்
கௌரவம் பெற்றோர்


'அஷ்ரஃப்... நான் ஃபாதர் தமிழ் நேசன் பேசுகிறேன்...!'

'சொல்லுங்க ஃபாதர்!'

'மன்னார்த் தமிழ்ச் சங்கத்தால தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழாக் கொண்டாடுகிறோம். தெரியும்தானே...!'

'தெரியும் ஃபாதர்... அமுதன் முகநூலில் அழைப்பிதழ் போட்டிருக்கிறார்!'

'நீங்களும் கலந்து கொள்ள வேண்டும்...!'

'.................'

'4ம் திகதி விழாவின் கடைசி நாள்...! அன்றைக்கு உங்களைக் கௌரவிக்க விரும்புகிறோம்!'

'ம்!'

'.............. ஆகியோர் பங்கு கொள்கிறார்கள். ஒரு நாள் மட்டுமாவது கட்டாயம் வாங்கோ... நீங்கள் ஆம் என்றால்தான் நான் அடுத்த கட்டத்துக்குப் போக முடியும்! என்ன சொல்கிறீர்கள்...?'

மன்னார்த் தமிழ்ச் சங்கத் தலைவராக இயங்கும் அருட்திரு. ஃபாதர் தமிழ் நேசனுக்கும் எனக்குமிடையிலான தொலைபேசி உரையாடல் இது.

இந்த உரையாடலுக்கு சில தினங்களுக்கு முன்னர் குறுந்தகவலில் எனது முகவரி கோரிய தம்பி மன்னார் அமுதன் தனது இரண்டாவது குறுந்தகவலில் ஃபாதர் தமிழ் நேசன் உங்களிடம் பேசுவார் என்று மட்டும் சொல்லியிருந்தார். விபரங்கள் எதுவும் இல்லை.



ஃபாதர் தமிழ் நேசன் மீது எனக்குத் தனி மரியாதை உண்டு. 2010ல் மன்னார்த் தமிழ்ச் சங்கம் மூலம் செம்மொழி மாநாடு ஒன்றை வெகு விமரிசையாகவும் கோலாகலமாகவும் நடத்தியவர். மாநாடு நடைபெற்ற அனைத்துத் தினங்களிலும் விருந்தினர்கள், பேராசிரியர்கள், படைப்பாளிகள் அனைவரையும் தங்கவைத்து நலனோம்பிய மனிதர். 

2011 சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் கடைசி வரை பங்கு பற்றியவர். தமிழ்ச் சங்கம் 2012ல் நடத்திய இலக்கிய மாநாட்டில் அவரது உரையைச் செவி மடுக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இச் சந்தர்ப்பங்களில் அவரைப் பற்றிய நல்லெண்ணம் மனமெங்கும் நிரம்பியிருந்தது.

அருட்திரு தமிழ் நேசன் அவர்கள் என்னை மன்னாருக்கு அழைத்த அந்த நாட்களில் நான் தனிப்பட்ட வேறு ஒரு தூரப் பயணத்தைத் திட்டமிட்டிருந்தேன். 

என்ன சொல்கிறீர்கள்? என்ற அவரது கேள்விக்கு 'ஆம்.. வருகிறேன்' என்பதைத் தவிர வேறு எந்தப் பதிலை என்னால் சொல்ல முடியும். அதையே சொன்னேன். இன்னொரு விடயத்தைத் தாண்டியும் அவருக்கு இந்தப் பதிலைத் தெரிவித்திருந்தேன் என்பது இங்கு குறிப்பிட்டேயாக வேண்டியிருக்கிறது.

அதுதான் விருதும் பொன்னாடையும் பெறுவது!

2000மாம் ஆண்டு எனக்கு முதலாவது பொன்னாடையைப் போர்த்தியவர் மாத்தளை பீர் முகம்மத்!

மாத்தளையில் தனது சொந்தச் செலவில் 'யாத்ரா' சஞ்சிகைக்கான அறிமுக விழாவை ஏற்பாடு செய்து நடத்திய பீர் முகம்மத் எனக்கே தெரியாமல் இப்படியொரு ஏற்பாட்டைச் செய்திருந்தார். பொன்னாடை போர்த்தும் அந்தக் கணத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட சகோதரர் ரவூப் ஹக்கீம் 'அஷ்ரஃப்! உங்களுக்குப் பொன்னடை போர்த்தப் போகிறார்கள்!' என்று எனது காதுக்குள் சொல்லும் வரை எனக்கு இவ்விடயம் தெரிந்திருக்கவில்லை. அந்த இடத்தில் நான் அதை ஏற்றுக் கொள்ளாதிருப்பது பொருத்தமாக இருக்கப் போவதில்லை என்பதால் ஏற்றுக் கொண்டேன்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு திரும்பும் போது டாக்டர் ஜின்னாங் ஷரிபுத்தீன் சொன்ன வார்த்தைகள் இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது,

'நீங்கள் அதை மறுக்காமல் விட்டவரைக்கும் எனக்கு மகிழ்ச்சி. உங்கள் சஞ்சிகைக்காக ஒரு விழாவை ஏற்பாடு செய்த மனிதர், உங்களது நட்பையும் எழுத்தையும் கௌரவிக்கும் விதத்தில் ஒரு பொன்னாடையைப் போர்த்துவதில் மகிழ்ச்சியடைகிறார் என்றால் அதைத் தவிர்ப்பது மிகவும் பிழையானது!'

அன்று அப்பொன்னாடையை ஏற்றுக் கொண்ட போதும் பொன்னாடை விடயத்துடன் எனக்கு பெரிய உடன்பாடு எப்போதும் இருந்ததில்லை. 

2002ல் அரச அனுசரணையுடன் நடந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் அம்மாநாட்டை நடத்துவதில் முன்னின்ற எனக்கும் டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன், டாக்டர் தாஸிம் அகமது ஆகியோருக்கும்; பொன்னாடை போர்த்துவதற்காக வர்த்தகப் பிரமுகரும் சஞ்சிகையாளரும் எழுத்தாளருமான ஹாஜி ஏவி.எம். ஜாபர்தீன் மூன்று பொன்னாடைகளை இந்தியாவிலிருந்து கொண்டு வந்து கையில் வைத்துக் காத்திருந்தார். நாங்கள் அவற்றை ஏற்றுக் கொள்ள மறுத்தோம். 

2011ல் சர்வதேச எழுத்தாளர் மாநாட்டைக் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடத்திய போது பொன்னடை என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற முடிவுக்கு மாநாட்டுக் குழுவில் இருந்த நாம் அனைவரும் முடிவுக்கு வந்து அப்படியே செய்தும் காட்டினோம். 

அதே வேளை 2007ல் இசைக்கோ நூர்தீன் தலைமையில் இயங்கிய ஸ்ரீலங்கா முஸ்லிம் கலைஞர் முன்னணி வழங்கிய 'நவயுக கலைச்சுடர்' விருதையும் பொன்னாடையையும் 2011 நடுப்பகுதியில் காயல்பட்டினத்தில் நடந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் வழங்கப்பட்ட 'தமிழ்மாமணி' விருதையும் பொன்னாடையையும் ஏற்றுக் கொண்டேன்.

மொத்தமாகச் சிந்தித்துப் பார்த்தால் சில கௌரவங்களை மறுப்பதன் மூலம் நல்ல சில உள்ளங்களைக் காயப்படுத்தாமல் தவிர்த்திருக்கிறோம் என்பதையும் சிலவற்றை மறுப்பதன் மூலம் நாம் காயப்படாமல் தப்பியிருக்கிறோம் என்ற முடிவுக்கும்தான் என்னால் வர முடிகிறது! இதுக்குமேல் இது பற்றிப் பேச எதுவுமில்லை.

ஏற்பதும் தவிர்ப்பதும் கலைஞனின் படைப்பாளியின் சுயகௌரவம் சார்ந்த, தீர்மானம் சார்ந்த விடயம்!

மூன்று நாள் நிகழ்வுகளிலும் பல நல்ல அம்சங்கள் நடைபெற்றிருந்தன. தனிநாயகம் அடிகளார் பற்றிய ஆய்வரங்கு, கவியரங்குகள், சுழலும் சொற்போர், பட்டி மண்டபம், வகை வகையான கலை நிகழ்ச்சிகள், சிறப்புரைகள் என்று விழா களைகட்டியிருந்தது. 

மன்னார்த் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்யும் நிகழ்வுகளில் எப்போதும் எல்லாப் பாடசாலைகளையும் கலை நிகழ்வுகளில் ஈடுபடுத்தி வருவதைக் காண்கிறேன். மாணாக்கருக்கான புறக்கிருத்தியச் செயற்பாடுகளில் பாடசாலைகள் ஈடுபடுகின்றவோ இல்லையோ மன்னார்த் தமிழ்ச் சங்கம் அதைச் செவ்வனே செய்து வருவதை கடந்த 3 வருடங்களில் இரண்டு முறை பார்த்து விட்டேன். ஆக ஏனைய பிரதேசங்களை விட இவ்விடயத்தில் மன்னார்த் தமிழ்ச் சங்கம் ஈடுபடுவதைக் கொண்டு பிரதேசத்தவர்கள் மன்னார்த் தமிழ்ச் சங்கத்துக்குத் தனியே ஒரு பாராட்டு விழா நடத்த வேண்டும். தவிர, ஏனைய பிரதேச தமிழ்ச் சங்கங்கள், கலை, இலக்கிய அமைப்புகள் தமது செயற்பாடுகளை மன்னார்த் தமிழ்ச் சங்கத்துடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளவும் வேண்டும்.

மன்னார்த் தமிழ்ச் சங்கத்தில் பெரும்பாலும் இளைஞர்களும் யுவதிகளும் இயங்கிக் கொண்டிருப்பது இன்னொரு சிறப்பு. மூத்தோர் முதல் பாடசாலைச் சிறுமியர் வரை இந்நிகழ்வுகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பது மற்றொரு சிறப்பு. இதுவெல்லாவற்றுக்கும் காரணம் அருட்திரு தமிழ்நேசனின் செயற்றிறண் என்;று சொல்வதில் தப்பேதுமில்லை.

நிகழ்வு முடிந்து கவிஞர் அமல்ராஜ் வீட்டில் தேநீர் அருந்திக் கொண்டிருந்த போது அருட்திரு. தமிழ் நேசன் நிகழ்ச்சிகளை மட்டுமன்றி சில முக்கியஸ்தர்களைக் கையாண்ட விதம் குறித்தும் விதந்து பேசிக் கொண்டிருந்த போது அமல்ராஜ் சொன்னார்:-

'அண்ணா, இந்த மனுசனுக்குக் கணக்கு விட ஏலாது. ஒவ்வொருத்தரையும் அவங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புக்களையும் எப்படித்தான் இவர் ஞாபகம் வைத்திருக்கிறார் என்று ஆச்சரியமாக இருக்கிறது. ஐந்து நிமிசத்துக்குள்ள நாலுபேரை செல்போனில் கூப்பிட்டு அலர்ட் பண்ணிக்கிட்டே இருப்பார்...'

யாரை எப்படிக் கையாள வேண்டும், எதை எப்படி அணுக வேண்டும் என்கிற நுணுக்கமும் அறிவும் அவரிடம் இருப்பதால்தான் சிக்கல்கள் ஏதுமின்றி எப்போதும் மிக லாகவமாக நிகழ்வுகளை அவர் நடத்திச் செல்கிறார்.

அங்கே சென்று மேடைக்கு அழைக்கும் வரை வேறு யார் யார் கௌரவம் பெறுகிறார்கள் என்கிற விசயம் கௌரவம் பெறும் மற்றொருவருக்குத் தெரிந்திருக்கவில்லை.

இன்னின்னார் கௌரவம் பெறுகிறார்கள் என்பது தெரிய வரும்போது பல சிக்கல்களை விழா நடத்துனர்கள் எதிர்கொள்ளுவார்கள். விருது, பாராட்டு என்றால் இரண்டு கேள்விகள் எழுவது வழக்கம் என்று நண்பர் கலைவாதி கலீல் குறிப்பிடுவது உண்டு. 'நான் ஏன் பட்டியலில் இல்லை? அவர் ஏன் பட்டியலில் இருக்கிறார்?' இதுதான் எழுப்பப்படும் வினா!

நீண்டகாலம் என்னுடன் பழகிய மன்னார்த் தமிழ்ச் சங்க நிர்வாகச் செயலாளராகத் தற்போது இயங்கும் மன்னார் அமுதன் கூட அங்கு செல்லு முன்னரும் சென்ற பின்னரும் கூட இது பற்றி என்னுடன் ஒரு வார்த்தை பேசவில்லை. எங்களுடன் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்ட அங்கு என்னுடன் அளவளாவிய நண்பர் நாவலாசிரியர் உதயணன் கூட இது பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. ஊர்வலத்தில் எம்முடன் இணையாமல் ஒதுங்கித் தெருவோரத்தே தம்பி லோசன் நின்றிருந்தார். மிகக் கட்டுப்பாடாக வளர்க்கப்பட்ட பிள்ளை அவர். மூத்தோருக்குக் கனம் பண்ணுவது எப்படி என்பதை லோசனிடம் இளையவர்கள் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். அதுகூட எனக்கு ஓர் ஆச்சரியமாகவே இருந்தது. சங்கத்தைச் சேர்ந்த எல்லோருக்கும் யார் யார் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட இருக்கிறார்கள் என்பது தெரிந்தே இருந்தது. ஆனால் எதுவுமே தெரியாத மாதிரி இயல்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

நிகழ்ச்சிகளுக்கு அறிவுப்புகளைச் செய்வது கூட மிக அழகாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டிருந்தது. என்னென்ன துறையை யார் யார் செய்வார்கள் என்பதைப் பகிர்ந்து வழங்கியிருந்தமையைத் தெளிவாக என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

கௌரவிப்பு நிகழ்வுதான் இறுதியாக நடந்தது. விருது பெறும் ஒவ்வொருவராக அழைத்து அவர்களது செயல்பாடு, சாதனைகளை எந்த அவதியும் இல்லாது அறிவிப்புச் செய்து விருதுகளை வழங்கினார்கள். 

முதலில் அழைக்கப்பட்டவர் வெற்றிச் செல்வி எனப்படும் வேலு சந்திரிகா.





அங்கு எவ்வாறு அழைத்து விருதுகளை வழங்கினார்கள் என்பதை அவர்கள் பயன்படுத்திய வார்த்தைகளில் இங்கு தருகிறேன்.

01. செல்வி. வேலு சந்திரகலா (வெற்றிச்செல்வி)
வழங்கப்படும் விருது :- 'முயற்சித்திருமகள்'



அடம்பன் தாமரைக்குளத்தைச் சேர்ந்த செல்வி. வேலு சந்திரகலா இலக்கிய வட்டத்தில் வெற்றிச் செல்வி எனும் பெயரில் வலம் வருகிறார். குறுகிய காலத்தில் ஈழவரின் சமகால ,ருத்தலைக்கூறும் நூல்களை ஆளுமையோடு வெளிக்கொணர்துள்ளார். இவரின் ஐந்து நூல்கள் அச்சு வாகனமேறியுள்ளன. 'இப்படிக்கு அக்கா'  கவிதை தொகுப்பு  -2004, 'முடியாத ஏக்கங்கள்'  சிறுகதை தொகுப்பு  2012, 'காணாமல் போனவரின் மனைவி'  சிறுகதை தொகுப்பு  - 2012, 'போராளியின் காதலி'  நாவல்  - 2012, 'ஈழப்போரின் இறுதி நாட்கள்'  பயணகட்டுரை  2012

பீனிக்ஸ் பறவைபோல் மீண்டெழும் இயல்புடையவராக நல்முயற்சியின் வெளிப்பாடாக மாற்றுத்திறனாளிகளுக்கென ஓர் அமைப்பாக 'தேனி' எனும் பெயரில் மாந்தை மேற்கு மாற்றுத்திறனாளிகளின் அமைப்பை நிறுவி அதன் செயலாளராக பணியாற்றி வரும் வெற்றிச்செல்வி இவ்வமைப்பினூடாக மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமல்ல சமூக முன்னேற்ற நோக்கினை கொண்டு சிறுவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் உதவி வருகிறார். சுயதொழில் செய்து கொண்டு ,லக்கிய துறையிலும் சமூக முன்னேற்றத்திலும் ஈடுபாடு காட்டிவரும் செல்வி. வேலு சந்திரகலாவாகிய வெற்றிச்செல்விக்கு ,வ்வரங்கில் மன்னார் தமிழ்ச்சங்கம் 'முயற்சித்திருமகள்' எனும் விருது வழங்கி பாராட்டி கௌரவிப்பதில் பெருமகிழ்வடைகிறது.

02. திரு. சபுருதீன்
வழங்கப்படும் விருது :- 'சொல்லெஃகு'  

 கடந்த 30 வருடங்களுக்கு மேலாக சமூக ஈடுபாடு கொண்டு நல்லிணக்கத்தின் தலைசிறந்த அடையாளமாக திகழ்ந்து வரும் சட்டத்தரணி திருவாளர் சபுருதீன் அவர்கள் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட முதுமாணி (டு.டு.ஆ) பட்டத்தையும் சர்வதேச உறவுகளில் பட்ட பின்படிப்பையும் நிறைவு செய்தவர் தற்போது இவர் மன்னார் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான அமைப்பின் (சு.P.சு) தவிசாளராகவும் (உhயசைஅயn) மன்னார் துயர்துடைப்பு மறுவாழ்வு சங்கத்தின் (ஆயுசுசு) பிரதி தலைவராகவும் மன்னார் சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளராகவும் பணியாற்றி வருவதோடு மன்னார் பிரஜைகள் குழு முன்னாள் தலைவராகவும் மன்னார் செஞ்சிலுவைச்சங்கத்தின் முன்னாள் அலுவலராகவும் கடமையாற்றியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. ,வரின் சமூகப்பணியார்வம் சமய நல்லிணக்க ஈடுபாடு, இலக்கிய துறையார்வம் போன்றவற்றை பாராட்டி வாழ்த்தி 'சொல்லெஃகு' எனும் விருதினை இவ்வரங்கத்தில் மன்னார் தமிழ்சங்கம் திருவாளர் சபுருதீன் அவர்களுக்கு வழங்கி கௌரவித்தது.  

03. செங்கதிரோன் கோபாலகிருஷ்ணன்
வழங்கப்படும் விருது : 'எழுத்துச்சுடர்'



 மட்டக்களப்பு காரைதீவைச் சேர்ந்த திருவாளர், கோபாலகிருஷ்ணன், 'செங்கதிரோன்' எனும் புனைபெயரில் இலக்கியத்துறையில் பிரகாசிக்கிறார். பொறியியலாளராகிய இவர் தனது ஆரம்பக்கல்வியை பொத்துவில் மெதடிஸ்த பாடசாலையிலும் அதன்பின்பான கல்வியை மட்டக்களப்பு வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயத்திலும் நிறைவு செய்தார். கல்முனை நீர்ப்பாசன தொழினுட்ப நிறுவனத்தில் டிப்ளோமாவை பெற்று நீர்ப்பாசன திணைக்களத்தில் பணியாற்றிய இவர், தற்போது கிழக்கு மாகாணசபை பாலர் பாடசாலை கல்விப்பணியக செயலாற்று பணிப்பாளராக கடமையாற்றி வருகின்றார்.

இலக்கிய உலகில் கவிதையில் மிகுந்த ஈடுபாடுடைய இவர் நீர்ப்பாசன தொழிநுட்ப நிறுவனத்தில் பயிற்சி பெற்ற வேளையில் அதாவது 1960-1970 காலப்பகுதியில் தமிழ் கலா மன்றம் அமைத்து 'அருவி' எனும் சஞ்சிகை வெளியிட்டு அதன் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் ,லக்கிய செயலாளராக கடமையாற்றிய இவர் அச்சங்கத்தின் 'ஓலை' எனும் சஞ்சிகையின் ஸ்தாபக ஆசிரியராகவும் இருந்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது. மலேசியாவில் இடம்பெற்ற 6வது உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் 'தமிழும் விஞ்ஞானமும்' எனும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பித்த பெருமைக்குரியவர் இவர், மட்டக்களப்பு கண்ணகி கலை இலக்கியக்கூடலின் தலைவராக பணியாற்றும் இவர் கடந்த 5 வருடங்களாக 'செங்கதிர்' என்கிற சஞ்சிகையின் ஆசிரியராக தமிழிலக்கிய பணியாற்றி வருகின்றார். அத்துடன் மட்டக்களப்பு தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழாச் சபையின் செயற்குழு அறுப்பினராக இருக்கிறார். இத்தகைய சிறப்புக்குரிய செங்கதிரோன் திருவாளர் போபாலகிருஷ்ணன் அவர்களுக்கு மன்னார் தமிழ்ச்சங்கம் 'எழுத்துச்சுடர்' எனும் விருதினை இவ்விழா மேடையில் வழங்கி கௌரவித்தது.

04. திருவாளர் எஸ். டேவிட்
வழங்கப்படும் விருது : 'ஆய்வுச்செம்மல்'

 நானாட்டான் கோட்ட கல்வி அதிகாரியாகிய திருவாளர் எஸ்.டேவிட் அவர்கள் சிறந்த சிறுகதை, ஆய்வுக்கட்டுரை எழுத்தாளர். மித்திரன், வீரகேசரி போன்ற பத்திரிகைகளிலே பல சிறுகதைகளை எழுதி வந்துள்ளதோடு பல்வேறு புத்தகங்களுக்கு தனிசிறந்த ஆய்வுக்கட்டுரைகளை வரைந்துள்ளார். இவரின் எழுத்தோட்டத்தின் செழுமை மிகச் சிறப்பானது 'நான்', 'தொண்டன்', 'சுடர்' போன்ற சஞ்சிகைகளுக்கு இவர் தொடர்ச்சியாக எழுதி வந்திருப்பதை காணமுடிகிறது. இலக்கிய ஆர்வமிகு சிறந்த எழுத்தாளராகிய கல்வி அதிகாரி எஸ்.டேவிட் அவர்களின் எழுத்துப் பணியையும் ஆசிரியப்பணியையுப் பாராட்டி கௌரவித்து இவ்விழா அரங்கில் 'ஆய்வுச்செம்மல்' எனும் விருதினை வழங்கி மன்னார் தமிழ்ச்சங்கம் மகிழ்வடைந்தது.



05. திருவாளர் முத்துராமன் சுந்தரம் பாண்டியன்
வழங்கப்படும் விருது : 'மண்ணெழில் செம்மல்' 

 மன்னார் நறுவிலிக்குளத்தை பிறப்பிடமாகக்கொண்ட திருவாளர் மு.சுந்தரப் பாண்டியன் அவர்கள் மட்டக்களப்பு, அருளாளர் யோசவாஸ் வித்தியாலயத்தின் அதிபராக கடமையாற்றுகிறார். இவர் கடந்த 40 வருடங்களாக தமிழிலக்கிய ஈடுபாடு கொண்டு நூற்றுக்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளிக் கொணர்ந்துள்ளார். 'மொத்தம் போல் கவிதைகள்' எனும் கவிதை நூலுக்கும் ',லங்கை தமிழ் அறிஞர்கள்' எனும் நூலுக்கும் பதிப்பாசிரியராக திகழ்ந்து இன்றும் இலக்கிய பேரார்வத்தோடும் பிறந்த மண் பற்றோடும் செயலாற்றி வரும் அதிபர் திருவாளர் முத்துராமன் சுந்தரப்பாண்டியன் அவர்களின் எழுத்து கல்வி பணிகளை மெச்சி அவரை கௌரவிக்கும் வகையில் இவ்விழா மேடையில் தமிழ்ச்சங்கம் இவருக்கு 'மண்ணெழில் செம்மல்' எனும் விருதினை வழங்கியது.

06. திரு. ரகுபதி பாலசிறிதரன் வாம லோசனன் (லோசன்)
வழங்கப்படும் விருது : 'அலைவழிச் சுடரோன்'



 கடந்த 15 வருடங்களாக காற்றில் வரும் நேர்த்திக் குரலாய் ஒலிபரப்புத்துறையில் பணியாற்றும் திரு. ரகுபதி பாலசிறிதரன் வாம லோசனன், லோசன் என்கிற பெயரினாலே வானொலி நேயர்களால் நன்கு அறிமுகமாகியுள்ள இலக்கியவாதி. இலங்கையின் புகழ் பூத்த சூரியன் குஆ வானொலிச் சேவையில் பணிப்பாளராக கடமையாற்றும் இவர் ஒலிபரப்புத்துறையில் 2008 ஆண்டு மேல்மாகாண சாகித்திய விருதையும் 2004ம் ஆண்டு கல்வி விழிப்புணர்ச்சிக்கான மத்திய மாகாண சாகித்திய விருதினையும் பெற்றுக்கொண்டவர். ஊடகவியல் துறையில் டிப்ளோமாவினையும் சந்தைப்படுத்தல் நுட்பவியல் முதுமாணி பட்டத்தையும் பெற்றுக்கொண்டுள்ள இவர் அமெரிக்கதூதுவராலய ஏற்பாட்டில் அமெரிக்காவில் ஒரு மாத கால ஊடகவியல் சார்ந்த பயிற்சிப்பட்டறையை பூர்த்தி செய்தவர் என்பது விதந்துரைப்புக்குரியது. திரு.லோசனின் செவிப்புல இலக்கிய பணியினை பாராட்டி வாழ்த்தி மன்னார் தமிழ்ச்சங்கம் ,வருக்கு 'அலைவழிச் சுடரோன்' எனும் விருதினை வழங்கி கௌரவித்தது. 

07. டாக்டர் ஓ.கே. குணநாதன்
வழங்கப்படும் விருது : 'விருதுரை எழிலோன்'  



மட்டக்களப்பு அமிர்தகலியைச் சேர்ந்த டாக்டர் ஓ.கே. குணநாதன் ஆக்க ,லக்கியத்தில் தனி சிறந்து திகழ்கின்றார். சிறுகதை கொகுப்பு, கவிதை தொகுப்பு, ஆய்வுக்கட்டுரைகள், சிறுவர் ,லக்கியம் என்பவற்றில் இதுவரை 35 நூல்களை வெளியிட்ட பெருமைக்குரியவர் இவர் தமிழில் வெளிக்கொணர்ந்த நூல்களில் 6நூல்கள் சிங்கள மொழியிலும் ஒரு நூல் ஆங்கில மொழியிலும் ஒரு நூல் மலையாள மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவரின் இலக்கிய வட்டம் பரந்ததாக இருப்பினும் சிறுவர் இலக்கியத்தினாலே இவர் பெரிதும் அடையாளம் காணப்படுகிறார்.

சிறுவர்கள் நாவல்கள்
'வெள்ளைக்குதிரை', 'மாவீரன் புள்ளிமான்' , 'மரம் வெட்டியும் ஒரு தேவதையும்', 'குறுப்புக்கார ஆமையார்', 'பறக்கும் ஆமை'

இதில் 'பறக்கும் ஆமை' எனும் சிறுவர் நாவல் 'சிறந்த வடிவமைப்பு' க்கான விருதினை பெற்ற ஒரே ஒரு தமிழ் நூல் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அனேக விருதுகளுக்கு சொந்தக்காரர் இவர் தமிழ்நாட்டு கலை இலக்கிய விருதை ஒரு முறையும் தமிழ்நாடு கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை விருதை ஒரு முறையும் இலங்கை அரசு தேசிய சாகித்திய விருதை 5 முறையும் வடகிழக்கு மாகாணத்தில் 8 நூல்களுக்கான விருதையும் பெற்றுள்ளார். ,லங்கை அரசு தேசிய சாகித்திய விருதினை அனேக தடவைகள் பெற்றுக்கொண்ட ,லக்கிய வாதி ,வர் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் மட்டக்களப்பில் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தை நிறுவி அதன் இயக்குனராக தன் சொந்த பணம் சுமார் 8 இலட்சத்தை செலவழித்து விருதுகளை கொடுத்து நூலுருவாக்கி பணியாற்றிவருகிறார்.

இப்படியான பல விருது பெற்று விருது வழங்கி இலக்கியப் பணியாற்றும் தாராள சிந்தையுடைய டாக்டர்ஓ.கே. குணநாதன் அவர்களை வாழ்த்தி, பாராட்டி, கௌரவித்து இந்த மாபெரும் அரங்கில் மன்னார் தமிழ்ச்சங்கம் இவருக்கு 'விருதுரை எழிலோன்' எனும் விருதினை வழங்கி மகிழ்வடைந்தது.

08. திருவாளர் கைத்தான் பேர்னாட்
வழங்கப்படும் விருது : 'நான்நெறிக்காவலன்'

 வவுனியா கல்வியற் கல்லூரியின் முதல்வராகிய திருவாளர் கைத்தான் பேர்னாட் யாழ்ப்பாணம் ,ளவாலையை பிறப்பிடமாக கொண்டவர். 59 வயது நிரம்பிய இவர் தனது பட்டப்படிப்பை கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொது நிதி, வரித்துறையில் பட்டம் பெற்றவர் கொழும்பில் கற்பித்தல் காலப்பகுதியில் துறையில் பணியாற்றிய ,வர் 1970,1980 காலப்பகுதியில் 'புதிய உலகம்' எனும் வானொலி நிகழ்வில் ஈடுபாடு காட்டியவர்  இலங்கை கல்வியல்  நிர்வாகத் துறைக்குத் தெரிவான இவர் 1993ம் ஆண்டிலிருந்து வவுனியா கல்வியற்கல்லூரியில் விரிவுரையாளராக கடமையாற்றி வருகிறார். புலமைப்பரிசில் ஒன்றில் அவுஸ்ரேலிய கல்வியியல் முதுமானி பட்டம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 2002ம் ஆண்டிலிருந்து கடந்த 11 வருடங்களாக வவுனியா கல்வியற்கல்லூரியின் முதல்வராக பணியாற்றிவரும் இவர் 'சிறந்த முதல்வர்' எனும் விருதினையும் பெற்றுள்ளார். பல்வேறு துறையினருக்கு விசேடமாக இளைஞர்களுக்கு பயிற்சிப் பட்டறைகள் நடத்தி வற்துள்ளார். எல்லா மதத்தினருக்கும் உரிய மதிப்பை, வாய்ப்பை தனது பணித்தளத்தில் வழங்கி வரும் சீரான நிர்வாக ஆளுமை மிகுந்த திரு. கைத்தான் பேர்னாட் அவர்களுக்கு தவத்திரு தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழா அரங்கில் 'நான்நெறிக்காவலன்' என்கிற விருதினை வழங்கி மன்னார் தமிழ்ச்சங்கம் மகிழ்வுறுகிறது.

09. திரு. அஷ்ரஃப் சிஹாப்தீன்
வழங்கப்படும் விருது : 'எழுத்தியல் கோன்'



 திரு. அஷ்ரஃப் சிஹாப்தீன் 20 வருடங்களுக்கு மேலாக ஒலிபரப்புத்துறையில் அனுபவம் மிகுந்த சிரேஷ்ட ஊடகவியலாளார். இலங்கை வானொலியில் அறிவிப்பாளராகவும் இலங்கை அரச தொலைக்காட்சி ரூபவாஹினியிலும் 15 வருடங்களுக்கு மேலாக செய்தி வாசிப்பவராக சேவையாற்றி உள்ளார். பல நூறு வானொலி நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கியதோடு தொலைக்காட்சியில் பலரை நேர்முகங்கண்டுள்ளார்.
இவரின் படைப்பிலக்கியங்கள் பின்வருவன.
1.காணாமல் போனவர்கள் (கவிதை - 1999)
2. உன்னை வாசிக்கும் எழுத்து (கவிதை மொழி பெயர்ப்பு - 2007)
3. என்னைத்தீயில் எறிந்தவன் (கவிதை  - 2008) அரச தேசிய சாகித்திய விருது 
4. தீர்க்கவர்ணம் (பத்திரிகைப்பத்திகளின் தொகுப்பு - 2009)
5. ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணம் வரை (பயண அனுபவங்கள் - 2009)
6. ஒரு குடம் கண்ணீர் (உண்மைக்கதைகளின் தொகுப்பு - 2010 (அரச தேசிய சாகித்திய சான்றிதழ்)
7. ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள் (அரபுச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு - 2011) அரச தேசிய சாகித்திய விருது

இவருடைய புத்தகங்களுக்கு மும்முறை அரச தேசிய சாகித்திய விருது கிடைத்துள்ளது, பாராட்டுக்குரியது. சிறுவர் இலக்கியத்திலும் ஈடுபாடுடைய இவர் சிறுவர்களுக்கான மூன்று கதைப்புத்தகங்களை எழுதியுள்ளார். அவை சிங்கள மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன, என்பது சிறப்புக்குரியது.

 2002ம் ஆண்டு இலங்கை கொழும்பு தலைநகரில் சிறப்புற நடந்துமுடிந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டினதும் 2011ல் நடைபெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டினதும் செயலாளராக செயற்பட்ட இவர் தற்போது, சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் மற்றும் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் ஆகியவற்றின் பொதுச் செயலாளராக உள்ளார்.

 ஒலி பரப்புத்துறையில் விளையாட்டு நேர்முக வர்ணனையாளராகவும் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் வானொலி மற்றும் மேடை நாடக நடிகராகவும் திகழ்கின்ற திரு அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களின் கலை இலக்கியச் சேவையை பாராட்டி, வாழ்த்த்p மன்னார் தமிழ்ச் சங்கம் இவ்வரங்கில் ,வருக்கு 'எழுத்தியல் கோன்' எனும் விருதினை வழங்கி கௌரவித்தது.

10. எஸ்.ஏ. உதயன்
வழங்கும் விருது :- 'நற்புகழ் நாவற்கோன்'

 பேசாலை மகன் ஆசிரியர் எஸ்.ஏ.உதயன் மன்னார் மாவட்ட மண் தந்த கலைச் சொத்து. அரங்காடல் கலை, எழுத்துக்கலை, கட்புலக்கலை என கவின்கலைகளில் கால் பரப்பித் தன் பதிவுகளை ஆழமாக விசாலமாக இட்டுவரும் ஆசிரியர் எஸ்.ஏ.உதயன் அவர்கள் நாவல் புனைவதில் மன்னார் மண்ணில், ஏன் ஈழத்தமிழ் இலக்கிய அரங்கில் தனிசிறந்து ஒளிவீசுகிறார். இவ் எழுத்தாளர் கடந்த 6வருடங்களில் 6 நாவல்களை தமிழ்கூறும் நல்லுலகிற்கு தந்துள்ளதோடு பல விருதுகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார். பவன சுந்தரதம்பாள் தமிழியல் விருதை இருமுறையும் வடமாகாண சிறந்த நூல் எனும் விருதை நான்கு முறையும் இலங்கை இலக்கிய பேரவை விருதை ஒரு முறையும் இலங்கை அரச சாகித்திய விருதினை இரு முறையும் கொடகே தேசிய சாகித்திய விருதை ஒருமுறையும் பெற்று சாகித்திய நாயகனாக திகழ்கிறார்.
'லோமியா' - நாவல் - 2008
பவள சுந்தரதம்பாள் தமிழியல் விருது - 2008
இலங்கை ,லக்கியப்பேரவை விருது - 2008
வடமாகாண சிறந்த நூல் விருது - 2008

'தெம்மாடுகள்'- நாவல் - 2009
பவள சுந்தரதம்பாள் தமிழியல் விருது - 2009
வட மாகாண சிறந்த நூல் விருது - 2009

'வாசாப்பு' - நாவல் - 2010
இலங்கை அரச சாகித்திய விருது - 2010
வடமாகாண சிறந்த நூல் விருது - 2010

'சொடுதா' - நாவல் - 2011
வடமாகாண சிறந்த நூல் விருது - 2011
இலங்கை அரச சாகித்திய விருது - 2011
கொடகே தேசிய சாகித்திய விருது - 1012

'குண்டுசேர்' - நாவல் - 2011

'சங்குமுள்ளு' - நாவல் - 2013

 சமகாலத்தில் புனைகதை இலக்கியத்திற்கும் நாடக அரங்கியல் துறைக்கும் தமது பங்களிப்பை காத்திரமாக செலுத்தி மன்னாரின் முகவரியாக கணிக்கப்படும் ஆசிரியர் எஸ்.ஏ. உதயனை பாராட்டி, வாழ்த்தி, கௌரவித்து இவ்விழா மேடையில் மன்னார் தமிழ்ச்சங்கத்தால் 'நற்புகழ்நா(வ)ற்கோன்' எனும் விருது வழங்கப்பட்டது.

11. வைத்திய கலாநிதி. ஜின்னா சரிபுத்தின்
வழங்கப்படும் விருது :- 'எழுத்துளி வேந்தன்'



மருத்துவரான திருவாளர் ஜின்னா சரிபுத்தின் 1970ம் ஆண்டு தொடக்கம்  கடந்த 40 வருடங்களுக்கு மேலாக இலக்கிய பணியாற்றி வருகிறார். இதுவரை 10 காப்பியங்களை உருவாக்கி இருப்பது இலக்கிய வரலாற்றில் இவரை புகழேணியின் உச்சியில் வைத்துள்ளது. காவியத்திற்கு உரைநடை எழுதும் மரபிலக்கியத்தில் புரட்சி செய்து புதுமை செய்து உரைநடைக்கு காவியம் படைத்தவர் என போற்றப்படுபவர் இவர். எனவே இவருக்கு 'காப்பியக்கோ' எனும் விருதினை தமிழ்நாட்டுஇஇலக்கிய வட்டம் அளித்துள்ளது சிறப்புக்குரியது. இதுவரை 10,000க்கும் அதிகமான பாடல்களை படைத்துள்ள இவர் 24 நூல்களையும் வெளிக்கொணர்ந்துள்ளார் தேசிய சாகித்திய விருதினை இரு முறையும் கிழக்கு மாகாணத்தில் 'கலா பூசணம்' விருதையும் கிழக்கு மாகாண ஆளுநர் விருதையும் தனதாக்கிகொண்ட இவரின் நூல்களுக்கு யாழ்ப்பாண கலை ,லக்கிய  வட்டம் 5 முறை பரிசில்கள் வழங்கி கௌரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் சிரேஷ்ட துணைத்தலைவராக பணியாற்றும் இவர் இச்சங்கத்தின் முன்னாள் செயலாளராக கடமையாற்றியதும் குறிப்பிடத்தக்கது. 2002ம் ஆண்டில் உலக ,ஸ்லாமிய தமிழ் ,லக்கிய மாநாடு இலங்கையில்; நடை பெற்றபோது அதன் அமைப்புத்தலைவராக செவ்வனே செயலாற்றியதும் விதந்துரைப்புக்குரியது. தலைசிறந்த இலக்கியவாதியான டாக்டர் ஜின்னாசரிபுத்தின் அவர்களுக்கு தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளின் நூற்றாண்டு விழா அரங்கில் மன்னார் தமிழ்சங்கத்தால் 'எழுத்துளி வேந்தன்' எனும் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

12. பேரருட் கலாநிதி இராயப்பு யோசேப்பு
வழங்கும் விருது :- 'இனமான ஏந்தல்'



 மன்னார் மாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களின் தனிச்சிறப்பை அறியாதார் இங்கு எவருமிலர். ஊர் உலகமெங்கும் பட்டி தொட்டியெங்கும் பத்திரிகை தொடங்கி பாராளுமன்றம் வரையிலும் பரவலாக பேசப்படும் ஆன்மீகத்தலைவர் அதி.வண. இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் ஈழத்தமிழ் மக்கள் வாழ வேண்டும். அவர்கள் தலை நிமிர்ந்து வாழ வேண்டும். சகல உரிமைகளுடன் வாழ வேண்டும். இறைமையோடு வாழ வேண்டும். அவர்தம் கலை கலாசாரம் பாரம்பரியப்பண்பாடும் பேணப்பட வேண்டும். அவர்தம் நிலம் காக்கப்பட வேண்டும். என்பதற்காக எத்தகைய எதிர்ப்புகள், அச்சுறுத்தல்கள், சவால்கள், எழுந்தாலும் ஓர்மையோடு, நேர்மையோடு, வாய்மையோடு,: களைக்காது உரத்து முழங்கும் ஒரே குரலுக்கு சொந்தக்காரர் மன்னார் ஆயர் அவர்கள், அவரின் சொல்லும் செயலும் ஈழத்தமிழரின் விடியலின்நம்பிக்கை ஒளியாய் சுடருவதை ஈழத்தமிழரும், புலம்பெயர் தமிழரும் உலகத்தமிழரும் ஏன் தமிழர் அல்லாதோரும் அறிந்த தரணி உண்மை, ஈழவரின் உள்ளத்தில் 'மக்கள் ஆயராய்' உயர்ந்து நிற்கும் பெருமதிப்புக்கும் பேரன்புக்குமுரிய மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் தமிழ் மக்களுக்கு ஆற்றும் அனைத்து பணிகளையும் பாராட்டி, வாழ்த்தி அவரை கௌரவிக்கும்முகமாக மன்னார் தமிழ்ச் சங்கத்தால் ,வ்விழா மேடையில் அவருக்கு 'இனமான ஏந்தல்' எனும் விருது வழங்கப்பட்டது.

-------------------

தமிழ் மொழி, இலக்கியம் மீதான ஆர்வமும் கலை, இலக்கியங்களை வளக்க வேண்டும் என்ற வேணவாவும் ஆர்வமும் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் தலைமையிலான மன்னார் தமிழ்ச் சங்கத்துக்கு உண்டு. அவர்களது முயற்சிகள் தடங்கலின்றி நடந்தேற இறைவன் அருள் புரியட்டும்.

தனிநாயகம் அடிகளாரின் அடிச் சுவட்டைப் பின்பற்றி நடைபோடும் தமிழ் நேசன் அடிகளாருக்கு எமது நன்றிகள்!


 (புகைப்படங்கள் - நன்றி கவிஞர் அமல்ராஜ் பிரான்ஸிஸ் முகநூல் பக்கம்)
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: