Showing posts with label நாடகம். Show all posts
Showing posts with label நாடகம். Show all posts

Saturday, January 18, 2020

சோலைக்கிளியின் 'கப்புத் தென்னை' - நாடகம்


    சோலைக்கிளி பற்றிக் கேட்டால் முதலாவது அவர் ஒரு அசல் கவிஞர், இரண்டாவதும் அவர் ஒரு அசல் கவிஞர், மூன்றாவதும் அவர் ஒரு அசல் கவிஞர் என்றுதான் என்னால் சொல்லத் தோன்றும். அவரது கவிதைகள் மட்டுமல்ல, அவருடைய பேச்சும்கூட நகைச்சுவை ததும்பும் கவிதைத்தனமானதாகவே இருக்கும்.

    நாலாவதாகவும் சொல்லுங்கள் என்று என்னைக் கேட்டால் அவர் ஒரு நல்ல நாடக எழுத்தாளர் என்பேன். கவிதைகளாலேயே அவர் பெயர்பெற்று விட்ட காரணத்தால் அவருக்குள் இருந்த நாடகாசிரியன் பற்றி பெருமளவில் யாரும் கவனித்ததில்லை.

    எண்பதுகளின் பிற்கூறில் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் சோலைக்கிளியின் பல நாடகங்கள் ஒலிபரப்பாகியுள்ளன. அவற்றில் பாதிக்கும் மேற்பட்ட நாடகங்களில் நானும் நடித்துள்ளேன். சில வருடங்களுக்கு முன்னர் இந்த நாடகங்களைப் பற்றி அவரிடம் கேட்டபோது ஒலிநாடாவில் அவர் ஒலிப்பதிவு செய்து வைத்திருந்த 13 நாடகங்களை ஓர் இறுவட்டாக எனக்குத் தந்தார். அவற்றுள் சில நாடாவில் இருக்கும்போதே மீள மீள ஒலிக்க விடப்பட்டிருப்பதால் ஒலியளவு மாறியிருந்தன.

    இவரது நாடகங்கள் குறித்து ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்த காரணத்தால் அதைப் பெற்று இறுவட்டிலிருந்து கணினிக்கு மாற்றி வைத்திருக்கிறேன். சில போது இலக்கிய மஞ்சரிக்காகவும் அவரது நாடகங்களிலிருந்து சில பகுதிகளை எடுத்தாண்டிருக்கிறேன்.

    ஒரு நூலை வாசித்து அது குறித்து எழுதுவதை விட ஒலிப்பதிவைக் கேட்டுக் குறிப்பெடுத்து எழுதுவது சிரமமான காரியம். அதை ஒரே மூச்சில் செய்து முடித்து விட முடியாது. நிறைய நேரம் தேவைப்படும். பொறுமையும் அவகாசமும் தேவை. இருந்த போதும் மனதில் எண்ணியதை முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒவ்வொரு நாடகமாக எழுதி முடித்துவிடும் தீர்மானத்துக்கு வந்தேன்.

    'கப்புத் தென்னை' என்று ஒரு நாடகம். பொதுவாக தென்னை ஒற்றையாக நெடிதுயர வளரும். அபூர்வமாக மற்றொரு கிளை விடும் தென்னைக்குக் கப்புத் தென்னை என்று பெயர். ஆசிரியராகக் கடமையாற்றும் போது ஐம்பதாயிரம் ரொக்கம், நான்கு ஏக்கர் காணி, வீட்டுடன் திருமணம் செய்யும் பாருக் கல்வி அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றதும் கார் ஒன்றை வாங்கி ஓடினால்தான் கௌரவம் என்று நினைக்கிறான். எனவே மாமனாரிடம் உள்ள மீதி நான்கு ஏக்கர் காணியையும் தனக்குத் தர வேண்டுமென்று மனைவிடம் தினமும் சண்டை பிடிக்கிறான். தனக்கு மேலும் மூன்று சகோதரிகள் இருந்தும் தன்னிடமிருந்த எட்டு ஏன்னர் காணியில் பாதியை மூத்த பிள்ளை என்று தனக்குத் தந்ததை அவள் எடுத்துச் சொல்லியும் அது தனது பிரச்சனை அல்ல என்று வாதிடுகிறான் பாருக்.

    இதே வேளை பாருக்கின் தந்தையும் தாயும் அவனது வேண்டுகோள் நியாயமானது என்று மகன் பக்கம் நின்று பேசுகிறார்கள். மாமனாருடன் நேரடிப் பேச்சு முற்றி வீட்டை விட்டு வெளியேறுகிறான் பாருக். விவாக ரத்துக்குப் பின்னர் பாருக் வசதி வாய்ப்பான ஓரிடத்தில் காரொன்றை சீதனமாகப் பெற்றுக் கொண்டு திருமணம் செய்து கொள்கிறான். அவனது மனைவியும் மறுமணம் செய்து கொள்கிறாள். பாருக்கின் பிள்ளையுடன் சேர்த்து புதியவன் அவளை நன்றாக வாழ வைக்கிறான்.

    பாருக்கின் நண்பன் வெளிநாட்டிலிருந்து வந்து பாருக்கையும் அவனது தந்தையாரையும் சந்தித்து விட்டு பாருக்கின் முதல் மனைவி, அவளது தந்தையார் ஆகியோரைச் சந்திக்கும் காட்சியில்தான் பாருக் ஒரு காருக்காக எடுத்தது தப்பான முடிவு என்பதை அவர்களே சொன்ன வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்துகிறான்.

    பாருக் மனைவியுடன் சண்டையிட்டுத் தன் வீட்டுக்கு வந்ததும் - அவனுடைய தந்தையிடம், 'என்ன.. மகன் கோவிச்சுக்கிட்டு வந்துட்டாராமே..' என்று மற்றவர்கள் கேட்பதைப் பற்றி மனைவியிடம் சொல்லும் போது, 'ஒரு சின்னப் பெரச்சின எண்டா ஊரானுக்கு என்ன சந்தோஷமா இருக்குடா வாப்பா..' என்கிற இடமாகட்டும் - பாருக்கின் தாயார் கணவனிடம் சம்பந்தி குடும்பத்தைப் பற்றிச் சொல்லும் போது, 'மாப்புள கேட்டு வரக்குள்ள கருகின வாழப்பழத்தக் கொண்டாந்த குடும்பம்தானே அது..' என்று சொல்லும் இடமாகட்டும் - வெளிநாட்டிலிருந்து வந்த பாருக்கின் நண்பரிடம் தனது புதிய மருமகளைப் பற்றிச் சொல்லும் போது, 'அவ ஒரு ஊத்தக் கிடா.. தலைக்கி எண்ணெய் வெக்காளுமில்ல.. குளிக்காளுமில்ல..' என்று சொல்லுமிடமாகட்டும் நம்மையறியாமல் சிரிப்புப் பீறிடுகிறது. இதே மாதிரி சோலைக் கிளியின் கிண்டலான வசனங்கள் நாடகம் முழுக்க இடம்பெற்றுள்ளன.

'நான் பிழை செய்துட்டன்.. என்ட காசிலயாவது அவனுக்கு ஒரு காரை வாங்கி நான் குடுத்திருக்கணும். பொண்டாட்டியோட சண்ட புடிச்சிக்கிட்டு வந்தவனை ஏசி திருப்பி அனுப்பியிருக்கணும்' என்று பாருக்கின் தந்தை சொல்வதுடன் நாடகம் முடிவடைகிறது.

    இந்த நாடகத்தில் பாருக்கின் தந்தையாக மறைந்த கே.ஏ.ஜவாஹர் அவர்களும் தாயாக நூர்ஜஹான் மர்ஸூக் அவர்களும் மனைவியாக ஞெய்றஹீம் ஷஹீத் அவர்களும் பாருக்கின் மாமனாராக ஏ.ஆர்.எம். ஜிப்ரி அவர்களும் நண்பனாக மஹ்தி ஹஸன் இப்றாஹீம் அவர்களும் நடித்துள்ளனர். பாருக் என்ற பாத்திரத்தை ஏற்று நடித்தது நான்தான்.

    நாடகத்தின் தொடக்கக் காட்சியில் பாருக்கின் தந்தை இறைச்சிக் கறியுடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது எச்.ஐ.எம். ஹூஸைன் பிச்சைக்கானாக வருவார். 'சனியனுகள்... சாப்பிடுற நேரம் பாத்துத்தான் பிச்சையெடுக்க வருவானுகள்' என்று அவர் சாப்பிட்டுக் கொண்டே கொம்புவதும் கொடுத்த பணத்தைப் பெற்றுக் கொண்டு சோறு கேட்பார். சோறு இல்லை என்றதும் 'எங்கேயோ இறைச்சிக் கறி வாசம் வருகிறது' என்று பிச்சைக்காரன் சொல்லுவதும் வெகு சுவாரஸ்யமாகத் தூக்கி விடுகிறது.

18.01.2020

Thursday, April 25, 2013

ஒற்றுமைக் கயிறு - ஒலி நாடகம்


23.04.2013 அன்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பான “ஒற்றுமைக் கயிறு” என்ற - நான் எழுதிய வானொலி நாடகம்.


பகுதி -1




பகுதி - 2




பகுதி - 3



பகுதி - 4




Sunday, February 24, 2013

திப்பு சுல்தானின் மனிதாபிமானம்


திப்பு சுல்தானின் மனிதாபிமானம் என்ற கவிதை நாடகம் கடந்த 29.01.2013 அன்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பானது. 

கல்வியமைச்சினால் 2009ல் நடத்தப்பட்ட தமிழ்த் தினப் போட்டிகளில் இடம் பெற்ற முஸ்லிம் நாடகப் போட்டிக்காக இந்நாடகம் எழுதப்பட்டது.  கொழும்பு டீ.எஸ்.சேனாநாயக்க கல்லூரி மாணவர்களால் மேடை நாடகமாக நடிக்கப்பட்டுத் தேசிய ரீதியில் இந்நாடகம் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.

2011ம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற சர்வதேச எழுத்தாளர் மாநாட்டில் இந்நாடகம் மேடையேற்றப்பட்டுப் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது.  டீ.எஸ்.சேனாநாயக்க கல்லூரி மாணவர்களே இதனை நடித்தார்கள்.

பின்னர் ஒலிபரப்புக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டு வானொலி அறிவிப்பாளர்களால் நடிக்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டது. 

இந்நாடகத்துக்கான வரலாற்றுத் தகவல் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் எழுதிய “தீரன் திப்பு சுல்தான்” காவியத்திலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டது.




நாடகம் பகுதி - 1


நாடகம் பகுதி - 2



நாடகம் பகுதி - 3