Showing posts with label ரமளானில் ஒரு பகலுணவு. Show all posts
Showing posts with label ரமளானில் ஒரு பகலுணவு. Show all posts

Thursday, July 11, 2013

ரமளானில் ஒரு பகலுணவு


ஹிஜ்ரி 1417 - கி.பி. 1996ம் ஆண்டு.

000

நான் எதிர்பார்த்த மாதிரியே அந்தக் கடை அமைந்திருந்தது. தெருவில் வாகனத்தில் சற்றுத் தரித்து நன்றாக நோட்டம் விட்ட பின்னரே கடைக்குள் நுழைந்திருந்தேன்.

ஒரு சிறிய ஹோட்டல் அது. ஏழு அல்லது எட்டு டொபி போத்தல்களுக்கு நடுவில் கல்லாவில் அமர்ந்திருந்த உரிமையாளர் நிச்சயமாக பெரும்பான்மை இனத்தவர்தான் என்பது உறுதியானது. அந்தக் கடைக்குள் நான்கே நான்கு மேசைகள் மாத்திரம் இருந்தன. அதற்கு மேல் அங்கு இடம் இல்லை. அதில் ஒரு மேசை மூலையில் இரண்டு சுவர்களை அண்டிப் போடப்பட்டிருந்தது. தெருவுக்கு அல்லது கடை முகப்புக்கு முகம் காட்டாமல் அதில் அமர்ந்து கொண்டேன்.

கடையைச் சுற்றிப் பார்வையைச் செலுத்தினேன். சுவரில் பொருத்தப்பட்டிருந்த நீர்க் குழாயடியில் சுவரிலும் சுற்றிலும் பரவியிருந்த அழுக்கு கடை உரிமையாளரைக் கைது செய்யப் போதுமானது. ஏனைய மூன்று மேசையிலும் கொத்தாக ஈக்கள் பறந்து கொண்டிருந்தன. நான் அமர்ந்திருந்த மேசைக்கு மேல் சில ஈக்கள் பறந் தன. அவற்றை நான் விரட்டினேன். சுகாதாரப் பரிசோதகர்கள் அங்கு வருவதில்லையோ என்ற கேள்வி மனதுக்குள் எழுந்தது. 'வந்தால் கண்ணாடிப் பெட்டிக்குள் இருக்கும் இரண்டாவது தினம் மீண்டும் பொரித்த ஒரு கோழியை உரிமையாளர் சுற்றிக் கொடுத்து விடுவார். அதை அவர்கள் குடும்பத்துடன் சாப்பிட்டு விட்டுச் சந்தோசமாக இருந்து விடுவார்கள்' என்று எண்ணினேன்.

வெயிட்டர் பையன் வந்து 'என்ன வேண்டும்?' என்று பெரும்பான்மை மொழியில் கேட்டான்.

'சோறு' என்று நானும் பெரும்பான்மை மொழியிலேயே பதில் சொன்னேன்.

சோறு, கறிகளை வைத்து விட்டு அவன் நகர, நான் சாப்பிட ஆரம்பித்தேன்.

கடைக்குள் வேறு யாரும் கிடையாது. சாப்பிட்டு முடிப்பதற்குள் மூன்று நான்கு முறை வேறு என்ன வேண்டும் என்று கேட்டுக் கேட்டு அவன் அருகில் வந்தான். அவன் அப்படி அருகில் வருவது  எனக்கு ஒரு அசௌகரியத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையில் கடையின் முகப்புப் பகுதியை இரண்டு மூன்று முறை திரும்பிப் பார்த்துக் கொண்டேன்.

தெருவில் கடையைத் தாண்டிச் செல்லும் யாராவது ஒரு முஸ்லிம் நபர் என்னைப் பார்த்துவிடக் கூடாது என்ற ஒரு பயம்தான் அதற்குக் காரணம். ஏனென்றால் அன்று றமளான் நோன்பின் பதின் மூன்றாவது தினம். நான் அன்று நோன்பு நோற்காத நிலையில் ஒரு பெரும்பான்மைக் கடையில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்.

நான் ஒரு தொலைக்காட்சிச் செய்தியறிவிப்பாளன். வானொலி அறிவிப்பாளன்.  கவிதை எழுதுபவன். பலருக்கும் அறிமுகமானவன். எனக்குத் தெரியாத பலர் என்னையறிவார்கள். தெருவில் நடந்து போனால் ஆகக் குறைந்தது இருவராவது புன்னகைப்பார்கள். தாமதித்து நிற்கும் இடத்தில் யாரோ ஒருவர் 'நீங்கள் இன்னார்தானே' என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொள்வதுமுண்டு. சிலர் அதே இடத்தில் க்ண்ணுக்குத் தெரியாத இரத்தம் ஆறாகப் பெருக 'அறுக்க' ஆரம்பித்து விடுவதுமுண்டு.

இவ்வாறான ஒரு நிலைமையில் றமளானில் பகல் சாப்பாடு உண்ணும் என்னைக் கண்டால் என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்.