சிங்களத்தில் 'களு ஜூலி' என்று அழைக்கப்படும் 'கறுப்பு ஜூலை' என்கிற கோரத்தாண்டவம் நிகழ்ந்து 30 ஆண்டுகள் கழிந்து விட்டன.
இலங்கைத் தமிழர்கள் மீதான திட்டமிட்ட இந்த இன அழிப்பு நடந்த போது நான் பலாலி ஆசிரிய கலாசாலையில் ஆசிரிய மாணவனாக இருந்தேன்.
அவ்வப்போது படையினர் மீதான தாக்குதலும் தமிழ் இயக்கங்களின் மீதான மற்றும் பொதுமக்கள் மீதான படையினரின் தாக்குதலும் பற்றிய செய்திகள் வந்து கொண்டிருந்ததைப் போலவே திருநெல்வேலிச் சந்தியில் படையினர் மீது நடத்தப்பட்ட அதிரடித் தாக்குதலில் 13 படையினர் கொல்லப்பட்ட செய்தியும் எங்களுக்கு வந்து சேர்ந்தது.
அநேகமாகவும் யாழ். மாவட்டத்தில் வசிக்கும் ஆசிரிய மாணவ, மாணவிகள் கலாசாலைக்குத் தினமும் வந்து செல்வார்கள். தூர இடங்களைச் சேர்ந்த என்னைப் போன்றவர்கள் கலாசாலை விடுதியிலே தங்கியிருந்தோம். விடுதி ஒரு தனிக் குடும்பம், தனி உலகம். இதன் இன்பங்களும் துன்பங்களும் சொல்லிமாகாதவை. துன்பங்களையெல்லாம் இன்பங்களாக மாற்றுவதே இளைஞர்களாக இருந்த எங்கள் போக்கும் நோக்குமாக இருந்து வந்தது.
நாடே எரிந்து கொண்டிருந்தது. அதாவது தென்னிலங்கையில் வாழ்ந்த தமிழனும் அவனது சொத்துகக்களும் எரிந்தன. கலாசாலை காலவரையற்ற விடுமுறை அறிவித்தது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. நாங்கள் போக்கிடம் இன்றிக் கலாசாலைக்குள் கட்டுண்டு கிடந்தோம்.
இந்தக் காலப் பகுதிக்குள்தான் '304' சீட்டாட்டமும் பீடி குடிக்கவும் நான் பழகினேன். கலாசாலைக்கு அருகே இருந்தது ஒருயொரு கடை. 'தம்பையா ஸ்டோர்ஸ்' என்ற அந்தக் கடையை நாங்கள் 'தம்பையா கடை' என்று அழைப்போம். இளம் வயதுக்காரரான தம்பையா நல்ல மனிதர். குளிர்பானம் முதல் கொப்பி வாங்குவது வரை அவரது கடைதான். பலருக்கு அங்கு 'எக்கவுண்ட்' இருந்தது.
கலாசாலை விடுதியில் இருந்த ஆசிரிய மாணவர்களில் ஒருவரைத் தவிர வேறு யாரும் 'பீடி' பிடிப்பதில்லை. ஏனையோர் 'பிறிஸ்டல்' சிகரட்தான் ஊதுவார்கள். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு தம்பையா கடைக்கும் பொருட்கள் வருவது நின்று போனது. அவராலும் பொருட்கொள்வனவுக்கு எங்கும் செல்ல முடியவில்லை. புகைத்துப் பழகியோருக்கு அங்கு இலகுவாகக் கிடைத்தது, சுருட்டும், பீடியும்தான்.
எமது சீட்டாட்டம் பற்றித் தனியே எழுத வேண்டும். 'கொஞ்சம் நில்லுடா... இப்ப குடுக்கிறன்பாரு... என்று சொல்லி சிகரட்டை ஓர் இழு இழுத்து ஓரமாக வைத்துவிட்டுச் சிலர் சீட்டை இழுத்து வீசும் லாவகம் இருக்கிறே.. சொல்லி வேலையில்லைப் போங்கள்!
சீட்டாட்டம், சிகரட் என்று எந்த நல்ல பழக்கமும் இல்லாத நான் சும்மா எவ்வளவு நேரத்துக்குத்தான் உட்கார்ந்து சீட்டாட்டத்தைப் பார்த்துக் கொண்டிருப்பது. அவ்வப்போது கெஞ்சிக் கூத்தாடி இடைக்கிடையே உட்கார்ந்து பழகிக் கொண்டேன். ஆட்டத்தைப் புரிந்து எக்ஸ்பர்ட் நிலைக்கு வந்த பிறகு பீடியையும் இழுத்துப் பார்த்தால் என்ன என்ற எண்ணம் வந்தது. இப்படியாக தம்பையா கடையில் விற்காமல் கிடந்த அத்தனை பீடியையும் வாங்கி இழுத்துத் தள்ளினோம்.
ஒருவாரம் கழிந்த பிறகு 'அரசி ஒருமூட்டையும் மாவு ஒரு மூட்டையும்தான் கைவசம் இருக்கிறது என்றுஉணவுக் கமிட்டிப் பொறுப்பாளன் தர்மலிங்கம் சொன்ன போதுதான் நிலைமை சிக்கலடைவது எமக்கு உறைத்தது. ஆண், பெண் விடுதிகளுக்குள் இருந்தவர்கள் அவ்வப்போது பக்கத்து ஊர்களில் உள்ள நண்பர்கள், உறவினர் என்று போயிருந்தாலும் ஏறக்குறைய எழுபத்தைந்து பேரளவில் எஞ்சியிருந்தோம்.
அடுத்தடுத்த தினங்களில் ஊரடங்கு அவ்வப்போது தளர்த்தப்படும் வேளைகளில் சில பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. எங்களது குழாம் அங்கிருந்து கிளம்புவது என்று முடிவுக்கு வந்தது. பெண்கள் நால்வர் ஆண்கள் அறுவர் என்று ஞாபகம். இந்தக் குழாத்தை அப்படியே அழைத்துக் கொண்டு தனது ஊரான மன்னாருக்குச் செல்லும் திட்டத்தை நண்பன் நஸார் சொன்னான். மலையகத்தைச் சேர்ந்த நஸீர், ஆரிபீன், நீலா, யோகா, நிஸா குருநாகலைச் சேர்ந்த முகம்மத், மன்னாரைச் சேர்ந்த தாஜூன்னிஸா, நஸார், ஓட்டமாவடியைச் சேர்ந்த நான் மற்றும் நண்பர் நெய்னா முகம்மத். யாருடையவாவது பெயர் விடுபட்டதா என்று இப்போது ஞாபகம் இல்லை.