Sunday, July 27, 2014

களு ஜூலி - '83


சிங்களத்தில் 'களு ஜூலி' என்று அழைக்கப்படும் 'கறுப்பு ஜூலை' என்கிற கோரத்தாண்டவம் நிகழ்ந்து 30 ஆண்டுகள் கழிந்து விட்டன.

இலங்கைத் தமிழர்கள் மீதான திட்டமிட்ட இந்த இன அழிப்பு நடந்த போது நான் பலாலி ஆசிரிய கலாசாலையில் ஆசிரிய மாணவனாக இருந்தேன்.

அவ்வப்போது படையினர் மீதான தாக்குதலும் தமிழ் இயக்கங்களின் மீதான மற்றும் பொதுமக்கள் மீதான படையினரின் தாக்குதலும் பற்றிய செய்திகள் வந்து கொண்டிருந்ததைப் போலவே திருநெல்வேலிச் சந்தியில் படையினர் மீது நடத்தப்பட்ட அதிரடித் தாக்குதலில் 13 படையினர் கொல்லப்பட்ட  செய்தியும் எங்களுக்கு வந்து சேர்ந்தது.

அநேகமாகவும் யாழ். மாவட்டத்தில் வசிக்கும் ஆசிரிய மாணவ, மாணவிகள் கலாசாலைக்குத் தினமும் வந்து செல்வார்கள். தூர இடங்களைச் சேர்ந்த என்னைப் போன்றவர்கள் கலாசாலை விடுதியிலே தங்கியிருந்தோம். விடுதி ஒரு தனிக் குடும்பம், தனி உலகம். இதன் இன்பங்களும் துன்பங்களும் சொல்லிமாகாதவை. துன்பங்களையெல்லாம் இன்பங்களாக மாற்றுவதே இளைஞர்களாக இருந்த எங்கள் போக்கும் நோக்குமாக இருந்து வந்தது.

நாடே எரிந்து கொண்டிருந்தது. அதாவது தென்னிலங்கையில் வாழ்ந்த தமிழனும் அவனது சொத்துகக்களும் எரிந்தன. கலாசாலை காலவரையற்ற விடுமுறை அறிவித்தது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. நாங்கள் போக்கிடம் இன்றிக் கலாசாலைக்குள் கட்டுண்டு கிடந்தோம்.

இந்தக் காலப் பகுதிக்குள்தான் '304' சீட்டாட்டமும் பீடி குடிக்கவும் நான் பழகினேன். கலாசாலைக்கு அருகே இருந்தது ஒருயொரு கடை. 'தம்பையா ஸ்டோர்ஸ்' என்ற அந்தக் கடையை நாங்கள் 'தம்பையா கடை' என்று அழைப்போம். இளம் வயதுக்காரரான தம்பையா நல்ல மனிதர். குளிர்பானம் முதல் கொப்பி வாங்குவது வரை அவரது கடைதான். பலருக்கு அங்கு 'எக்கவுண்ட்' இருந்தது.

கலாசாலை விடுதியில் இருந்த ஆசிரிய மாணவர்களில் ஒருவரைத் தவிர வேறு யாரும் 'பீடி' பிடிப்பதில்லை. ஏனையோர் 'பிறிஸ்டல்' சிகரட்தான் ஊதுவார்கள். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு தம்பையா கடைக்கும் பொருட்கள் வருவது நின்று போனது. அவராலும் பொருட்கொள்வனவுக்கு எங்கும் செல்ல முடியவில்லை. புகைத்துப் பழகியோருக்கு அங்கு இலகுவாகக் கிடைத்தது, சுருட்டும், பீடியும்தான்.

எமது சீட்டாட்டம் பற்றித் தனியே எழுத வேண்டும். 'கொஞ்சம் நில்லுடா... இப்ப குடுக்கிறன்பாரு... என்று சொல்லி சிகரட்டை ஓர் இழு இழுத்து ஓரமாக வைத்துவிட்டுச் சிலர் சீட்டை இழுத்து வீசும் லாவகம் இருக்கிறே.. சொல்லி வேலையில்லைப் போங்கள்!

சீட்டாட்டம், சிகரட் என்று எந்த நல்ல பழக்கமும் இல்லாத நான் சும்மா எவ்வளவு நேரத்துக்குத்தான் உட்கார்ந்து சீட்டாட்டத்தைப் பார்த்துக் கொண்டிருப்பது. அவ்வப்போது கெஞ்சிக் கூத்தாடி இடைக்கிடையே உட்கார்ந்து பழகிக் கொண்டேன். ஆட்டத்தைப் புரிந்து எக்ஸ்பர்ட் நிலைக்கு வந்த பிறகு பீடியையும் இழுத்துப் பார்த்தால் என்ன என்ற எண்ணம் வந்தது. இப்படியாக தம்பையா கடையில் விற்காமல் கிடந்த அத்தனை பீடியையும் வாங்கி இழுத்துத் தள்ளினோம்.

ஒருவாரம் கழிந்த பிறகு 'அரசி ஒருமூட்டையும் மாவு ஒரு மூட்டையும்தான் கைவசம் இருக்கிறது என்றுஉணவுக் கமிட்டிப் பொறுப்பாளன் தர்மலிங்கம் சொன்ன போதுதான் நிலைமை சிக்கலடைவது எமக்கு உறைத்தது. ஆண், பெண் விடுதிகளுக்குள் இருந்தவர்கள் அவ்வப்போது பக்கத்து ஊர்களில் உள்ள நண்பர்கள், உறவினர் என்று போயிருந்தாலும் ஏறக்குறைய எழுபத்தைந்து பேரளவில் எஞ்சியிருந்தோம்.

அடுத்தடுத்த தினங்களில் ஊரடங்கு அவ்வப்போது தளர்த்தப்படும் வேளைகளில் சில பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. எங்களது குழாம் அங்கிருந்து கிளம்புவது என்று முடிவுக்கு வந்தது. பெண்கள் நால்வர் ஆண்கள் அறுவர் என்று ஞாபகம். இந்தக் குழாத்தை அப்படியே அழைத்துக் கொண்டு தனது ஊரான மன்னாருக்குச் செல்லும் திட்டத்தை நண்பன் நஸார் சொன்னான். மலையகத்தைச் சேர்ந்த நஸீர், ஆரிபீன், நீலா, யோகா, நிஸா குருநாகலைச் சேர்ந்த முகம்மத், மன்னாரைச் சேர்ந்த தாஜூன்னிஸா, நஸார், ஓட்டமாவடியைச் சேர்ந்த நான் மற்றும் நண்பர் நெய்னா முகம்மத். யாருடையவாவது பெயர் விடுபட்டதா என்று இப்போது ஞாபகம் இல்லை.



அதிகாலை ஆரம்பித்த பயணம் ஒருவாறு பஸ் மாறி மாறி மன்னார் சேர்ந்த போது பி.ப. 3.30 ஆகிவிட்டது. இறங்கி நஸாரின் வீட்டுக்குள் நுழைந்ததும் நஸாரின் மச்சான் ஸரூர் சேர் எல்லோருக்கும் 'டோஸ்' விட ஆரம்பித்தார். இவ்வாறான சூழலில் பயணம் செய்ததை வன்மையாகக் கண்டித்தார். ஒருவாறு அன்றிரவு அங்கு தங்கினோம். காலையில் எழுந்ததும் அங்கிருந்து பயணிப்பதற்குரிய வாய்ப்புகள் பற்றி யோசித்து ஒவ்வொருவராகக் கிளம்ப முயன்றோம். நிலைமை சீராகும் வரை போக வேண்டாம் என்று நஸார் தடுத்தான். எனது ஊர் நண்பர் நெய்னா முகம்மத், 'இல்லை நாம் கிளம்புவோம்' என்றான்.

மன்னாரிலிருந்த அனுராதபுரம் வரை வந்து அங்கிருந்து பொலன்னருவை வரை அன்று பி.ப. 4.00 மணிக்கு வந்து சேர்ந்து விட்டோம். இப்பிராந்தியங்களில் எந்தவிதமான ஆபத்துக்களும் நேர்ந்ததாக இல்லை. ஆனால் எங்களுக்குப் பயம் இருந்தது. எல்லைக்கு வந்து விட்டோம். எந்த வித பிரச்சினையும் இல்லாத பொலன்னருவையில் இருந்து பிரச்சினையே இல்லாத கிழக்குக்கு எந்த ஒரு வாகனமும் இல்லை. கிழக்கு - பயணத்தைப் பொறுத்த வரை முற்றாகத் துண்டிக்கபட்டிருந்தது.

பொலன்னருவையிலிருந்து மன்னம் பிட்டி வரை சென்ற ஒரு சிறிய போக்குவரத்து வாகனத்தில் ஏறினோம். ஊருக்கு அருகாமையில் எவ்வளவு தூரம் நெருங்க முடியுமோ அவ்வளவு தூரம் நெருங்குவது எங்களது திட்டம். மன்னம்பிட்டியிலிருந்து ஊர்வாகனங்கள் - குறைந்தது ஒரு ட்ரக்டர் ஆவது - கிடைக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இரண்டு தினங்கள் மன்னம்பிட்டியில் அநாதரவாக நிற்க வேண்டும் என்று எங்களுக்கு விதித்திருந்தது.

மன்னம்பிட்டி என்றதும் உங்கள் நினைவில் வரவேண்டியது 30 வருடங்களுக்கு முந்தைய மன்னம்பிட்டி.. ஆங்காங்கே ஒரு சில கடைகள், சுட்டுப் பொசுக்கும் வெய்யில், கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்திருக்கும் காடு, அந்தக் காட்டுக்குள் 50 பேர் தொழக் கூடிய ஒரு சிறிய பள்ளிவாசல். இந்தப் பள்ளிவாசல் முன் பகுதியில்தான் நானும் நெய்னா முகம்மதுவும் அத்தனை காட்டுப்பூச்சிகளினதும் பறவைகளினதும் மிருகங்களினதும் சத்தங்களுக்கு மத்தியில் அச்சத்துடன் இரண்டு இரவுகள் உறங்கினோம். பகல் நேரங்களில் வெறிச்சோடிப் போயிருக்கும் தெருவில் சில மணிநேரங்களும் காட்டுக்குள் சில மணி நேரங்களுமாகப் பொழுதைக் களித்தோம்.

அங்கிருந்த அக்குறணை ஹோட்டல்காரர் நல்ல மனிதர். கடைசார்ந்தவர்கள் சிலருக்குச் செய்யும் சமையலில் எங்களுக்கும் சேர்த்துச் சமைத்து உணவு தந்தார். அதற்குரிய பணத்தை அவர் பெற்றுக் கொண்டாலும் கூட அக்கடை இல்லையென்றால் வீடு வீடாக உணவுக்கும் தேனீருக்கும் அலைய வேண்டியிருந்திருக்கும். வறுமை மிகுந்த அந்த வீடுகளில் என்னதான் கிடைக்கப் போகிறது?

அப்போதிருந்தது அரச வானொலி ஒன்றுதான். செய்திகளுககும் பொழுது போக்குக்கும் இருந்த ஒரேயொரு ஊடகம் அதுதான். சாப்பாட்டுக் கடையில் இருந்த வானொலி அருகிலேயே செய்திகள் நேரத்தில் தவங்கிடந்தோம். அரச வானொலி ஊரடங்கு சொல்வதைத்தான் பிரதானமாகக் கொண்டிருந்தது. அடுத்த நான்கு வருடத்துக்குப் பிறகு அதே வானொலியில் ஓர் அறிவிப்பாளனாக இணைந்து நானும் பிற்காலத்தில் ஊரடங்குச் செய்தி வாசிப்பேன் என்று அப்போது கனவில் கூட நினைத்திருக்கவில்லை.

இரண்டாம் நாள் காலை வந்த ஒரு பஸ்ஸில் ஊர்போய்ச் சேர்ந்த பிறகுதான் நெஞ்சை உறுத்தும் தென்னிலங்கைப் பயங்கரம் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிய வந்தது. அடுத்தடுத்து வந்த காலப் பிரிவில் கொழும்புக்கு வருந்தோறெல்லாம் தமிழர்களுக்குச் செந்தமான பல கடைகள் எரிந்த நிலையிலேயே இருந்ததைப் பார்த்திருக்கிறேன். கொழும்பு நண்பர்கள் கதை கதையாகச் சொல்லும் போது அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருக்கும்.

ஒரு படம் பார்க்கச் செல்லும் போதும் ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சுட்டிக்காட்டி இந்த இடத்தில் என் கண்முன்னால் ஒரு தமிழ் ஜோடியை காருக்குள் வைத்தே எரித்தார்கள் என்பார் ஒரு நண்பர். இதோ போகிறானே.. இவன்தான் இந்தப் பக்கத்துக்குத் தமிழ் வீடுகளைக் கொள்ளையடிக்கத் தலைமை வகித்தவன் என்று ஒருவனைக் காட்டுவார் மற்றொரு நண்பர். இதே வேளை, பல தமிழர்களின் உயிரைப் பாதுகாத்த சிங்கள, முஸ்லிம்கள் பலர் இருந்தார்கள். அப்படித் தப்பிய சிலர் இன்றும் இருக்கிறார்கள். தன்னோடு கடமை புரிந்த தமிழனை விசாரிக்காமல், திரும்பிப் பாராமலே போன சிங்கள உத்தியோகத்தர்கள் பற்றிய கதைகளும் ஏராளம்.

பொரள்ளைப் பகுதியில் எரிக்கப்பட்ட தமிழர்களின் கடைப் பிரதேசம் ஒன்று இருந்தது. இன்று அந்த அடையாளமே இல்லாமல் யார் யாரோ கடை வைத்திருக்கிறார்கள். மருதானையில் சிமன்ட்ஸ் வீதியில் ஆரம்பமாகும் விபுலசேன மாவத்தை தொடங்குமிடத்தில் ஒரு தமிழ் பாடசாலை இருந்தது. இன்று அந்தக் கட்டடம் இருந்த அடையாளமே கிடையாது. இந்தப் பகுதிகளால் எனது பிள்ளைகளோடு வாகனத்தில் செல்லுந் தோறெல்லாம் இடங்களைச் சுட்டிக் காட்டி, இந்த இடத்தில் இருந்தவை இவை.. இப்போது யார் யாரோ அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அடிக்கடி சுட்டிக் காட்டுவது வழக்கமாகி விட்டது.

தமிழர்களின் நெருப்புக் குளித்த பெருங் கொடூரம் நிகழ்ந்து இன்று 30 வருடங்கள் கடந்து சென்று விட்டன. அந்தத் தீயின் தொடர் இன்று அளுத்தகம வரையில் பரவி வந்திருக்கிறது. தீ பரவத் தொடங்கிய வரலாற்றுக்கு நாம் பின்னோக்கிச் செல்லுதல் வேண்டும். ஆனால் நான் அங்கு செல்லவில்லை.

சற்றுக் கூர்ந்து பார்த்தால் சாதாரண சிங்கள மக்கள் மிகவும் நல்லவர்கள். நல்ல இரக்க சிந்தையும், அன்பும் கொண்டவர்கள். அரச சேவையில் இருக்கும் போது ஒரு முறை எனது காரில் சென்று காரியாலயத்தை அண்மித்த போது எது தோளில் ஒரு பெரிய பூரான் இறங்கி எனது கால் வழியாகச் செல்வதைக் கண்டு தடுமாறினேன். காரை விட்டு இறங்கியதும் காரின் கார்பட் எல்லாம் இழுத்துப் போட்டு அதை வெளியேற்றியவுடன் அதை நசுக்க ஒரு கல்லைத் தேனேன். அந்த இடத்துக்கு வந்த என் சிங்கள நண்பன் சொன்னான்:- 'அது உனக்கு ஏதாவது செய்யததா? இல்லைத்தானே... எனவே கொல்லாதே!'

இவ்வாறான கருணை கொண்ட மக்கள் திடீரென ஏன் மிருகங்களாக மாறுகிறார்கள்? ஆழச் சிந்தித்தால் ஆளும் வர்க்களமும் ஆளப்படும் ஏழை வர்க்கமுமாக அவர்களுக்குள் உள்ள இடைவெளிதான் காரணமாக எனக்குத் தெரிகிறது. ஆள்பவர்கள் தமது வாழ் நலன்களுக்காக இனத் துவேசத்தையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறார்கள். தாம் இவ்வாறு ஏழ்மை நிலையில் இருப்பதற்கு நமது ஆளும் வர்க்கமே காரணம் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளமலும் புரிந்து கொள்ள விடாமலும் அவர்கள் துன்பத்திலும் வறுமையிலும் உழல்கிறார்கள். அதற்குக் காரணம் சிறுபான்மையினர் என்று அரசியல்வாதிகளால் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்லப்படுகிறது. எனவே உசுப்பேத்தி விட்டவுடன் சிறுபான்மையினரைத் தாக்கி, எரித்து, கொள்ளை கொண்டு செல்கிறார்கள்.

எல்லாக் கலவரங்களின் போதும் கொள்ளை என்பது ஒரு முக்கியமான அம்சமாக இருந்து வந்திருக்கிறது. இந்த அடிப்படையில்தான் நான் யோசித்துமிருக்கிறேன். எந்தப் பெரும்பான்மை ஆளும் வர்க்கம் வந்தாலும் கைக் கொள்ளும் செலவற்ற இலகுவான அரசியல் முறையாக இது இருந்து வருகிறது. துவேசம் பேசியே அரசியல் நடத்துவதும் இதற்காகத்தான்.

பெரும்பான்மை சிங்கள சமூகத்தில் இருக்கின்ற வறியவர்கள் ஓரளவு திருப்தியான வாழ்க்கையை என்று வாழ்கிறார்களோ அன்றைக்கு இந்த அரசியல்வாதிகளின் பாச்சாவெல்லாம் பலிக்காது போகலாம். அது ஒரு நீண்ட கனவாகவே இருந்து விடலாம். அதுவரை இந்த நாட்டில் சிறுபான்மையினனும் அவனுடைய சொத்துக்களும் எரிவது தொடர் கதையாகவே இருக்கும்!
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: