பீர்முகம்மது ஒலியுல்லாஹ்வின் ஒன்பது மெஞ்ஞானப் பாடல்கள் இறுவட்டாக (ஒலித்தகடு) வெளியாகியிருக்கிறது.
பீர் முகம்மது ஒலியுல்லாஹ்வி்ன் தமிழ் இலக்கியப் பங்களிப்பு அளப்பரியது. இன்று இஸ்லாமிய தமிழ் இலக்கியம் என்று முன் வைத்துப் பேசப்படும் பல இலக்கிய நூல்களைப் பாடிய மகத்தான ஞானியாக அவர் விளங்குகிறார்.
“திருநெறி நீதம், பிஸ்மில் குறம், ரோசு மீசாக்கு மாலை, மகரிபத்து மாலை, ஞானமணிமாலை, ஞானப் புகழ்ச்சி, ஞானப்பால், ஞானப் புட்டு, ஞானக் குறம், ஞானரத்தினக் குறவஞ்சி, ஞான ஆனந்தக் களிப்பு, திருமெய்ஞ்ஙான சரநூல், ஞான நடனம், ஞான முச்சுடர் காப்புப் பதிகம், ஹக்கு முறாது பதிகம், மயில் வலம்புரிப் பதிகம், றப்பில் ஆலமீன் பதிகம், கஃபத்துல்லாப் பதிகம், கண்மணிப் பதிகம், நினைவுப் பதிகம், இலாஹிப் பதிகம், நாட்டப் பதிகம், பதமருள் பதிகம், குருசீடப் பதிகம், ஓர்மைப் பதிகம், மனப் பதிகம், தறஜாத்துப் பதிகம், ரகுமான் பதிகம், மெய்ஞ்ஙான அமிர்த கலை, ஞர்னவுலக உருளை, ஞான தித்தி, ஞானத் திறவுகோல், ஞானவிகடம், ஞானக் கண், மிகுறாசு வளம், - ஆக பாடல் பதினெண்ணாயிரத்தில் திருநெறி நீதம், பிஸ்மில் குறம், ரோசு மீசாக்கு மாலை இம்மூன்றிலும் - சேகு சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்கள் உரையுடன் பாடப்பட்டது. மற்றவையனைத்தும் அருள் உதிப்பு மேல் பாடப்பட்டது என்று ஏட்டுப் பிரதிகளில் காணப்படுகிறது.” - (ந.சை. இஸ்மாயில் அரபி சாய்பு)
மேற்படி குறிப்பு 2007ல் மீள்பதிப்பாக வெளியிடப்பட்ட திருநெறி நீதம் நூலின் முன்னுரையாகக் காணப்படுகிறது.
இப்படிப் பெயர் பெற்ற பீர் முகம்மது ஒலியுள்ளாஹ்வின் பாடல்கைளை சீறாக் கலைஞர் குமரி அபுபக்கர் அவர்கள் பாடியுள்ளார். கவிஞர் தக்கலை ஹலீமா, குமரி அபுபக்கர் ஆகியோரின் இசையமைப்பில் உருவான இந்த இறுவட்டின் இசை ஒருங்கிணைப்பாளர் துளசி வயக்கல் அவர்கள். தக்கலை தாஹிர் அவர்கள் இதைத் தயாரித்து வழங்கியுள்ளார்.