Saturday, August 13, 2011

தன்னைப் பிழிந்த தவம்!


பீர்முகம்மது ஒலியுல்லாஹ்வின் ஒன்பது மெஞ்ஞானப் பாடல்கள் இறுவட்டாக (ஒலித்தகடு) வெளியாகியிருக்கிறது.

பீர் முகம்மது ஒலியுல்லாஹ்வி்ன் தமிழ் இலக்கியப் பங்களிப்பு அளப்பரியது. இன்று இஸ்லாமிய தமிழ் இலக்கியம் என்று முன் வைத்துப் பேசப்படும் பல இலக்கிய நூல்களைப் பாடிய மகத்தான ஞானியாக அவர் விளங்குகிறார்.

“திருநெறி நீதம், பிஸ்மில் குறம், ரோசு மீசாக்கு மாலை, மகரிபத்து மாலை, ஞானமணிமாலை, ஞானப் புகழ்ச்சி, ஞானப்பால், ஞானப் புட்டு, ஞானக் குறம், ஞானரத்தினக் குறவஞ்சி, ஞான ஆனந்தக் களிப்பு, திருமெய்ஞ்ஙான சரநூல், ஞான நடனம், ஞான முச்சுடர் காப்புப் பதிகம், ஹக்கு முறாது பதிகம், மயில் வலம்புரிப் பதிகம், றப்பில் ஆலமீன் பதிகம், கஃபத்துல்லாப் பதிகம், கண்மணிப் பதிகம், நினைவுப் பதிகம், இலாஹிப் பதிகம், நாட்டப் பதிகம், பதமருள் பதிகம், குருசீடப் பதிகம், ஓர்மைப் பதிகம், மனப் பதிகம், தறஜாத்துப் பதிகம், ரகுமான் பதிகம், மெய்ஞ்ஙான அமிர்த கலை, ஞர்னவுலக உருளை, ஞான தித்தி, ஞானத் திறவுகோல், ஞானவிகடம், ஞானக் கண், மிகுறாசு வளம், - ஆக பாடல் பதினெண்ணாயிரத்தில் திருநெறி நீதம், பிஸ்மில் குறம், ரோசு மீசாக்கு மாலை இம்மூன்றிலும் - சேகு சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்கள் உரையுடன் பாடப்பட்டது. மற்றவையனைத்தும் அருள் உதிப்பு மேல் பாடப்பட்டது என்று ஏட்டுப் பிரதிகளில் காணப்படுகிறது.” - (ந.சை. இஸ்மாயில் அரபி சாய்பு)

மேற்படி குறிப்பு 2007ல் மீள்பதிப்பாக வெளியிடப்பட்ட திருநெறி நீதம் நூலின் முன்னுரையாகக் காணப்படுகிறது.

இப்படிப் பெயர் பெற்ற பீர் முகம்மது ஒலியுள்ளாஹ்வின் பாடல்கைளை சீறாக் கலைஞர் குமரி அபுபக்கர் அவர்கள் பாடியுள்ளார். கவிஞர் தக்கலை ஹலீமா, குமரி அபுபக்கர் ஆகியோரின் இசையமைப்பில் உருவான இந்த இறுவட்டின் இசை ஒருங்கிணைப்பாளர் துளசி வயக்கல் அவர்கள். தக்கலை தாஹிர் அவர்கள் இதைத் தயாரித்து வழங்கியுள்ளார்.

“ஸூஃபி ஞானத்தில் சுவை கொண்டு இறைவனை நாடியும் இதயங்களைத் தேடியும் பாய்ந்து வருகின்ற பாசனப் பெருக்கு. உலகத் தமிழ்ச் செம்மொழி சிகரங்களை நோக்கி தன் சிம்மாசனத்தை நகர்த்தும் இந்த மகரந்தப் பொழுதில் ஞானப் புகழ்ச்சியிலிருந்து சில பாடல்களை உயிருருகும் இசையில் உங்கள் முன் வைக்கிறோம்” என்று இந்த இறுவட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காயல்பட்டணம் மாநாட்டுக்குச் செல்வதற்கு முன்னர் கவிஞர் தக்கலை ஹலீமா என்னுடன் தொலைபேசியில் உரையாடும் போது இந்த இறுவட்டு பற்றிய செய்தியை எனக்குச் சொல்லியிருந்தார். இறுவட்டு உங்கள் கைகளுக்குக் கிடைக்கும் என்று அவர் சொல்லியிருந்த போதும் மாநாட்டின் இரண்டாவது நாள் வரை வந்து சேரவில்லை.

மாநாட்டில் குமரி அபுபக்கர் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது இந்தத் தகவலைச் சொல்லி மாநாட்டரங்கில் ஒரு புத்தகக் கடையை வைத்திருந்த எழுத்தாளர் தாழை மதியவனிடம் அழைத்துச் சென்றார். அங்கு இந்த இறுவட்டு ஒன்றினை வாங்கிக் கொண்டேன்.

மாநாடு முடிந்து சென்னைக்கு வந்ததும் டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் தம்மிடம் “தன்னைப் பிழிந்த தவம்“ இறுவட்டுக்கள் இரண்டு கிடைத்ததாகச் சொல்லி ஒன்றை எனக்குத் தந்தார். நண்பர் தக்கலை ஹலீமாவின் ஏற்பாடாக இது இருக்கக் கூடும் என்றே நினைக்கிறேன்.

இரண்டு இறுவட்டுகள் இருக்கிறது அல்லவா... ஒன்றை வாங்கிக் கொள்ளலாம் என்று யாராவது எண்ணினால் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். அதை இன்னொரு நண்பருக்குத் தருவதாக வாக்களித்து விட்டேன்.

இந்த இறுவட்டிலிருந்து மூன்று பாடல்களை இங்கே இணைத்திருக்கிறேன். இணைப்பைச் சொடுக்கிப் பாடல்களைக் கேட்க முடியும்.

பாடல் - 01


பாடல் - 02


பாடல் - 03


இந்த இறுவட்டு வெளியீட்டில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும்!




இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 comment:

Kalaimahan said...

உங்கள் எழுத்துக்களைப் படிக்குந்தோறும் நல்ல பல விடயங்கள் ஊறுகின்றன. ஈழத்து எழுத்தாளர்களில் உங்களின் எழுத்து தனிச்சாயல் கொண்தென்பதை யாராலும் மறுக்கவியலாது. நூலுருவில் தங்களாக்கங்களை சுவாசிக்காதவிடத்தும், பத்திரிகை வாயிலாக நிறையவே சுவாசித்திருக்கிறேன். நாட்டவிழி நெய்தல் மேலும் தீனி போடுகிறது. பணி தொடர வாழ்த்துக்கள்...