அமெரிக்காவின் இல்லினொயிஸ் மாநிலத்துக்கு அவை போதும். அங்கு வாழ்வதற்கு ஒரு சில பொருட்களே இப்போதைய தேவை. பிள்ளைகளுக்குச் சில நூல்கள் தேவை. மூன்று அரபு நூல்களும் சில ஹீப்று நூல்களும். அவை இருந்தால்தான் மொழிகளை அவர்கள் மறக்க மாட்டார்கள். நிறைய சாபமும் நிறைய அன்பும் மிகுந்த இந்த இடத்தை ஞாபகப்படுத்திக் கொள்ள எனது பிள்ளைகளுக்கு எது தேவை என்று நான் ஏற்கனவே சிந்தித்திருக்கவில்லை.
வருடத்தின் விடுமுறையை ஒருமாதம் கழிப்பது என்பதுதான் முதலில் உண்மையான எண்ணமாக இருந்தது. ஆனால் இனிமேல் இங்கே வாழமுடியாது என்று கடந்தவாரம் முடிக்கு வரவேண்டிவந்தது. எனவே இங்கிருந்து வெளியேற ஒரு வழிப் பயணச் சீட்டுக்களை எவ்வளவு விரைவாக எமக்குத் தரமுடியுமோ அவ்வளவு விரைவாக ஏற்பாடு செய்யும்படி பயண முகவரிடம் கேட்டுக் கொண்டேன். முதல் ஒரு மாதம் சிக்காகோவில் தரிக்கலாம் என்று எண்ணுகிறேன். ஆனால் எந்த இடத்தில் என்பதுதான் தெரியவில்லை. தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.
எனக்கு மூன்று பிள்ளைகள். மகளுக்கு 14 வயது. இரண்டு பையன்கள். ஒருவனுக்கு வயது 9, மற்றவனுக்கு மூன்று. ஆறுவருடங்களாக மேற்கு ஜெரூஸலத்தில் நாங்கள் வாழ்ந்து வந்தோம். இப்பகுதியில் வாழ்ந்த ஒரே அரபுக் குடும்பம் எங்களுடையது. தனது விளையாட்டுப் பொருட்கள் இருந்த அறையில் அவற்றை உற்று நோக்கியபடியிருந்த சிறியவனிடம் 'ஏதாவது இரண்டேயிரண்டு விளையாட்டுப் பொருட்களை மட்டும் நீ எடுத்து வரலாம்' என்று ஹீப்று மொழியில் கடந்த வாரம் நாங்கள் சொன்ன போது அவன் அழ ஆரம்பித்தான். சென்றடையப் போகும் இடத்தில் தேவையானவற்றை யெல்லாம் வாங்கித் தருகிறேன் என்று அவனுக்கு சத்தியம் செய்து கொடுத்த பிறகுதான் அழுகையை நிறுத்தினான்.
எவற்றை எடுத்துச் செல்வது என்பதை நானும் தீர்மானிக்க வேண்டியிருக்கிறது. எனது புத்தக அலுமாரிக்கு அருகில் நின்று, 'இரண்டே இரண்டு புத்தகங்களை எனது வாசிப்புக்காக எடுத்துக் கொள்ளலாம்' என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். மற்றவை தவிர்த்து மஹ்மூது தர்வேஷின் கவிதைத் தொகுதியையும் கலீல் ஜிப்ரானின் கதைத் தொகுதியையும் தேர்ந்தெடுத்தேன். எனது அநேகமான புத்தகங்கள் ஹீப்று மொழியிலானவை. எனது 14 வயதுக்குப் பிறகு அபூர்வமாகவே அரபு நூல்களை வாசித்திருக்கிறேன்.
முதன்முதலாக ஒரு நூலகத்தை நான் கண்ட போது எனக்கு வயது 14. இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் நான் பிறந்த 'திரா' கிராமத்தில் இருந்த எனது பெற்றோரின் வீட்டுக்கு எனது கணித ஆசிரியர் வந்தார். புலமைப் பரிசில் பெற்ற பி;ள்ளைகளுக்கு யூதர்கள் ஜெரூஸலத்தில் ஒரு பாடசாலையை ஆரம்பிக்கிறார்கள். என்னை அங்கு சேர்ப்பதற்கு விண்ணப்பித்தால் நல்லது என்று எனது தகப்பனாரிடம் சொன்னார். அது எனக்குப் பிரயோசனமளிக்கும் என்று அவர் சொன்னது இன்னும் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது.
நான் சேர்க்கப்பட்டேன். எனது மகளின் வயதில் வீட்டை விட்டு ஜெரூஸலத்தில் உள்ள யூதப் பாடசாலையில் சேர்ந்தேன். அது மிகவும் துன்பமானதும் கொடுமையானதுமான அனுபவம். பாடசாலை வாசலில் என்னை ஆரத் தழுவியபடி என் தந்தையார் பிரிந்த போது நான் அழுதேன்.
ஜெரூஸலத்தின் முதல் வார அனுபவம் வாழ்வின் மிக மோசமான ஒரு காலகட்டம் என்று நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். நான் அங்கு வித்தியாசமானவனாயிருந்தேன். எனது உடை, எனது மொழி ஆகியன ஏனைய மாணவர்களைப் போன்றவை அல்ல. விஞ்ஞானம் முதல் பைபிள் மற்றும் இலக்கியம் வரை யாவுமே சகல வகுப்புக்களிலும் ஹீப்றுவாக இருந்தது. ஒரு சொல் தெரியாதவனாக நான் உட்கார்ந்திருந்தேன். நான் மற்றவர்களுடன் பேச ஆரம்பிக்கும் போதெல்லாம் அவர்கள் என்னைப் பார்த்துச் சிரிக்க ஆரம்பித்தார்கள்.
எனவே, வீட்டுக்குத் திரும்பி ஓடிவந்து அரபு மொழியிடமும் நண்பர்களிடமும் கிராமத்திடமும் தஞ்சமடைந்து விடுவோமா என்று சிந்தித்தேன். தொலைபேசியில் தந்தையாரை அழைத்து என்னை எடுத்துச் செல்லுமாறு கேட்டு அழுதேன். இந்தக் கஷ்டமெல்லாம் ஆரம்பத்தில்தான். இன்னும் சிலமாதங்களில் அவர்களை விடவும் சிறப்பாக ஹீப்று மொழி பேசுவாய் என்று சொன்னார்.
முதலாவது வாரத்தில் எங்களது இலக்கியப் பாட ஆசிரியை Salinger எழுதிய The Catcher in the Rye என்ற நாவலை வாசிக்கும்படி சொன்னது ஞாபகமிருக்கிறது. அதுதான் நான் எனது வாழ்வில் வாசித்த முதலாவது நாவல். அதை வாசித்து முடிக்க எனக்குப் பல வாரங்கள் எடுத்தன. படித்து முடித்த போது இரண்டு விடயங்கள் எனது வாழ்வை மாற்றுவதை நான் உணர்ந்தேன். ஒன்று, ஹீப்று மொழியில் என்னால் வாசிக்க முடியும் என்பது. இரண்டாவது, நான் புத்தகங்களை நேசிக்கிறேன் என்ற ஆழமான புரிதல்.