Monday, July 21, 2014

நான் இஸ்ரேலை விட்டுச் செல்கிறேன்!


மிக விரைவில் நாங்கள் ஜெரூஸலத்திலிருந்து போய் விடுவோம். ஆம். நாட்டை விட்டே செல்கிறோம். நேற்று சிறார்களுக்கான சூட்கேஸ்களை வாங்கினோம். நிறைய உடுப்புக்களை எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. குளிர்கால உடைகளை மட்டுமே எடுத்துச் செல்கிறோம்.

அமெரிக்காவின் இல்லினொயிஸ் மாநிலத்துக்கு அவை போதும். அங்கு வாழ்வதற்கு ஒரு சில பொருட்களே இப்போதைய தேவை. பிள்ளைகளுக்குச் சில நூல்கள் தேவை. மூன்று அரபு நூல்களும் சில ஹீப்று நூல்களும். அவை இருந்தால்தான் மொழிகளை அவர்கள் மறக்க மாட்டார்கள். நிறைய சாபமும் நிறைய அன்பும் மிகுந்த இந்த இடத்தை ஞாபகப்படுத்திக் கொள்ள எனது பிள்ளைகளுக்கு எது தேவை என்று நான் ஏற்கனவே சிந்தித்திருக்கவில்லை.

வருடத்தின் விடுமுறையை ஒருமாதம் கழிப்பது என்பதுதான் முதலில் உண்மையான எண்ணமாக இருந்தது. ஆனால் இனிமேல் இங்கே வாழமுடியாது என்று கடந்தவாரம் முடிக்கு வரவேண்டிவந்தது. எனவே இங்கிருந்து வெளியேற ஒரு வழிப் பயணச் சீட்டுக்களை எவ்வளவு விரைவாக எமக்குத் தரமுடியுமோ அவ்வளவு விரைவாக ஏற்பாடு செய்யும்படி பயண முகவரிடம் கேட்டுக் கொண்டேன். முதல் ஒரு மாதம் சிக்காகோவில் தரிக்கலாம் என்று எண்ணுகிறேன். ஆனால் எந்த இடத்தில் என்பதுதான் தெரியவில்லை. தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.

எனக்கு மூன்று பிள்ளைகள். மகளுக்கு 14 வயது. இரண்டு பையன்கள். ஒருவனுக்கு வயது 9, மற்றவனுக்கு மூன்று. ஆறுவருடங்களாக மேற்கு ஜெரூஸலத்தில் நாங்கள் வாழ்ந்து வந்தோம். இப்பகுதியில் வாழ்ந்த ஒரே அரபுக் குடும்பம் எங்களுடையது. தனது விளையாட்டுப் பொருட்கள் இருந்த அறையில் அவற்றை உற்று நோக்கியபடியிருந்த சிறியவனிடம் 'ஏதாவது இரண்டேயிரண்டு விளையாட்டுப் பொருட்களை மட்டும் நீ எடுத்து வரலாம்' என்று ஹீப்று மொழியில் கடந்த வாரம் நாங்கள் சொன்ன போது அவன் அழ ஆரம்பித்தான். சென்றடையப் போகும் இடத்தில் தேவையானவற்றை யெல்லாம் வாங்கித் தருகிறேன் என்று அவனுக்கு சத்தியம் செய்து கொடுத்த பிறகுதான் அழுகையை நிறுத்தினான்.

எவற்றை எடுத்துச் செல்வது என்பதை நானும் தீர்மானிக்க வேண்டியிருக்கிறது. எனது புத்தக அலுமாரிக்கு அருகில் நின்று, 'இரண்டே இரண்டு புத்தகங்களை எனது வாசிப்புக்காக எடுத்துக் கொள்ளலாம்' என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். மற்றவை தவிர்த்து மஹ்மூது தர்வேஷின் கவிதைத் தொகுதியையும் கலீல் ஜிப்ரானின் கதைத் தொகுதியையும் தேர்ந்தெடுத்தேன். எனது அநேகமான புத்தகங்கள் ஹீப்று மொழியிலானவை. எனது 14 வயதுக்குப் பிறகு அபூர்வமாகவே அரபு நூல்களை வாசித்திருக்கிறேன்.

முதன்முதலாக ஒரு நூலகத்தை நான் கண்ட போது எனக்கு வயது 14. இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் நான் பிறந்த 'திரா' கிராமத்தில் இருந்த எனது பெற்றோரின் வீட்டுக்கு எனது கணித ஆசிரியர் வந்தார். புலமைப் பரிசில் பெற்ற பி;ள்ளைகளுக்கு யூதர்கள் ஜெரூஸலத்தில் ஒரு பாடசாலையை ஆரம்பிக்கிறார்கள். என்னை அங்கு சேர்ப்பதற்கு விண்ணப்பித்தால் நல்லது என்று எனது தகப்பனாரிடம் சொன்னார். அது எனக்குப் பிரயோசனமளிக்கும் என்று அவர் சொன்னது இன்னும் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது.

நான் சேர்க்கப்பட்டேன். எனது மகளின் வயதில் வீட்டை விட்டு ஜெரூஸலத்தில் உள்ள யூதப் பாடசாலையில் சேர்ந்தேன். அது மிகவும் துன்பமானதும் கொடுமையானதுமான அனுபவம். பாடசாலை வாசலில் என்னை ஆரத் தழுவியபடி என் தந்தையார் பிரிந்த போது நான் அழுதேன்.

ஜெரூஸலத்தின் முதல் வார அனுபவம் வாழ்வின் மிக மோசமான ஒரு காலகட்டம் என்று நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். நான் அங்கு வித்தியாசமானவனாயிருந்தேன். எனது உடை, எனது மொழி ஆகியன ஏனைய மாணவர்களைப் போன்றவை அல்ல. விஞ்ஞானம் முதல் பைபிள் மற்றும் இலக்கியம் வரை யாவுமே சகல வகுப்புக்களிலும் ஹீப்றுவாக இருந்தது. ஒரு சொல் தெரியாதவனாக நான் உட்கார்ந்திருந்தேன். நான் மற்றவர்களுடன் பேச ஆரம்பிக்கும் போதெல்லாம் அவர்கள் என்னைப் பார்த்துச் சிரிக்க ஆரம்பித்தார்கள்.

எனவே, வீட்டுக்குத் திரும்பி ஓடிவந்து அரபு மொழியிடமும் நண்பர்களிடமும் கிராமத்திடமும் தஞ்சமடைந்து விடுவோமா என்று சிந்தித்தேன். தொலைபேசியில் தந்தையாரை அழைத்து என்னை எடுத்துச் செல்லுமாறு கேட்டு அழுதேன். இந்தக் கஷ்டமெல்லாம் ஆரம்பத்தில்தான். இன்னும் சிலமாதங்களில் அவர்களை விடவும் சிறப்பாக ஹீப்று மொழி பேசுவாய் என்று சொன்னார்.

முதலாவது வாரத்தில் எங்களது இலக்கியப் பாட ஆசிரியை Salinger எழுதிய The Catcher in the Rye என்ற நாவலை வாசிக்கும்படி சொன்னது ஞாபகமிருக்கிறது. அதுதான் நான் எனது வாழ்வில் வாசித்த முதலாவது நாவல். அதை வாசித்து முடிக்க எனக்குப் பல வாரங்கள் எடுத்தன. படித்து முடித்த போது இரண்டு விடயங்கள் எனது வாழ்வை மாற்றுவதை நான் உணர்ந்தேன். ஒன்று, ஹீப்று மொழியில் என்னால் வாசிக்க முடியும் என்பது. இரண்டாவது, நான் புத்தகங்களை நேசிக்கிறேன் என்ற ஆழமான புரிதல்.



மிக விரைவாக எனது ஹீப்று மொழியாற்றல் ஏறக்குறைய நிறைவெய்தியது. விடுதி நூலகத்தின் நூல்கள் அனைத்துமே ஹீப்று மொழியிலானவையாக இருந்தன. இஸ்ரேலிய எழுத்தாளர்களின் நூல்களை நான் படிக்க ஆரம்பித்தேன். Agnon, Meir Shalev, Amos Oz ஆகியோரையும் ஸயோனிஸம், யூதாயிஸம் ஆகியவற்றையும் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவது பற்றியும் வாசித்தேன்.

இந்தக் காலப் பகுதியில் எனது சொந்தக் கதையைப் புரிந்து கொள்ள ஆரம்பித்தேன். எந்த விதத் திட்டமிடலும் இல்லாமல் யூதத் தேசத்தின் மேற்கு நகர இஸ்ரேலியப் பாடசாலையின் விடுதியில் வசிக்கும் அரபு மாணவர்கள் பற்றி எழுதத் தொடங்கினேன். மறுபக்கத்தைப் பற்றிய எழுத்து மாற்றத்தை உண்டு பண்ணும் என்று நம்பிக் கொண்டு நான் எழுதிக் கொண்டிருந்தேன். எனது பாட்டியின் மூலம் நான் கேட்டறிந்த கதைகளையும் 1948ம் ஆண்டு நடந்த யுத்தத்தில் எனது பாட்டனார் எவ்வாறு இறந்தார் என்பதையும் எனது பாட்டி தனது நிலங்களை எவ்வாறு இழந்தார் என்பதையும் யூதர்களின் தோட்டங்களில் பழங்கள் பறித்துத் தொழில் கூலி பெற்று எவ்வளவு சிரமங்களுக்கு மத்தியில் எனது தந்தையாரை வளர்த்தெடுத்தார் என்பதையும் எழுதினேன்.

தனது அரசியல் நிலைப்பாட்டுக்காக விசாரணைகள் ஏதுமின்றி பல வருடங்கள் எனது தந்தையார் சிறைவாசம் அனுபவித்ததை ஹீப்று மொழியில் சொல்ல வேண்டும் என்று கருதினேன். ஆம். இஸ்ரவேலர்களுக்குச் சொல்ல வேண்டிய கதை, பலஸ்தீனத்தின் கதைதான். நிச்சயமாக இவற்றை வாசித்ததும்  அவர்கள் புரிந்து கொள்வார்கள். இவற்றை வாசித்ததும் அவர்களில் மாற்றம் ஏற்படும். நான் செய்யவேண்டியதெல்லாம் இவற்றை எழுதுவதுதான். இதன் மூலம் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வந்து விடலாம்.

நான் ஒரு நல்ல எழுத்தாளராக வேண்டும். எனது எழுத்தின் மூலம் ஒதுக்குக் குடித்தனங்களில் வாழும் எமது மக்களுக்கு விடுதலை பெற்றுத் தர முடியும்.  ஹீப்று மொழியில் நல்ல கதைகளை எழுதினால் எனக்கும் பாதுகாப்புத்தான். அடுத்த புத்தகம், அடுத்த திரைப்படம், இன்னொரு பத்திரிகையில் பத்தியெழுத்து, தொலைக் காட்சிக்கு மற்றொரு பிரதி.... எனது குழந்தைகளுக்கும் நல்ல எதிர்காலம்! எனது கதைகளுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். ஒரு நாள் அவை எம்மை சரிநிகர் பிரஜைகளாக மாற்றிவிடும். அநேகமாக யூதர்களுக்கு உள்ள உரிமைகள் போல எமக்கும்!

ஹீப்று மொழியில் 25 வருடங்களாக எழுதினேன். ஆனால் எவையுமே மாற்றமடையவில்லை. இருபத்தைந்து வருடங்களாக நம்பிக்கையைப் பலமாகப் பற்றிப் பிடித்திருந்தேன். இவ்வளவு நீண்ட காலம் மக்கள் கண்மூடியிருக்க மாட்டார்கள் என்று நம்பினேன்.

இருபத்தைந்து வருடகாலம் நான் நம்பிக்கையுடன் இருந்தமைக்குச் சில காரணங்கள் இருக்கத்தான் செய்தன. எனவே இந்த நிலத்தில் யூதர்களும் அரபிகளும் ஒன்றினைந்து வாழ முடியும் என்று நம்பினேன். அதுவே பிரதான கதையாக இருக்குமென்றும் ஏனையவை தவிர்க்க முடியாத கதைகளாக இருக்கும் என்றும் நினைத்தேன். அதாவது  இஸ்ரவேலர்கள் நக்பா - ஆக்கிரமித்ததைப் பற்றிப் பேசுவதையோ பலஸ்தீனியர்களின் துயர வாழ்வையோ மறுக்க மாட்டார்கள் என்று நம்பினேன்.

இருபத்தைந்து வருடங்களாக எழுதினேன். இரண்டு பக்கங்களிலிருந்தும் கசப்பான விமர்சனங்களையே எதிர்கொண்டேன். ஆனால் கடந்த வாரம் எல்லாவற்றையும் கைவிட்டேன். கடந்த வாரம் எனக்குள் ஏதோ ஒன்று உடைப்பெடுத்தது. 'அரபுகளுக்கு மரணம்!', 'அரபுகள் என்பதற்காக அரபுகளைத் தாக்குவோம்!' என்று சத்தமிட்டபடி யூத இளைஞர்கள் நகரத் தெருக்களில் ஊர்சவலமாகச் சென்றதைக் கண்ட போது நான் எனது சிறிய போராட்டத்தில் தோற்றுவிட்டதை உணர்ந்தேன்.

அரசியல்வாதிகளும் ஊடகங்களும் இரத்தத்துக்கும் இரத்தத்துக்கும் வேறுபாட்டை உருவாக்கிப் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன். அதிகாரத்துக்கு வருவோர் உடனடியாக 'அரபுக்களை விட நாங்கள் உயர்ந்தவர்கள்' என்பதை பெரும்பான்மை இஸரேலியர்களது நிலைப்பாடாகப் பிரதிபலிக்கிறார்கள். நான் பங்கெடுத்துக் கொண்ட ஒரு வல்லுனர் குழுவில் 'நாங்கள் மேன்மை கொண்டவர்கள். வாழ்வதற்கான முழு யோக்கியதையும் கொண்டவர்கள்' என்று என்னிடமே சொன்னார்கள். வாழ்வதற்கான அரபு மக்களின் உரிமையை நாட்டின் பெரும்பான்மையினர் அங்கீகரிக்கவில்லை என்பதை அறிந்து மனங் கசந்து போனேன்.

கடைசியாக நான் எழுதிய பத்திரிகைப் பத்தியைப் படித்த வாசகர்கள் சிலர் காஸாவுக்குச் சென்று விடுமாறு கேட்டுக் கொண்டார்கள். எனது கால்களை உடைக்கப் போவதாகவும், எனது குழந்தைகளைக் கடத்தப் போவதாகவும் மிரட்டினார்கள். நான் ஜெரூஸலத்தில்தான் வாழ்ந்து வருகிறேன். மிக அருமையான சில யூத அயலவர்களும் நண்பர்களும் எனக்கு உள்ளார்கள்.

ஆயினும் ஒரு பொது இடத்துக்கோ, பூங்காக்களுக்கோ எனது பிள்ளைகளை அவர்களுடைய யூத நண்ப, நண்பிகளுடன் கொண்டு விடுவதில்லை. தன்னுடைய ஹீப்று மொழி பேசும் திறமை கொண்டட ஓர் அரபுப் பெண்ணாகத் தன்னை யாரும் அடையாளம் காண மாட்டார்கள் என்று எனது மகள் என்னுடன் மிகக் கோபத்துடன் தர்க்கித்தாள். ஆயினும் நான் மறுத்து விட்டேன். அவள் தன்னுடைய அறைக் கதவைப் பூட்டிக் கொண்டு பல மணி நேரம் அழுதாள்.

இப்போது எனது புத்தக அலுமாரி முன் நான் நின்று கொண்டிருக்கிறேன். பதினான்கு வருடங்களுக்கு முன் நான் வாசித்த சலிஞ்ஜர் எனது கையில் இருக்கிறது. வேறு புத்தகங்களை நான் எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. எனது புதிய மொழியில் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் தீர்மானித்து விட்டேன். அது மிகக் கஷ்டமான விடயம் என்பது எனக்குத் தெரியும். ஏறக்குறைய சாத்தியப் படாத ஒரு விடயம். ஆனாலும் எழுதுவதற்கான ஒரு புதிய மொழியை நானும் வாழ்வதற்கான ஒரு புதிய மொழியை எனது பிள்ளைகளும் தேடியடைய வேண்டும்.

மகள் மூடிய அறையின் கதவின் மீது நான் தட்டும் போது 'இங்கே நீங்கள் வர வேண்டாம்' என்று கோபங் கொண்டு சத்தமிட்டாள். இருந்த போதும் நான் நுழைந்து கட்டியிலில் அவளருகே அமர்ந்தேன். கோபத்தில் எனக்கு முதுகு காட்டி அவள் அமர்ந்து கொண்ட போதும் நான் சொல்வது அவளுக்குக் கேட்கும் என அறிவேன். 'கேட்டுக் கொள்!' இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் எனது தந்தையார் எனக்குச் சொன்ன அதே வார்த்தையை அப்படியே சொன்னேன்:-

'ஞாபகம் வைத்துக் கொள்! வாழ்க்கையில் நீ எதைச் செய்தாலும் அவர்களைப் பொறுத்தவரை எப்போதும், எப்போதும் ஓர் அரபியாகத்தான் இருப்பாய்! உனக்குப் புரிகிறதா?'

மகள் திரும்பி என்னை இறுக அணைத்தபடி சொன்னாள்:-

'எனக்குப் புரிகிறது! இதை நீண்ட நாட்களுக்கு முன்னரே தெரிந்து வைத்திருக்கிறேன்!'

'மிக விரைவில் நாம் இங்கிருந்து சென்று விடுவோம்!'

சொல்லியபடி அவளது தலைமுடியைக் கலைத்தவாறு,

'அதே நேரம் இதையும் படி!' என்று சொல்லி, The Catcher in the Rye நாவலைக் கொடுத்தேன்!

------------------------------------------------------------

செய்யித் கஷூஆ இஸ்ரேலில் வசித்த அரபு எழுத்தாளர். இவரது நாவல்கள் 15க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளளன. முதல் நாவலை அடிப்படையாகக் கொண்டு திரைப்படம் ஒன்றும் வெளியானது. 


இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 comment:

Unknown said...

கண்ணீரான கதை. அவன் வாழ்கை.
அவசியமான எழுத்துக்கள் அற்புதம். நன்றி.