முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதுடன் “துப்பாக்கி” என்ற சினிமாப் படம் பற்றிய சர்ச்சைகள் ஓய்ந்து விடும் என்று நினைத்திருந்தேன். ஆனால் இணையத் தளங்களிலும் முகநூலிலும் அதன் அதிர்வுகள் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டேயிருப்பது அத்திரைப்படம் முஸ்லிம்களை மட்டுமல்லாது நேர் நின்று சிந்திக்கும் முஸ்லிமல்லாத பலரையும் கவலை கொள்ளச் செய்திருக்கிறது என்பதையே எடுத்துக் காட்டுகிறது.
குட்டக் குட்டக் குனிபவனும் முட்டாள் குட்டுபவனும் முட்டாள் என்பது இந்தத் திரைப்படத்தைப் பொறுத்தவரை உண்மையாகியிருக்கிறது.
தமிழ் சினிமாவைப் பொறுத்த வரை நானும் ஒரு பொதுமகன் என்ற அடிப்படையில் எனது பார்வையில் பட்ட படங்களில் விஜயகாந்த், கமல்ஹாஸன், அர்ஜூன் போன்றவர்களின் திரைப்படங்களில்தான் முஸ்லிம்களை தேசத் துரோகிகளாக, வில்லன்களாகச் சித்தரிப்பது நடந்து வந்திருக்கிறது. (ஹிந்திப் படங்களிலும் இந்நிலை உள்ளதாகச் சொல்லுகிறார்கள். எப்போதாவது நல்ல படங்களை யாராவது சொன்னால் பார்ப்பதுண்டு.)
இவர்களில் விஜயகாந்த், அர்ஜூன் போன்றவர்கள் தமது கதாநாயக அந்தஸ்தை நிலைநாட்டுவதற்கு படத்தில் யாரையாவது அடித்தே ஆக வேண்டியிருக்கிறது.அதைத்தவிர வேறு திறமைகளும் அவர்களுக்குக் கிடையாது. அவ்வாறு யாருக்காவது அடிப்பது மாதிரிக் கதை இல்லையென்றால் அவர்களால் ஜொலிக்க முடியாது.எனவே சும்மா ஒருவனை அடிப்பதை விட தேசத்துரோகியை அடிப்பது கவர்ச்சியான இருக்கும். அந்தத் தேசத் துரோகி ஒரு முஸ்லிமாக இருந்தால் இன்னும் சாதகமாக இருக்கும். எனவேதான் தேசத் துரோகிகள் யாவருமே முஸ்லிம்களாகச் சித்தரிக்கப்படுகிறார்கள். காற்றில் கைகால் விசுக்குவதைத் தவிர வேறு எதுவுமே இல்லாத அல்லத எதுவுமே தெரியாத கதாநாயகர்கள் வரிசையில் விஜய் என்ற நபரும் சேர்கிறார்.
பிரிவினைக்குப் பிறகு இந்திய ஆளும் வர்க்கத்தால் கட்டமைக்கப்பட்ட பாக்கிஸ்தான் வெறுப்பு, தன்னோடு சக சகோதரனாக அயல் வீட்டில் வாழும் ஒரு முஸ்லிமையும் எதிரியாகப் பார்க்கப் பழக்கியிருக்கிறது. இந்திய ஆளும் வர்க்கமும் அரசியலும் பாக்கிஸ்தான் மீதும் முஸ்லிம்கள் மீதும் வெறுப்பை ஏற்படுத்திவிட்டு ஒட்டுமொத்த ஏழை இந்தியனின் - முஸ்லிமல்லாதர்களினதும் உட்பட - சோற்றுப்பானையைக் களவாடிக் கொண்டிருக்கிறது.
இந்த அரசியலின் இன்னொரு வடிவம்தான் இப்படியான சினிமாக்கள். அரிவாள், துப்பாக்கிகளுடன் தேசத் துரோகியைச் சுட்டும் வெட்டியும் துவம் செய்து விட்டுத் தாங்கள் கல்லாக் கட்டுவது. அதாவது ஆளும் வர்க்கம் எதை வைத்துத் தனது பிழைப்பை நடத்துகிறதோ அதே விசயத்தை மற்றொரு வடிவில் சினிமாக்காரர் செய்து கொண்டிருக்கிறார்கள். சக இனத்தானை அகெரவப்படுத்திக் கேவலப்படுத்தி விட்டு அப்படிக் கிடைக்கும் பணத்தில் ரோல் ரோய்ஸ் மற்றும் பென்ஸ் கார்களில் பவனி வருகிறார்கள். தொலைக் காட்சிகளில் உலகத்திலேயே அற்புதமான படைப்பைத் தந்து விட்டது போல பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தக் கதாநாயகர்களது அடுத்த கட்ட நகர்வு எது? அதே பாதையில் முன்னேறி அரசியலுக்குள் நுழைந்து விடுகிறார்கள். ஒட்டு மொத்தத் தமிழ்ச் சமூகத்தின் தானைத் தலைவர்களாக பணம், அதிகாரம் ஆகியவற்றுடனும் கைச்சொடுக்கில் எல்லாவற்றையும் பெற்றுவிடத் துடிக்கிறார்கள்.
இப்போது யோசித்துப் பாருங்கள். சக அயல் வீட்டு முஸ்லிமை அவமானப்படுத்தி விட்டு இப்படியான ஒரு வாழ்க்கை வாழ்வது கேவலமானது இல்லையா? ஒரு சமூகத்தைக் கூனிக் குறுகச் செய்து, வஞ்சகம் இழைத்துப் பெறும் பணத்தில்தான் இவர்கள் சாப்பிடுகிறார்கள், இவர்களது குழந்தைகளுக்கு உண்ணக் கொடுக்கிறார்கள், தமது மனைவியருக்கு ஆடைகள், உடுதுணிகள் வாங்கிக் கொடுக்கிறார்கள். தமது சுகபோக வாழ்வை மேற்கொள்கிறார்கள்.
