எழுதியவர் - ஸகரிய்யா தாமிர்
அபூ ஃபஹத் கொஞ்சம் தடுமாற்றத்துடன் கூடிய மெதுவான நடையில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தான். அந்த ஒடுக்கமான நடைப்பகுதியில் மஞ்சள் நிற மின் விளக்கின் அடர்த்தியற்ற ஒளி சிதறிக்கிடந்தது.
“நான் ஓர் ஏழை... எதுவுமற்றவன்...”
அவனது கர்ண கடூரக்குரல் மிகவும் இனிமையானது என்று தனக்குள்ளேயே நினைத்துக் கொண்டான். அதே உரத்த குரலில் “நான் ஒரு பாடகன்” என்று உரத்துச் சொல்லிக் கொண்டான். மக்கள் வாய்திறந்தபடி மெய்ம்மறந்திருப்பது போலவும் அவனை நோக்கிக் கையசைப்பது போலவும் கரகோஷம் செய்வது போலவும் கற்பனை செய்து கொண்டான். எனவே சத்தமிட்டுச் சிரித்தான். தனது சிகப்பு நிற சால்வையை நுனியில் பிடித்துப் பின்புறமாக இழுத்து விட்டுக் கொண்டு பாட ஆரம்பித்தான். “நான் ஓர் ஏழை... எதுவுமற்றவன்...”
அவன் அணிந்திருந்த சாம்பல் நிறக் காற்சட்டையை மஞ்சள் நிறத்திலான பழைய இடுப்புப் பட்டி கொண்டு கட்டியிருந்தான். அந்தப் பாதையில் அவன் நுழைந்த போது மின் விளக்கின் ஒளியை விட இருட்டு அதீதமாக இருந்தது. சுவரோரத்தில் ஒரு கறுப்பு நிற ஆட்டைக் கண்டதும் அவனுக்கு ஆச்சரியம் உண்டானது. திகைப்பில் அவன் தன்னையறியாமல் வாயைத் திறந்தபடி பார்த்தான்.
‘நான் குடிக்கவில்லை. என்னால் சரியாகப் பார்க்க முடிகிறது. அட மனிதா... எதைப் பார்க்கிறாய்... இது ஓர் ஆடு. இதன் சொந்தக்காரன் எங்கே?’ என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டான். அந்த ஒடுக்க வழிப்பாதை வெறிச்சோடிப்போயிருந்தது. அந்த ஆட்டைப் பார்த்துக் கொண்டே ‘நான் குடித்தா இருக்கிறேன்’ என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டான்.
கொடுப்புக்குள்ளேயே சிரித்துக் கொண்டு தனக்குத் தானே சொல்லிக் கொண்டான். “இறைவன் கருணையுள்ளவன். நான் அபூ ஃபஹத் என்பது எனக்குத் தெரியும். அப+ ஃபஹத் ஒரு வாரமாக இறைச்சி சாப்பிடவில்லை!”
அபூ ஃபஹத் ஆட்டின் மீது பரவி அதை முன்புறமாக இழுத்தான். ஆனால் அது நகர மறுத்தது. அதன் கொம்புகளைப் பற்றி மீண்டும் இழுத்தான். ஆனால் சுவருடன் உறைந்து போனது போல் ஆடு அசைய மறுத்தது. அவன் ஆட்டை முறைத்துப் பார்த்தான். பின்பு சொன்னான்:- “நான் உன்னை அழைத்துச் செல்கிறேன். உன்னுடைய தாய் தந்தையரிடம் அழைத்துச் செல்கிறேன்.”
அபூஃபஹத் ஆட்டை அலாக்காகத் தூக்கித் தோளில் வைத்தான். அதன் கால்களிரண்டையும் தனது கைகளால் இறுகப் பற்றிப் பிடித்துக் கொண்டு மகிழ்ச்சியுடனும் உற்காகத்துடனும் பாடிக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். சில கணங்களில் அவன் பாட்டை நிறுத்தினான். அந்த ஆட்டின் நீளமும் பாரமும் திடீரென அதிகரித்து விட்டது போல அவனுக்குத் தோன்றியது. அடுத்த கணத்தில் “என்னை விட்டு விடு” என்று ஒரு குரல் அவனது காதில் விழுந்தது. நெற்றியைச் சுருக்கியபடி, “மது அருந்துவது இறைவனின் சாபக்கேட்டுக்குரியது” என்று சொன்னான்.