Friday, June 10, 2011

ஃபொட்டோ ஃபோபியா


டாக்டர் உள்ளே வந்த தம்பதியரை நிமிர்ந்து பார்த்துப் புன்னகைத்தபடி தiiயை அசைத்து அமரும்படி சைகை செய்தார். டாக்டருக்கு அருகில் நோயாளி அமரும் கதிரையில் கணவர் அமர சற்றுத் தள்ளிப் போடப்பட்டிருந்த கதிரையில் மனைவி அமர்ந்தார்.

டாக்டர்: என்ன பிரச்சினை?

நோயாளி: ......... .............

நோயாளியின் மனைவி:. நான் சொல்கிறேன் டாக்டர்

டாக்: சொல்லுங்கள்

நோ - ம: இரண்டு வாரங்களாக தொடர்ந்து பழைய பத்திரிகைகளைப் புரட்டி வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார் டாக்டர். இரவில் படுக்ககையிலிருந்து திடீரென எழுந்தும் பத்திரிகைகளைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

டாக்: வாசிப்பது நல்ல பழக்கம்தானே... நிறைய வாசிப்பாரோ?

நோ - ம: என்ன டொக்டர்... ஒரே பத்திரிகையை எத்தனை நாளைக்குப் படிப்பது? கடந்த இரண்டு வாரங்களாக இரண்டே இரண்டு பத்திரிகைகளைப் புரட்டிப் புரட்டி வெறித்துப் பார்க்கிறார்.

டாக்: சொல்லுங்கள்!

நோ - ம: கடந்து இரண்டு வாரங்களில் இவரது ஒரு புகைப்படமாவது பத்திரிகையில் வரவில்லை... முதலில் ஒருவாரம் விட்டு ஒரு வாரம் எப்படியாவது ஏதாவது ஒரு பத்திரிகையில் ஒரு புகைப்படம் வரச் செய்து விடுவார். கடைசியாக ஒரு கல்யாணத்துக்கு வந்த அரசியல்வாதி காரில் ஏறும் போது கைலாகு செய்த படத்தை இரண்டு பத்திரிகைகளுக்கு அனுப்பினார். அவை வரவில்லை.

டாக்: இவரைக் காட்ட நான் வேறு ஒரு டாக்டரைச் சொல்கிறேன்....

நோ - ம: இல்லை டாக்டர். அப்படிப் பிரச்சினை இல்லை. வழமையான எல்லாக் காரியங்களையும் செய்கிறார். எந்த விதமான பிரச்சினையும் கிடையாது. ஆனால்.... இது மட்டும்தான்....

டாக்: ஓஹ்... எல்லாவற்றையும் புகைப்படம் எடுப்பாரோ....

நோ - ம: ஆமா டாக்டர்... இந்தியாவில இருந்து வந்து ஊர் ஊரா சல்வார் கமீஸ் விற்கிற இரண்டு பேர் அன்னைக்கு வந்தாங்க... அவங்களுடன் நின்று கூட இரண்டு படம் எடுத்திருக்கார்.

டாக்: ஓஹோ....!

நோ.ம : வீட்டுல ஐம்பது சந்தன மாலை வாங்கி வச்சிருக்கார். யாராவது ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்குக் கூப்பிட்டா இரண்டு மாலைய எடுத்துக்கிட்டுப் போவாரு. அங்கு வாற முக்கியமான ஆட்களாப் பார்த்துப் போட்டு போட்டோ எடுத்துக்குவாரு. பிறகு அதைப் பேப்பருக்குக் கொடுப்பாரு... கொஞ்ச நாளா ஒரு நிகழ்ச்சிக்கும் யாரும் கூப்பிடவில்லை. இரண்டு சந்தனமாலைகளை எடுத்துக் கொண்டு விமான நிலையம் போக ரெடியாகிட்டாரு....

டாக்: ஏன்... அங்கு?

நோ - ம: யாராவது முக்கியமான நபர்கள் வெளி நாடு போவாங்கதானே... அவங்களோடு நின்று போட்டோ எடுக்கத்தான். எனக்குப் பெரிய தலையிடியா இருக்குது டொக்டர்... நீங்கதான் ஒரு வழி செய்யணும்.... சில நேரம் ஒரு போட்டோவுக்கு பத்தாயிரம் ரூபா ஆகிடும் டொக்டர். இப்பிடிப் போனா என்ன ஆகும்?

டாக்: ஓகே... இவருடன் நான் கொஞ்சம் தனியா பேசப் போகிறேன். நீங்கள் அறைக்கு வெளியில் நிற்கிறீர்களா?

நோயாளியின் மனைவி வெளியில் வந்து கதிரையில் அமர்ந்திருந்தார். அரை மணி நேரமாகியும் தன்னை அழைக்காத படியால் சந்தேகம் வர மெதுவாகக் கதவைத் தள்ளித் திறந்து பார்த்தார்,

அங்கே -

சிரித்துக் கொண்டிருந்த நோயாளியிடம் ‘அப்போ நாம இருவரும் சேர்ந்து நின்று ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளுவோமா?’ என்று டாக்டர் கேட்பது தெளிவாகக் காதில் விழுந்தது!


இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

2 comments:

Shaifa Begum said...

ஹ்ம்ம்.... இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்.. நினைத்து சிரித்தபடி..

கடம்பவன குயில் said...

ஹய்யோ.... இந்த கதையை படித்தவுடன் நான் கூட காமரா எடுத்துக்கொண்டு வி.ஐ.பி யைத்தேடிக் கொண்டு ஓடுறேனே. யாராவது என்னை தடுத்து நிப்பாட்டுங்களேன்.