எழுதியவர் - ஸகரிய்யா தாமிர்
அபூ ஃபஹத் கொஞ்சம் தடுமாற்றத்துடன் கூடிய மெதுவான நடையில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தான். அந்த ஒடுக்கமான நடைப்பகுதியில் மஞ்சள் நிற மின் விளக்கின் அடர்த்தியற்ற ஒளி சிதறிக்கிடந்தது.
“நான் ஓர் ஏழை... எதுவுமற்றவன்...”
அவனது கர்ண கடூரக்குரல் மிகவும் இனிமையானது என்று தனக்குள்ளேயே நினைத்துக் கொண்டான். அதே உரத்த குரலில் “நான் ஒரு பாடகன்” என்று உரத்துச் சொல்லிக் கொண்டான். மக்கள் வாய்திறந்தபடி மெய்ம்மறந்திருப்பது போலவும் அவனை நோக்கிக் கையசைப்பது போலவும் கரகோஷம் செய்வது போலவும் கற்பனை செய்து கொண்டான். எனவே சத்தமிட்டுச் சிரித்தான். தனது சிகப்பு நிற சால்வையை நுனியில் பிடித்துப் பின்புறமாக இழுத்து விட்டுக் கொண்டு பாட ஆரம்பித்தான். “நான் ஓர் ஏழை... எதுவுமற்றவன்...”
அவன் அணிந்திருந்த சாம்பல் நிறக் காற்சட்டையை மஞ்சள் நிறத்திலான பழைய இடுப்புப் பட்டி கொண்டு கட்டியிருந்தான். அந்தப் பாதையில் அவன் நுழைந்த போது மின் விளக்கின் ஒளியை விட இருட்டு அதீதமாக இருந்தது. சுவரோரத்தில் ஒரு கறுப்பு நிற ஆட்டைக் கண்டதும் அவனுக்கு ஆச்சரியம் உண்டானது. திகைப்பில் அவன் தன்னையறியாமல் வாயைத் திறந்தபடி பார்த்தான்.
‘நான் குடிக்கவில்லை. என்னால் சரியாகப் பார்க்க முடிகிறது. அட மனிதா... எதைப் பார்க்கிறாய்... இது ஓர் ஆடு. இதன் சொந்தக்காரன் எங்கே?’ என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டான். அந்த ஒடுக்க வழிப்பாதை வெறிச்சோடிப்போயிருந்தது. அந்த ஆட்டைப் பார்த்துக் கொண்டே ‘நான் குடித்தா இருக்கிறேன்’ என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டான்.
கொடுப்புக்குள்ளேயே சிரித்துக் கொண்டு தனக்குத் தானே சொல்லிக் கொண்டான். “இறைவன் கருணையுள்ளவன். நான் அபூ ஃபஹத் என்பது எனக்குத் தெரியும். அப+ ஃபஹத் ஒரு வாரமாக இறைச்சி சாப்பிடவில்லை!”
அபூ ஃபஹத் ஆட்டின் மீது பரவி அதை முன்புறமாக இழுத்தான். ஆனால் அது நகர மறுத்தது. அதன் கொம்புகளைப் பற்றி மீண்டும் இழுத்தான். ஆனால் சுவருடன் உறைந்து போனது போல் ஆடு அசைய மறுத்தது. அவன் ஆட்டை முறைத்துப் பார்த்தான். பின்பு சொன்னான்:- “நான் உன்னை அழைத்துச் செல்கிறேன். உன்னுடைய தாய் தந்தையரிடம் அழைத்துச் செல்கிறேன்.”
அபூஃபஹத் ஆட்டை அலாக்காகத் தூக்கித் தோளில் வைத்தான். அதன் கால்களிரண்டையும் தனது கைகளால் இறுகப் பற்றிப் பிடித்துக் கொண்டு மகிழ்ச்சியுடனும் உற்காகத்துடனும் பாடிக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். சில கணங்களில் அவன் பாட்டை நிறுத்தினான். அந்த ஆட்டின் நீளமும் பாரமும் திடீரென அதிகரித்து விட்டது போல அவனுக்குத் தோன்றியது. அடுத்த கணத்தில் “என்னை விட்டு விடு” என்று ஒரு குரல் அவனது காதில் விழுந்தது. நெற்றியைச் சுருக்கியபடி, “மது அருந்துவது இறைவனின் சாபக்கேட்டுக்குரியது” என்று சொன்னான்.
இன்னும் சில கணங்களில் அந்தக் குரல் மீண்டும் ஒலித்தது. “என்னை விட்டுவிடு. நான் ஓர் ஆடு அல்ல!”
ஆட்டைப் பிடித்தபடி அவனது நடையை நிறுத்தினான். அந்தக் குரல் மற்றொரு முறை ஒலித்தது. “நான் ஜின் அரசனின் மகன். என்னை விட்டு விட்டால் நீ கேட்பதையெல்லாம் தருவேன்.”
அபூ ஃபஹத் இதை விரும்பவில்லை. பதற்றத்துடன் வேகமாக நடக்கத் தொடங்கினான். அந்தக் குரல், “ஏழு சாடிகள் நிறையத் தங்கம் தருவேன்” என்றது. தங்கக் காசுகள் கீழே விழுந்து எழும் சப்பதத்தையும் வீடு முழுக்கவும் நிலத்தில் தங்கக் காசுகள் பரவிக்கிடப்பதையும் அபூ ஃபஹத் கற்பனை பண்ணினான். ஆடு தப்பிச் சென்றது. கற்பனையிலிருந்து மீண்டு மகிழ்ச்சி நிறைந்த குரலில் “எனக்குக் கொடு!” சத்தமிட்டான்.
ஆயினும் தான் மட்டும் தனியனாக அந்த ஒடுக்க வழிப்பாதையில் நின்று கொண்டிருப்பது சில நிமிடங்களில் அவனுக்கு உறைத்தது. ஆடு அவனது கண்ணில் படவில்லை. சில கணங்கள் அதே இடத்தில் அசையாமல் நின்று விட்டு வேகமாக நடக்கத் தொடங்கினான்.
வீட்டை அடைந்ததும் தனது மனைவி உம் ஃபஹதை நித்திரையிலிருந்து எழுப்பி நடந்ததைச் சொன்னான்.கேட்டுக் கொண்டிருந்து விட்டு உம் ஃபஹத் சொன்னாள்:- “நீ குடித்திருக்கிறாய்!”
“அப்படிக் குடிக்கவில்லை. மூன்று கிளாஸ் மட்டுமே.”
“ஒரு கிளாஸ் குடித்தாலே உனக்குப் போதையாகிவிடும்.”
தான் அவமானப்படுத்தப்படுவதாக அபூ ஃபஹத் நினைத்தான். சவால் விடும் குரலில் சொன்னான்:- “ஒரு பரல் மதுவை அருந்தினாலும் எனக்குப் போதை வராது.”
உம் ஃபஹத் ஒரு வார்த்தை பதில் பேசவில்லை. பூத கணங்களில் விளையாட்டுக்களைப் பற்றிச் சிறு வயதில் கேட்டிருந்த கதைகளைப் பற்றிய கற்பனையில் மூழ்கினாள்.
அபூ ஃபஹத் உடையை மாற்றிக் கொண்டு மின் விளக்கை அணைத்து விட்டுக் கட்டிலில் மனைவியின் அருகில் சாய்ந்தான். திடீரென “தனது தந்தையுடைய தங்கத்தைத் தருமளவும் நீ அதைத் தப்பிச் செல்ல விட்டிருக்கக் கூடாது” என்று சொன்ன உம் ஃபஹத் சற்றுத் தயக்கத்துடன் “நாளைக்கும் போய் தப்பிச் செல்ல விடாமல் பிடித்துக் கொள்” என்றாள்.
அபூ ஃபஹத் கொட்டாவி விட்டான். கவலையுடன் “எப்படி அதைக் கண்டு பிடிப்பது?” என்றான்.
“அதே வழியில் உன்னால் காணமுடியும். பிடித்து வீட்டுக்குக் கொண்டு வா. தங்கம் தருமளவும் நாம் அதைப் போக விடாமல் வைத்துக் கொள்ளுவோம்.”
“என்னால் அதைக் காணமுடியாது.”
“ஜின்கள் பூமியின் கீழுள்ள ஆறுகளில் வசிக்கின்றன. இரவானதும் பூமியின் மேற்பரப்புக்கு வந்து விடியும் வரை விளையாடித் திரிகின்றன. தமக்குப் பிடித்தமான இடமாக இருந்தால் மீண்டும் வருகின்றன. நாளை அந்த ஒடுக்க வழிப்பாதையில் ஆட்டை உன்னால் பார்க்க முடியும்.”
அபூ ஃபஹத் தனது கையை மனைவியின் மார்பின் நடுவே வைத்தான். அதை அசைக்காமல் சொன்னான்:- “நாம் பணக்காரர்களாகி விடுவோம். ஒரு பெரிய வீடு வாங்குவோம்.”
“தோட்டத்துடன் சேர்ந்த வீடு.”
“நாம் ஒரு வானொலி வாங்குவோம்.”
“ஒரு பெரிய வானொலிப் பெட்டி.”
“ஆடை கழுவும் இயந்திரமொன்றும்.”
“உடைந்த கோதுமையைச் சாப்பிடுவதைத் தவிர்ப்போம்.”
“வெள்ளைப் பாண் சாப்பிடுவோம்.”
உம் ஃபஹத் குழந்தை போல் சிரித்தாள். பக்கத்தில் படுத்திருந்த அபூ ஃபஹத், “உனக்கு ஒரு அழகான சிவப்பு ஆடை வாங்கித் தருவேன்” என்றான்.
செல்லக் கோபத்துடன் உம் ஃபஹத் கிசு கிசுக்கும் குரலில் “ஒன்றே ஒன்றுதானா?” என்று கேட்டாள்.
“உனக்கு நூறு ஆடைகளை வாங்கித் தருகிறேன்” என்றான்.
சில கணங்கள் அமைதியாக இருந்த அபூ ஃபஹத் அவளிடம் கேட்டான்:- “எப்போது குழந்தை பெறுவாய்?”
“மூன்று மாதங்களுக்குப் பிறகு.”
“அது ஓர் ஆண்குழந்தையாகத்தான் இருக்கும்.”
“அவன் நம்மைப் போன்று கஷ்டப்படக் கூடாது.”
“அவன் பசியில் இருக்கக் கூடாது.”
“அவனுக்கு சுத்தமான அழகான ஆடைகள் இருக்க வேண்டும்.”
“அவன் எந்த வேலையும் செய்யக் கூடாது.”
“அவன் நல்ல பாடசாலையில் கற்க வேண்டும்.”
“வீட்டுக்காரனால் வாடகை கேட்கும் நிலையில் அவன் இருக்கக் கூடாது.”
“அவன் வளர்ந்து ஒரு வைத்தியனாக வேண்டும்.”
“அவன் ஒரு சட்டத்தரணியாக வேண்டும் என்பது எனது விருப்பம்.”
“வைத்தியராக விரும்புகிறாயா அல்லது சட்டத்தரணியாக விரும்புகிறாயா என்று அவனைக் கேட்டு முடிவு செய்வோம்.”
ஒரு பற்றுதலோடு அவனைப் பிடித்துக் குறும்புத்தனத்துடன் கேட்டாள்:- “இரண்டாவது கல்யாணம் செய்ய மாட்டாயா?”
அவளுடைய காதை நிமிண்டி விட்டு, “ஏன் செய்ய வேண்டும்? இந்தப் பூவுலகிலேயே அதிசிறந்த பெண் நீதான்” என்றான்.
இருவருக்கும் நடுவே மகிழ்ச்சி ததும்பும் ஆழமான அமைதி நிலவியது. அபூ ஃபஹத் சட்டெனத் தன்னை மூடியிருந்த போர்வையை உதறினான். அவன் எழுந்து நின்ற போது உம் ஃபஹத் கேட்டாள்:- “உனக்கு என்ன வேண்டும்?”
“நான் இப்போது போகிறேன்.”
“எங்கு போக?”
“ஆட்டைப் பிடிக்க.”
“நாளை வரை பொறுத்திரு. இப்போது உறங்கு.”
ஒருவித அவசரத்துடன் மின் விளக்கை எரிய விட்டுத் தனது உடையை அணிய ஆரம்பித்தான்.
“இன்றைக்கு அதைக் காண முடியாமல் போகலாம்.”
“அதை நான் தேடிப் பிடிப்பேன்.”
அவனது மஞ்சள் நிற இடுப்புப் பட்டியை அணிய உம் ஃபஹத் உதவிய வேளை அவளிடம் சொன்னான்:- “அதை ஒரு போதும் விட மாட்டேன்.”
தான் ஒரு துணிச்சலான கருமத்தை நிறைவேற்றப் போவதாக அவன் எண்ணிக் கொண்டான். தனது குத்துவாள் அவனுக்குத் தேவை. வளைந்த முனையுள்ள மெலிதான ஆனால் மிகக் கூர்மையான குத்துவாள் அது.
வீட்டை விட்டு வெளியிறங்கி மிக வேகமாக ஒடுங்கிய வழிப்பாதைக்கு வந்து சேர்ந்தான். ஆனால் அங்கு ஆட்டைக் காணவில்லை. அவனுக்கு அது பெரும் ஏமாற்றமாக இருந்தது. அந்த வழிப்பாதை வெறிச்சோடியிருந்தது. ஒடுங்கிய வழிப்பாதையின் இருமருங்கிலும் இருக்கும் வீடுகளின் யன்னல்க@டாக வெளிச்சம் எதுவும் கசியவில்லை. விளக்குகள் எல்லாமே அணைக்கப்பட்டிருந்தன.
அபூ ஃபஹத் தனது பின்புறமாகச் சுவரில் சாய்ந்து அசையாமல் அப்படியே நின்றிருந்தான். சற்று நேரத்தில் ஒரு சிறிய சத்தம் அவனது காதில் விழுந்தது. அதைத் தொடர்ந்து ஒரு குடிகாரன் தள்ளாடியபடி சுவரில் முட்டிக் கொண்டு வந்து கொண்டிருந்தான். அவன் தனது கரகரப்பான குரலில் “ஏய்... நான் ஒரு மனிதன்...” என்று சத்தமிட்டபடி வந்தான்.
அபூ ஃபஹதை அண்மித்ததும் தனது தள்ளாட்ட நடையை நிறுத்தினான். பெரிதாக மூச்சு விட்டபடி திகைப்புடன் அபூ ஃபஹதைப் பார்த்தான். தடுமாற்றத்துடன் கேட்டான்:- “நீ இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்?”
“நடந்து கொண்டிருக்கிறேன்.”
குடிகாரன் தனது நெற்றியைச் சுருக்கினான். முகத்தில் ஆர்வம் மின்னக் கேட்டான்:- “நானும் பெண்களை விரும்புகிறேன். அவளுடன் படுப்பதற்குக் கணவன் போகும் வரை காத்திருக்கிறாயா? அவன் போனதும் உனக்குக் கதவு திறப்பாள் அல்லவா?”
அபூ ஃபஹதுக்கு அந்த வார்த்தைகள் வேதனையளித்தன. அவனுக்கு அருவருப்பாக இருந்தது. குடிகாரன் தொடர்ந்து கேட்டான்:- “அவள் அழகாக இருப்பாளா?”
அபூ ஃபஹத் கோபத்துடன் கேட்டான்:- “எந்தப் பெண்?”
“நீ யாருக்காகக் காத்திருக்கிறாயோ அவள்.”
“போய் விடு.”
“நானும் உனக்குப் பங்காளியாக இருக்கிறேன்.”
அபூ ஃபஹதுக்குப் பொல்லாத கோபம் உண்டாயிற்று. இந்தக் குடிகாரன் வந்து கலாட்டாப் பண்ணுவதால் ஆடு வராமல் விட்டுவிடுமோ என்று பயந்தான். கடும் சீற்றத்துடன் அவனைப் பார்த்துச் சொன்னான்:- “போய்விடு இங்கிருந்து... இல்லாவிட்டால் உன் மண்டையைப் பிளந்து விடுவேன்.”
குடிகாரன் ஏப்பம் விட்டபடி கோபாச்சரியத்துடன் கேட்டான்:- “நீ எனக்குச் சொல்கிறாயா? யார் நீ?” சற்று அமைதியடைந்து பின்னர் மீண்டும் சொன்னான்:- “வந்து எனது மண்டையை உடைத்துப் பார்...வா...”
அபூ ஃபஹத் சொன்னான்:- “போய்விடு... உனது மண்டையை உடைக்கும் அவசியம் எனக்கு இல்லை.”
குடிகாரன் கோபத்துடன் சொன்னான்:- “இல்லை.. இல்லை.. வந்து என் மண்டையை உடை.” பின்னால் நகர்ந்து ஒரு வகைக் களிப்புடன் மீண்டும் சொன்னான்:- “நான் உன்னைச் சல்லடையாக்குவேன்.” சொல்லிக்கொண்டே தனது பைக்குள் கைவிட்டு நீளமான ஒரு குத்துவாளை வெளியே எடுத்தான்.
அபூ ஃபஹதின் கை விரைவாக அவனது இடுப்புப் பட்டியை நோக்கி நகர்ந்தது. தனது குத்து வாளை வெளியே எடுத்தான். குடிகாரன் வேகத்துடனும் எச்சரிக்கையுடனும் அபூ ஃபஹ்தின் அருகில் வரத் தனது குத்து வாளை உயர்த்தி அவனை நோக்கி வீசினான் அபூ ஃபஹத். குத்துவாள் தன்னில் படாமல் மின்னல் வேகத்தில் குடிகாரன் விலகினான். தனது கையிலிருந்த குத்துவாளை அபூ ஃபஹதின் நெஞ்சருகே வைத்து “வாங்கிக் கொள்” என்றான்.
அபூ ஃபஹத் களிமண் சுவருடன் ஒட்டிச் சாய்ந்திருந்தான். இரண்டாவது முறையாகக் குத்திய குடிகாரனின் குத்துவாளை எதிர்த்து இரண்டாவது முறையாகத் தனது குத்துவாளை உயர்த்தினான். குடிகாரன் அபூ ஃபஹதின் வலது தோளில் குத்த அவனது கை தொங்கிப் போய்க் கையிலிருந்த குத்துவாள் கீழே விழுந்தது. அவன் நிலைகுலைந்தான்.
குடிகாரன் சத்தமிட்டுக் கத்திக் கொண்டே குதித்துக் குதித்துத் தன் குத்து வாளால் அபூ ஃபஹதைக் குத்தினான். அபூ ஃபஹதுக்கு மூச்சுத் திணறியது. கைகள் கால்கள் யாவும் சட்டெனப் பலமிழந்தது போல் உணர்ந்தான்.
குடிகாரன் தொடர்ந்து குத்தினான். அவன் அபூ ஃபஹதின் வயிற்றில் குத்தி இழுத்த போது குடல் கொத்தாக வெளியே வர, அதை அபூ ஃபஹத் தனது கையை வைத்துத் தாங்கிப் பிடித்தான். இரத்தத்தில் நனைந்த குடற்றொகுதி சூடாக இருந்தது. நடுக்கத்துடன் பின்புறமாக நிலை தடுமாறிச் சாய்ந்தான்.
குடிகாரன் சற்று நேரம் அபூ ஃபஹத் அருகே சற்று நேரம் நின்றான். குத்து வாளை எறிந்து விட்டு ஓடத் தொடங்கினான்.
“ஏழு ஜாடிகள் நிறையத் தங்கம்” என்று ஆடு சொல்வது அபூ ஃபஹதுக்குத் தூரத்தில் கேட்டது. கொட்டப்பட்ட தங்கக் காசுகள் ஒவ்வொன்றும் சின்னச் சூரியனைப் போல் பிரகாசித்தது. அபூ ஃபஹத் தேய்ந்த குரலில் ஆட்டை நோக்கி முணுமுணுத்தான்:- “மெதுவாக... மெதுவாக...!”
குறிப்பு:
1939ல் சிரியாவின் டமஸ்கஸில் பிறந்த ஸகரிய்யா தாமிர் அரபுச் சிறுகதையின் ஜாம்பவான். சிறுவர் இலக்கியத்தில் செல்வாக்குச் செலுத்தியவர். சுயாதீனப் பத்திரிகையாளரும் கூட. சவூதி அரேபியா மற்றும் சிரியத் தொலைக்காட்சிகளிலும் கடமை புரிந்தவர். ஏழுக்கு மேற்பட்ட சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். பல பரிசுகளையும் வென்றுள்ளார்.
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
1 comment:
sirantha kathaiyai arabiyil irunthu pakirnthamaikku nanari.. vaalththukkal
Post a Comment