Tuesday, January 25, 2011
எழுத்தாளர் சந்திப்பு
கடந்த 22.01.2011 அன்று பேராதனைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பீடத்தில் எம்.ஏ. பட்டக் கல்வி மாணவ மாணவிகளுடன் நடைபெற்ற எழுத்தாளர் சந்திப்பு.
இடமிருந்து வலமாக் விரிவுரையாளர் மகேஸ்வரன், கனகசபாபதி (கனடா) நான், ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம், கலாநிதி நுஃமான், கலாநிதி துரைமனோகரன், லெ.முருகபூபதி, வி.ரி.இளங்கோவன் (பிரான்ஸ்)
நண்பர்கள் ஓ.கே.குணநாதன், (ஜேர்மனி- பத்மகுணசீலன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Thursday, January 20, 2011
திசைதோறும் துலங்கிய நட்சத்திரம்
“நான் பேராசிரியர் பதவி வகித்த நாட்களில் எந்தவொரு குப்பையையும் ஆய்வு என ஏற்பதற்கு என்னிடமிருந்து ஒரு மேற்கோளை எடுத்தாள்வதே போதுமானதாயிருந்தது.”
கேலிக்குரியதும் கேவலத்துக்குரியதும் அவ்வப்போது நடப்பதுமான மேற்குறிப்பிடப்பட்ட பல்கலைக் கழகப் பின்னணியைப் பகிரங்கச் சொற்பொழிவில் தைரியமாகச் சொல்ல அண்மையில் மறைந்த காஸி அல் குஸைபியைப் போல் வேறு ஒருவரை நாம் காண முடியாது.
பல்கலைக் கழகப் பேராசிரியராக இருந்த போது மட்டுமல்ல, பிரிட்;டனுக்கான சவூதி அரேபியத் தூதுவாராகப் பணியாற்றிய போதும் அந்தப் பதவியைத் தாண்டி அவர் இப்படித்தான் நடந்து கொண்டார். அயாத் அக்ராஸ் என்ற பலஸ்தீனியத் தற்கொலைதாரி இளைஞன் இஸ்ரேலிய பல்பொருளங்காடியில் தன்னை வெடிக்க வைத்த போது “நீ ஓர் உயிர்த் தியாகி” என்று அவனுக்கு இரங்கல் கவிதை எழுதினார் அவர். அந்தக் கவிதை பிரிட்டனின் சீற்றத்தைக் கிளறியது. முழு மத்திய கிழக்கு அரசியல் அரங்கிலும் அதிர்வை ஏற்படுத்தியது. அந்த இளைஞனை ‘சுவர்க்கத்தின் மணவாளன்’, ‘கிரிமினல்களுக்கு எதிராக எழுந்தவன்’, ‘புன்னகையுடன் மரணத்தை முத்தமிட்டவன்’ என்றெல்லாம் அக்கவிதையில் போற்றியிருந்தார் குஸைபி. அதேவேளை செப்டம்பர் 11 அமெரிக்க வர்த்தக மையத் தாக்குதலை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. ‘வரம்பு மீறிய கொடுமை’ என்று அதை வர்ணித்தார். அதுதான் குஸைபி.
Sunday, January 16, 2011
பேசும் புத்தகம்
ஹலோ.... அஷ்ரஃப் சிஹாப்தீன்!
நான் மிகவும் மனம் நொந்து போய் இருக்கிறேன். வெளியீட்டு விழாவன்று மிகவும் கம்பீரமாக மேடையில் ஏறி நீங்கள் என்னைப் பெற்றுக் கொண்டு வந்தீர்கள். வீட்டுக்கு வந்து என்னைச் சுற்றியிருந்த அழகான பளபளக்கும் உறையைக் கழற்றி விட்டு என்னை விரித்துப் பார்த்தீர்கள். அணிந்துரை, முன்னுரை, உள்ளடக்கம் ஆகியவற்றைத் தட்டிக் கொண்டு சென்ற நீங்கள் திடீரென என்னை மேசை மீது எறிந்து விட்டு வெறுப்புடன் எழுந்து சென்று விட்டீர்கள்.
முதலில் என்னை எழுதியவன் மீது கோபம் கோபமாக வந்தது. எனக்கு மட்டும் நகருவதற்கு முடியுமாக இருந்தால் நான் உங்களது வீட்டு அடுப்பில் விழுந்து என்னை எரித்துக் கொண்டிருப்பேன். நீங்கள் உங்களை ஒரு எழுத்துலக சுல்தானாக நினைத்துக் கொண்டிருக்கலாம். அது உங்கள் இஷ்டம். பலர் அப்படித்தானே நினைத்துக் கொண்டு அழிச்சாட்டியம் பண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் என்னைப் படித்துப் பார்ப்பதற்கும் சிலர் இருக்கக் கூடுமல்லவா? உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காகத் தூக்கி எறியும் உங்களது மனோபாவம் அகம்பாவமா இல்லையா?
என்னை எழுதியவன் ஓர் அரைவேக்காடாக இருக்கலாம். புத்தகமாக இந்த எழுத்துக்களைப் பார்க்கும் ஆசையில் என்னை வெளியிட்டு விட்டான். அவரவர் திருப்திக்கேற்ப அவரவர் புத்திக்கேற்பத்தான் எல்லோரும் நடந்து கொள்கிறார்கள். அந்த அடிப்படையில் பார்த்தால் சரியோ பிழையோ அவனுக்கு இதை எழுதி வெளியிடும் எல்லாச் சுதந்திரமும் உண்டு.
Tuesday, January 11, 2011
செவ்விதாக்கம் (Editing) - ஒரு பொதுப் பார்வை
எழுத்துக்கள் வாசிக்கப்படுவதற்காகவே எழுதப்படுகின்றன. எது, எப்படி, யாருக்காக, ஏன் அவ்வெழுத்துக்கள் எழுதப்படுகின்றன என்ற கேள்விகளின் அடித்தளத்தில் ஓர் உறுதியான இழையாகப் பின்னி இருக்கிறது செவ்விதாக்கம் என்கின்ற அம்சம். இன்னும் சொல்வதானால் இந்த வினாக்கள்தாம் எழுதப்படுகின்ற அனைத்து எழுத்துக்களதும் செவ்வைப்படுத்தலுக்கான நியாயத்தைக் கோரி நிற்பவை.
மனித நாகரிகத்தின் வரலாற்றில் ஓரிடத்தில் இன்ன பொருளுக்கு இவ்வாறு, இன்ன செயலுக்கு இவ்வாறு என்ற சைகை மொழி பரிச்சயமான போது அந்த மொழி செவ்வியதாக இருந்திருக்க வேண்டும். சைகையால் பேசிய நம் முன்னோர் அனாவசிய சைகைகளில் ஈடுபட்டிருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது. செயல்களையும் பொருட்களையும் குறிக்கும் மொழி, பயன்பாட்டுக்கு வந்த போதும் கூட, இந்த நிலையே இருந்திருக்கும். மேலதிக விபரிப்புத் தோன்றி அது ஓர் எல்லையைத் தாண்டிக் கிளை பரப்பியபோது அநாவசியச் சொற்சேர்க்கைகள் மொழிகளில் இணைந்து கொண்டன.
எந்த வார்த்தைகளில் சொன்னால் கவனத்தைப் பெறும் அல்லது எத்தகைய விதமாகச் சொன்னால் மனதில் பதியும் என்பதை அறிந்து அதற்கேயுரிய வார்த்தைகளில் சொல்லுவதில் தெளிவு இருக்குமானால் வெளியிடப்படும் வார்த்தைகளில், எழுதப்படும் எழுத்துக்களில் எந்தவிதப் பிரச்சினையும் இல்லை.
Labels:
editing - ashroff shihabdeen
Subscribe to:
Posts (Atom)