Tuesday, February 7, 2012

ஆகாயத்திலிருந்து வந்த செய்தி!


வில்பர் ரைட்டை இரண்டு நாட்களுக்கு முன்னர் கனவில் கண்டேன்.


அதுதான் விமானத்தைக் கண்டு பிடித்தார்களே... அவர்களில் மூத்தவர்தான் வில்பர் ரைட்.

கனவுகள் என்னென் விதமாக வருகின்றன பாருங்கள். ஆகாய விமானத்தைக் கண்டு பிடித்தவருக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. சம்பந்தா சம்பந்தமில்லாத எத்தனை விடயங்கள் உலகத்தில் நடக்கின்றன பாருங்கள். உங்களைச் சுற்றிச் சிந்துப் பார்த்தாலே பல உண்மைகள் புரியும். அறிவழகன் என்று பெயர் வைத்திருப்பவன் அடி முட்டாளாக இருப்பதைப்போல.

அப்புறம் அவருடன் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தேன்.

“ஏன்யா இந்தத் தேவையில்லாத வேலையைப் பார்த்துவிட்டுச் சென்றீர்கள்?” என்பது எனது கேள்வி.

மெல்லச் சிரித்துவிட்டுக் கேட்டார்:

“ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்?”

“இல்லை... உங்கள் கண்டு பிடிப்பை வைத்துத்தான் போர் விமானங்களைச் செய்யத் தொடங்கினார்கள். எத்தனை ஆயிரம் மனிதர்கள் செத்து மடிகிறார்கள் தெரியுமா?”

“எங்கள் கண்டு பிடிப்பால் உலகு எவ்வளவு முன்னேற்றமடைந்திருக்கிறது என்பது தெரியும்தானே...”

“அழிவும் அது மாதிரி இருக்குதுதானே...!”

“எங்கள் நோக்கம் நல்லதை நோக்கியே இருந்தது...”

அதற்குப் பிறகு பேச்சை வேறொரு விடயத்தை நோக்கித் திருப்பினேன்.

“உங்களுக்கு முதல் இந்தியாவில் ஒருத்தர் விமானத்தைக் கண்டு பிடித்தாராமே...”

- நான்.

மீண்டும் ஒரு புன் சிரிப்பு. நான் மீண்டும் கேட்டேன்.

“நீங்கள் 12 அடிகள்தான் பறந்தீர்களாம். 1895லேயே புனே வாசியான தால் படயே இரண்டு கிலோ மீற்றர் தூரம் பறந்தாராம். அதுவும் பத்தாயிரம் அடி உயரத்துல...”

“விமானத்தில் பயணம் செய்திருக்கிறீர்களா?”

- கேட்டார்.

“ஆம்.”

“எத்தனை முறை?”

“பலமுறை.”

“பத்தாயிரம் அடியை எட்டுறதுக்கு எத்தனை மீற்றர் பறக்க வேணும் என்டு கணக்குப் பாரத்துவிட்டா இக்கேள்வியைக் கேட்கிறீர்கள்? அதுவும் அந்தக் காலத்தில்?”

“நீங்கள் இப்படித்தான்... மேல் நாட்டுக்காரன் செய்தால் மட்டும்தான் சாதனை!”

“அந்த நாட்களில் அப்படி ஒரு செய்தி வரவேயில்லையே... வந்திருந்தால் நாங்கள் அவரையும் சேர்த்துக் கொண்டிருப்போமே...!”

“அவரை எங்கே விட்டார்கள்... ஆளையும் அவரது இயந்திரத்தையும் அலாக்காகத் தூக்கிக்கொண்டு போய்விட்டார்களாம் வெள்ளைக்காரர்கள்...!”

“இதை யார் சொன்னது?”

“படித்தேன். எழுதி வைத்திருக்கிறார்கள்?”

“புல் ஷிட்!!”


“அது மட்டுமல்ல... வைமானிகா சாஸ்திரம் என்று ஒன்றிருக்காம். அதில் விண்ணில் பறக்கும் 223 விதமான வாகனங்கள் பற்றிய பாடல்கள் இருக்கின்றனவாம்... இந்த நூல் பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்டதாம்....”

“தயவு செய்து இதை நிறுத்துகிறீர்களா... ரொம்பத்தான் ரீல் விடுகிறார்கள்...!”

கனவு முடிந்து விட்டது.

இரண்டு நாட்களாக இந்தக் கனவுக்கும் எனக்குமுள்ள தொடர்பு பற்றி அடிக்கடி யோசித்தேன். எதுவுமே புரியிவில்லை. மூன்றாம் நாள் வயதான ஒரு நண்பரிடம் இக்கனவு பற்றிச் சொன்னேன்.

“யாருக்கும் சொல்லாதே... ஆகாயத்திலிருந்து உனக்கு ஒரு நல்ல செய்தி வரப்போகிறது” என்றார்.

“எனக்கென்ன ‘வஹி’யா இறங்கப் போகிறது என்கிறீர்கள்?” என்று கேட்டேன்.

“அப்படியெல்லாம் சொல்லக் கூடாது. நல்ல கனவு...” என்று விட்டுப் போய்விட்டார்.

எங்காவது ஒரு வெளிநாட்டுப் பயண அதிர்ஷ்டம் அடிக்குமோ என்று ஒரு அற்ப ஆசையும் மனதில் உண்டானது. பெரிதாக இல்லையென்றாலும் ஒரு சின்ன ஆர்வமும் ஆவலும் இருக்கத்தான் செய்தது.

கனவு கண்டு ஏழாம் நாள் கைத்தொலைபேசியில் நண்பர் ஒருவருடன் வீட்டு முற்ற அயலில் உள்ள பெரிய பலா மரத்துக்குக் கீழே நின்று பேசிக் கொண்டிருந்தேன். அப்போது மரத்தின் உயரக் கிளையில் இருந்து கனிந்து அழுகிய பலாக்காய் ஒன்று நான் நின்றிருந்த இடத்திலிருந்து மூன்று அடி தூரத்தில் தொப்பென விழுந்தது.

அத்தொடர்பைத் துண்டித்து விட்டுக் கனவுக்கு விளக்கம் சொன்னவரைத் தொடர்பு கொண்டேன்.

“உங்கள் மேல் விழவில்லைத்தானே... அதுதான் ஆகாயத்திலிருந்து உங்களுக்கு வந்த நல்ல செய்தி” என்றார்.

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

6 comments:

dsdgsdg said...

nalla kanavu, nalla seithi...
Meendumorumurai vilbar right i kanavu kandal..
Ithaiyum sollungo..
"Ungaluku muthal ilangayar vimanathai kandu pidithu vittanar entru..chambika ranavaka sonnar.."

Nishreen said...

It is a common weakness of all Asians. we proudly say our forefather invented this, introduce this,etc. speaking old glory never give any benefit. Allahma Iqbal wrote in his famous book complain and answer "it was your forefathers did, not you. they were blessed bcoz of their sacrifice but you do nothing and expect my blessing".

RoshaNi said...

eppadi aiyaa ungal kanavila mattum ryt bros vaaraanga????

But, informative along with a nice story.. thanx.

Lareena said...

ஹாஹாஹா! நல்ல கனவுதான்!

நிஸ்-ரீன் சொல்வதும் சரிதான். "எங்கள் தாத்தாவிடம் ஒரு வெள்ளை யானை இருந்ததாம்" என்று தொடரும் பெருமிதங்களை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, சாதனைகளை நோக்கி அடியெடுத்து வைக்கும் திறனை வளர்த்துக்கொள்வோம். :)

இன்னும் நிறைய நல்ல கனவுகளைக் காணுங்கள் Sir. :)

AH said...

கனவுக்கு நல்ல விளக்கம்...

தளவாடி said...

கனவு காணுங்கன்னு அப்துல் கலாம் சும்மாவா சொன்னாரு??உங்கட கனவில இருந்து எங்களுக்கு நிறைய தகவல் தொிய வந்திருக்கு..