Friday, April 1, 2011

முருகபூபதியின் மூன்றாவது கரம்

சரியாக எண்ணிப் பார்க்கவில்லை. பதினொருபேர் என்று நினைக்கிறேன். ஆளுக்கு ஒரு பிளாஸ்டிக் கதிரையை எடுத்துக் கொண்டு அவர்கள் காரியாலயத்துக்குள் அமைதியாக வந்தார்கள். பின்னால் அவர்களது பொறுப்பாசிரியை புன்னகை பூத்த முகத்துடன் வந்தார். அமர்ந்து கொள்ளச் சொன்னதும் அவர்கள் அந்நாள் மாணாக்கரின் பவ்வியத்தோடு அமர்ந்தார்கள். அவர்களில் நால்வர் ஆண்கள். ஏனையோர் பெண்கள்.


நண்பர் ஒவ்வொருவராகச் சுகநலம் விசாரித்தார். பெயர்களைக் கேட்டறிந்தார். ஏராளமானோருடன் தான் சம்பந்தப்பட்டிருப்பதால் பெயர்களை ஞாபகம் வைத்துக் கொள்ள முடியவில்லை என்று மன்னிப்புக் கோரும் தொனியில் தெரிவித்தார். யார் யார் சாதாரண தரப் பரீட்சை எடுக்கிறீர்கள்? அடுத்த வருடம் தோற்றவுள்ளவர்கள் யார்? ஏனையோர் கற்கும் வகுப்புக்கள் யாவை? நன்றாகப் படிக்கிறீர்களா? உங்களுக்கு வேறு ஏதாவது பிரச்சினைகள் உள்ளனவா?

இவை ஒரு தந்தையின் பரிவோடும் ஒரு தாயின் பாசத்தோடும் கலந்து வெளிவந்த வினாக்கள். அவர்கள் மிகவும் மரியாதையுடன் ஒற்றை வார்த்தையில் புன்முறுவல்களினூடே பதிலளித்தார்கள். இருவர் அடுத்த ஆண்டில் க.பொ.த.ப. சாதாரண பரீட்சையும் மற்றுமிருவர் அதற்கடுத்த ஆண்டில் உயர்தரப் பரீட்சையும் எழுதுகிறார்கள்.

தந்தையற்ற இந்த மாணவ, மாணவிகளின் கல்விக்கு அவுஸ்திரேலியாவில் வாழும் நல்லிதயங்களிடமிருந்து பண உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வரும் நபரோடுதான் நானும் பூ.ஸ்ரீதரசிங்கும் ‘செங்கதிர்’ கோபாலகிருஷ்ணனும் அந்த மாணாக்கரின் முன்னால் அமர்ந்திருந்தோம். அந்த நபர் வேறு யாருமல்ல. எழுத்தாளராக மட்டுமே நாம் அறிந்திருக்கும் லெ.முருகபூபதி.

1988ம் ஆண்டிலிருந்து முருகபூபதி இந்தப் பணியை முன்னெடுத்து வருகிறார். இந்தச் சேவையை முன்னிறுத்திப் பத்திரிகைகளில் செய்திகள் வருவதில்லை. தொலைக்காட்சிகளில் படம் வருவதில்லை. தனது சமூக சேவைக்காக எந்தவொரு இயக்கத்திடமிருந்தும் அவர் பொன்னாடை போர்த்திக் கொண்டதில்லை. ஏன், சக எழுத்தாளர்கள் கூட இதுபற்றி அறிய மாட்டார்கள்.

இந்தச் செயற்திட்டத்தை முருகபூபதி மிக அழகாக நிறுவனமயமாக்கியிருந்தார். அவுஸ்திரேலியாவில் வசிக்கும் உதவிபுரியும் மனங்கொண்டோரிடமிருந்து மாதம் 20 டாலர்களை உதவித் தொகையாகப் பெற்றுக் கொள்கிறார். அதை தந்தையற்ற ஒரு மாணவனுக்கோ மாணவிக்கோ கல்வி நிதியாக அனுப்பி விடுகிறார். தான் வழங்கும் பணத்தில் படித்துக் கொண்டிருப்பவர் யார் என்ற விபரம் உதவி வழங்குனருக்கும் தனது கல்விக்கு உதவும் நபர் யார் என்ற விடயம் கற்பவருக்கும் தெரிவிக்கப்படுகிறது. அவர்களுக்கிடையே ஓர் உறவை உருவாக்கிக் கொடுத்து விடுகிறார் முருகபூபதி. எனவே இங்கு சந்தேகத்துக்கு இடமே கிடையாது.

முதற்கட்டத்தில் ஆயிரம் மாணவ மாணவிகள் இந்த உதவியைப் பெற்றுள்ளனர். பல்கலைக் கழகக் கல்வியை முடித்துக் கொண்டதும் அவர்கள் இந்தத் திட்டத்திலிருந்து விலகிக் கொள்ள வேண்டும். வடக்கு, கிழக்கு மற்றும் இடம் பெயர்ந்து வெளி மாவட்டங்களில் கற்கும் தந்தையற்ற மாணாக்கர் இந்த உதவிகளை இன்றும் பெற்று வருகின்றனர். பல்கலைக் கழகங்களிலும் இவ்வுதவி பெறுவோர் கற்று வருகிறார்கள். இவ்வாறு உதவி பெறும் ஒரு மாணாக்கர் குழாத்துக்கு முன்னால்தான் ஒரு பாடசாலையின் அறையொன்றுக்குள் நாங்கள் அமர்ந்திருந்தோம்.

இதுகூடத் தற்செயல் நிகழ்வுதான். சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்காகப் பிரதேசம் பிரதேசமாகச் சென்று படைப்பாளிகளைச் சந்திக்கும் பயணத்தில் நாங்கள் இருந்தோம். வழியில் பாடசாலையொன்றின் பெயர் குறிப்பிட்டு அங்கு தனக்கு ஒரு சிறிய வேலையிருக்கிறது என்று மட்டுமே எங்களிடம் சொல்லியிருந்தார் முருகபூபதி. இந்த மாணாக்கரை நேருக்கு நேராகச் சந்திக்கும் வரை இந்த முயற்சியின் பின்னால் உள்ள பாரமும் தாத்பரியமும் எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அவர்களது முகங்களைப் பார்த்த பிறகு நானும் ஸ்ரீதரும் செங்கதிரோனும் இறுகிப் போயிருந்தோம்.

கால் நூற்றாண்டுகால உள்நாட்டு யுத்தம் பலரது வாழ்வைச் சின்னாபின்னமாக்கியிருக்கிறது. குடும்பங்களைச் சீரழித்து ஒவ்வொரு திசையில் ஒவ்வொருவர் வாழும் துர்ப்பாக்கியத்தை உருவாக்கி வைத்திருக்கிறது. ஏதிலிகளாக அலைந்து திரியும் இம்மக்களின் நலனுக்காக தனது ஒரு ரூபாய்க் காசையேனும் செலவளிக்க முன்வராத பல அட்டைக் கத்தி வீரர்கள் யுத்தத்தின் அரசியல் பற்றி இணையங்களில் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். பத்திரிகை, சஞ்சிகைகளில் போராட்டம் நடத்துகிறார்கள். அவ்வப்போது நடக்கும் கூட்டங்களில் கொடியேந்திக் கும்மியடிக்கிறார்கள். கொடும்பாவியெரித்துக் கோபங்காட்டுகிறார்கள். உயிருக்கு அஞ்சியோடி வேறு நாடுகளில் குடியுரிமையும் பெற்றுக் கொண்ட இவர்கள் யுத்தத்தால் அழிந்து போன மக்களை வைத்து அவர்களின் வாழ்வியலை வைத்து அரசியல் செய்து பொழுது போக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அவுஸ்திரேலியாவில் வாழும் முருகபூபதியின் சிந்தனை வித்தியாசமானது. அவர் பட்டிமன்றம் நடத்தவோ போராட்டம் நடத்தவோ தெருவில் இறங்கவில்லi. யுத்தத்தில் நசுங்குண்ட மக்களுக்குத் தான் எதைச் செய்ய முடியும் என்று மட்டுமே அவர் சிந்தித்தார். பாடசாலையைப் பார்க்க முடியாமல் கற்றுவந்த கல்வியைத் தொடர வசதியற்று ஏக்கத்தோடு வாழும் இளைய தலைமுறையினர் கல்வியைப் பெற்றுக் கொள்ள உதவுவது எல்லாவற்றிலும் சிறந்தது என்று முடிவுக்கு வந்தார். தந்தை இழந்தோருக்கு உதவி செய்து அவர்களுக்கு எதிர்காலம் பற்றிய நம்பிக்கை ஊட்டுவதில் இன்று குறிப்பிடத்தக்க எல்லையை அடைந்திருக்கிறார் முருகபூபதி.

உலகத்தில் பலர் தமக்காக மட்டுமே வாழ்ந்து விட்டுப் போகிறார்கள். ஆயிரத்தில் ஒருத்தர் மற்றவர் பற்றிச் சிந்திக்கிறார். லட்சத்தில் ஒருத்தர் தமக்காக வாழும் அதே வேளை மற்றவர்களுக்காகவும் வாழ்கிறார், முருகபூபதியைப்போல. மற்றவர்களுக்காகச் சிந்திக்க ஒரு மனமும் உதவுவதற்காகக் கிடைக்கும் வாழ்க்கையும் பெறும் ஒருவன் பாக்கியசாலியாகிறான். இந்தப் பாக்கியத்தைப் பெற்ற ஒருவனுக்கே கண்ணீர் துடைக்கும் கரங்களின் உன்னதம் புரியும். மற்றவர்களுக்காக வாழ்தலில் உள்ள திருப்தி தெரியும்.

குளிர்பானம் வந்தது. வரும் வழியில் சீனி இல்லாமலும் சீனி குறைத்துப் போட்டுத் தரக் கோரியும் தேநீர் அருந்தி வந்திருந்தோம். அந்தக் கணம் வரை எந்த இடத்திலாவது தேனீர் அருந்த வேண்டி வந்தால் முதலில் ஆளுக்காள் முகத்தைப் பார்த்துக் கொள்வோம். குளிர்பானத்தை கையில் எடுத்த போது நாங்கள் முகங்களைப் பார்த்துக் கொள்ளும் நிலையில் இருக்கவில்லை. எதுவும் பேசாமல் எடுத்து அருந்தினோம். வந்தாரை வரவேற்கும் கலாசாரத்துக்கு அப்பால் அந்தக் குளிர்பானத்தின் பின்னணியில் இருந்த அன்பும் அந்தச் சூழலும் சீனி வியாதியையும் இருதய வியாதியையும்; தாண்டிச் செல்லக் கூடியவை என்பதை எமது உடலும் மூளையும் தானாக ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்று நான் நம்பினேன்.

அங்கிருந்தவர்களில் ஒருத்தி ஆறாம் ஆண்டு படிக்கும் அழகிய சிறுமி. புன்னகை அவள் முகத்தில் நிரந்தரமாக இருந்தது. அவளைப் பார்த்து, “கொழும்புக்குச் சென்றாயா” என்று புன்முறுவலுடன் கேட்டார் முருகபூபதி. அச்சிறுமி நாணத்துடன் ‘ஆம்’ என்று தலையை ஆட்டினாள். ‘இவவுடைய ஸ்பொன்ஸர் இவவை கொழும்புக்கு வரச் சொல்லிப் பார்த்து விட்டுப் போயிருக்கிறா!’ என்று எங்களுக்கு விளக்கம் தந்தார் அவர்.

“உங்களுக்குத் தெரியுமா... ஒரு பன்னிரண்டு வயதுச் சிறுமி தனது செலவுகளுக்காகப் பெற்றோர் வழங்கும் பணத்தைச் சேர்த்து ஒரு இளம் பெண்ணின் பல்கலைக் கழகப் படிப்புக்கு உதவிக் கொண்டிருக்கிறாள். கூடிய விரைவில் அவள் தன் பெற்றோருடன் வந்து அந்தப் பெண்ணைச் சந்திக்கவிருக்கிறாள்” என்று எம்மிடம் சொல்லியபடி முருகபூபதி வாகனத்தில் ஏறினார். வாகனத்தின் மூவர் அமரும் ஆசனத்தில் முறையே நான், ஸ்ரீதர், முருகபூபதி என்ற வரிசையில் அமர்ந்தோம். முன் ஆசனத்தில் செங்கதிரோன்.

வாகனம் நகர ஆரம்பித்தது. பின்னால் அமர்ந்திருந்த என்னுடயதும் ஸ்ரீதருடையதும் உடல்கள் வாகனத்தில் இருக்க ஆன்மாக்களும் சிந்தனைகளும் இன்னும் அதே காரியாலயத்தில் இருந்தன என்பதை அடுத்து நடந்த சம்பவம் உணர்த்தியது.

“பெற்றோர் இல்லாத அந்தச் சின்னப் பிள்ளைய நினைக்கேக்க கவலையா இருக்கு.....” என்று சொல்லத் தொடங்கிய ஸ்ரீதர் சட்டென உடைந்து அழுதார். கண்ணீர் அவரது கண்ணாடியைத் தாண்டித் தெறிக்க எனக்குத் தொண்டைக்குள் ஏதோ வந்து அடைத்தது. “இட் இஸ் ஓகே ஸ்ரீ...... இட் இஸ் ஓகே.... ஈஸி... ஈஸி....” என்று சொன்னபடி ஸ்ரீதரின் தோளில் கைவைத்துச் சாந்தப்படுத்தினார் முருகபூபதி. ஒரு புத்தக நிறுவனத் தலைவராக மட்டுமே நான் அறிந்திருந்த நண்பர் ஸ்ரீதரின் இதயத்துள் பொங்கிப் பிரவகித்த மனிதாபிமானம் என்னை ஒரு கணம் திக்குமுக்காட வைத்தது. திகைப்பிலிருந்து விடுபட்டு, ‘ஸ்ரீ யூ ஆர் க்ரேட்... உனது நண்பனாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன்’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.

சாதனை மனிதர்களுக்கு நன்றிக் கடனாக உலகம் எத்தனையோ விதமான கௌரவங்களை வழங்கி வருகின்றது. அவை சரியான அளவு கோல்களால் அளக்கப்படாத போது அவை பற்றிய சர்ச்சைகள் உருவாகி உலகம் முழுக்க நாற்றம் எடுக்கிறது. மனிதர்களால் வழங்கப்படும் விருதுகளில் தேசங்களின், பிராந்தியங்களின் அரசியல் லாபங்களும் தேவைகளும் இரண்டறக் கலந்திருக்கின்றன.

ஒரு மனிதன் தனது தன்னலமற்ற சேவையின் பலனைப் பணமாகவோ பதவியாகவோ பெறுவதை விட ஒரு கண்ணீர்த்துளியாகப் பெறுவது எத்தகைய அற்புதமான கொடுப்பினை. அது முருகபூபதிக்குக் கிடைத்து விட்டது. கண்ணுக்கு முன்னால் உணர்வுபூர்வமாகக் கிடைக்கும் ஆத்மார்த்தமான, இயல்பான அங்கீகாரமானது முழு உலகும் பார்த்திருக்க ஒளிவெள்ளத்தில் மிதந்து பெறப்படும் எல்லாவித விருதுகளின் அங்கீகாரத்தையும் விட உயர்ந்தது, உன்னதமானது.

குறிப்பு: இந்தப் பத்தி உண்மையில் முருகபூபதி பற்றியதல்ல. முருகபூபதி சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை ஏற்பாடு செய்த போது அவரை அரசின் கைக்கூலியாகவும், தமிழ் மக்கள் துன்பத்தை மறக்கடிக்க முயன்ற துரோகியாகவும் வர்ணித்தவர்கள் பற்றியது.

தினக்குரல் வார இதழ் - 02.01.2011 மற்றும் “இருக்கிறம்”


இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

2 comments:

Kumar Ganesan said...

this is his website

http://www.csefund.org/

Kumar Ganesan said...

this is his Ceylon Student Education Fund website
http://www.csefund.org/