Sunday, April 24, 2011

நீ மிதமாக நான் மிகையாக...நீ மிதமாக நான் மிகையாக என்ற தலைப்பில் இவள் பாரதி தந்திருப்பது ஒரு கவிதை நூல் அல்ல. காதலிலான ஒரு ஓட்டோகிராஃப்.

எல்லாக் கவிதைத் தொகுதிகளிலும் சில அல்லது பல காதல் கவிதைகள் இடம்பெறுவதுண்டு. கவிஞரின் காதல் அனுபவம் அல்லது காதலைப்பாடும் முனைப்பு அல்லது காதலைப் பாடக் கவிஞனைத் தூண்டியிருக்கும் உணர்வுகளைப் பொறுத்து இக்கவிதைகளின் தொகை அமையும்.

ஆனால் இந்தக் கவிதை நூல் வித்தியாசமானது. முழுவதுமாகக் காதலையே பாடுகிறது. ஒரு மூலைக்குள் பத்திரமாகச் சாத்தி வைக்கப்பட்டிருக்கும் இதயத்திலிந்து எழும் காதல் ரசம் கொட்டும் வரிகள் இதில் பதிவு செய்யப் பட்டுள்ளன. காதல் வயப்பட்ட மனோ நிலை உணர்வுகளின் அப்பழுக்கற்ற வெளிப்பாடுகள். காதல் வசப்பட்ட எல்லோருக்கும் ஓர் அழகிய கைக்குட்டை இது. காதலின் ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் இதை விரும்பிப் படிக்கலாம். காதலிக்காதவர்களும் காதலே உணராதவர்களும் கூடப் படிக்கலாம். அப்படிப் படிக்கும் போது சில வேளை காதல் அரும்பும் சாத்தியம் உண்டு.

காலங்காலமாக காதல் பாடப்பட்டே வருகிறது. கவிதைகளும் எழுதப்பட்டே வருகின்றன. அந்தக் காதலுக்கு முடிவும் இல்லை. கவிதைகளுக்கு முடிவும் இல்லை. புதிய புதிய வார்த்தைகளினூடாக காதல் சொல்லப்படுகிறது. அனுபவமும் உணர்வும் வெளிப்படுத்தப்படுகிறது. உலகம் தோன்றிய காலம் முதல் மிகவும் அதிகமாகப் பாடப்பட்ட அம்சம் காதலாகத்தான் இருக்க வேண்டும். காதலுக்கும் கவிதைக்கும் அப்படி ஒரு உறவு இருக்கிறது. படிப்பு ஏறாத, ஒரு வசனத்தைச் சரியாக எழுதத் தெரியாத விடலை வயதினனுக்கும் கூடக் காதல் வந்து விட்டால் அவன் மனதில் கவிதை பூக்க ஆரம்பித்து விடுவதைப் பார்க்கிறோம். ஆயினும் கவிதை அலுப்பதுமில்லை. காதல் அலுப்பதுமில்லை. யாரிடம் உண்மையான காதல் உணர்வும் அதன் உண்மை அனுபவமும் ரசனையும் இருக்கிறதோ அவரது காதல் கவிதையை உலகம் ரசிக்கிறது.

அந்த ரசனை இவள் பாரதியின் இந்தச் சிறு தொகுதியில் இருக்கிறது. ஒவ்வொரு பக்கத்திலும் இடம்பிடித்துள்ள ஒவ்வொரு கவிதைத் துளியும் ஒவ்வொரு தேன் துளி போல் நம்மை நயந்து இனிக்க வைக்கிறது. சில துளிகள் கஸல் கவிதைகளைப் போல காதல் மயக்கத்தைக் கள் மயக்கமாக மாற்ற முனைகின்றன.

“நீ கொடுக்கும்

அனைத்தையும் நேசிக்கிறேன் -

வலியையும்”


‘யார் முதலில் பேசுவதெனத்

தயங்கி நிற்கையில்

எங்கோ ஒரு சரத்தில்

ஏதோ ஒரு பூ

உதிர்ந்து போகிறது”


“எனது தூக்கத்தை

உனது நினைவுகளுக்குக் கொடுத்து விட்டு விழித்திருக்கிறேன்

இரவுக்குத் துணையாய்”


“நீ மௌனித்திருக்கும் நொடிகளில்

மரணித்து விடுகிறேன்”


எனது பெயரை

இதற்கு முன்னதாக யாரும் உச்சரித்ததில்லை

உன்னைப் போல்

உயிரில் தீப்பற்றுமளவுக்கு”


“திறந்தேதான் இருக்கிறது

கவிதையோடு என்மனமும்

நீ வாசிப்பதற்கும் வசிப்பதற்கும்”


இவ்வாறு ரசனை மிக்க பல கவித்துளிகளை இந்நூல் தன்னகத்தே கொண்டிருக்கிறது.

காதல் ஒரு பூவைப்போல் மலரும். புற்று நோய்போல் படரும். வசனம் இல்லாமல் பேசும். ஆகாயத்துக்கும் பூமிக்குமிடையில் வாழ வைக்கும். ஆனால் அது ரகசியம் தகர்க்கும் போது ஒரு குண்டு போல் வெடிக்கும்.

காதலும் காமமும் ஒன்றோடொன்று இணைந்தது. காதல் மிகையாகவும் காமம் மிதமாகவும் இருக்கும் போது காதல் புனிதமானது. காமம்  மிகையா
கவும் காதல் மிதமாகவும் இருக்கும் போது காதல் பாவமாகிறது. அல்லது கத்திரிக்காய் ஆகிறது.

காதல் கண்ணியமானது. கண்ணியப்படுத்தப்பட வேண்டியது. கண்ணியப் படுத்தும் போது அதுவும் நம்மைக் கண்ணியப்படுத்துகிறது. கண்டிக்கத் துணிகையில் காயப்படுகிறது. நம்மையும் காயப்படுத்துகிறது.

உணர்வு உண்மையாக இருந்தால் கவிதையும் இனிப்பாக வெளிவரும். அப்படி இனிப்பான கவிதைகளாகவே இந்த நூலில் கவிதைகள் இடம் பெற்றிருக் கின்றன. பாரதி கவிதைகளை அனுபவித்து எழுதியிருக்கிறாள். அதன் மூலம் நம்மையும் அனுபவிக்கச் செய்கிறாள்.

தனக்குக் கவிதைகளில்தான் அதிகம் ஈடுபாடு என்று சர்வதேச எழுத்தாளர் மாநாட்டுக்கு வந்திருந்த வேளை எனக்குச் சொன்னாள். அதை இந்தக் கவிதை நூல் உறுதி செய்கிறது.

கவிதை மட்டுமன்றிக் கதைகளையும் கவிதை போலவே எழுதும் வல்லமை யும் அற்புதமான கற்பனைச் சாமார்த்தியமும் அவளிடம் உண்டு. ‘‘ஐந்து பூரிகளும் சில பத்திரிகைகளும்’ என்ற தலைப்பில் அவள் எழுதியிருந்த சின்னஞ் சிறு கதை நான் இதுவரை படித்த அதி சிறந்த சிறுகதைகளுள் அல்லது என்னை மிகவும் அதிர்ச்சியுறச் செய்த கதைகளுள் ஒன்று.

ஒரு விடுதியின் சமையலறையில் ஐந்து பூரிகள் பொரிப்பதற்குத் தயாரான நிலையில் பத்திரிகைத் தாள்கள் ஐந்தில் வடிவமகாக்கப்பட்டு வைக்கப்பட் டுள்ளன. ஒன்று பெண்களின் உள்ளாடை விளம்பரம் உள்ள பத்திரிகையிலும் இரண்டாவது பூரிக்குரிய மாவு பூக்கடை விளம்பரம் இடம் பெற்ற தாளிலும் இன்னொன்று மரபணுக் கத்தரிக்காய் பற்றிய செய்தி வந்த தாளிலும் வைக்கப்பட்டுள்ளன. நான்காவது பூரிக்குரிய மாவு குழந்தைப் பத்திரிகையின் அட்டைக் கார் செய்வது எப்படி என விளக்கும் தாளிலும் ஐந்தாவது செம்மொழி விழாபற்றிய செய்தி வந்த தாளிலும் வைக்கப்பட்டுள்ளன. பொரிக்கப்பட்ட பூரிகளை அறைக்குள் கொண்டு வந்து சாப்பிட ஆரம்பிக்கிறாள்.

இனி இவள் பாரதியின் வார்த்தைகளில் அதைப் பார்ப்போம். “முதல் பூரியை வாயில் வைத்தபோது ஒரு உள்ளாடையை சாப்பிடுவது போலிருக்கவே அதை இடது பக்கம் தூக்கி எறிந்தேன். இரண்டாவது பூரியை சுவைக்கிற போது பூக்களை சாப்பிடுவதை போலிருக்கவே அதை வலது பக்கம் வீசி எறிந்தேன். மூன்றாவது பூரியை சாப்பிடும் போது விஷம் தோய்ந்த காய்கறிகளின் மணம் வரவே அதையும் விட்டெறிந்தேன். நான்காவது பூரியை உட்கொண்ட போது காரின் சக்கரங்கள் பல்லிடுக்கில் மாட்டிக் கொண்டது போல் உணரவே சன்னலுக்கு வெளியே தூக்கிஎறிந்தேன்

ஐந்தாம் பூரிக்கு கை சென்ற போது வேண்டாமென நடுங்கியது. இருந்த போதும் பசி வயிற்றைக் கிள்ள சாப்பிட ஆரம்பித்தேன். வாயருகே கொண்டு சென்ற போது குருதி வாடை அடித்தது. தொடர்ந்து அலறல் சத்தமும் கேட்கவே துயரத்தில் கையிலிருந்த பூரி நழுவியது. பூரியிலிருந்து இறங்கி ஓடிக் கொண்டிருந்தது நம்மால் புறக்கணிக்கப்பட்டு வாழ்விழந்த ஒரு இனம்...

கவிதை மனது இரக்கம் கொண்டது. தன்னைப் போல் மற்றவரை நேசிக்கும் சுபாவம் கொண்டது. தன்னைப் போல் மற்றவரை நேசிப்பதுதான் மனிதப் பிறவியின் அதி உன்னத நிலை. உண்மைக் குண்மையான கவிதை மனது இவள் பாரதியிடம் இருந்ததால்தான் தொப்புள் கொடி உறவின் துரோகத்தை அவளால் பொறுக்க முடியவில்லை. கடந்து போன மிகப் பெரும் அவலத்தை யும் அதன் பின்னணி அரசியலையும் ஒரு பக்கக் கதை மூலம் ஐந்து பூரிகளையும் பத்திரிகைத் தாள்களையும் முன் வைத்து அவளால் சொல்ல முடிந்தது.

இந்தச் சிறு நூலை பாரதி சமர்ப்பணம் செய்திருப்பது ‘பொடியனுக்கு’! தமிழ் நாட்டில் பையன் என்று சொல்வார்களே தவிர பொடியன் என்று சொல்வ தில்லை. எனவே இந்தப் பொடியன் இலங்கையனாக இருப்பானோ என்று ஒரு சந்தேகம் வருகிறது எனக்கு. அப்படியானால் பாரதி இலங்கையின் மருமகளாக மாறிவிடுவாள். அது தெரியவர இன்னும் கொஞ்ச நாள் நாங்கள் காத்திருக்க வேண்டும்.

பாரதி மருமகளாக வரவில்லையென்றாலும் உண்மையான சகோதர வாஞ்சையுடன் வாழ்விழந்த மக்களின் வருத்தத்தை வெளிப்படுத்தியமைக்காக எனது சகோதரி என்ற வகையில் அவள் நமக்கு மகளாக இருந்து விட்டுப் போகட்டும். உண்மைக்குண்மையான தமிழ் உணர்வுள்ள மனிதாபிமானமுள்ள பெண்ணை நமக்கு முன்னால் கொண்டு வந்தமைக்காக விஸ்வ சேது இலக்கியப் பாலத்துக்கும் அதன் நிறுவனர் நண்பர் ஜீவகுமாரனுக்கும் எனது நன்றிகள்.

(இன்று 24.04.2011 - கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் விஸ்வசேது இலக்கியப் பாலத்தினால் வெளியிடப்பட்ட ஒன்பது நூல்களில் ஒன்றான “நீ மிதமாக நான் மிகையாக” என்ற கவிதை நூல் பற்றி ஆற்றிய உரை)
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

2 comments:

பா.சுடர்மதி பிரான்சிஸ் said...

இவள் பாரதியின் படைப்பான "நீ மிதமாக நான் மிகையாக..." உட்பட அவரது படைப்புகள் வெளியீட்டில் தாங்கள் ஆற்றிய உரை தரமான தங்கத்திற்கு ஒப்பான பேச்சு... உங்களின் உரையை படிக்கையில் இவள் பாரதியின் படைப்பை படிக்கும் ஆவல் தூண்டப்படுகிறது...

இலங்கையில் உள்ளதால் முன்னரே இவள் பாரதியின் படைப்பை படித்து எங்களின் பொறாமைக்கு சொந்தக்காரர் ஆகிவிட்டீர்.

ஐயா இவள் பாரதி இலங்கை மண்ணின் மகளாகவே இருக்கட்டும். தமிழக மருமகளாக இருக்கும் பெருமையை எங்களுக்கு விட்டு தாருங்கள்.

இவள் பாரதியின் படைப்பை ஆழ்ந்து படித்து அருமையான உரையாற்றியுள்ளீர்கள். தங்களுக்கு நன்றி... உங்களது பேச்சு படிப்போரை இவள் பாரதியின் படைப்பை படிக்கும் ஆவலை தூண்டும் என்பதில் ஐயமில்லை...

உங்களது உரையில் இவள் பாரதியின் மீது நீங்கள் வைத்துள்ள அன்பும், பாசமும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது எனினும் ஒன்றிரண்டு இடத்தில் ஒருமையில் அவள் என விளித்துள்ளீர்கள். தவிர்த்திருக்கலாம்...

மொத்த்தில் உங்களது உரை நளபாக விருந்து- தங்களுக்கும் இந்த விமர்சனத்திற்கு சொந்தக்காரரான இவள் பாரதிக்கும் வாழ்த்துக்கள்..

Unknown said...

அருமையான கட்டுரை.கவிதைப்புத்தகத்தையே படித்தது போன்ற உணர்வு எழுகிறது..சகோதரர் அஸ்ரப் சிகாப்தீனுக்கும், எனது அன்புத் தோழி இவள்பாரதிக்கும் அன்பான வாழ்த்துக்கள்.
எஸ்.பாயிஸா அலி