Sunday, July 31, 2011

கன்னியாகுமரியிலிருந்து ஒரு கடிதம்!


இன்று காலை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுததான தென்றல் சேவையில் இடம்பெற்ற “சந்தித்த வேளை” நிகழ்ச்சியில் ஒரு விருந்தினராகக் கலந்து கொண்டு கருத்துக்களைப் பரிமாறினேன்.

அறிவிப்பாளர்களான கலிஸ்டா லூக்கஸ், ஏ.எல்.ஜஃபீர் ஆகியோர் என்னுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியைக் கேட்ட பலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்கள்.

இங்கே தமிழகத்திலிருந்து ஒரு நேயர் ஒரு கடிதத்தை எனது முகப்புத்தகத்துக்கு அனுப்பியிருந்தார். அந்தக் கடிதத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கடிதத்துக்கான பதிலை நண்பருக்கு அனுப்பி வைத்தேன். அதற்கும் பாராட்டுத் தெரிவித்திருந்தார்.

நிகழ்ச்சியில் பேசப்பட்ட விடயங்கள் பற்றி பின்னொரு பதிவு இடப்படும்.

இனி நேயரின் கடிதம்.

---------------------------------------------------------------------------------------------------
இனிய மாலை வணக்கம் எமது முன்னாள் அறிவிப்பாளர், கவிஞர், எழுத்தாளர்,நாடக நடிகர் திரு. அஷ்ரஃப் சிகாப்தீன் அவர்களே! நல.நலமறிய ஆவல்.


நான் ஓர் இலங்கை வானொலியின் தீவிர நேயர்.என் மனதில் பட்டதை எழுத்துக்களில் வடிக்கத் தெரியுமே அன்றி கவி புனைய தெரியாது.தெரிந்திருந்தால் தங்களைக் கவிதைச் சரங்களால் மாலை சூட்டியிருப்பேன்.

இஸ்ரேலில் மக்கள் கொந்தளிப்பு


இரண்டு தினங்களுக்கு முன்னர் இஸ்ரேலிலும் மக்கள் தெருவில் இறங்கினார்கள். பெஞ்சமின் நெத்தன்யாகுவின் அரசுக்கு எதிராக இப்பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.


அரசின் பல்வேறு கொள்கைகளை எதிர்த்துக் கோஷம் எழுப்பினார்கள். முகப்புத்தகம் மூலமும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆள் திரட்டப்பட்டுள்ளது.



பெரும்பாலும் இளைய வயதினரே இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கொண்டிருந்தனர். தெருவில் கூடிய இளைஞர்கள் மாணவர்கள் தெருவில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். வீடுகளிலிருந்து வந்து சேருங்கள் என்று கோஷம் எழுப்பினார்கள்.



பெற்றோல், வீட்டுவசதி, மின்சாரம் ஆகியவை குறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கருத்துக்களைத் தெரிவித்தார்கள்.

Friday, July 29, 2011

கடையநல்லூர்க் கவிஞனைக் கண்டேன்!


கவியரங்குக்குத் தலைமை வகித்த தமிழன்பன் அடுத்து கடையநல்லூர் கமால் என்று அழைத்ததும் நான் ஆசனத்தில் நிமிர்ந்து உட்கார்ந்தேன்.

காயல்பட்டண இலக்கியப் பெருவிழாவின் அழைப்பிதழ் மூன்று தினங்களுக்கு முன்னரே காணக் கிடைத்தும் கவியரங்கில் பங்கு பற்றுவோர் தொகை 34 ஆக இருந்ததால் அனைவரதும் பெயர்களையும் பார்க்கும் எண்ணம் தோன்றவில்லை என்றுதான் நினைக்கிறேன்.
இல்லையென்றால் மூன்றாவது அணியில் இரண்டாவதாக இடம்பெற்றிருந்த அவரது பெயர் கண்ணில் பட்டிருக்கும்.

எனது நினைவுகள் சட்டென 1979ல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் நடந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டை நோக்கி நகர்ந்தன. அழிந்தும் அழியாமலும் ஞாபக அடுக்குகளில் அந்த வேளை பதிவானவர்களில் சகோதரர் கடைய நல்லூர் கமாலும் ஒருவர்.

அவ்வேளை நான் சந்தித்து உரையாடிய இந்தியப் படைப்பாளிகளில் அவர் மட்டும்தான் ஞாபகத்தில் இருக்கிறார். அதற்குக் காரணம் அவர் எனது ஆட்டோகிராபில் எழுதிய ஒரு சிறு கவிதை.

கவிஞர் புரட்சிக் கமாலும் கூட,

ஊனாய் உயிராய் உயிர் மூச்சாயெல்லாம்
தானாயிலங்கும் தமிழ்
என்று எழுதித் தந்த அந்த ஆட்டோகிராபை நீண்டகாலமாக நான் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். அதாவது இரண்டு கமால்கள் எழுதிய ஆட்டோகிராஃப் அது!

பலமுறை இந்தியா சென்றும் இலக்கிய மாநாடுகளில் கலந்து கொண்டும் கூட சகோதரர் கமால் அவர்கள் என் கண்ணில் பட்டதில்லை.

கவியரங்கில் என்னைக் கவர்ந்தவர்களில் கமாலும் ஒருவர். 34 பேரும் கவிதை வாசித்து முடிக்க நீண்ட நேரம் எடுக்கும் என்பதால் அவரைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பை இழந்து விடுவேன் என்றுதான் நினைத்திருந்தேன்.

Sunday, July 24, 2011

நீங்கள் கேட்பதற்காக...


சென்னையில் நடைபெற்ற “ஒரு குடம் கண்ணீர்” நூல் வெளியீட்டு விழாவில் இடம் பெற்ற உரைகளின் ஒலி வடிவம். இணைப்புகளில் சொடுக்கினால் உரைகளைக் கேட்க முடியும்.






சமநிலைச் சமுதாயம் ஆசிரியர் ஜாபர் சாதிக் பாக்கவி அவர்களின் வரவேற்புரை




ஆவணப்படத் தயாரிப்பாளரும் இயக்குனரும் எழுத்தாளருமான ஆளுர் ஷாநவாஸ் அவர்களது உரை.




புதுக் கல்லூரிப் பேராசிரியர் அப்துல் ரஸாக் அவர்களது உரை




பேராசிரியர் சே.மு. முகமதலி அவர்களது உரை




எழுத்தாளரும் பேச்சாளருமான அப்துல் அஸீஸ் பாக்கவி அவர்களது உரை பகுதி - 1


அப்துல் அஸீஸ் பாக்கவி அவர்களது உரை பகுதி - 2




பேராசிரியர் பெரியார்தாசன் (எ) அப்துல்லாஹ் அவர்களின் சிறப்புரை
பகுதி - 1


பேராசிரியர் பெரியார்தாசன் (எ) அப்துல்லாஹ் அவர்களின் சிறப்புரை
பகுதி - 2


பேராசிரியர் பெரியார்தாசன் (எ) அப்துல்லாஹ் அவர்களின் சிறப்புரை
பகுதி - 3




எனது நன்றியுரை


Saturday, July 23, 2011

400 வாரங்களாக வெற்றி நடை போடுகிறது...




பதினைந்து நாட்கள் இந்தியப் பயணம் முடித்து 18ம் திகதி நாடு திரும்பியிருந்த எனக்கு பொது நிகழ்வு ஒன்றுக்கான அழைப்பு 19ம் திகதி ‘எங்கள் தேசம்’ பத்திரிகைப் பொறுப்பாசிரியர் சகோதரர் பஷீர் அலியிடமிருந்து அலைபேசி வாயிலாக வந்தது.

‘எங்கள் தேசம்’ பத்திரிகையின் 200 வது இதழ் வெளியீட்டை ஒரு விழிப்புணர்வு நிகழ்வாக நடத்தும் திட்டம் அது. அடுத்த நாள் நிகழ்வு. அழைப்பிதழ் அனுப்ப வேண்டும் என்று அவதிப்பட்டார். வேண்டாம், நான் வந்து கலந்து கொள்வேன் என்று அவருக்கு உறுதியளித்தேன்.

தமிழ் நாட்டு வெய்யிலில் மண்டை காய்ந்து போய் வந்திருந்தேன். (ஏற்கனவே அப்படித்தானே உங்கள் மண்டை இருக்கிறது என்று நினைத்துச் சிரிப்பவர்களுக்கு வாழ்த்துக்கள்!) நாடு திரும்பிய பிறகு வீட்டை விட்டு வெளியேறிய முதல் சந்தர்ப்பமாக அது அமைந்தது.

20ம் திகதி பி.ப. 4.45 அளவில் மண்டபத்துக்குள் சென்று விட்டேன். மண்டபம் சிறியதுதான் என்ற போதும் அது நிறைந்திருந்தது ஒரு சந்தோசத்தை ஏற்படுத்தியது. பத்திரிகைத்துறையோடு சம்பந்தப்பட்டவர்கள், சம்பந்தப்படாத சமூகாபிமானிகள், எழுத்தாளர்கள் என்று பரவலாக அமர்ந்திருந்தார்கள். மேடையைப் பார்த்த போது ஒரு கலக்கம் வந்து விட்டது. இவ்வளவு பேரும் பேசி முடிக்க சஹர் நேரமாகும் என்று நினைத்தேன். எனது கலாசாலைத் தோழர் ஷெய்க் அகார் உரையாற்றிக் கொண்டிருந்தார்.

ஷெய்க் அகார் ‘எங்கள் தேசம்’ பத்திரிகையை நீண்ட நாட்களாகப் படித்து வருகிறார் என்பதும் அப்பத்திரிகையில் அவதானம் கொண்டிருக்கிறார் என்பதும் உரையிலிருந்து புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. அது இன்னொரு சந்தோஷமாகவும் இருந்தது.

கிண்ணியா அமீர் அலி கவிதை படித்தார். வழமை போல திருப்புகழ் ஸ்டைல், புதுக்கவிதை, வசன கவிதை என்றெல்லாம் கலந்து சாம்பாராக இருந்தது. சில சிலேடைச் சொற்கள் ரசிக்கத் தக்கவையாக இருந்தன. 21ம் திகதி அமீர் அலி அலைபேசியில் தொடர்பு கொண்டார். பல விடயங்களையும் கதைத்தோம். கவிதை பற்றிக் கேட்டார். இந்தச் சாம்பார் ரசம் எனக்குப் புளித்து விட்டதைச் சொன்னேன். விமர்சியுங்கள் என்று சொன்னார். ஒரு கொத்து ரொட்டி போட்டு விடவா என்று கேட்டேன். ‘தாராளமாக’ என்று சொல்லி அனுமதி வழங்கினார்.

Friday, July 22, 2011

சென்னையில் ஓடிய கண்ணீர்!


16.07.2011 அன்று சென்னை, வேப்பேரியில் பெரியார் திடலில் அமைந்துள்ள அன்னை மணியம்மையார் அரங்கில் எனது “ஒரு குடம் கண்ணீர்” நூல் வெளியீட்டு விழா இனிதே நடைபெற்று முடிந்தது.

சமநிலைச் சமுதாயம் சஞ்சிகையின் நிறுவனரும் அதன் கௌரவ ஆசிரியரும் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகப் பொருளாளருமான ஹாஜி ஏவி.எம்.ஜாபர்தீன் அவர்களின் அனுசரணையுடனும் சமநிலைச் சமுதாயம் பதிப்பகத்தின் ஏற்பாட்டிலும் நடைபெற்ற இவ்விழா மாலை 6.00 மணிக்கு ஆரம்பமாகி இரவு 9.00 மணி வரை நடைபெற்றது.


சமநிலைச் சமுதாயம் சஞ்சிகையின் ஆசிரியர் ஜாபர் சாதிக் பாக்கவி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.



நீதியரசர். சி.மு. அப்துல் வஹாப் அவர்கள் தலைமை வகித்து நூலையும் வெளியிட்டு வைத்தார். முதற்பிரதியை கலைமாமணி உமர் சாஹிப் பெற்றுக் கொண்டார். (படம் - இடமிருந்து வலமாக - பேராசிரியர் சே.மு.முகமதலி, டாக்டர் அப்துல்லாஹ் (எ) பெரியார்தாசன், நீதியரசர் அப்துல் வஹாப், பேரா. அப்துல் ரஸாக்,  கலைமாமணி உமர், நூலாசிரியர், ஹாஜி. ஏவி.எம்.ஜாபர்தீன், அப்துல் அஸீஸ் பாக்கவி)
 
 

திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியின் முன்னாள் செயலாளர் அப்துல் கபுர் சாஹிப் அவர்கள் சிறப்புப் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.


நூல் அறிமுக உரை நிகழ்த்தும் - ஆவணப்பட இயக்குனரும் தயாரிப்பாளரும் எழுத்தாளருமான ஆளுர் ஷாநவாஸ்



சென்னை புதுக்கல்லூரிப் பேராசிரியரும் எழுத்தாளருமான அப்துர்ரஸ்ஸாக் அவர்கள் உரையாற்றிய போது...



தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் பொதுச் செயலாளரும் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலாளருமான பேராசிரியர் சேமு.முகமதலி அவர்களி உரையாற்றிய போது...


எழுத்தாளரும் பேச்சாளருமான கோவை. அப்துல் அஸீஸ் பாக்கவி அவர்கள் உரையாற்றிய போது...



பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்கள் சிறப்புரை நிகழ்த்துகையில்...



எனது பதிலுரையும் நன்றியுரையும்



வருகை தந்திருந்தோரில் ஒரு பகுதியினர்



நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கவிஞர் ஜலாலுத்தீன்

(இந்நிகழ்வில் நிகழ்த்தப்பட்ட உரைகளை ஒலிவடிவில் தருவதற்கு முயற்சிக்கிறேன்.)


 



















Sunday, July 3, 2011

சென்னையில் “ஒரு குடம் கண்ணீர்”


எதிர்வரும் 16.07.2011 அல்லது 17.07.2011 அன்று “ஒரு குடம் கண்ணீர்” நூல் வெளியீட்டு நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு நண்பர்கள் ஏற்பாடுகளை மேற் கொண்டுள்ளனர்.

தமிழ் நாட்டு நண்பர்களும் இலக்கிய இதயங்களும் இந்தத் தேதிகளில் சென்னையில் நிற்க வாய்ப்பிருக்கும் இலங்கை அன்பர்களும் இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இடம், திகதி குறித்து பதிவிடுவது சாத்தியம் இல்லையென்பதால் எதிர் வரும் 12.07.2011 முதல் 17.07.2011 வரை என்னுடன் 9962201939 என்ற இலக்கத்தில் தொடர்பு கொண்டு விபரம் பெற்றுக் கொள்ள முடியும். இந்த எண்ணில் தொடர்பு கொள்ள முடியாதிருந்தால்  9840277450 என்ற எனது நண்பரின் இலக்கத்தில் தொடர்பு கொண்டு விபரங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன். நன்றி!

Saturday, July 2, 2011

எழுத்தாளர் முருகபூபதிக்கு மணிவிழா!


மெல்பேனில் வாழும் சமூக சேவையாளரும் தமிழ் இலக்கியவாதியுமான் திருவாளர் லெட்சுமணன் முருக பூபதின் மணிவிழாவையொட்டி அவரது நண்பர்கள் அவரது சேவைகளை பாராட்டும் முகமாக வரும் July 31(2011)ஞாயிறுகிழமை விருந்து நிகழ்சியை ஒழுங்கு செய்கிறார்கள்.

கடந்த இருபத்தி மூன்று ஆண்டுகளாக இலங்கையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆதரவு அற்ற குழந்தைகளை இலங்கை மாணவர் நிதியம் ஊடாக கல்வி பெற ஊக்கு சக்திகாக இருந்து வருபவரும் மற்றும் அவுஸ்திரேலிய தமிழர் அகதிகள் கழகம் அவுஸதிரேலிய தமிழர் ஒன்றியம் ஊடாக பல வருடங்களாக சேவையாற்றியவர் திரு முருக பூபதி என்பது குறிப்பிடத்தக்கது. அவுஸ்திரேலியாவில் தமிழ் இலக்கியத்தை வளர்க்க முதல் முதலாக அவுஸதிரேலிய கலை இலக்கியசங்கத்தை உருவாக்கி பல இளம் எழுத்தாளரை ஊக்குவித்ததுடன் உதயத்தின் இலக்கி பகுதியையும் பலகாலமாக நடத்தியவர். இவர் இலங்கை அரசின் தேசிய விருதான சாகித்திய விருதை இரு முறை பெற்ற இலக்கியவாதி பலகாலமாக பத்திரிகையாளராக இருந்தவர் என்பதும் குறிபிடத்தக்கது.

 கடந்த ஜனவரியில் இலங்கையில் நடை பெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழாவை பல கரிப்புகளுக்கு மத்தில் நடத்துவதில் முன்னணி வகித்தவரில் முருகபூபதியும் ஒருவராகும். இவரின் சேவைகளை மெல்பேண் மக்கள் கௌரவிப்பதாக இந்த நிகழ்சசி அமைகிறது. இந்த நிகழ்சியில் பல எழுத்தாளர்களும் பேராசிரியர்களும் அவுஸ்திரேலியாவின் பல பகுதியில் இருந்து கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.
---------------------------------------------------------------------------------------------------------

தகவல் நோயல் நடேசன் - நன்றி - தேனீ இணையத்தளம்
---------------------------------------------------------------------------------------------------------

ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கு ஒரு சர்வதேசப் பரிமாணத்தை ஏற்படுத்துகிற முக்கியஸ்தர் லட்சுமணன் முருகபூபதி

நீர்கொழும்பூரில் 13-07-1951ல் பிறந்த லெ.முருகபூபதி அவர்களுக்கு 2011 ஜூலையில் அறுபது வயது பிறக்கிறது. நம்பமுடியவில்லைத்தான். அதற்காக மணிவிழா ஆண்டை மாற்றிக்கொள்ளவா முடியும்.


இதே ஜூலை மாதத்தில்தான் ஒரு நாற்பதாண்டுகளுக்கு முன், 1972ல் மல்லிகை மூலம் ஒரு சிறுகதையாளனாக இலக்கியப் பிரவேசம் செய்கின்றார் இருபதுவயது இளைஞன் முருகபூபதி. அந்த முதல் படைப்பின் பெயர் ‘கனவுகள் ஆயிரம்’!இலக்கியமே வாழ்வாகிப்போன இவருடைய இலக்கியக் கனவுகளும் ஆயிரம்தான். நீர்கொழும்பின் கடற்கரைவாழ் ;மீனவர் சமூகத்தின் வாழ்வியல்புகளை - வாழ்க்கை முறைமைகளை வெகு இயல்பான சித்திரிப்பாலும் யதார்த்தமான பிரதேச மொழிச் செழுமையூடாகவும் ஒரு அருமையானபடைப்பைத் தந்திருக்கின்றார் முருகபூபதி என்று முதல்கதையே நிறையப் பேசப்பட்டிருக்கிறது.

மல்லிகையில் முதல் கதை வந்ததைத் தொடர்ந்து ‘அந்தப் பிறவிகள்’ என்னும் இரண்டாவது கதை பூரணியிலும், மூன்றாவது கதை ‘தரையும் தாரகையும்’ புது யுகத்திலும் வெளிவருகின்றன. இந்த மூன்று கதைகளுமே நீர்கொழும்பின் கடல் வாழ்வை மிகத் தத்ரூபமாகப் படம் பிடித்திருந்தன. ஈழத்து இலக்கிய உலகிற்கு ஒரு புதிய வளர்ந்து வரும் குறும்புனைக் கதையாளரை மல்லிகை கைகாட்டி இருக்கிறது என்று தினகரனில் குறித்து வைக்கின்றார் எம்.சிறீபதி அவர்கள்.

எழுபதுகளின் முற்போக்கு முகாமுக்குள் பேராசிரியர்களான கைலாசபதி - சிவத்தம்பி ஆகிய பெரியவர்களுக்கடுத்த, புதுக் குரலாக இளங்குரலாக ஒலித்த இருவருள் ஒருவர் சிறீபதி. மற்றவர் நித்தியானந்தன். பூரணியின் ஆசிரியர் குழுவில் ஒருவரான இமையவன் என்கின்ற இ.ஜீவகாருண்யன் தேடுதலும் ஆளுமையும் மிக்க ஒரு தனித்துவமான விமர்சகர். ‘உங்களுடைய ‘அந்தப் பிறவிகள் கதையையும் மகாகவியின் புதியதொரு வீட்டையும் ஒப்பிட்டு ஒரு விமர்சனம் எழுத உத்தேசித் திருப்பதாக ஜீவகாருண்யன் கூறிய தகவலை முருகபூபதியே ஓரிடத்தில் பதிந்து வைக்கின்றார். ‘அந்த பிறவிகள’; கதை பூரணியில் வெளிவந்த கதை என்பது குறிப்பிடக் கூடியதே. பூரணியில் இந்தக் கதை வந்த சூட்டோடு அதன் ஆசிரியர் என்.கே.மகாலிங்கம் அவர்கள் முருகபூபதிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

‘உங்கள் கதை பிரபல சிங்கள நாடகாசிரியர் கலப்பதியின் மேடை நாடகமான ‘மூது புத்த’வின் அப்பட்டமான தழுவல் என்று அநு.வை.நாகராஜன் ஒரு புகார் கடிதம் எழுதி இருப்பதாகவும் அதற்கான உங்கள் பதில் என்ன? என்றும் கேட்டிருந்தது கடிதம். தழுவல் என்று குற்றம் சாட்டப்பட்ட அந்த மேடை நாடகத்தை நான் அதுவரை பார்த்ததில்லை என்றும் பிறதொரு சமயம் அது நீர்கொழும்பில் மேடை ஏற்றப்பட்டபோது ஓடிச்சென்று பார்த்ததையும்,நாடகாசிரியர் கலப்பதியுடன் தனக்கேற்பட்ட இக்கட்டுக்கள் பற்றி கலந்துரையாடியதாகவும் எனது எழுத்துலகம் கட்டுரையில் குறிக்கின்றார் முருகபூபதி. (ஞானம் இதழ் 29 ஒக்டோபர் 2002)

Friday, July 1, 2011

ஒரு வாசகியின் வாசகங்கள்!

ஒரு குடம் கண்ணீர்

கைகளில் இருக்கிறது

இரத்தக் கண்ணீர்

நெஞ்சில் வழிகிறது...!

வித்தியாசமான தலைப்போடு ஒரு முழு நாவல் கிடைத்த சந்தோசத்தில் பிரித்தால்... படித்தால்.... இரவு முழுக்கக் கனவில் அலறல்... அழுகை...!

தூக்கி வளர்த்த மாமாவையும் மகனையும் முன் வாசலிலேயே அமர்த்திக் கண்ணீருக்கு முன்னுரையை எழுதி விட்டீர்களே...

அனஸின் அணிந்துரையே ஒரு சித்திரவதைதான்! ஒரு முழு நீள ஆய்வை நடத்தியிருக்கிறார். நீங்கள் விட்டதை அவர் தொட்டுமிருக்கிறார்... பாராட்டுக்கள் அனஸ் சார்..!

தலைப்பு தனிப்பட்டதாக சொந்தமாக அமைந்தது தனிச் சிறப்பு. வித்தியாசமான தலைப்புத்தான். ஒரே மூச்சில் வாசித்து முடித்து விடவும் தூண்டிற்று...

01. சுவனத்தில் மின்னும் முகம்மதின் தாயாக எனது கண்ணீரும் அவனது மையித்தைக் குளிப்பாட்டியது..

02. ஹஸன் நுஹானோவிக்கின் குடும்பத்தைத் தேடிக் கண்டு பிடிப்பதில் என்னாலும் ஏதும் உதவிகள் செய்ய முடியுமாக இருந்தால்... ஏக்கமாக இருக்கிறது. அவருக்கு வெற்றி அல்லது மறதி கிடைக்கப் பிரார்த்திக்கிறேன்.

03. ரீட்டாவும் ரூத்தும் இனி என்னுள் வாழ்பவர்களாய்... மனசுக்குள் தத்துப் பெற்று விட்டார்கள். ஜேன் போன்ற உள்ளங்கள் இப்போது இங்கேயும் காணக் கிடைக்குமானால்... அந்தச் சந்திப்பு சில சந்தோஷங்களைத் தரும்.. சம்பந்தமில்லாத உறவுகள் கூட பல சந்தர்ப்பங்களை வாழ்வில் இனியதாய் மாற்றும் சக்தி பெற்றிருக்கின்றன. அதற்கான நல்ல உதாரணம் ஜேன்.

04. கசக்கிப் பிழிந்து சாறு குடித்தும் வெறியடங்காத மிருகங்களினால் கருகிச் சாம்பலான என்னுயிர் அபீர் ஹம்ஸாவே... உன்னை என் மடியில் கிடத்தி... தடவிக் கொடுத்து... தலை கோதிவிடத் துடிக்குதம்மா.... இந்தத் தாய் மனசு. உன் மையித்தை அள்ளிக் கட்டிக் கொண்டு உலகின் கோடானு கோடிக் காதுகளுக்கெல்லாம் கேட்கும் படியாக கத்திக் கதறி அழத் துடிக்கிறது... புறாவே உன்னைப் பெறாத இந்தத் தாய் மனசு. சுவனத்துத் தென்றலின் சுகந்தம் பூவே உனைத் தாலாட்டும். உனை நெஞ்சில் சுமக்கும் இந்தத் தாயின் தூய்மையான பிரார்த்தனை உனை வந்து சேரும் கண்ணே....