பதினைந்து நாட்கள் இந்தியப் பயணம் முடித்து 18ம் திகதி நாடு திரும்பியிருந்த எனக்கு பொது நிகழ்வு ஒன்றுக்கான அழைப்பு 19ம் திகதி ‘எங்கள் தேசம்’ பத்திரிகைப் பொறுப்பாசிரியர் சகோதரர் பஷீர் அலியிடமிருந்து அலைபேசி வாயிலாக வந்தது.
‘எங்கள் தேசம்’ பத்திரிகையின் 200 வது இதழ் வெளியீட்டை ஒரு விழிப்புணர்வு நிகழ்வாக நடத்தும் திட்டம் அது. அடுத்த நாள் நிகழ்வு. அழைப்பிதழ் அனுப்ப வேண்டும் என்று அவதிப்பட்டார். வேண்டாம், நான் வந்து கலந்து கொள்வேன் என்று அவருக்கு உறுதியளித்தேன்.
தமிழ் நாட்டு வெய்யிலில் மண்டை காய்ந்து போய் வந்திருந்தேன். (ஏற்கனவே அப்படித்தானே உங்கள் மண்டை இருக்கிறது என்று நினைத்துச் சிரிப்பவர்களுக்கு வாழ்த்துக்கள்!) நாடு திரும்பிய பிறகு வீட்டை விட்டு வெளியேறிய முதல் சந்தர்ப்பமாக அது அமைந்தது.
20ம் திகதி பி.ப. 4.45 அளவில் மண்டபத்துக்குள் சென்று விட்டேன். மண்டபம் சிறியதுதான் என்ற போதும் அது நிறைந்திருந்தது ஒரு சந்தோசத்தை ஏற்படுத்தியது. பத்திரிகைத்துறையோடு சம்பந்தப்பட்டவர்கள், சம்பந்தப்படாத சமூகாபிமானிகள், எழுத்தாளர்கள் என்று பரவலாக அமர்ந்திருந்தார்கள். மேடையைப் பார்த்த போது ஒரு கலக்கம் வந்து விட்டது. இவ்வளவு பேரும் பேசி முடிக்க சஹர் நேரமாகும் என்று நினைத்தேன். எனது கலாசாலைத் தோழர் ஷெய்க் அகார் உரையாற்றிக் கொண்டிருந்தார்.
ஷெய்க் அகார் ‘எங்கள் தேசம்’ பத்திரிகையை நீண்ட நாட்களாகப் படித்து வருகிறார் என்பதும் அப்பத்திரிகையில் அவதானம் கொண்டிருக்கிறார் என்பதும் உரையிலிருந்து புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. அது இன்னொரு சந்தோஷமாகவும் இருந்தது.
கிண்ணியா அமீர் அலி கவிதை படித்தார். வழமை போல திருப்புகழ் ஸ்டைல், புதுக்கவிதை, வசன கவிதை என்றெல்லாம் கலந்து சாம்பாராக இருந்தது. சில சிலேடைச் சொற்கள் ரசிக்கத் தக்கவையாக இருந்தன. 21ம் திகதி அமீர் அலி அலைபேசியில் தொடர்பு கொண்டார். பல விடயங்களையும் கதைத்தோம். கவிதை பற்றிக் கேட்டார். இந்தச் சாம்பார் ரசம் எனக்குப் புளித்து விட்டதைச் சொன்னேன். விமர்சியுங்கள் என்று சொன்னார். ஒரு கொத்து ரொட்டி போட்டு விடவா என்று கேட்டேன். ‘தாராளமாக’ என்று சொல்லி அனுமதி வழங்கினார்.
