அல் அஸ_மத் எழுதிய
அறுவடைக் கனவுகள்
இலக்கியமானதும் ஆவணமானதுமான நாவல்
2010ம் ஆண்டு தமிழ் இலக்கிய உலகுக்குக் கிடைத்த நல்ல நூல்களுள் அல் அஸ_மத் அவர்கள் எழுதிய ‘அறுவடைக் கனவுகள்’ நாவலும் ஒன்று. இன்னும் ஒரு வார்த்தையில் சொல்வதானால் அண்மையில் தமிழில் வெளி வந்த சிறந்த நாவல்களுள் இதுவும் ஒன்று.
ஒரு கவிஞனாக அறிமுகமாகி கவிதைத் துறையில் பெருவிருட்சமாகிப் பரந்து நிற்பது போலவே சிறுகதைத் துறையிலும் நாவல் எழுத்திலும் அவர் ஓர் அசைக்க முடியாத இடத்தைக் கொண்டிருக்கிறார். அறுவடைக் கனவுகள், அமார்க்க வாசகம், சுடுகந்தை ஆகிய மூன்று நால்களை அவர் எழுதியுள்ளார். அவரது முதல் நாவலான ‘அறுவடைக் கனவுகள்’ 1984ல் தினகரன் பத்திரிகையில் தொடர் நாவலாக வெளிவந்திருக்கிறது. 2010ல்தான் நூல் வடிவம் பெற்றிருக்கிறது.
2001ம் ஆண்டு அல் அஸ_மத் அவர்களின் வெள்ளை மரம் சிறுகதைத் தொகுதி அரச தேசிய சாஹித்ய விருதைப் பெற்றிருக்கிறது.
“பல சிறுகதைப் போட்டிகளில் அவருடைய படைப்புகள் முதற் பரிசு பெற்றுத் திகழ்ந்தன. குறிப்பாக 1993ல் ‘கலை ஒளி’ முத்தையா பிள்ளை நினைவுச் சிறுகதைப் போட்டியில் முதற் பரிசு பெற்றுப் புதுதில்லி ‘கதா’ அமைப்புக்காக ‘சார்க்’ நாடுகளின் அமைப்பு வரை சென்று ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புப் பெற்ற ‘விரக்தி’ என்ற கதையையும் வீரகேசரி தனது பவள விழா ஆண்டு நிறைவுக்காக நடாத்திய சிறுகதைப் போட்டியில் முதற் பரிசு பெற்ற ‘நிலத் தாய்’ கதையையும் குறிப்பிடலாம்” என்று இந்நாவலுக்கான அணிந்துரையில் நமது முன்னோடிகளில் ஒருவரான தெளிவத்தை ஜோஸப் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
மிக அண்மையில் நண்பர் மேமன் கவி முகப்புத்தகத்தில் முதுகு சொறியும் தடி பற்றிய ஒரு கவிதையைப் பதிவிட்டிருந்தார். அதுபற்றி இடம் பெற்ற இரண்டு பின்னூட்டங்கள் என் கவனத்தைக் கவர்ந்தன. அதில் ஒன்று தேவராசா முகுந்தனுடையது.
“அல் அஸ_மத் ‘முதுகைக் கொஞ்சம் சொறிந்து விடுங்கோ’ என்ற சிறுகதையை எழுதி ‘திசை’ சிறுகதைப் போட்டியில் (1989) இரண்டாம் பரிசு பெற்றதாக இலேசான ஞாபகம்” என்று சொல்கிறார்.
“திசையில் 22.09.89 மற்றும் 29.09.89 ஆகிய திகதிகளில் வெளியான அல் அஸ_மத் அவர்களின் சிறுகதையின் சரியான பெயர் ‘முதுகச் சொறியுங்கோ’ என்பதாகும். இருப்பினும் உங்கள் நினைவாற்றலைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை” என்று சின்னராசா விமலன் தகவலைத் தெளிவு படுத்தி மற்றொரு குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தப் பின்னூட்டங்களை இட்ட முகுந்தனும் விமலனும் இக் கதை வெளிவந்த காலத்தில் சற்றேறக் குறைய 20 வயதுக்குட்பட்டவர்களாக இருந்திருக்கக் கூடும். அவர்களது நினைவாற்றலை நாம் பாராட்டும் அதே சமயம் இளவயதில் அவர்களால் படிக்கப்பட்ட ஒரு கதை இன்னும் இவர்களின் மனதில் பதிந்திருக்கிறது என்றால் அதற்கு அல் அஸ_மத் அவர்களின் எழுத்தின் வலிமையும் ஒரு காரணம் என்பதை நாம் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்.