Thursday, February 2, 2012

காகமும் வடையும் - ஒரு புதிய கதை!


01


முன்னொரு காலத்தில் பாடசாலைக் கட்டடத்துடன் இணைந்த பாதையோரத்தில் உள்ள பென்னம்பெரிய ஆல மர நிழலின் கீழ் பாட்டி வடை சுட்டுக் கொண்டிருந்தாள்.

இடைவேளைக்கு முன்னர் அவசர அவசரமாக வந்த ஒரு மாணவனுக்கு வடை கொடுத்துப் பணம் பெறுவதில் பாட்டி கவனம் செலுத்திய கெப்பில் மரத்தின் மீதிருந்த காகம் சட்டெனக் கீழ் நோக்கிப் பறந்து வந்து ஒரு வடையை லபக்கிக் கொண்டு மரக் கிளைக்குச் சென்றது.

கோபமும் ஆத்திரமும் நெருப்பாய்ப் பொங்க மரக்கிளையில் தனது வடையுடன் அமர்ந்திருந்த காகத்தைப் பார்த்தாள். கிழவியின் சாபத்தால் தான் பொசுங்கி விடுவேனோ என்ற பயத்தில் கிராமத்தை அண்மியிருந்த காட்டுப் பகுதியை நோக்கிக் காகம் பறந்து சென்றது.

அடிக்கடி இவ்வாறு காகங்கள் வடைகளைத் தந்திரமாக அபகரித்துச் செல்வதால் பாட்டி பெரிதும் கவலையுற்றிருந்தாள்.

காட்டுக்குள் மரக் கிளையில் அமர்ந்திருந்த காகம் நரிகளைக் காணவில்லை. ஆனால் காவல்துறையைச் சேர்ந்த இருவர் அது அமர்ந்திருந்த மரத்தை நோக்கி வருவதைக் கண்டது. அவர்களில் ஒருவர் தனது தோளில் கிடந்த துப்பாக்கியைக் கையில் எடுத்த போது அவர் தன்னைச் சுடப் போகிறார் என்ற பயத்தில் கால்களால் பற்றியிருந்த வடையை விட்டு விட்டு எழுந்து பறந்தது. வடை கீழே விழுந்தது.

மரத்துக்குக் கீழே வந்த காவல் துறையினர் கண்களில் பட்டது வடை. இருவரும் ஆளையாள் ஆச்சரியத்துடன் முகத்தைப் பார்த்துக் கொண்டனர். அவர்களில் ஒருவர் வடையை எடுத்து எல்லாப் புறங்களையும் பார்த்தார்.

“இது இப்போதுதான் சுட்ட வடை போலத் தெரிகிறது...”

என்று சொன்னபடி வடையில் முழுசாக இருந்த ஒரு பருப்பை நகத்தால் கிண்டி வாய்க்குள் போட்டு மென்றார். மற்றவர் அவரது செய்கையைப் பார்த்துச் சிரித்தார். அந்த வடையை ஒரு தாள் துண்டில் சுற்றியெடுத்துக் கொண்டு இருவரும் நடக்கத் தொடங்கினார்கள்.

காவல் நிலையப் பொறுப்பதிகாரி முன் வடையை வைத்து விடயத்தைச் சொன்னதும் பொறுப்பதிகாரி நிமிர்ந்து உட்கார்ந்தார். சரையைப் பிரித்து வடையைக் கையிலெடுத்துப் பார்த்தார். அதில் இரண்டு இடங்களில் சுரண்டப்பட்டிருப்பதை அவதானித்து விட்டு அவர்கள் இருவரையும் பார்த்துப் புன்னகைத்தார்.

இந்த ஊரில் வடை எங்கெல்லாம் சுடப்படுகிறது என்று உடனடியாக விசாரிக்குமாறும் கடந்த ஐந்து மணி நேரத்துக்குள் வடை வாங்கியவர்கள் பற்றி விபரம் சேகரிக்குமாறும் அக்காவலர்கள் இருவருக்கும் உத்தரவிட்டார் பொறுப்பதிகாரி.

02.

ஏதோ ஒரு தேவைக்காக காரியாலயத்தை விட்டு வெளியேறினார் பொறுப்பதிகாரி. அவர் வெளியேறிய ஐந்தாவது நிமிடத்தில் பாடசாலையிலிருந்து வந்த அவரது மகன் அப்பாவின் காரியாலயத்துக்குள் நுழைந்தான். அப்பாவின் மேசை மேல் இருந்த வடையைக் கண்ட அவன் அதை எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தான்.

தாம் பொறுக்கி வந்த வடையைப் போன்ற வடைகளைப் பாடசாலையருகில் வியாபாரம் செய்யும் கிழவி சுடுவதாகத் துப்பறிந்து வந்து பொறுப்பதிகாரியிடம் தகவல் கொடுத்தனர் காவலர்கள். அப்போதுதான் பொறுப்பதிகாரிக்குத் தனது மேசை மேல் இருந்த வடையின் ஞாபகம் வந்தது. வடையை எடுத்தது யார் என்று அவர் சத்தமிட்ட போது, “உங்களது மகன் வடையொன்றைச் சாப்பிட்டுக் கொண்டிருந்ததைக் கண்டேன்” என்று தயங்கித் தயங்கி ஒரு பெண் காவலர் அவரிடம் சொன்னாள்.

சற்று யோசித்துக் கொண்டிருந்த பொறுப்பதிகாரி நீதிமன்றுக்குச் செல்லும் சார்ஜன்டை அழைத்தார்.

நாளைக்கு நீதி மன்றுக்குச் செல்லும் போது சைவக் கடையில் ஒரு வடை வாங்கிப் பொதி செய்து கொள்ளுமாறும் வடை சுடும் கிழவியை நீதி மன்றுக்கு சாட்சி சொல்ல அழைத்து வருமாறும் பணித்தார்.

03.

நீதிமன்றுக்கு வரும் வழிநெடுகிலும் காவலர் வாகனத்தில் இருந்த கிழவி புலம்பிக் கொண்டே வந்தாள். தான் வடை சுட்டு வியாபாரம் செய்யவில்லையெனில் தனக்கு அன்றைக்குச் சாப்பாடே இல்லையென்றாள். பேசாமல் வருமாறு காவலர்கள் அவளை அதட்டிக் கொண்டே வந்தனர்.

04.

“வழக்கு இல. என். ஓ. 45098.... !”

நீதிமன்ற முதலி கழுத்து நரம்பு புடைக்கச் சத்தமிட்டு அழைத்தான்.

சார்ஜன்ட் எழுந்தார்... கிழவியை அழைத்துச் சாட்சிக் கூண்டருகே நிறுத்தி விட்டு நீதிபதியைப் பார்த்துப் பேசத் தொடங்கினார்...

“சுவாமி... ஆளை இன்னும் பிடிக்க முடியவில்லை... ஆனால் நேற்றுக் காட்டுக்குள் ஒரு வடை கிடைத்தது. அந்த வடையைச் சுடும் கிழவி இவள்தான். கள்ளச் சாராயத்தோடு சம்பந்தப்பட்டவர்கள்தாம் காட்டுக்குள் வடையைக் கொண்டு சென்றிருக்க வேண்டும். எனவே வடை வாங்குவோரைக் கண்காணித்துத்தான் ஆளைப் பிடிக்க வேண்டும். அதற்கு இன்னும் அவகாசம் தேவை...!”

“ஏற்கனவே நீங்கள் கேட்ட அவகாசம் இன்றோடு முடிந்து விட்டதல்லவா...?”

- நீதிபதி கேட்டார்.

சார்ஜன்ட் அமைதிகாத்தார். கையில் வடைப் பொதி இருந்தது.

“இந்த வடையை இக்கிழவிதான் சுட்டாள் என்பதை ஏற்றுக் கொள்கிறாளா...?”

- நீதிபதி கேட்டார்.

சார்ஜன்ட் தன் கையிலிருந்த பொதியை அவசர அவசரமாகப் பிரித்துக் கிழவியின் முன்னால் பிடித்தபடி கேட்டார்:-

“இது நீ சுட்ட வடைதானே?”

கிழவி முகத்தை நீட்டி எட்டிப் பார்த்துவிட்டுச் சொன்னாள்:-

“இல்லை! நான் உளுந்து வடை சுடுவதில்லை!”


இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

7 comments:

dsdgsdg said...

Modern vadai story nalla iruku..kattayam arangetra vendum.

Enathu valai

Lareena said...

:)

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல கதை ! நன்றி சார் !

AH said...

:) :)

RoshaNi said...

puthisaaththaan irukku!

தளவாடி said...

வட போச்சே ...அவ்வ் ...
ஒரு சிறிய வடைக்கு இந்த அக்க போரா??

Anonymous said...

இந்த காவல் துரயைக்கண்டு நான் வியக்கன்