Friday, June 8, 2012

பதறிச் சிதறுதல்




நண்பர்களான இரண்டு இமாம்கள் (வழிகாட்டத்தக்க அறிஞர்கள்) ஓரிடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் அரசினால் நியமிக்கப்பட்ட நீதிபதியாவார்.

அப்போது தனது கண்ணொன்றைப் பொத்திப் பிடித்தபடி அவ்விடத் துக்கு ஒரு குடியானவன் வேகமாக வந்து சேர்ந்தான். கை விரல்களு டாக இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. நீதிபதியைப் பார்த்து ஒரு நபரின் பெயரைக் குறிப்பிட்டு அவன்; தனது கண்களில் ஒன்றைக் குத்திக் குருடாக்கி விட்டதாக முறைப்பாடு செய்தான். நீதிபதி முறைப் பாடு செய்தவனை விசாரிக்கத் தொடங்கினார். விசாரணை முடிந்த பின் நீதிபதி நிமிர்ந்து உட்கார்ந்தார். தீர்ப்பை வழங்கி விடுவாரோ என்ற எண்ணத்தில் நண்பரான இமாம், நீதிபதியைச் சைகையால் அமைதிப் படுத்தினார்.

பின்னர் ‘நீங்கள் இவனுடைய கண்ணைக் குத்தியவனை உங்கள் கண்களால் காணாமல் தீர்ப்பை வழங்கி விட வேண்டாம். ஏனெனில் ஒரு வேளை அவனுடைய இரண்டு கண்களையும் இவன் குருடாக்கியிருக்கவும் கூடுமல்லவா’ என்று சொன்னார்.

ஒருவர் பற்றி இன்னொருவர் சொல்ல அதைக் கொண்டு ஒரு தலைப்பட்சமாகக் குற்றப் பத்திரிகை வாசிக்கும் சந்தர்ப்பங்களில் நினைவை விட்டு அகலாத இந்த இஸ்லாமிய வரலாற்றுச் சம்பவத்தை நான் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வது வழக்கம். ஒருவர் சம்பந்த மாக மற்றொரு நபர் சொல்லும் விதத்தை நம்பி சில வேளைகளில் அவசரமான முடிவுகளை நாம் எடுத்து விடுகிறோம். அது பின்னர் தவறான முடிவு என்பது தெரிய வரும்போது மனது குமைந்து போகிறது.

உண்மைக்குண்மையான நிலைமை என்ன என்பது சிலவேளை ஒரு சில மணித்துளிகளிலோ சில நாட்களிலோ மாதங்களிலோ ஏன் வருடங்கள் கழித்தோதான் தெரிய வருகிறது. நிகழ்வுகளும் சம்பவங்களும் சாதரணமானவையாக அல்லது பாரதூரமானவையாக இருக்கலாம். ஆனால் நியாயம் புரியவருகிற போது மன உறுத்தல் ஆரம்பமாகி விடுகிறது. அப்போது உறுத்தும் மனச்சாட்சியை அமைதிப்படுத்த நம்மை நாமே திட்டிக் கொள்கிறோம். நாம் பெருந்தன்மை உள்ளவர்களாக இருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறான அனுபவம் நம்மில் அநேகமாக எல்லோ ருக்கும் ஆகக் குறைந்தது ஒரு முறையாவது நிகழ்ந்திருக்கும்.  பின்வரும் சம்பவத் தைப் படியுங்கள்.



ரயில் மெதுவாக நகர ஆரம்பித்தது. ரயில் பெட்டிகள் முழுவதும் பல்வேறு வயது கொண்ட மனிதர்களால் நிறைந்து வழிந்தது. அவர்களில் அநேகர; வேலைக்குச் செல்லும் ஆண்களும் பெண்களும் பாடசாலை மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ மாணவிகளுமாவர். ரயிலின் யன்னலோர இருக்கைகள் கிடைப்பது மகிழ்ச்சி நிறைந்த பயணத்தை உறுதிப்படுத்தும் விடயம். அந்தப் பெட்டியின் ஒரு யன்னலோர இருக்கைகளில் வயது முதிர்ந்த தந்தை ஒருவரும் முப்பது வயது மதிக்கத் தக்க அவரது மகனும் அமர்ந்திருந் தனர்.

ரயில் நகரத் தொடங்கியதும் அப்பெரியவரின் மகன் யன்னலுக்கு வெளியே தெரிந்த காட்சிகளில் லயித்து உற்சாகங் கொள்ளத் தொடங்கினான். “அப்பா, வெளியே தெரியும் பச்சைப் புற்களும் மரம் செடி கொடிகளும் எவ்வளவு அழகானவையாக இருக்கின்றன என்று பாருங்கள்...” என்று சொன்னான்.

முப்பது வயது தாண்டிய மகன் அப்பாவிடம் பேசுகின்ற வார்த்தைகள் அந்த ரயில் பெட்டியில் இருந்தவர்களது கவனத்தைக் கவர்ந்தது. அவனைப் பார்த்தால் ஒன்றும் மூளை வளர்ச்சி குன்றிய வனாகத் தெரியவில்லை யாதலால் சூழ இருந்தவர்கள் தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டார்கள். சிலரது உதடுகளில் ஒரு கிண்டல் சிரிப்புத் தோன்றி மறைந்தது.

சற்றுத் தள்ளி மனைவியுடன் அமர்ந்திருந்த அனூப் ‘இவன் லூசு மாதிரிக் கதைக்கிறான் பார்’ என்று தன் மனைவியின் காதுகளுக்குள் குசுகுசுத்தான். திடீரென மழை கொட்ட ஆரம்பித்தது. திறந்திருந்த யன்னலூடாக மழைத்துளிகள் பயணிகளிலும் தெறித்தன. முதியவரைப் பார்த்து அவரது முப்பது வயது மகன், “அப்பா பாருங்கள்... மழை பெய்வது எவ்வளவு அழகாக இருக்கிறது...” என்று சொன்னான். அனூப்பின் மனைவியின்; புதிய ஆடையில் மழைத்துளி தெறித்ததால் அவள் எரிச்சலுற்றிருந்தாள். அனூப் கோபத்துடன் அப்பெரியவரைப் பார்த்து, “உன்னுடைய மகன் சரியான உணர்வில்லாதவனாக இருந்தால் அவனை உடனடியாகப் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேர்த்து விடு;. இப்படிப் பொது இடங்களில் பயணிகளுக்குத் தொந்தரவு தருவது நல்லதல்ல” என்று சொன்னான்.

அப்பெரியவர; சற்றுத் தயங்கியவாறு தாழ்ந்த குரலில் பேசினார். “நாங்கள் இப்போது வைத்தியசாலையிலிருந்துதான் வருகிறோம். எனது மகனை இன்று காலைதான் அங்கிருந்து வெளியேற அனுமதித்தார்கள். அவன் சிறு வயதிலேயே பார்வை இழந்தவன். இருவாரங்களுக்கு முன்னர்தான் அவனுக்கு மீண்டும் பார்வை கிடைத்தது. மழையும் இயற்கையும் இந்த வயதில் அவனது கண்களுக் கும் உணர்வுக்கும் புதியவை.. உங்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக் காக மன்னித்துக் கொள்ளுங்கள்.”

இந்தியாவில் நடந்ததாகத் தெரிவிக்கப்படும் இந்தச் சம்பவம் ஒரு படிப்பினையைத் தருவதாக இருந்தால் ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன். இங்கு சொல்லப்பட்ட எவற்றிலும் ஏதுமில்லை என்பவர்கள் தங்கள் தங்கள் வேத நூலை எடுத்து அரை மணி நேரம் சத்தமாகப் படிக்கக் கோருகிறேன்.

( “தீர்க்க வர்ணம்” என்ற எனது நூலிலிருந்து ஒரு பத்தி)

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: