Monday, June 4, 2012

‘யாத்ரா’ கவிதை இதழோடு ஒரு யாத்திரை!


இணைத் தலைமை வகித்த காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் மற்றும் கவிஞர் சோ.பத்மநாதன்

2000 ம் ஆண்டு ஜனவரியில் ‘யாத்ரா’ முதலாவது இதழ் வெளிவந்தது. கவிதைகளுக்கான இதழாகப் புத்தாயிரத்தில் வெளிவந்த தமிழ்ச் சஞ்சிகை இது. கவிதை இதழாக இதுவரை 19 இதழ்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இவ்வாண்டு அதாவது 2012 ஜனவரியிலிருந்து அது கலை, இலக்கிய இதழாக வெளிவர ஆரம்பித்திருக்கிறது.

இலங்கையில் தமிழில் வெளிவந்த கவிதைச் சஞ்சிகைகளின் ஆயுட்காலம் மிக மிகக் குறைவானது என்பதை நமது தமிழ் இலக்கியப் பரப்பு நன்கறியும். நான் அறிந்த வரை கவிதைக் கையேடாகச் சாய்ந்தருதிலிருந்து என்.ஏ. தீரன் - ஆர;.எம். நௌஷாத்தை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘தூது’ - 16 இதழ்கள் வெளிவந்தன. தற்போது கவிதைக் கையேடாகத் திருகோணமலையிலிருந்து  எஸ்.ஆர். தனபாலசிங்கத்தை ஆசிரியராகக் கொண்டு ‘நீங்களும் எழுதலாம்’, 22 இதழ்கள் வெளிவந்துள்ளன. ஆனால் ஒரு சஞ்சிகை என்ற அளவில் ‘யாத்ரா’ மாத்திரமே 19 இதழ்களைத் தொட்டிருக்கிறது என்று கருதுகிறேன்.

‘யாத்ரா’, ஒரு கால ஒழுங்கில் வெளிவந்ததில்லை. தைப்பூசம், பொங்கல், சித்திரைத் திருநாள், நோன்புப் பெருநாள், ஹஜ்ஜூப் பெருநாள், நபிகளார் பிறந்த தினம், கிறிஸ்மஸ், மற்றும் சர்வதேச விசேட தினங்கள் பற்றி வெளிவரும் கலண்டர் கவிதைகளை ஏற்றுக் கொள்ளும் சஞ்சிகையால் வேண்டுமானால்  கால ஒழுங்கில் வெளிவர முடியுமே தவிர, நல்ல கவிதைகளைக் கொண்டு ஒரு கவிதைச் சஞ்சிகை கால ஒழுங்கில் வெளிவர முடியாது என்பது எனது முடிபு.

கவிதையானது தனக்குரிய மொழியையும் கவிஞனையும் தேடிக் கொண்டு எப்போது வெளிக் கிளம்பும் என்று யாராலும் சொல்ல முடியாது. அதற்காக ‘யாத்ரா’ சுமந்து வந்த கவிதைகள் யாவும் மிகவும் அற்புதமானவை என்று நான் மறுவார்த்தையில் சொல்வதாக அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது.

வசன கவிதை தோற்றம் பெற்ற பிறகு கவிதை எது, கவிதை அல்லாதது எது என்ற சிக்கலும் தோன்றி விட்டது. எனவே இந்த இடத்தில் - அற்புதமான கவிதை, அழகானய கவிதை, நல்ல கவிதை, கவிதை, சாதாரண கவிதை, பரவாயில்லைக் கவிதை என்று ரகம் பிரிக்க வேண்டிய கட்டாயம் வந்து விட்டது. ‘யாத்ரா’ சுமந்து வந்த கவிதைகளில் எழுபது வீதமானவை வாசகர்களினால் ‘நல்ல கவிதைகள்தாம்’ என்று ஏற்றுக் கொள்ளத் தக்கவையாக அமைந்திருந்தன என்பதில் நமக்கும் ஒரு திருப்தியும் ஆறுதலும் இருக்கிறது.

‘யாத்ரா’ தனது முதலாவது இதழிலிருந்தே மொழி பெயர்ப்புக் கவிதைகளைச் சேர்த்துக் கொண்டு வந்திருக்கிறது. அவற்றில் அநேகமானவை சிங்களக் கவிதைகள். அனுர கே. எதிரிசூரிய, அய்வோ விராந்த பெர;னாண்டோ, சந்தியா குமாரி லியனகே, விஜயரத்ன தேனுவர, என்.எம். நாளக்க இந்திக்க, செனிவிரத்ன கே. பண்டார, :தம்பகொட ஜினதாச, மஞ்சுள வெடிவர்த்தன, அனோமா ராஜகருண, தர்சினி ஜெயசேகர, என்.டீ. விதான ஆரச்சி, ஜகத் சந்தன அதிகாரி, சரத் விஜேசுந்தர, சமந்த பிரதீப், திலின வீரசிங்க, ஜயந்த தெனிபிட்டிய, தரங்க சம்பத் ஹேவகே, பியன்காரகே பந்துல ஜெயவீர, தனிகா அத்துக்கோறள, சமந்த இலேபெரும, ஜகத் சந்தன அதிகாரி, ஆரியபால ஆரச்சி. தர்மசிரி பெனடிக்ட், பிரகீத் குணதிலக்க, செனரத் கொண்ஸால் கோரள, விகும் ஜினேந்திர, குமார ஹெட்டியாரச்சி ஆகியோரது சிங்களக் கவிதைகளைக் கவிஞர் இப்னு அஸூமத் மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார்.

இவர்களில்; அனுர கே எதிரிசூரிய, அய்வோ விராந்த பெர்னாண்டோ ஆகியோர் தவிர வேறு யாருக்கும் ‘யாத்ரா’வில் தமது கவிதை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்த தகவல் தெரியாது. சஞ்சிகையின் ஆசிரியரான எனக்கும் அவர்களைத் தெரியாது. பொதுவாக சிங்கள இலக்கியப் பரப்பில் அறியப்பட்ட ஒரு சிலரைத் தவிர, அநேகர் புதியவர்கள். இப்னு அஸூமத், கவிதை எழுதியவர் புதியவரா பழையவரா பெயர் பெற்றவரா இல்லையா என்ற வேலிகளைச் சட்டை பண்ணாமல் பத்திரிகைகளில் சஞ்சிகைகளில் வெளிவரும் நல்ல சிங்களக் கவிதைகளைத் தேர்ந்து மொழிபெயர்த்துத் தந்துள்ளார். ‘யாத்ரா’ முதலாவது இதழில் வெளிவந்த கவிதையை யார் எழுதினார்கள் என்ற விபரம் இல்லை. முல்லைத்தீவுச் சமரில் இறந்து கிடந்த ஒரு பெண் போராளியின் உடலைக் கண்டு அரச படை வீரன் ஒருவனுக்கு எழுந்த உணர்வே கவிதையாகியிருக்கிறது.

:கோமோ ஜோ - சீனா, குளோர்டியா லார்ஸ் - எல்சல்வடோர், ஸீரா அன்டெஸ் - கியூபா, ஹாரிஸ் ஹாலிக் - பாக்கிஸ்தான், ஜோஸே உடோவிச் - சுலோவேனியா, கிறிகோர் விட்டெஸ் - குரோஷியா, லால்சிங்டில் - பஞ்சாபி, ம்தேஜ் ;போர் - சுலேவேனியா, யொவான் டுசிச் - சேர;பியா, மிலாயே கொனஸ்கி - மஸிடோனியா, கூரீதத்தா மற்றும் மஹ்மூது தர்வேஸ், நிஸார் கப்பானி ஆகியோரின் கவிதைகளைப் பேராசிரியர் சி. சிவசேகரம் மொழிபெயர்த்துத் தந்துள்ளார். இவை தவிர தனது கவிதைகள் மூலமும் அவர் பெரிதும் பங்களித்துமுள்ளார்.

அத்னான் அலி ரிழா, ஹாமித் அப்துர் ரஹ்மான், அப்துர்ரஹ்மான் பர்ஹானா, அப்துர் ரஸ்ஸாக் ஹூஸைன் ஆகியோரது கவிதைகள் அறபு மொழியிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டுப் பிரசுரமானவை. ஏ.சி,ஏ. மஸாஹிர் இவற்றை மொழிபெயர்த்து வழங்கினார;. ஃபைஸ் அகமட் ஃபைஸ், ஆகா ஷாஹித் அலி, அலி சர்தார் ஜஃப்ரி மற்றும் பாரசீகக் கவிஞர்களான நிமாயூஷிஜ், மெஹ்தி அஹ்வான் சேல்ஸ், லீஸா ஸூஹைர் ஆகியோரது கவிதைகளைப் பண்ணாமத்துக் கவிராயரும் பென் ஒக்ரி, ஸைத் ஷாகிர் அல் ஜிஸி, கே.எம். ஸைதா ஆகியோரது கவிதைகளை எம்.கே.எம். ஷகீபும் மொழிபெயர்த்திருக்கிறார்கள். றீஸன் றோல் என்ற தமது நண்பரான ஸ்பானியக் கவிஞரின் கவிதைகள் சிலவற்றை கவிஞர் ஏ. இக்பால் அவர்களும் அம்ரிதா ப்ரீதம் எழுதிய கவிதையொன்றை கெக்கிராவ ஸூலைஹாவும் மொழிபெயர்த்துள்ளனர்.

இவற்றுடன் யமுனா ராஜேந்திரன் மொழிபெயர்த்த பாக்கிஸ்தான் பெண் கவிஞர் கிஷ்வர; நஹீத், இன்குலாப் மொழிபெயர்த்த சுபாஷ் முக்யோபாத்தியாய், ஜலீஸ் மொழிபெயர்த்த இஸ்ரேலியக் கவிஞர் ஏலி ரெண்டான் ஆகியோரது கவிதைகளும் ‘யாத்ரா’வில் இடம் பெற்றுள்ளன.

‘யாத்ரா’ வில் இடம் பெற்று வந்த மற்றொரு முக்கிய அம்சம் படைப்பாளிகள் அறிமுகம். அவரவர் ஈடுபாட்டுக்கும் நமக்குக் கிடைத்த தகவல்களுக்கும் இயைபாக கவிஞர்கள் பற்றிய தகவல்கள் கட்டுரைகளாகவும் குறிப்புகளாகவும் இடம்பெற்று வந்துள்ளன. புரட்சிக் கமால் சாலிஹ், அண்ணல், எம்.சி.எம். சுபைர், அப்துல் காதர் லெப்பை, அலி சர்தார் ஜப்ரி, ஆ.மு ஷரிபுத்தீன் புலவர், முகம்மது காஸிம் புலவர், பொலிஸ் அதிகாரியாகக் கடமையாற்றிய கவிஞர் ஆறுமுகம், ஆகா ஷாஹித் அலி, ஜின்னாஹ் ஷரிபுத்தீன், இப்னு அஸூமத், என்.ஏ.தீரன், என். நஜ்முல் ஹூஸைன், அக்கரை மாணிக்கம், ஏ.எம்.எம். அலி, வி.ஏ.ஜூனைத், மஹ்மூது தர;வேஷ், மெஹ்தி அஹ்வான் சேல்ஸ், கவிஞர் அபூபக்கர், கலையன்பன் ரபீக், தவ்பீக் ரபாத், காத்தான்குடி பௌஸ், ஷார்ல் போதலயர், நற்பிட்டிமுளை பளீல், இர்ஷாத் கமால்தீன், கிண்ணியா அமீர் அலி, சு.வில்வரத்தினம், கைஃபி அஸ்மி, மருதூர் ஏ மஜீத் ஆகியோர் 19 இதழ்களுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

அன்பு ஜவஹர்ஷா, பாவலர் பஸீல் காரியப்பர், பண்ணாமத்துக் கவிராயர், அல் அஸூமத், மு. சடாட்சரன், திக்குவல்லைக் கமால், அன்பு முகையதீன், மருதமைந்தன், தாஸிம் அகமது, அனுர கே. எதிரிசூரிய, மருதூர;க் கனி, ஜவாத் மரைக்கார், இந்திய சாஹித்ய அகடமியின் செயலாளராகவிருந்த மலையாளக் கவிஞர் பேரா. கே. சச்சிதானந்தன் ஆகியோரின் செவ்விகளும் இடம்பெற்றுள்ளன.

கவிதை இலக்கியம் தொடர்பான கட்டுரைகளும் ‘யாத்ரா’வில் இடம்பெற்று வந்துள்ளன. ‘ஹைக்கூ கவிதை’ - இந்திரா பார;த்தசாரதி, ‘தமிழ்க் கவிதை - நேற்றும் இன்றும் இனியும்’ - செ. யோகநாதன், ‘பங்கரிலிருந்து பல்கலைக் கழகம் வரை’ - சமுத்ர வெத்தசிங்க (தமிழில் - இப்னு அஸூமத்), ‘கவிதை’ - ஏ. இக்பால், ‘குறும்பா’ - அல் அஸூமத், ‘புதுக்கவிதையில் இஸ்லாமிய புராணவியல் படிமங்கள்’ - எம்.எச்.எம். ஷம்ஸ், ‘ஒலிநயமும் திறனாய்வுக் கொள்கைகளும்’ - கே.எஸ். சிவகுமாரன், ‘சுபத்திரன் கவிதைகள் - ஓர் அறிமுகக் குறிப்பு’ - லெனின் மதிவானம், ‘குறிஞ்சித் தென்னவன் - ஓர் அறிமுகக் குறிப்பு’ - அந்தனி ஜீவா, ‘கவிதைத் திறனாய்வு’ - கே.எஸ். சிவகுமாரன், ‘சாதாரண பொதுமகனைப் பொருட்படுத்தாத போக்கால் கவிதை உலகம் இருண்டு வருகிறது’ - க. இரகுபரன், ‘இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் தோற்றுவாய்’ - மருதமுளை ஹஸன் மௌலானா, ‘சின்னச் சின்னச் சிங்களக் கவிதைகள்’ - இப்னு அஸூமத், ‘காசி ஆனந்தன் ஆக்கங்கள் ஒரு நோக்கு’ - (சுடர் சஞ்சிகை), ‘மறக்க முடியாத மக்கள் பாடகன் கோவிந்தசாமித் தேவர் - அந்தனி ஜீவா, ‘புவலர் மணி பெரியதம்பிப் பிள்ளையின் கவிதையியல் நோக்கு’ - ஹஸன் மௌலானா, ‘துரத்தப்பட்ட கவிஞன் அப்தாப் ஹூஸைன’; - (தமிழில் - அஷ்ரஃப் சிஹாப்தீன்), ‘சிறைப்பட்ட கவிதைகள் - பிரசன்ன அதிகாரி (தமிழில் - இப்னு அஸூமத்), ‘நிமாயூஷிஜூம் பாரசீகக் கவிதையும்’ - (தமிழில் - பண்ணாமத்துக் கவிராயர்), ‘மக்கள் கவிதைகளும் அவர் தம் வாழ்வும்’ - கொங்கிதொட்ட பிரேமரட்ன (தமிழில் - கவிஞர் ஆறுமுகம்), ‘பொரஸ்ட் - தோமஸ் இரட்டையர்கள்’ - எம்.பி. மத்மலுவ் (தமிழில் - மாஞ்சோலை ஏ.கே. ரஹ்மான்) ‘கவிதை மதிப்பீடு’ - நபீலா முக்தார் (தமிழில் - மாஞ்சோலை ஏ.கே. ரஹ்மான்) ‘இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க் கவிதைகள்’ - சிதம்பரப்பிள்ளை சிவகுமார், ‘கவிதைகள் , தீர்க்கதரிசிகள், அரசியல் - ரேச்சல் கல்வின் (தமிழில் - பண்ணாமத்துக் கவிராயர்) ‘தென்கிழக்கு முஸ்லிம் தேசத்தாரின் தூதுக் கவிகளில் காகம்’ - மருதூர் ஏ மஜீத், ‘இஸ்லாமிய தமிழ் இலக்கியம்’ - ஏ.எம். சமீம், ‘எம்.ஏ. நுஃமானின் நிலம் எனும் நல்லாள்’ - றமீஸ் அப்துல்லாஹ், ‘அறபுக் கவிதை - ஆன்மாவினுள் ஒரு துரிதப் பார்வை’ - காஸி அல்குஸைபி (தமிழில் - பண்ணாமத்துக் கவிராயர்). இவற்றுள் ஒரு சில கட்டுரைகள் இணையம் மற்றும் சஞ்சிகைகளிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டவை.

வ.அ.இராசரத்தினம் தமிழாக்கிய தூர்சீனாவின் பூவரசம்பூ, தீன் குறள், மைலாஞ்சி, எழுதாத உன் கவிதை, உயிர்த்தெழல், இருத்தலுக்கான அழைப்பு, நீ வரும் காலைப் பொழுது, வேட்டைக்குப் பின், அழகான இருட்டு, பண்டாரவன்னியன், தூண்டில் இரைகள், பூமிக்கடியில் வானம், ஆயிரத்தோராவது வேதனையின் காலை, எலும்புக்கூட்டின் வாக்குமூலம், திருநபி காவியம், ஓவியம் வரையாத தூரிகை, மீஸான் கட்டைகளின் மீள எழும் பாடல்கள் ஆகிய கவிதை நூல்கள் பற்றிய விமர்சனங்களும் நயக்குறிப்புகளும் இடம்பெற்றிருக்கிறன.

மேலே சொல்லப்பட்ட தகவல்களில் அதிக அளவில் முஸ்லிம் நபர்கள் சம்பந்தப்பட்டிருப்பதை அவதானிக்க முடியும். எனது நெஞ்சுக்கு நெருக்கமான எழுத்தாளரான ஒரு தமிழ் நண்பர் இது பற்றி ஒரு முறை என்னிடம் வினாத் தொடுத்தார். “நீங்கள் ஒரு பங்களிப்பை யாத்ராவுக்கு வழங்காமல் இந்த வினாவைத் தொடுப்பது நியாயமற்றது” என்று அவருக்கு நான் பதில் சொன்னேன்.




அரங்கில் “ஈழத்து நவீன கவிதைகளின் நிகழ்வெளி” என்ற தலைப்பில் கட்டுரை படித்த சி.ரமேஷ்

‘யாத்ரா’ கையில் கிடைத்ததும் தினகரன் வார மஞ்சரியில் ஒரு குறிப்பை எழுதி ‘யாத்ரா’வின் பயணத்தில் உற்சாகம் வழங்கி வந்த என் அன்புக்குரிய நண்பர் அருள் சத்தியநாதன், ‘யாத்ரா’வின் 14வது இதழ் வெளிவந்த பிறகு எழுதிய குறிப்பில், ‘யாத்ரா’வின் படைப்புக்கள் ‘முஸ்லிம்’, ‘இஸ்லாம்’ என ஒரு வட்டத்துக்குள் குவிந்து விடுவதாக ஓர் அபிப்பிராயத்தைத் தோற்றுவித்து வருகிறது’ என்று எழுதியிருந்தார;. உண்மையான கருத்துத்தான். அடுத்த இதழில் நான் என்பக்க நியாயத்தைப் பின்வருமாறு தெரிவித்திருந்தேன்.

“இந்தச் சஞ்சிகை முஸ்லிம் சமுதாயத்திலிருந்து வருகிறது. எனவே அதன் வாசம் சஞ்சிகையில் இருக்கவே செய்யும். அதற்காக மற்றவரை நாம் ஒதுக்கி விட்டோம் என்று அர்த்தமாகாது. அனைத்துத் தமிழ்க் கவிஞர்களது படைப்புக்களையும் மத, இன வேறுபாடுகளின்றி ஆவலுடன் எதிர்பார்த்தபடியேதான் இருக்கிறோம். குறிப்பாகச் சில தமிழ் நண்பர்களிடம் கெஞ்சாத குறையாக சில விடயங்களுக்கு ஒத்துழைப்பைக் கோரி வந்தோம். இன்ன இன்ன விடயங்களைச் செய்து தாருங்கள் என்று கேட்டு வந்துள்ளோம். அவர்கள் யாரிடமிருந்தும் எமக்கு ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. ஆனாலும் சிலர் யாத்ராவின் தொடர் வாசகர்களாகவும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவர்களாகவும் உள்ளார்கள் என்பது மகிழ்ச்சிக்குரியது. இதேவேளை, இஸ்லாம் அல்லது முஸ்லிம் என்ற அடையாளம் தெரிந்தாலே பலர் ஒதுங்கிக் கொள்கிறார்கள். அதாவது மற்றவரின் கலாசாரத்தையும் பண்பாட்டையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று பொருள்.”

அமரர் நீலாவணனின் பிரசுரமாகாத கவிதைகள் சிலவற்றை அவரது புதல்வர் எழில்வேந்தன் ‘யாத்ரா’வில் பிரசுரிக்க உவந்தளித்ததை இவ்விடத்தில் ஞாபகம் செய்தாகவேண்டும். அதே போல மஹாகவியின் ‘புள்ளியளவில் ஒரு பூச்சி”, எம்.ஏ. நுஃமானின் ‘தாத்தாமாரும் பேரர்களும்’ நெடுங்கவிதை ஆகியனவும் புதிய தலைமுறையின் தரிசனத்துக்காகவும் கவனத்துக்காகவும் யாத்ராவில் மீளப் பிரசுரிக்கப்பட்டன.

கவிதை இதழ்களாக வெளிவந்த 19 இதழ்களிலும் நான்காவது இதழ், முதலாம் ஆண்டு மலராக வெளிவந்தது. அதற்குப் பிறகு ஆண்டு மலர்கள் வெளியிடப்படவில்லை. ஆயினும் நான்கு சிறப்பிதழ்கள் வெளிவந்துள்ளன. எட்டாவது இதழ் 2002ம் ஆண்டு கொழும்பில் நடந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டையொட்டிச் சிறப்பிதழாக வெளிவந்தது. 14வது இதழ் ஃபைஸ் அஹமத் ஃபைஸ் சிறப்பிதழாகவும் 16வது இதழ் காஸி நஸ்ருல் இஸ்லாம் சிறப்பிதழாகவும் வெளியாயின. குறித்த கவிஞர்களைப் பற்றிய கட்டுரைகளும் அவர்களது கவிதைகளும் பண்ணாமத்துக் கவிராயர; அவர்களால் மொழிபெயர்த்து வழங்கப்பட்டன. 18வது இதழ் 2007ல் சென்னையில் நடந்த - வெளிநாட்டுப் பேராளர்கள் அலட்சியப்படுத்தப்பட்ட - அவமானப்படுத்தப்பட்ட - உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டுச் சிறப்பிதழாக வெளிவந்தது.

‘யாத்ரா’ சஞ்சிகையை அறிமுகப்படுத்தும் நோக்கில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் அறிமுக விழாக்கள் நடத்தப்பட்டன. தர்ஹா நகர், அக்கரைப் பற்று, மருதமுனை, கல்முனை, மாத்தளை, அனுராதபுரம் ஆகிய ஊர்களிலும் தமிழகத்தில் சென்னையிலும் டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் உதவியுடன் சங்கமம் வானொலி ஏற்பாட்டில் கலையன்பன் ரபீக்கின் அனுசரணையுடன் ஐக்கிய அரபு அமீரகத்திலும் நடத்தப்பட்டன. இதன் விபரங்களும் படங்களும் யாத்ராவில் அவ்வப்போது வெளியாகியுள்ளன.

‘யாத்ரா’, சர்வதேச கவிதைப் போட்டியொன்றை நடத்தியது. இதன் பரிசளிப்பு விழா 2004ல் கொழும்பு டவர் மண்டபத்தில் வெகு விமரிசையாக நடந்தேறியது. தமிழகத்தைச் சேர்ந்த மா.காளிதாஸ் எழுதிய ‘கதவுகள்,பூட்டுகள், சாவிகள்’ என்ற கவிதை முதலாவது பரிசுக்குரிய கவிதையாகவும் பஹீமா ஜஹான் எழுதிய ‘பாதங்களில் இடறும் முற்றவெளி’ இரண்டாவது பரிசுக்குரிய கவிதையாகவும் பிரேமினி சபாரத்தினம் எழுதிய ‘வாழ்வை உணர்தல்’ என்ற கவிதை மூன்றாம் இடத்தையும் பெற்றிருந்தன. சிறப்புச் சான்றிதழ்களுக்குரிய கவிதைகளாக முல்லை முஸ்ரிபாவின் ‘உனதின் நான்’, தமிழகத்தைச் சேர்ந்த இரா தனிக்கொடியின் ‘உட்சுவர்’, புதுவை மாநிலத்தைச் சேர்ந்த ரா.ரஜினியின் ‘மௌனத்தின் சப்தங்கள்’, எம்.எம். விஜிலியின் ‘மணல்முகட்டு ரகசியங்கள’;, கமலினி சிவநாதனின் ‘தீர்ப்பு’, எஸ். பாஸ்கரனின் ‘பௌர்ணமிகளின் அமாவாசை’, சர்மிளா ஏ. ரஹீமின் ‘உயிரின் முடிச்சுகளில்’ ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டன.

“யாத்ரா” கால ஒழுங்கில் வெளிவராததைப் போலவே அதன் பக்கங்களும் முறையாக இல்லை. 1வது இதழ் 44 பக்கங்களிலும் 2வது இதழ் 46 பக்கங்களிலும் 3வது இதழ் 64 பக்கங்களிலும் 4வது இதழ் 120 பங்கங்களிலும் வெளியாகின. 5வது இதழ் 56 பக்கங்களுடனும் 6வது இதழ் 40 பக்கங்களுடனும் 7வது இதழ் 64 பக்கங்களுடனும் 8வது இதழ் 60 பக்கங்களுடனும் வெளியாகியுள்ளன. 9வது இதழ் முதல் 11வது இதழ் வரை 64 பக்கங்கள் கொண்டும் 12வது இதழ் முதல் 17வது இதழ் வரை 72 பக்கங்கள் கொண்டும் வெளியாகியுள்ளன. 18வது இதழ் 80 பக்கங்கள். 19வது இதழ் 32 பக்கங்கள்.


அரங்கில் “ஒரு நூற்றாண்டு கவிதைத் தொகுப்பு - பிரதி கிளப்பிய அலைகள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்திய கலாநிதி ஸ்ரீபிரசாந்தன்

2002ம் ஆண்டு சென்னை புதுக் கல்லூரியல் நடந்த ஒரு கூட்டத்தில் ‘யாத்ரா’ பற்றிக் கவிஞர் இன்குலாப் உரையாற்றினார். அவரிடம் 5வது 6வது 7வது இதழ்கள் மாத்திரமே வழங்கப்பட்டிருந்தன. “இணைக்கும் சக்தியாக, பல சமயங்களில் பிரிக்கும் சக்தியாக - சமாதானப்படுத்துகிற சக்தியாக, பலசமயங்களில் போராடுகின்ற சக்தியாக - மேன்மைப்படுத்துகின்ற சக்தியாக, பலசமயங்களில் கீழ்மைப்படுத்துகிற சக்தியாக - கவிதை இருந்து வருகிறது” என்று சொன்ன அவர், “அர்ப்பணிப்பு உணர்வோடு இதைச் செய்திருக்கிறீர்கள். அதற்காக இதனைப் பாராட்டுகின்றேன். இலங்கையில் வருகிற கவிதைகள் மட்டுமன்றி, உலக அளவில் அறியப்பட்ட கவிதைகளை மொழிபெயர்த்துத் தருகிறீர்கள்.  நல்ல கவிதைகளைக் கொண்டு வரவேண்டும் என்று நினைக்கிறீர்கள். உங்களையும் மீறிச் சில மோசமான கவிதைகளும் வந்திருக்கின்றன. இதிலுள்ள கவிதைகளைப் பார்க்கும் போது நல்ல கவிதைகள்தாம் உங்களது கோட்பாடாக இருக்க முடியும். யார் சொல்கிறார் என்பதைக் கவனிக்காமல் எப்படிச் சொல்கிறார் என்பதில் நீங்கள் கவனம் செலுத்துகிறீர்கள். இது வரவேற்கத்தக்க ஒரு பண்பு என்று நினைக்கிறேன். நீங்கள் புதுக்கவிதைகளைப் போடுகிறீர்கள். மரபுக் கவிதைக்கு அதற்குரிய இடத்தைத் தருகிறீர்கள். புதுக் கவிதை பற்றிய கட்டுரைகள் வருகின்றன. மரபுக் கவிதை குறித்த கட்டுரைகளும் நேர் காணல்களும் வருகின்றன. அப்போ எது முக்கியம்னா, மரபா புதுமையா என்பதல்ல, அது கவிதையா இல்லையா? - அதற்குரிய அழுத்தத்தைத் தருவதற்குரிய முயற்சியைத்தான் என்னால இதுல பார்க்க முடியுது” என்றார;.

2004ம் ஆண்டு நடந்த ‘யாத்ரா’ நடத்திய கவிதைப் போட்டிப் பரிசளிப்பு விழாவில் அதுவரை வெளிவந்த ‘யாத்ரா’ வின் பன்னிரண்டு இதழ்களையும் பற்றிக் கவிஞரும் ஒலிபரப்பாளரும் பத்திரிகையாளருமான நண்பர; சிதம்பரப்பிள்ளை சிவகுமார; உரை நிகழ்த்தினார;. அவர; சொன்னார;:-

“இந்தப் பன்னிரண்டு இதழ்களிலும் ‘யாத்ரா’, சுக்கான் கெட்டியாகப் பிடிக்கப்படாத படகு போல நின்று விடுமோ மூழ்கி விடுமோ என்ற பயத்தோடும் தத்தளிப்போடும் பயணம் செய்திருந்தாலும் பல அபூர்வத் துறைமுகங்களைச் சென்றடைந்திருக்கிறது. ‘யாத்ரா’வின் முயற்சியாக நாம் பின்வருவனவற்றைத் தொகுத்துக் கொள்ள முடியும்.

நல்ல கவிதைகளுடனான பரிச்சயத்தை ஏற்படுத்துதல், நல்ல கவிதைகள் எங்கிருந்து வந்தாலும் வரவேற்றல், இளையவர;களைக் கவிதையின்பால் ஊக்கப்படுத்துதல், கவி முன்னோடிகளை நினைவு கூர்தல், அயல் மொழி, பிற மொழிக் கவிதைகளைக் கொண்டு வந்து தமிழில் சேர்த்தல், காற்றைப் போலவோ கடவுளைப் போலவோ பிடிக்குள் சிக்காமல் எட்ட நின்று அழகு காட்டுகின்ற இந்தக் கவிதை என்ற மாயாஜாலத்தை அவரவர் அனுபவங்களினூடாகப் பகிந்து கொள்ள, விளங்கிக் கொள்ள இடங்கொடுத்தல், கவிதை நூல்களை அறிமுகப்படுத்தல், கவிதைசார்ந்த நிகழ்வுகளைப் பதிவு செய்தல், பேட்டிகள் மூலம் கவிதா ஆளுமைகளை வெளிக் கொண்டு வருதல்.”

‘யாத்ரா’ 12 இதழ்களளவில் வெளிவந்திருந்த நிலையில் முகம்மத் என்ற தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவ் விரிவுரையாளர் ரமீஸ் அப்துல்லாஹ்வின் வழிகாட்டலில் தனது கலைமாணிப் படிப்புக்கான ஆய்வாக யாத்ரா இதழ்களை ஆய்வு செய்திருந்தமை குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது. யாழ் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப் பட்ட ஆய்வுக்காகத் தம்பித்துரை விஜயசங்கர் ‘யாத்ரா’ சஞ்சிகைகளைத் தேர்ந்துள்ளார் என்பது மிக அண்மையில் எனக்குக் கிடைத்த மகிழ்ச்சியான ஊர்ஜிதமான செய்தியாகும்.

‘யாத்ரா’வின் இரண்டாவது இதழுக்குப் பிறகு, சஞ்சிகையை வடிவமைப்பதற்காக நானே கணினி கற்றுக் கொண்டேன். இன்று வரை ஆக்கங்கள் சேகரிப்பது, அதை தட்டச்சுச் செய்வது, வடிவமைப்பது, ட்ரேசிங் எடுப்பது, அச்சிலிருந்து வந்ததும் மடிப்பது, தாள்சுற்றி ஒட்டுவது, முத்திரை ஒட்டுவது, தபாலிடுவது- இவ்வளவு காரியங்களை நான் ஒருவனே செய்து வருகிறேன். ‘யாத்ரா’வின் வடிவமைப்புப் பற்றிப் பலர் விதந்து பேசியிருக்கிறார்கள். அது என்னை உற்சாகப்படுத்தியிருக்கிறது.

கடந்த 19 இதழ்களில் அவ்வப்போது முன்னூறு இதழ்களும் சில வேளை 500 இதழ்களும் அச்சாகியிருக்கின்றன. ஒவ்வொரு இதழிலும் சராசரி 100 இதழ்கள் பலருக்கும் இனாமாகவே அனுப்பி வைக்கப்பட்டு வந்தன. குறிப்பிட்ட சிலரிடமிருந்து மட்டுமே பணம் கிடைத்து வந்துள்ளது. டாக்டர் தாஸிம் அகமது அவ்வப்போது யாத்ராவின் வருகைக்காகப் பண உதவி புரிந்து வந்திருக்கிறார். அதே போல கவிஞர் நியாஸ் ஏ சமத், பொத்துவில் பைஸால் ஆகியோரை நான் குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும். முதலாவது இதழை நான் அச்சுக்குக் கொடுக்கும் போது அதற்கான செலவு 6000.00 ரூபாய். பின்னர் அது 20,000.00 வரை வந்தது. கணினி, இணையப் பயன்பாடு ஆகியவற்றுக்கான மின்சாரச் செலவு, அச்சுச் செலவு, முத்திரைச் செலவு என்று ஒரு மேலோட்டமான திருத்திய கணக்கைப் பார்த்தாலும் கூட எனது சொந்தப் பணத்தில் நான் மூன்று லட்சம் ரூபாய்களைச் செலவு செய்திருப்பேன்.

இலங்கையில் ஒரு சிறு சஞ்சிகையாளனின் அவஸ்தை பரிதாபத்திற்குரியது. இங்குள்ள அனைத்துச் சிறு சஞ்சிகை ஆசிரியர்களும் ஒன்று சேர்ந்து ஓரிடத்தில் கூடிப் பெருமூச்சு விட்டார்களெனில் ஒரு சூறாவளியோ சுனாமியோ உருவாகி விடக்கூடும். ஒவ்வொருவரிடத்தும் வாய்விட்டு வெளியே சொல்ல முடியாத பல செய்திகளும் சஞ்சலங்களும் ரகசியங்களும் வேதனைகளும் உள்ளன. தெரிந்து கொண்டே சூடிக்கொண்ட முட்கிரீடம் இது.

ஒத்துழைப்புக் கிடைக்காத போது ஆயாசமும் அலுப்பும் அடிக்கடி ஏற்பட்டதுண்டு. இதுவரை நான் செலவு செய்த மூன்று லட்சம் ரூபாய்களை எனது மூன்று பிள்ளைகளினதும் வங்கிக் கணக்கில் பிரித்துப் போட்டுவிட்டுப் பேசாமல் முடிந்ததை எழுதிக் கொண்டிருந்திருந்தால் இந்த மனச்சோர்வு ஏற்பட்டிருக்காது என்றும் நினைத்ததுண்டு.


சபையோரில் ஒரு பகுதியினர்

‘யாத்ராவின் இந்த இந்த இதழ்களை இனுப்பி வையுங்கள், இலங்கைக் கவிதைகளை ஆய்வு செய்கிறேன்’ என்று புதுவை மாநிலத்திருந்தோ “அண்ணா... இத்தனையாவது, இத்தனையாவது இதழ்களை உங்கள் மாஸ்டர் கொப்பியிலிருந்தாவது புகைப்படப் பிரதி எடுத்து அனுப்புங்கள்... நாளை வரும் இன்னாரிடம் பணம் வருகிறது” என்று இலங்கையின் ஏதோ ஒரு பிரதேசத்திலிருந்தோ - இருந்து விட்டு ஒரு தொலைபேசி அழைப்போ ஒரு கடிதமோ வந்து சேரும் பாருங்கள். அப்போதெல்லாம் நான் புகழ் மிக்க ‘யாத்ரா’வின் ஆசிரியனாக்கும் என்று ஒரு பெருமை பொங்கி வழியும். எல்லாக் கவலைகளும் அந்த நொடியில் கரைந்து போகும்.

சொல்ல முடிந்த ஒரேயொரு கவலையை இந்த வேளையில் நான் சொல்லியாக வேண்டும். பல கவிஞர்கள் பற்றிய அறிமுகக் குறிப்புக்கள் ‘யாத்ரா’வில் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றில் பலவற்றை நானே எழுதியிருக்கிறேன். இவர்களில் 99 வீதமானவர்கள் மற்றொரு கவிஞனைப் பற்றியோ அவனது நூலைப் பற்றியோ ஒரு சிறு குறிப்பைத்தானும் எழுதித்தராதது எனக்கு மிகவும் மனவேதனையையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது. அப்படி ஒருவர் மற்றொருவரை எழுத முடியுமாக இருந்தால் இலக்கியவாதிகளுக்கிடையில்hன நல்லுறவு ஓரளவுக்கு மேம்படும் என்பது எனது நம்பிக்கை.

மறக்க முடியாத சம்பவம் ஒன்று உண்டு. ‘யாத்ரா’ இதழ்கள் சிலவற்றை வெவ்வேறு நாடுகளில் இருக்கும் நண்பர்களுக்குத் தபால் இடுவதற்காக ஒரு பிரதான தபாலகத்துக்குச் சென்றேன். உள்நாட்டுப் போர் உக்கிரமாக இருந்த நேரம் அது. கவுண்டரில் இருந்த பெண்மணியிடம் குறித்த நாடுகளுக்கான முத்திரைச் செலவுத் தொகையை விசாரித்தேன். யாத்ரா இதழொன்றை அசூசையுடன் கையில் எடுத்த அவர் “இது ஈயம் சஞ்சிகையா?” என்று பெரும்பான்மை மொழியில் கேட்டார;. “மிஸ் வார்த்தையைப் பிழையாகச் சொல்கிறீர்கள். ஈயம் அல்ல, சரியான சொல் ஈழம். ஆனால் இது ஈழம் சஞ்சிகை அல்ல, ‘யாத்ரா, சஞ்சிகை என்றேன். ‘யாத்ரா’ சிங்களச் சொல் அல்லவா? என்று கேட்டார். ‘இந்தச் சொல் சிங்களத்துக்கு முற்பட்ட மொழிகளிலும் பயன்பாட்டில் இருக்கிறது. அதற்குக் கொஞ்சம் படிக்க வேண்டும்’ என்றேன். எனது வார்த்தையில் இருந்த கேலியை உணர்ந்த அவர் அமைதியாகிவிட்டார். ‘யாத்ரா’ கவிதை இதழாக வெளிவந்த காலப்பகுதி  உள்நாட்டுப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலம் என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும்.

‘இந்தக் கட்டுரையில் ‘யாத்ரா’ இதழ்கள் 19திலும் கவிதைகளை எழுதியவர்கள் பெயர்ப்பட்டியலை நான் குறிப்பிடவில்லை. அது ஒரு நீண்ட பட்டியல் என்பதால் தவிர்த்திருக்கிறேன். தவிர, நான் குறிப்பிட்ட விபரங்களில் குறிப்பிடப்படவேண்டிய ஒரு சில தகவல்கள் விடுபட்டிருக்கவும் இடமுண்டு. அது திட்டமிட்டோ யாரையும் தவிர்க்க வேண்டுமென்றோ செய்யப்பட்டதல்ல.

‘யாத்ரா’ டிஸம்பர் 2008 உடன் தனது கவிதை யாத்ரையை முடித்துக் கொண்டு விட்டது. பொதுவான கலை, இலக்கியச் சஞ்சிகையாக இதை வெளிக் கொண்ர்வது என்று அறிவித்த போதுதான் அதன் தாக்கம் எத்தகைய வலிமையாக இருந்தது என்பது புரிய வந்தது. ஆனாலும் கூட, அதனைக் கவிதை இதழாகத் தொடர்ந்து நடத்துவதன் மூலம் கடந்த இதழ்களுக்குக் கிடைத்திருந்த மரியாதையை இழந்து விட நான் தயாராக இருக்கவில்லை. இந்த வேளை இந்தச் சஞ்சிகையை வெளிக்கொணர்வதில் என்னை உந்திக் கொண்டேயிருந்த கவிஞர் எஸ்.நளீமையும் உதவி ஆசிரியர்களாக இயங்கியவர்களான வாழைச்சேனை அமர் மற்றும் கடந்த வருடம் விபத்தொன்றில் அகாலத்தில் பிரிந்து சென்ற கவிஞர் ஏஜீஎம். ஸதக்கா ஆகியோரை நன்றியுடன் ஞாபகம் செய்கிறேன்.

ஒரு தமிழ்க் கவிதைச் சஞ்சிகையாக ‘யாத்ரா’ வெற்றி பெற்றிருக்கிறது என்பதற்கு, அதன் ஆசிரியரே அழைக்கப்பட்டு இந்தச் சர்வதேச  மாநாட்டின் கவிதை பற்றிய அரங்கொன்றில் அனுபவப் பகிர்வு கோரப்பட்டது ஒன்றே போதுமானதாகும் என்று நினைக்கிறேன். இந்த வித்தியாசக் கோணப் பார்வைக்கு வழிசெய்தமைக்காக அன்புத் தம்பி கலாநிதி ஸ்ரீபிரசாந்தனுக்கும் மாநாட்டு ஏற்பாட்டுக்குழுவுக்கும் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

2012 ஜனவரியிலிருந்து கவிஞர; நாச்சியாதீவு பர்வீன் மேற்கொண்ட முயற்சியின் காரணமாகவும் பெயர் சொல்ல விரும்பாத சில நல்லுள்ளங்களின் பொருளாதார உதவி கொண்டும் ‘யாத்ரா’, கலை, இலக்கியச் சஞ்சிகையாக வெளிவருகிறது. அது என்றைக்கும் கவிதைக்கான உரிய இடத்தை வழங்குவதற்குச் சித்தமாயிருக்கிறது என்று தெரிவித்துக் கொண்டு புகழ் பெற்ற பலஸ்தீனக் கவிஞன் மஹ்மூது தர்வேஸின் கவிதை வரிகளுடன் நிறைவு செய்கிறேன்.

“கவிதை -
வீட்டுக்கு வீடு
ஒரு விளக்கை எடுத்துச் செல்லவில்லையானால்
ஏழைகளுக்கு
அதன் அர்த்தம்
என்னவென்று விளங்கவில்லையானால்
அதை விட்டொழிப்பது உத்தமம்!”

(கொழும்புத் தமிழ்ச்சங்கம் நடத்திய சர்வதேச இலக்கிய மாநாட்டின் கவிதை அரங்கு - 3ல் 04.06.2012 அன்று வாசிக்கப்பட்ட கட்டுரை)

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

4 comments:

தேவமுகுந்தன் said...

யாத்ராவின் யாத்திரை தொடர வாழ்த்துகள். நானும் உங்கள் யாத்திரையில் இணைவேன்.

Lareena said...

// “இந்தப் பன்னிரண்டு இதழ்களிலும் ‘யாத்ரா’, சுக்கான் கெட்டியாகப் பிடிக்கப்படாத படகு போல நின்று விடுமோ மூழ்கி விடுமோ என்ற பயத்தோடும் தத்தளிப்போடும் பயணம் செய்திருந்தாலும் பல அபூர்வத் துறைமுகங்களைச் சென்றடைந்திருக்கிறது. ‘யாத்ரா’வின் முயற்சியாக நாம் பின்வருவனவற்றைத் தொகுத்துக் கொள்ள முடியும்.

நல்ல கவிதைகளுடனான பரிச்சயத்தை ஏற்படுத்துதல், நல்ல கவிதைகள் எங்கிருந்து வந்தாலும் வரவேற்றல், இளையவர;களைக் கவிதையின்பால் ஊக்கப்படுத்துதல், கவி முன்னோடிகளை நினைவு கூர்தல், அயல் மொழி, பிற மொழிக் கவிதைகளைக் கொண்டு வந்து தமிழில் சேர்த்தல், காற்றைப் போலவோ கடவுளைப் போலவோ பிடிக்குள் சிக்காமல் எட்ட நின்று அழகு காட்டுகின்ற இந்தக் கவிதை என்ற மாயாஜாலத்தை அவரவர் அனுபவங்களினூடாகப் பகிந்து கொள்ள, விளங்கிக் கொள்ள இடங்கொடுத்தல், கவிதை நூல்களை அறிமுகப்படுத்தல், கவிதைசார்ந்த நிகழ்வுகளைப் பதிவு செய்தல், பேட்டிகள் மூலம் கவிதா ஆளுமைகளை வெளிக் கொண்டு வருதல்.”//

சத்தியமான வரிகள்.

"யாத்ரா" கலை இலக்கிய இதழின் பயணம் என்றென்றும் காத்திரமானதாக, வெற்றிகரமானதாக அமைய அல்லாஹ் அருளட்டும்!

ரோஷான் ஏ.ஜிப்ரி said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
என்றும் அபிமானத்துடன் மதிப்பிற்குரிய ஆசிரியர்
அவர்கட்க்கு.
இது உங்களுக்கு முன்பொருநாள் பரீட்சயமான
ரோஷான் ஏ.ஜிப்ரி இடமிருந்து.
யாத்திராவின் மீள் வருகை சந்தோசமாக இருக்கிறது.
வாழ்த்தி வரவேற்கிறேன்.

நந்தினி மருதம் said...

மிக அருமையான பதிவு.
யாத்ராவின் பணி போற்றத்தக்கது.
அற்புதமான இந்தப்பணி செய்யும்
ஆசிரியருக்கும் தொடர்புடையோருக்கும் வணக்கங்கள்
தொடந்து மென்மேலும் செழிப்புற
வாழ்த்துக்கள்
--------------------------
நந்தினி மருதம்
நியூயாரக், 2012-07-02