Sunday, July 29, 2012

ஒன்றரை லட்சம் தப்பியது!


“இது பதினெட்டுக் காரட் நகைதானே!”

அவன் லேசான அலட்சியத்துடன் சொன்னதும் ‘காலங்காலமாக நகை வியாபாரம் செய்து வரும் நம்பிக்கை மிகுந்த ஸ்தாபனம்’ என்ற பிரம்மையையும் தாண்டி அவருக்கு ஒரு சிறு சந்தேகம் ஏற்பட்டது.

ஒரு போதும் இது 18 கரட் நகையாக இருக்க முடியாது என்பது அவரது அசையாத நம்பிக்கை. எனவே மற்றொரு நகைக் கடையில் இதன் பெறுமதியைப் பார்த்து விட வேண்டும் என்று நினைத்துக் கிளம்பினார்.

இப்படிக் கிளம்பியவர் எனது நண்பர்.

தனக்கு நேர்ந்த அனுபவத்தை ஆச்சரியத்துடன் கூறிவிட்டு இதைப் பற்றி நீங்கள் கட்டாயம் எழுத வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அதற்கேற்ப அவரது அனுபவத்தை தமிழ்கூறும் நல்லுலகின் நன்மை கருதி இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நண்பர் ஒரு வியாபாரி. அவருக்கு ஒரு கட்டத்தில் மிக அவசரமாக இரண்டு லட்சம் ரூபாய்கள் தேவைப்பட்டன. மனைவியின் நகைகளில் ஒன்றை வங்கியில் அடகு வைத்து விட்டுப் பின்னர் மீட்டுக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் வங்கி ஒன்றுக்குள் நுழைந்தார்.

வங்கி அடகு அதிகாரி நகையை நிறுத்து விட்டு ஒன்பதே முக்கால் பவுண்கள் என்றார;. அதன் பிறகு அவருக்கு அருகிலிருந்த ஒரு திரவத்துக்குள் நகையை இட்டு கம்பவுண்டர் மருந்து கலக்குவதைப் போல் ஒரு கிண்டியால் நகையைப் பிடித்து நீண்ட நேரம் கலக்கினார். பிறகு அவர் வைத்திருந்த நிறுவைக் கருவியின் வேறு ஒரு பிரிவுக்குள் இட்டுப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு உதட்டைப் பிதுக்கினார். பின்னர் நண்பரைப் பார்த்துச் சொன்னார்:-

“மன்னிக்க வேண்டும். இதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. இது தங்கம்தான். ஆனால் இந்தத் தங்க  மாலையில் உருண்டை உருண்டையாக இருக்கிறது பாருங்கள். இதற்குள் பரிசோதனைக்குரிய நீர் செல்வதாக இல்லை. அப்படிச் சென்றால் மாத்திரமே இது முழுவதும் தங்கம் என்று வங்கி கணக்கில் கொள்ளும்.”

“எனக்கு அதன் பாதிப் பெறுமதிதான் தேவை. அவசரத் தேவை. பாதியைத் தரலாம்தானே!” என்று வங்கி அடகு அதிகாரியிடம் நண்பர் கேட்டார்.

“மன்னிக்க வேண்டும். நீங்கள் தப்பாக நினைக்கக் கூடாது. இப்படி நீர் நுழைந்து ‘சரி” என்ற அனுமதியை இயந்திரம் சொல்லவில்லையென்றால் என்னால் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. நகைகளில் உள்ள சின்னச் சின்ன உருண்டைகளைப் பெறுமதி குறைந்த உலோகங்களால் செய்து விட்டு தங்கத்தால் முலாமிட்டு தங்கச் சங்கியில் சேர்த்து விற்கிறார்கள். பாரத்தைப் பார்த்துப் பணம் கொடுத்து மீட்கப்படாத நிலையில் பரிசோதனைக்குட்படுத்திய போது இவ்வாறான விடயங்கள் தெரியவந்தன. இப்படி பெறுமதியற்ற நகைகளை வங்கிக்கான அடகு சேவையில் பெற்ற பல ஊழியர்கள் கடந்த காலங்களிலபெரும் சிக்கலில் விழுந்திருக்கிறார்கள்” என்றார்.



நண்பருக்கு அவசரப் பணத்தேவை. அவர் வங்கியிலிருந்த புறப்பட்டு நாட்டின் மிகப் பெரிய தனியார் அடகு நிறுவனத்துக்குச் சென்றார். தனியார் அடகு நிறுவனங்களில் வட்டி விகிதம் அதிகம் என்ற போதும் தனது சிக்கலில் இருந்து விடுபட்டாகவேண்டிய சூழல் அவருக்கு.

தனியார் நிறுவனத்தில் நகையை நீட்டி அடகு வைக்க வேண்டும் என்றார். அங்கிருந்த ஊழியர் நகையைப் பெற்று சோதனைக்கு அனுப்பினார். சில நிமிடங்களில் திரும்பி வந்த நகையைக் கையில் வைத்துக் கொண்டு, “எவ்வளவு வேண்டும்?” என்று கேட்டார்.

“இரண்டு லட்சம்!”

சில நிமிடங்களில் பணம் கைமாறியது. நகைக்கான ரசீதைப் பெற்றுக் கொண்டு தனது பிரச்சினையைத் தீர்க்கக் கிளம்பிளார; நண்பர்.

இரண்டு வாரங்களில் நகையை மீட்க, புகழ்பெற்ற தனியார் அடகுக் கடைக்கு வந்தார் நண்பர்.

தங்கம் என்பது இப்போது வெறும் அலங்கார அழகுச் சாதனம் மட்டுமல்ல. பெரிய பொருளாதார பலமும் கூட. ஓர் அவசரத்துக்கு நகையொன்றைப் பணமாக்குவதில் சிக்கல்கள் இருந்தால் அது களையப்பட வேண்டும் என்பது நண்பரின் கருத்து.

வங்கியைப் போல் பாதுகாப்பான நிறுவனம் இல்லை. அத்துடன் அங்கு அடகுக்குப் பெறப்படும் வட்டி விகிதமும் குறைவு. தனியார் அடகு நிறுவனங்களில் கொள்ளை வட்டி. எதிர்காலத்தில் இவ்வாறான ஒரு நிதிச் சிக்கலில் மாட்டினால் தங்க நகையானது வங்கியிலேயே ஏற்றுக் கொள்ளப்படத் தக்கதாக இருக்க வேண்டும். எனவே தனது மனைவியுடன் கலந்து பேசி, இந்த நகையை விற்று விட்டு வங்கியால் நிராகரிக்கப்படாத முறையிலும் புது மோஸ்தரிலும் அமைந்த நகையை வாங்கிக் கொள்ளத் தீர;மானித்தார்.

இந்த நகையை பதினைந்து வருடங்களுக்கு முன்னர் நண்பர் சிங்கப்பூரில் நம்பிக்கை மிகுந்த நிறுவனத்தில் வாங்கியிருந்தார். 22 கரட் நகை என்று அவர்கள் உறுதி கொடுத்திருந்தார்கள்.

24 கரட் என்பது சுத்தத் தங்கமாகும். சுத்தத் தங்கத்தை மாத்திரம் கொண்டு நகைகள் செய்ய முடியாது. 22 முதல் 18 கரட் வரை பயன்படுத்தி தங்க நகைகள் செய்யப்படுகின்றன. 22 கரட் தங்கம் என்பது 91.6 வீத தங்கமும் 8.4 வீதம் செம்பு, வௌ்ளி போன்ற உலோகங்களும் கலந்ததாகும் என்கிறது விக்கிபீடியா. எனவே சிறந்த தங்க நகை 22 கரட் உடையாதாக இருக்கும். 18 கரட் தங்க நகையானது 70 வீதத் தங்கமும் மீதி ஏனைய உலோகங்களையும் கொண்டதாகும். எனவே 18 கரட் தங்க நகை 22 கரட் தங்க நகையை விட மவுசு குறைந்தது என்பது தெளிவு.

நகையை மீட்டுக் கொண்ட நண்பர், “இதை நான் விற்பதாக இருந்தால் நீங்கள் எவ்வளவு தருவீர்கள்?” என்று பிரபல தனியார் நகைக்கடை ஊழியரிடம் கேட்டார்.

அப்போதுதான் அந்த ஊழியர் சொன்னார்:-

“ என்ன ... ஒரு... மூன்று லட்சத்து முப்பத்தேழாயிரம் ரூபாய் தேறும்... என்ன... இது 18 கரட்தானே...!”

நண்பர் நேராகக் கொழும்பின் தங்க நகை ராஜ்யத்துக்கு (செட்டியார் தெரு) வந்து சேர்ந்தார். அதிக விளம்பரமோ படாயோபமோ இல்லாத ஆனால் சனம் நிறைந்த ஒரு கடைக்குள் நுழைந்து ஊழியர் முன்னால் நகையை வைத்தார்.

“இதை விற்று விட்டு இதன் பெறுமதிக்கு ஒரு புது நகை வேண்டும், இதன் பெறுமதியை எனக்குச் சொல்லுங்கள்!” என்றார்.

அந்த ஊழியர் நகையைத் தனது தங்கம் நிறுக்கும் தராசில் நிறுத்து விட்டுச் சொன்னா்:-

“நான்கு லட்சத்து எண்பதாயிரம் ரூபாய் வரும். எதற்கும் உள்ளே அனுப்பி அச்சொட்டான பெறுமதியைச் சொல்கிறேன்” என்று சொல்லி விட்டு நகையை உள்ளே அனுப்பினார;.

நண்பரின் சந்தேகம் சரியாகத்தானிருந்தது.

நகை திரும்பி வந்த போது அதனுடன் இருந்த ஒரு தாள் துண்டில் பெறுமதி எழுதப்பட்டிருந்தது.

“22 கரட் நகை. நான்கு லட்சத்து எண்பத்தெட்டாயிரம் ரூபாய்!” என்றார் ஊழியர்.

நண்பர் அதற்குப் பகரமாக புதிய நகையொன்றைக் கொள்வனவு செய்து கொண்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார்.

புகழ்பெற்ற அந்தத் தனியார் நிறுவனத்தில் நகையை அவர் விற்றிருந்தால் அவருக்கு ஒரு லட்சத்து ஐம்பத்தோராயிரம் ரூபாய் நஷ்டமாகியிருக்கும்!

நீதி:- பெறுமதியான ஒன்றை விற்கும் போதோ வாங்கும் போதோ இரண்டு மூன்று இடங்களில் விசாரித்துக் கொள்வது சிறந்தது!
---------------------------------------------------------------------------------------------------------

பதிவிட்ட 7 மணி நேரத்துக்குள் 228 பேர் இந்தப் பதிவைப் படித்துள்ளனர் என்பது மகிழ்ச்சியான செய்தி. ஆனால் ஒருவர் கூட ஒரு சிறிய “கொமன்ட்” கூட இடவில்லை என்பது எனக்கு மகிழ்ச்சியற்ற செய்தி. ஒரு படைப்பாளிக்கு வாசகர் கருத்து உற்சாகமளிக்கும் என்பதைச் சற்றுப் புரிந்து கொண்டால் தொர்ந்து எழுத உற்சாகமாக இருக்கும். இதற்குப் பிறகு படிப்பவர்களாவது இதனைச் சற்றுக் கவனத்தில் கொண்டால் நல்லது.
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

8 comments:

Rauf Hazeer said...

யாருமே கமென்ட் சொல்லவில்லை என்று கவலை பட்டிருப்பதால் அல்ல , செட்டித்தெரு நகை கடைகளில் இது போல நிறையவே நடக்கிறது .இந்த இரண்டு மூன்று இடங்களில் விசாரிப்பது நகைகளுக்கு மாத்திரம் அல்ல நிறையப் பொருள்களுக்குப் பொருந்தும் . ஒருதடவை என் சின்ன மகனுக்கு விளையாட்டு ஹெலிகொப்டர் ( உண்மையிலேயே பறப்பது . ரிமோட் கண்ட்ரோல் ) வாங்கப் போனேன் மூன்று கடைகளில் விசாரித்த பிறகு இரண்டாவது கடையில் வாங்கினேன் .இலாபம் எவ்வளவு தெரியுமா 1300 ரூபாய் !

Seenivasan K said...

நல்ல பகிர்வு நன்றி நண்பா

Seenivasan K said...

good post

Pasumaiveli said...

நீங்கள் தான் நகைகடை சாம்ராச்சியம் என்று கூறிவிட்டீர்களே சாம்ராச்சியத்தை கட்டி எழுப்ப இப்படி யான தில்லு முல்லு வேளைகள் செய்தால் தானே முடியும்

vijay said...

Useful for all. Keep it up.

vairamani said...

மிகவும் பயனுள்ள பதிவு, தங்கத்தின் மதிப்பு ஏறிக்கொண்டே செல்லும் இக்கால கட்டத்தில் நகை கடைக்காரர்கள் செய்யும் மோசடி நாம் எவ்வளவு விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள உதவியதற்கு நன்றி

Gemini said...

நல்ல தலைப்பு, ஏமாற்றாத கட்டுரை, தொடரட்டும் எழுத்துப் பணி

Lareena said...

பயனுள்ள பதிவு. "யாம் பெற்ற பயன் பெறுக மற்றவரும்" என நினைத்து, இது குறித்து எழுதத் தூண்டிய உங்கள் நண்பர் பாராட்டுக்குரியவர்.

அவ்வாறே, அவரது அனுபவத்தை ஓர் அருமையான பதிவாக்கி நமக்குத் தந்த உங்களுக்கு மிக்க நன்றி, Sir.

Keep it up!