Friday, August 31, 2012

சிறந்த மொழிபெயர்ப்பு


சிறந்த மொழிபெயர்ப்பிலான
“ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்கள்”

மௌலவி காத்தான்குடி பௌஸ்.


அஷ்ரஃப் சிஹாப்தீன் நவீன உலகின் சிறந்த எழுத்தாளன்.

அண்மையில் “ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்கள்” என்ற அறபுக் கதைகளின் மொழிபெயர்ப்பு நூல் ஒன்றை அவர் இலக்கிய உலகிற்குத் தந்துள்ளார். அறபுக் கதைகள் என்கின்ற போது “அலிபாபாவும் நாற்பது திருடர்களும்”, “அலாவுதீனும் அற்புத விளக்கும்”, “இளவரசன் அஹமதும் அவனது இரண்டு சகோதரிகளும்” போன்ற அறபுக் கதைகளுள் “ஆயிரத்தில் ஓர் இரவுகள்” கதை வாசகர்களை இன்பத்தில் ஆழ்த்தும் இரசனை கொண்ட கதையாகும்.

அதிகமான அறபுக் கதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்படுவதைவிட ஆங்கிலத்தில் அதிகமாகக் காணப்படுகின்றன. ஆங்கில மொழிபெயர்ப்புகளில் இருந்துதான் அறபுக் கதைகள் தமிழுக்குத் தலை காட்டுகின்றன. “கலீலா வதிம்னா” போன்ற கதைகள் இன்னும் மொழி பெயர்ப்புக்கு வரவில்லை. அறபியில் அப்படியே இருக்கின்றது.

அல்லாமா இக்பாலின் உர்துக் கவிதைகளை நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டதன் உயிரோட்டம் ஆங்கில மொழிபெயர்ப்பில் அவ்வளவாகக் களை கட்டவில்லை. ஆனாலும் அஷ்ரஃப் சிஹாப்தீன் மொழி பெயர்த்துள்ள “ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள்” அறபுக் கதைகள் மிக அற்புதமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அறபே அப்படியே தமிழாக மாறியதா? என்று நினைக்கத் தூண்டுகிறது.

வெறுங் காமத்தையும் சரித்திரத்தையும் உள்ளடக்கிய கதைகளை சமூகத்துக்குத் தராமல் உணர்ச்சிபூர்வமான படைப்பாக மக்கள் எண்ணங்களை, கனவுகளை, கண்ணீரை, கவலையை, அவலங்களை, சிறை அனுபவங்களை, சித்திரவதை நெகிழ்வுகளை அஷ்ரஃப் சிஹாப்தீன் அந்த மனோ நிலையில் இருந்து மிக அற்புதமாக இந்தக் கதைகளை நகர்த்தியுள்ளார்.

புனித ரமளானில் வாய்க்கு ருசியாக பேரீத்தம் பழங்கள் கை நிறையக் கிடைத்தாலும் அவை அனைத்தும் மக்களின் நாவுக்கு ருசியாக அமைந்து விடும்.  ஆயினும் “ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள்” அறிவுக்கும் மூளைக்கும் அற்புதமான வேலையைத் தந்திருந்ககிறது.

அறபுலக எழுத்தாளர்களான மஹ்மூத் சயீத், தௌபீக் அல் ஹக்கீம், தையிப் சாலிஹ், ஸகரிய்யா தாமிர், கஸ்ஸான் பாயிஸ் கனபானி, யாஸர் அப்துல் பாக்கி, ராபியா ரைஹான், ஜூக்ஹா அல் ஹாத்தி, ஒமர் அல் கித்தி போன்றவர்களின் கதைகளைத் தேர்ந்தெடுத்து மிக எளிய தமிழில் 10 கதைகளைத் தந்துள்ளார். இக்கதைகளுக்குத் தலைப்புக்களாக - விசர்நாய்க் கடி - புகையிரதம் - விற்பனைக்கான அற்புதங்கள் - ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள் - சின்னச் சூரியன் - காஸாவிலிருந்து ஒரு கடிதம் - கறுப்புப் பூனை - சிவப்புப் புள்ளி - திருமணம் - நெடுநாள் சிறைவாசி ஆகியன அமைந்து மணம் பரப்புகின்றன.

அறபுலக இலக்கிய ஆய்வுகள் தமிழ் உலகத்துக்கு மணம் வீச இன்னும் இவர் உழைக்கட்டும்!

(தினகரன் ஆகஸ்ட் 31 - 2012 - வெள்ளிக் கிழமை)

Monday, August 27, 2012

எல்லோரும் கொண்டாடுவோம்!


இங்கே இடம்பெறும் இந்தக் கட்டுரை நான் எழுதியதல்ல. நண்பர் செய்யத் பஷீர் எழுதியது. இக்கட்டுரை பேசும் விடயம் எனக்குப் பிடித்திருக்கிறது. எனவே எனது தளத்துக்கு வரும் வாசகர்களும் இதைப் படிக்க வேண்டும் என்பதற்காக இணைத்துக் கொண்டிருக்கிறேன்.

இக்கட்டுரை எழுதிய நண்பர் பஷீருக்கும் தேனீ இணையத்தளத்துக்கும் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.
-------------------------------------------------------------------------------------------------

அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி "
- எஸ்.எம்.எம்.பஷீர்
“ஆடி முடிக்கையிலே அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ ?”
                                                                                   கண்ணதாசன்
எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் களத்தில் இறங்கியுள்ள சகல  கட்சிகளும்  பல்வேறு அரசியல் யுக்திகளைப் பயனபடுத்தி எப்படியாவது அதிக பட்ச வெற்றியை பெற்றுவிட வேண்டும் என்று ஆலாப் பறக்கின்றன. பொதுவாகவே சுயேட்சை வேட்பாளர்கள் என்று கட்டுப்பணம் கட்டுபவர்கள் பலர் வழக்கம்போல  வாக்கு எண்ணும் வேளைகளில் ஏதோ ஒரு  கட்சியின் துணைக்குழுவாக செயற்படவே போட்டியிடுகிறார்கள். எனவே உண்மையில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தவிர எந்தச் சுயேட்சைக் குழுவும் களத்தில் குதித்திருக்கவில்லை என்று சொல்லப்படுகிறது, அப்படி ஏதேனும் அபூர்வமாக ஒன்றிரெண்டு  சுயேட்சைக் குழுக்கள் இருந்தாலும் , இறுதி நேரத்தில் அவையும் தமது ரிஷி மூலத்தை வெளிப்படுத்தி விடுவார்கள்.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை , மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசில் இணைந்திருந்தும் தனித்துப் போட்டியிடும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட அரசின் எதிராளிக் கட்சிகளும் அதிகமதிகமாக தாங்களே உண்மையான முஸ்லிம்கள்  என்றும் முஸ்லிம் மக்களின் ஆபத்பாந்தவர்கள் என்றும் வெளிக் காட்டுவதில் அதீத பிரயத்தனம் எடுத்து வருகிறார்கள். உலமாக் கட்சியாகட்டும் , நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் எனப்படும் கட்சியாகட்டும் “இறைவனின் உதவியுடன் நிச்சயமாக நாம் எல்லோரும் அதில் வெற்றிபெறுவோம்”  என்று பொதுவாகவே  இறைவனைத் துனைக்கழைத்தே வெற்றி முரசம் கொட்டுகிறார்கள்
நக்குண்டார் நாவிழந்தார்
ஹாபீஸ் நசீர் அஹமத் பெருநாள் பரிசாக தனது சொந்த ஊரிலுள்ள ஒவ்வொரு முஸ்லிம் குடும்பத்தினருக்கும் தலா 25 கிலோ அரிசி (ஒரு அரிசி மூடை) வழங்கியுள்ளார் . அது மாத்திரமல்ல , ஒவ்வொரு பள்ளிவாசல்களிலும்  அங்கத்தவர்களாகவுள்ள  சகல மத்தியதர வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் அனைவருக்கும் நோன்புப் பெருநாள் பரிசாக கைலி, (சாரம்)  மேற்ச சட்டை, தொப்பி , பனியன் (உட்சட்டை) போன்ற உடைகளைக் கொண்ட பொதியையும் , அத்துடன் ஐயாயிரம் ரூபாய் பணத்தையும் வழங்கி தனக்கு வாக்களிக்குமாறு கோரியுள்ளார். இந்த அன்பளிப்புகள் யாவும் நோன்புப் பெருநாளினை முன்னிட்டு வழங்கப்படும் நன்கொடையாக  அல்லாமல் தனக்கு வாக்களிப்பதற்கு வழங்கப்படும் இலஞ்சமாகவே பொருட்களையும் ,  பணத்தினைதினையும்  நசீர் ஹாபீஸ் வழங்கியுள்ளார். இவ்வாறு பாரியளவில் ஒரு ஊர் முழுவதற்கும் சுமார்  2500 ரூபாய் (தலா ) பெறுமதியான அரிசியையும்,  5000 ரூபாய் ஆடைப் பொதிகளையும் வழங்க ஏறாவூரிலுள்ள சகல பள்ளிவாசல்களையும் முஸ்லிம் காங்கிரஸ் பயன்படுத்தியுள்ளது. அதிலும் அங்குள்ள ஒரு பள்ளிவாசல் அரசியல் காரணத்துக்காக அவ்வாறான நன்கொடைகளை வழங்க முடியாது என்று ஆட்சேபம் தெரிவித்த பொழுதும் அப்பள்ளிவாசல் பகுதியில் வாழும் , அப்பள்ளிவாசலின் அங்கத்தவர்கள் , இலவசமாக தங்களுக்கு கிடைக்கும் அந்த நன்கொடைகளை (இலஞ்சத்தை) தடுத்து நிறுத்த கூடாது என்று பள்ளிவாசல் நிர்வாகத்தினரை வற்புறுத்தி  (முஸ்லிம் காங்கிரஸின் பாஷையில் போராடி ) வெற்றி பெற்றுள்ளார்கள். அதற்கெதிரான முறைப்பாடுகள் எழுந்தபோதும் அதனையும்  "அல்லாஹ்வின் பெயரால்" முறியடித்துள்ளார்கள்.
முஸ்லிம் காங்கிரசில் அஸ்ரபின் மூலம்  ஈரானுடன் செய்துகொண்ட வணிக ஒப்பந்தங்கள் வழியாகவும் சம்பாதித்த பணத்தின் ஒரு துளியை இப்படி முஸ்லிம் காங்கிரசின் அரசியலுக்காக சிந்துவது (செலவழிப்பது) நசீருக்கு பெரிய விசமில்லை என்றாலும். இதுவரை அவர் தான் பிறந்து வளந்த ஊர்  மக்களுக்கு இப்படியான நன்கொடையை முன்னர் எப்போதும் வழங்கவில்லை , மாறாக இப்போது வாக்குகளுக்காக இலஞ்சமாக (அன்பளிப்பு)  வழங்கியுள்ளார். அதற்காக முஸ்லிம்களின் மத வழிபாட்டுத் தலங்களை  அல்லாஹ்வின் பெயரை சொல்லி மத துஸ்பிரயோகம் செய்துள்ளார்.
ஆனாலும் மொத்தமாகவே தனது இருப்புக்கு சவாலாக கட்சிக்குள் தன்னையும் விட அதிக பணம் படைத்த , தமதூரைச் சேர்ந்த  சேர்ந்த ஒரு இலட்சாதிபதி , கட்சியின் பிரதித் தலைவராக , தனது பதவி நிலையையும் தாண்டி இடம்பிடிப்பது தனது நீண்டகால இருத்தலுக்கு சவாலாகவே அமையும் என்பதால் தனது மடியில் நசீர் கைவத்துவிட்டார்  என்று கவலைப்பட்டு பசீர் அரசியல் ஸ்டண்டுகள் (Stunt) அடிக்கத் தொடக்கி விட்டார். எப்படி இருப்பினும் இவ்வாறு நசீர் வழங்கிய அரிசியையும் , பணத்தையும் உடையையும் ஒரு சிலர் மட்டுமே பெற்றுக் கொள்ள மறுத்திருக்கிறார்கள் . அவர்களில் சிலர் செல்வந்தர்கள் மற்றும்  சிலர் இந்த அரிசியில் உள்ள அரசியலைக் கேள்வியுற்றதும் , தமது நன்கொடைகளை , நசீரின் -முஸ்லிம் காங்கிரஸின் இலஞ்சத்தை - தந்தவர்களுக்கே (பள்ளிவாசல்களுக்கு ) திருப்பி கொடுத்து விட்டிருக்கிறார்கள்.


Sunday, August 19, 2012

ஊரைக்குழப்புறாங்க சாமி!


இந்த நாட்டில் வாழும் பெரும்பான்மையில் குறிப்பிட்ட ஒரு பிரிவினரால் முஸ்லிம்களின் வணக்கஸ்தலங்களுக்கு எதிரான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதை நாம் கண்டு வருகிறோம்.

சொந்தச் சொத்துக்களுக்கு ஏற்படுத்தப்படும் பாதிப்பைப் பெரிதாகப் பொருட்படுத்தாத ஒரு முஸ்லிம் பள்ளிவாசலுக்குப் பங்கம் ஏற்படுவதைச் சகிக்க மாட்டான். இஸ்லாம் என்பது ஒரு வாழ்க்கை நெறி. எனவே ஒரு முஸ்லிமுடைய வாழ்வின் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் எல்லாச் செயற்பாடுகளிலும் இஸ்லாம் பின்னிப் பிணைந்துள்ளது. அப்படிச் சொல்வதைக் காட்டிலும் அந்த வாழ்க்கை நெறிக்குட்பட்டவனாகத்தான் அவன் சமூகத்தில் வாழவேண்டும்.

பள்ளிவாசலில் மாற்று மதத்தார் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதானது தனது வாழ்வியலில் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்குச் சமமாகப் பார்க்கப்படுவது இதனால்தான்.

பள்ளிவாசல்கள் மீதான அச்சுறுத்தல்கள் இன்று ஓர் எச்சரிக்கையாக இலங்கை முஸ்லிம்களின் மனதுகளில் பதிந்து போயுள்ளது. இன்றைய சூழலில் நான்கு முஸ்லிம்கள் சேர்ந்திருந்தால் அங்கு பேசப்படும் முதல் அம்சமாக இது இருக்கிறது. அனுராதபுர ஸியாரம் உடைப்பு முதல் ஒபயசேகரபுர பள்ளிவாசல் அச்சுறுத்தல் வரையான செய்திகள் சர்வதேசம் வரை இன்று எட்டியுள்ளது.

கிழக்குமாகாண சபைக்கான அரசியல் பிரச்சாரங்களில்  பயன்படு்த்தப்படும் மிக முக்கியமான பிரசார ஆயுதமாகவும் ஒருசாராரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தனது அரசியல் பிரசாரப் பேச்சில் கவனக்குறைவாக விடப்பட்ட ஒரு வார்த்தை அல்லது தவிர்க்கப்பட்ட ஒரு சொல் பெரும்பான்மையிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய நிலைக்கு சகோதரர் ரவூப் ஹக்கீமைக் கொண்டு வந்து விட்டிருக்கிறது. தான் ஓர் அமைச்சர், ஒரு கட்சியின் தலைவன் என்ற விடயத்தையெல்லாம் தாண்டி அவர் மன்னிப்புக் கேட்டதானது ஒரு பெரும்பான்மைத் தேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் சிறுபான்மையினர் எப்படி வாழவேண்டும் என்பதையும்  நிகழ்காலத்தின் இலங்கைச் சூழல் குறித்த அவதானத்திற்குள் கவனத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய அம்சங்களையும் சுட்டுவதாகும்.

இவ்வாறான ஒரு சூழலில் சிறுபான்மையினர் எத்தகைய அவதானத்துடன் தமது செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஊடகத்துறையில் ஈடுபடுவோர் இவ்வாறான விடயங்களை எப்படிக் கையாள்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டுவதுடன் பொறுப்புணர்வு இல்லாமல் நடந்து கொள்கிறார்கள் என்பதையும் சுட்டிக் காட்டுவதற்காகவே இதை நான் எழுத ஆரம்பித்தேன்.

அண்மையில் இப்படியொரு திடீர்ச் செய்தி முகநூல் இணைப்பில் ஓர் இணையத்தளத்தில் வந்தது.

“முஸ்லிம் சமாதான நீதவானைத் தாக்கி புத்தரை வழிபட வைத்த ஸ்ரீலங்கா காவல்துறை அதிகாரி!”

செய்தித் தலைப்பைப் பார்த்ததும் என்னைத் தூக்கி வாரிப் போட்டது.

இச்செய்தி ஜஃப்னா இணையத்தளத்தில் வெளிவந்திருந்தது. நண்பர் நாச்சியாதீவு பர்வீனின் ஊரில் நடந்த சம்பவம் இது. அவரைத் தொடர்பு கொள்ள முயன்றேன். பலனளிக்கவில்லை. ஆனால் பிற்பகல் அதே இணையத்தளத்தில் இச்செய்தி தூக்கப்பட்டு விட்டது. பிழையான தகவல் என்று நாச்சியாதீவு பள்ளிவாசல் நிர்வாகமும் பர்வீனும் இணையத் தளத்துக்கு அறிவித்ததை மட்டும் அந்த இணையத்தளம் தகவலாகத் தந்திருந்தது.

இப்போது புத்தரை வழிபடச் சொன்ன விடயம் என்ன என்பது தெரியவில்லை. மாலை நண்பர் பர்வீனைத் தொடர்பு கொண்டு விபரமறிந்தேன். அதற்கிடையில் அவரது முகநூல் பக்கத்திலும் தகவல் இட்டு வைத்திருந்தேன்.

இனி அந்தத் தகவல்கள் -

Tuesday, August 14, 2012

நோன்பு காலச் சிந்தனைகள்!


முகநூலில் இல்லாத நண்பர்களுக்கும் பரந்து விரிந்து கிடக்கும் வாசகர்களுக்குமாக ....... தெளிவாகப் பார்க்கவும் படிக்கவும் படங்களின் மீது
கிளிக் பண்ணுங்கள்.


Wednesday, August 1, 2012

தப்புத் தாளங்கள்

கடந்த 27ம் திகதி இரவு முகநூலின் எனது பக்கத்தில் பின்வரும் வினாவை கருத்துக்களை அறிவதற்காக இட்டிருந்தேன்.

“ஒரு சமூகத்துக்கு என்ன சிக்கல்கள் ஏற்பட்டாலும் அச்சமூகம் சார்ந்த அரசியல்வாதிகளை நோக்கி மட்டுமே எல்லா விரல்களும் நீட்டப்படுகின்றன. இது சரியா?”

தனிப்பட்ட முறையில் அரசியல்வாதிகளை விமர்சிக்காமல் 10 முதல் 15 வரிகளுக்குள் தெரிவிக்கப்படும்  பொருத்தமான கருத்துக்கள் “யாத்ரா” சஞ்சிகையில் பிரசுரிக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தேன்.

இரண்டு தினங்கள் கடந்தும் மூவருக்கு மேல் கருத்துக்களைத் தெரிவித்திருக்கவில்லை. (இந்த நிமிடம் வரைக்கும் அதே நிலைதான்.)

எனவே ஒரு நாள் கழிந்த பின்னர் வேண்டுமென்றே பின்வரும் குறிப்பை முகப்புத்தகத்தின் எனது பக்கத்தில் இட்டேன்.

“தமிழ்ச் சினிமாக் கதாநாயகிகள் இப்போது நடிப்பதே இல்லை. கடந்த காலங்களில் மிகச் சிறந்த நடிகைகள் நடிப்பில் உன்னதம் காட்டியிருக்கிறார்கள். இன்றைய நிலையில் ஒருவரையாவது நடிப்புக்கு உதாரணம் காட்ட என்னால் முடியவில்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”

அடுத்த நாள் விடிந்தது 18 பேர் இது குறித்துக் கருத்துக்களை இட்டிருந்தார்கள்.
பதினெட்டாவது நபரது கருத்துக்குப் பின்னர் நானும் இத்தலைப்பின் கீழ் ஒரு கருத்தை இட்டேன். இதுதான் அது-

ஒரு நாளைக்கு முன்னர் அதாவது இதற்கு முன்னர் நான் இட்ட “யாத்ரா - 22”க்கான பதிவுக்கு (அரசியல்வாதிகளைக் குறை சொல்வது பற்றி) 3 பேர் மாத்திரம் கருத்துச் சொல்லியிருந்தது என்னைக் கவலைக்குள்ளாக்கியிருந்தது. எனது நட்பு வட்டத்தில் இருப்போரின் அமைதி ஒரு சந்தேகத்தை உண்டு பண்ணியது. எனவே “இப்போது தமிழில் யார் நம்பர் வண் நடிகை?” என்று ஒரு வினாவைப் போட்டுப் பார்ப்போமா என்று எண்ணிய நான் அதைத் தவிர்த்து “நடிகைகள்” பற்றிய பதிவை இட்டேன். விடிவதற்குள் 18 கருத்துக்கள் இடப்பட்டுள்ளன.


சரி. தத்தமக்குப் பிடித்த தலைப்பில் கருத்துக்களைத் தெரிவிப்பதும் அவசியமில்லை என ஒருவர் கருதும் கருத்துக்குப் பதிலளிக்காமல் விடுவதும் அவரவர் உரிமை.

தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை ஒட்டியும் வெட்டியும் எனக்குக் கருத்துக்கள் இருந்த போதும் அதில் மீண்டும் நான் மூக்கை நுழைக்கவில்லை.

முகப்புத்தகத்தில் “சீரியாஸான” விடயம் என்று ஒருவர் கருதும் ஒன்றுக்கோ இதற்கு நான் கருத்துச் சொல்லத் தேவையில்லை என்று கருதும் ஒன்றுக்கோ கருத்துச் சொல்லாமல் விட்டு விடுவார்கள். அநாவசியச் சிக்கலில் மாட்டிக் கொள்வோம் என்று நினைப்பவற்றையும் தவிர்த்து விடுவார்கள் என்பதை நான் இட்ட குறிப்புகளில் உணர்ந்து கொண்டேன்.

நடிகைகள் குறித்து நான் என்ன நோக்கத்துக்காகக் குறிப்பை இட்டிருக்கிறேன் என்பதை நான் பகிரங்கமாகத் தெரிவித்த பின்னரும் கூட இத்தகவல் திரிக்கப்பட்டு பகிரங்கத் தளங்களில் பேசப்பட்டிருக்கிறது என்ற காரணத்தால்தான் இதனை இங்கு நான் எழுத நேர்ந்தது.

“நடிகைகள் கவர்ச்சி காட்டுவதாக இல்லை” என்ற அர்த்தம் பட நான் குறிப்பு இட்டதாகச் சில அன்பர்கள் தகவல் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியொன்று இன்று எனக்குக் கிடைத்தது. எனது குறிப்புக்களை முழுவதும் படித்த ஒரு நபர் இந்த விடயம் திரித்துக் கதைக்கப்பட்ட ஒரு சூழலில் நின்று ”இல்லை. அது அப்படி அல்ல... இப்படித்தான் எழுதியிருந்தார்” என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

ஆக... எனக்கேற்பட்ட கவலைகள் பின்வருமாறு.

01. இந்தக் கணினி யுகத்திலும் குறிப்புகளை, தகவல்களை உண்மைத் தன்மையை அறியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது.

02. இத்தகையவர்கள் எனது நட்புப் பட்டியலிலும் இருக்கிறார்கள் என்பது.

03. சம்பந்தப்பட்ட நபர் எதை எழுதியிருக்கிறார் என்று கூடப் பார்க்காமல் வாய்க்கு வந்தபடி கதைப்பது.

04. நோன்பில் நடிகைக் கவர்ச்சி பற்றி எழுதியருக்கிறார் - என்ற பாவத்தைச் செய்து விட்டதாக அதே நோன்புடன் ஆய்ந்து பார்க்காமல் பேசுவதன் மூலம் தாமும் பாவம் செய்கிறோம் என்பதை உணராமல் இருப்பது.

05. மற்றவன் இன்னொருவனைப் பற்றி தப்பாக எதைச் சொன்னாலும் அதை நம்பித் தகவல் பரப்புவதன் மூலம் கற்றவர்கள் ஜாஹிலிய்யத்தில் (அறியாமையில்) இருப்பது.

(ரமளானில் இவர்களுக்கு நல்ல புத்தியைக் கொடுக்க வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திப்பதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. உங்களில் யாருக்காவது வேறு வழிகள் தெரிந்தால் சொல்லுங்களேன்.)