சொந்தச் சொத்துக்களுக்கு ஏற்படுத்தப்படும் பாதிப்பைப் பெரிதாகப் பொருட்படுத்தாத ஒரு முஸ்லிம் பள்ளிவாசலுக்குப் பங்கம் ஏற்படுவதைச் சகிக்க மாட்டான். இஸ்லாம் என்பது ஒரு வாழ்க்கை நெறி. எனவே ஒரு முஸ்லிமுடைய வாழ்வின் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் எல்லாச் செயற்பாடுகளிலும் இஸ்லாம் பின்னிப் பிணைந்துள்ளது. அப்படிச் சொல்வதைக் காட்டிலும் அந்த வாழ்க்கை நெறிக்குட்பட்டவனாகத்தான் அவன் சமூகத்தில் வாழவேண்டும்.
பள்ளிவாசலில் மாற்று மதத்தார் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதானது தனது வாழ்வியலில் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்குச் சமமாகப் பார்க்கப்படுவது இதனால்தான்.
பள்ளிவாசல்கள் மீதான அச்சுறுத்தல்கள் இன்று ஓர் எச்சரிக்கையாக இலங்கை முஸ்லிம்களின் மனதுகளில் பதிந்து போயுள்ளது. இன்றைய சூழலில் நான்கு முஸ்லிம்கள் சேர்ந்திருந்தால் அங்கு பேசப்படும் முதல் அம்சமாக இது இருக்கிறது. அனுராதபுர ஸியாரம் உடைப்பு முதல் ஒபயசேகரபுர பள்ளிவாசல் அச்சுறுத்தல் வரையான செய்திகள் சர்வதேசம் வரை இன்று எட்டியுள்ளது.
கிழக்குமாகாண சபைக்கான அரசியல் பிரச்சாரங்களில் பயன்படு்த்தப்படும் மிக முக்கியமான பிரசார ஆயுதமாகவும் ஒருசாராரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தனது அரசியல் பிரசாரப் பேச்சில் கவனக்குறைவாக விடப்பட்ட ஒரு வார்த்தை அல்லது தவிர்க்கப்பட்ட ஒரு சொல் பெரும்பான்மையிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய நிலைக்கு சகோதரர் ரவூப் ஹக்கீமைக் கொண்டு வந்து விட்டிருக்கிறது. தான் ஓர் அமைச்சர், ஒரு கட்சியின் தலைவன் என்ற விடயத்தையெல்லாம் தாண்டி அவர் மன்னிப்புக் கேட்டதானது ஒரு பெரும்பான்மைத் தேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் சிறுபான்மையினர் எப்படி வாழவேண்டும் என்பதையும் நிகழ்காலத்தின் இலங்கைச் சூழல் குறித்த அவதானத்திற்குள் கவனத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய அம்சங்களையும் சுட்டுவதாகும்.
இவ்வாறான ஒரு சூழலில் சிறுபான்மையினர் எத்தகைய அவதானத்துடன் தமது செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஊடகத்துறையில் ஈடுபடுவோர் இவ்வாறான விடயங்களை எப்படிக் கையாள்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டுவதுடன் பொறுப்புணர்வு இல்லாமல் நடந்து கொள்கிறார்கள் என்பதையும் சுட்டிக் காட்டுவதற்காகவே இதை நான் எழுத ஆரம்பித்தேன்.
அண்மையில் இப்படியொரு திடீர்ச் செய்தி முகநூல் இணைப்பில் ஓர் இணையத்தளத்தில் வந்தது.
“முஸ்லிம் சமாதான நீதவானைத் தாக்கி புத்தரை வழிபட வைத்த ஸ்ரீலங்கா காவல்துறை அதிகாரி!”
செய்தித் தலைப்பைப் பார்த்ததும் என்னைத் தூக்கி வாரிப் போட்டது.
இச்செய்தி ஜஃப்னா இணையத்தளத்தில் வெளிவந்திருந்தது. நண்பர் நாச்சியாதீவு பர்வீனின் ஊரில் நடந்த சம்பவம் இது. அவரைத் தொடர்பு கொள்ள முயன்றேன். பலனளிக்கவில்லை. ஆனால் பிற்பகல் அதே இணையத்தளத்தில் இச்செய்தி தூக்கப்பட்டு விட்டது. பிழையான தகவல் என்று நாச்சியாதீவு பள்ளிவாசல் நிர்வாகமும் பர்வீனும் இணையத் தளத்துக்கு அறிவித்ததை மட்டும் அந்த இணையத்தளம் தகவலாகத் தந்திருந்தது.
இப்போது புத்தரை வழிபடச் சொன்ன விடயம் என்ன என்பது தெரியவில்லை. மாலை நண்பர் பர்வீனைத் தொடர்பு கொண்டு விபரமறிந்தேன். அதற்கிடையில் அவரது முகநூல் பக்கத்திலும் தகவல் இட்டு வைத்திருந்தேன்.
இனி அந்தத் தகவல்கள் -
