Showing posts with label Ghaza. Show all posts
Showing posts with label Ghaza. Show all posts

Friday, November 23, 2012

ஜமீலாக்களும் காஸாக்களும்!



சகோதரி மரியம் ஜமீலாவை நினைவு கூர்தலும் காஸாவுக்கான நமது ஒருமைப்பாட்டைத் தெரிவித்தலுக்குமான இந்த ஒன்று கூடலில் என்னையும் ஒரு பொருட்டாகக் கருதி ஒரு சிற்றுரை வழங்க அழைத்தழைக்காக மீள்பார்வை ஊடக மையத்துக்கு எனது அன்பு கனிந்த நன்றியை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது நட்புப் பட்டியலில் உள்ள ஒரு சகோதரர் முகநூலில் ஒக்டோபர் 31ம் திகதி பின்னிரவில் சகோதரி மர்யம் ஜமீலா அவர்களின் வபாத் செய்தியை ‘மர்யம் ஜமீலா காலமானதாக அறியக்கிடைக்கிறது’ என்கிற விதத்தில் ஆங்கிலத்தில் இரண்டு வரிகளில் தெரிவித்திருந்தார். அந்தச் செய்தி உண்மையில் என்னுடைய உறவின் இழப்புச் செய்தியை எதிர்கொண்டதுபோல் ஓர் உணர்வை என்னில் ஏற்படுத்திற்று. என்னுள் பழைய நினைவுகள் சுழல ஆரம்பித்தன. முகநூலின் எனது பக்கத்தில் அவருடைய புகைப்படத்துடன் இணைத்து அவருடைய வபாத் செய்தியையும் அவரைப் பற்றிய சிறிய குறிப்பொன்றையும் இட்டேன். பிறகு அச்செய்தி பலராலும் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

என்னுடைய 16 அல்லது 17 வயதில்தான் நான் சகோதரி மர்யம் ஜமீலாவைப் பற்றி அறிய வந்தேன். அந்த அறிமுகம் ‘அல்ஹஸனாத்’ சஞ்சிகை மூலமாகக் கிடைத்தது என்று நினைக்கிறேன். இன்றைய நவீன வசதிகள் இல்லாத அக்கால கட்டத்தில் ஓர் இளம் யூதப் பெண்மணி இஸ்லாம் நோக்கி அறிவியல் ரீதியாக ஆகர்ஷிக்கப்பட்டு வந்தது போன்ற தகவல்களை என்னைப் போன்றவர்கள் அறிந்து கொள்ள வாய்ப்பளித்தது ‘அல்ஹஸனாத்’சஞ்சிகைதான். அக்கால கட்டத்தில் இஸ்லாம் பற்றிய உணர்வையும் அறிவையும் தெளிவையும் இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கு வழங்கிய பெரும் பணியை - உன்னதமான பணியை அந்தச் சஞ்சிகை செய்து வந்தது.

தஃலீமுல் குர்ஆன், அல்குர்ஆன், ஹதீஸ், அஹ்காமுஷ்ஷாபிஈ, மௌலூது கிதாபுகள், சாந்திமார்க்கம் என்ற பாட நூல் - ஆகியவற்றுடன் இலங்கை முஸ்லிம் பொதுமகனின் இஸ்லாம் வரையறுக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் சகோதரி மர்யம் ஜமீலா அவர்கள் இஸ்லாத்தில் இணைந்தமையானது முஸ்லிம் பொதுஜனத்துக்கு ஓர் ஆனந்தமான செய்தியாக இருந்தது. படித்தவர்கள், இஸ்லாத்தை மேலும் விஸ்தாரமாக அறிந்து கொள்வதற்கு அத்தகவல்  ஆவலைத் தந்தது. சாதாரண இஸ்லாமியன் தனது மார்க்கத்தையிட்டுப் பெருமை கொள்ளவும் மற்றொருவரோடு உரையாடுகையில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்ளவுமான விடயமாக அது அமைந்திருந்தது.

தொலைத் தூரத் தொடர்புக்கு மாதக் கணக்கில் காத்திருந்த ஒரு காலப்பகுதியில், இஸ்லாமிய தஃவத்தின் வீச்சு வேகமாகச் சென்றடையாத ஒரு காலப்பகுதியில் இஸ்லாத்தின் மகத்துவத்தை அவர் தேடி அடைந்ததும் அவரது வருகையும் தஃவத்தின் பாதையில் ஒரு பாய்ச்சலாக அமைந்தது என்று குறிப்பிடுவதில் தவறு கிடையாது என்று நம்புகிறேன்.

இன்று உலகம் சுருண்டு கைக்குள் வந்து விட்ட நிலையில் தஃவத்தின் வெளிச்சம் பிரகாசித்துக் கொண்டிருக்கும் நிலையில் பலநூறு ஜமீலாக்கள் இஸ்லாத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். உண்மையைத் தேடியடைந்து, சரியான வழி இதுவே என்றுணர்ந்து வருகின்ற ஜமீலாக்களால் இஸ்லாத்தின் சிறப்பு புதிய எல்லைக் கோடுகளைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கின்ற போது பரம்பரை ஜமீலாக்களால் மர்யம் ஜமீலாக்கள் அவமானப் படுத்தப்படுவதை நாம் கவலையுடன் கவனத்தில் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.

தன்னைப் பெற்றோர் கற்க விடவில்லை என்பதற்காக, தான் விரும்பியபடி நடக்க சமூகம் அனுமதிக்கவில்லை என்பதற்காக அல்குர்ஆனையும் நபிகளாரையும் கேள்விக்குட்படுத்தும் ஜமீலாக்கள் சிலரை நாம் பார்க்கிறோம். தனது நியாயமான எண்ணங்களை வெளிப்படுத்த வாய்ப்புத் தராத தனது குடும்பத்தையும் தனது உறவுகளையும் பழிவாங்குவதானால் இஸ்லாமிய வழிமுறைகளைக் கேவலப்படுத்துவதே சரியானது என்று பெண்களுக்கு இஸ்லாம் வகுத்துள்ள வழிமுறைகளை அலட்சியப்படுத்தும் ஜமீலாக்களையும் நாம் காண்கிறோம்.

இவ்வாறான அனுபவங்களை நாம் எதிர்நோக்கும் போது சகோதரி மர்யம் ஜமீலா முஸ்லிம் உம்மத்தின் மீது ஏற்படுத்திய தாக்கம் எத்தகையதாக இருந்தது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அவர் இஸ்லாத்தைத் தனது வாழ்க்கை வழியாக ஏற்றுக் கொண்டமையும் மற்றும் அவர் எழுதிய கட்டுரைகள், நூல்கள் யாவும் நினைவு வருகிற போதும் அவருக்காக நமது கைகளை உயர்த்தி இறைஞ்சவே மனம் துடிக்கிறது.

சகோதரி மர்யம் ஜமீலா அவர்களது வபாத்தாகி ஒரு வாரத்துக்குப் பிறகு அவரைப் பற்றிய ஒரு சிறிய தகவலை இணையத்தில் ஒரு சகோதரர் பதிவிட்டிருந்தார்.

எந்த மொழி பேசுபவராக இருந்தாலும் எந்த இனத்தவராக இருந்தாலும் எந்த நாட்டவராக இருந்தாலும் ஆண்களுக்கென இயல்பான சில குணவியல்புகளும் பெண்களுக்கென சில குணவியல்புகளும் உள்ளன.

பொதுவாக ஓர் ஆணின் மனைவியரிடையே சுமுக உறவு நிலவுவது கிடையாது. இது தமிழில் சக்களத்தி சண்டை என்று பயிலப்பட்டு வருகிறது. பொறாமை, விட்டுக் கொடுக்காமை, நான் முதல் - நீ அடுத்தது என்ற தூரப்படுத்தல், கணவனின் சொத்துக்களையும் வருமானத்தையும் பெறுவதில் ஒவ்வொருவருக்குமிடையில் நிலவும் ஒவ்வாமை போன்ற பல காரணங்களால் ஓர் ஆண்மகனின் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரிடையே கலகமும் பிரச்சினைகளும் ஏற்படுவதை நாம் கண்டு வந்திருக்கிறோம்.

சகோதரி மர்யம் ஜமீலா முகம்மத் யூஸூப்கான் சாஹிபின் இரண்டாவது தாரமாக வாழ்ந்திருந்தார். ஏற்கனவே திருமணம் செய்திருக்காத, தனக்கேற்ற ஓர் இளைஞனைத் திருமணம் செய்வதை விடவும் யூஸூப்கான் சாஹிபின் இரண்டாவது மனைவியாக வாழ்வது தனக்கும் தனது இஸ்லாமிய வாழ்வியலுக்கும் மிகவும் பொருத்தமானதும் சிறந்ததுமான தெரிவாக இருக்கும் என்று அவர் எண்ணியிருக்கக் கூடும். அப்படியானால் யூஸூப்கான் சாஹிபின் மனைவிக்கும் இவருக்குமிடையிலான உறவு எப்படியிருந்திருக்கும்?

இணையத்தில் சகோதரி மர்யம் ஜமீலாவின் வபாத்துக்குப் பின்னர் வந்த செய்தி அதைத்தான் சொல்கிறது. சுகவீனமுற்றிருந்த போது தனது கடைசி நாட்களில் தான் வபாத் ஆகினால் சகோதரி ஷப்கா அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு அருகே தன்னை அடக்கம் செய்யுமாறு சகோதரி மர்யம் ஜமீலா சொன்னதாக அந்தச் செய்தி பேசியது. ஷப்கா யாரெனில் யூஸூப்கான் சாஹிபின் முதலாவது மனைவியாவார்.

ஒரே வீட்டின் மாடியில் சகோதரி மர்யம் ஜமீலாவும் பிள்ளைகளும் அவ்வீட்டின் கீழ்த் தளத்தில் சகோதரி ஷப்காவும் பிள்ளைகளுமாக இறுதி வரை மிகவும் அன்னியோன்யமாக வாழ்ந்ததாகவும் பிள்ளைகளுக்கிடையில் எவ்விதமான வேறுபாடுகளும் இல்லாமல் ஒரே தாயின் பிள்ளைகளைப்போல் வாழ்ந்திருந்ததையும் அந்தத் தகவல் சொன்னது.

தனது கணவரின் முதலாவது மனைவியின் அடக்கஸ்தலத்துக்கு அருகே தன்னுடலை அடக்கம் செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்த சகோதரி மர;யம் ஜமீலா எவ்வளவு அழகான ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கக் கூடும் என்று சிந்தித்துப் பாருங்கள்.

சகோதரி மர்யம் ஜமீலாவின் அழகிய இந்த முன்மாதிரிதான் இன்றைய எனது சிற்றுரையின் முக்கிய புள்ளியாகவும் இருக்கிறது.

இப்போது நாம் சிந்திக்க வேண்டியதெல்லாம் சகோதரிகள் மர்யம் ஜமீலாவும் ஷப்காவும் கொண்டிருந்த ஒற்றுமையும் உறவும் பற்றியதே.

சகோதரி மர்யம் ஜமீலாவை நினைவுகூர்ந்து கொண்டிருக்கும் அதே வேளை காஸாவுக்கான நமது ஒருமைப்பாட்டையும் இன்று இந்த நிகழ்வின் மூலம் நாம் வெளிப்படுத்துகின்றோம். இந்த ஒருமைப்பாடானது அமெரிக்காவில் பிறந்து பாக்கிஸ் தானுக்கு வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு ஒரு கணவரின் இரண்டு மனைவிகளாக வாழ்ந்த இரு சகோதரிகளுக்குமிடையில் நிலவிய இறுகிய பாசத்துக்கொப்பானதே. அதே பாசத்தைப் போன்ற ஒரு ஒரு சகோதர வாஞ்சையுடனும் உடன்பிறப்பு உணர்வுடனும் நாங்கள் எமது சகோதர பூமியான பலஸ்தீனத்தையும் அங்கு வாழ்வுக்காகப் போராடிக் கொண்டி ருக்கும் எங்கள் உறவுகளையும் நினைவு படுத்துகிறோம்.

இந்த நினைவுகூர்தலானது இந்தச் சிறு மண்டபத்துள் நிகழ்ந்த போதும் இது ஆக்கிரமிப்பாளர்களின் அவதானத்துக்குட்படாது என்றோ ஆற்றாமையைக் கொட்டித் தீர்க்கும் நிகழ்வு என்றோ நாம் கருதிவிடக்கூடாது. இந்த நிகழ்வு இங்கே குழுமியிருக்கும் எங்களது கருத்தை வெளிப்படுத்துகைக்கான ஒற்றுமையைக் குறிக்கிறது. உலகளாவிய முஸ்லிம் உம்மத்தின் நலவையும் கஷ்டத்தையும் நாம் ஒன்றிணைந்து உணர்கிறோம் என்பதையும் ஏனையோருக்கும் உணர்த்துகிறோம் என்பதையும் நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.  இந்த நிகழ்வு பற்றிய தகவல் செய்திகளிலும் இணையத்திலும் பகிரப்பட்டுள்ளது. ஆகவே முஸ்லிம் உம்மத் குறித்த ஒருமைப்பாட்டுச் செயல்பாடு ஒன்று நடைபெறுவது முஸ்லிம்களுக்கும் தேசிய மற்றும் சர்வதேசிய ரீதியாக ஏனையோருக்கும் சென்றடைகிறது. இந்த நிகழ்வு முடிந்த பிறகும் செய்திகள் பத்திரிகைகளிலும் இணையத்திலும் வெளிவரும். ஆசிய பசுபிக் பிராந்திய ஸியோனிஸ வலையமைப்பு இந்தத் தகவலையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும் என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

பலஸ்தீனத்திலிருக்கும் காஸா குறித்து நாம் மிகவும் விசனப்படுகிறோம். எழுதுகிறோம், கூடிப் பேசுகிறோம். அவசியப்பட்டால் ஆர்ப்பாட்டங்களையும் செய்து வருகிறோம். காஸாவின் நிலைகுறித்து இன்றைய காலப் பகுதியில் தினமும் ஆகக் குறைந்தது ஒரு முறையாவது அவதானத்தைச் செலுத்தி ஓரளவு தகவல்களைப் பெறுகிறோம். அவலத்தில் வாழும் காஸாவுக்காக நாம் நமது தொழுகைகளில் பிரார்த்திக்கிறோம். தாங்குவதற்குச் சிரமமான செய்திகளை அங்கிருந்து அறியும் போதெல்லாம் நமது மனசு துடிக்கிறது. நம்மையறியாமல் நாம் இறைவனை இறைஞ்சுகிறோம்.

இன்றைய நிலவரத்தின்படி பலஸ்தீன காஸாவில் யுத்த நிறுத்தம் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக அறியக் கிடைக்கிறது.

ஆனாலும் தமது சொந்த நிலத்தில் வாழும் உரிமைக்கான போராட்டத்தை, இழந்த நிலத்தைப் பெறுவதற்கான போராட்டத்தை  அம்மக்கள் தொடர்ந்து முன்னெடுப்பார்கள்.


(மௌலவி ஏ.எல்.எம். இப்றாஹீம், சகோ அஷஷெய்க் ரவூப் ஸெய்ன் மற்றும் நான்)

இந்த வேளையில் இன்னும் சில காஸாக்களைப் பற்றி நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது என்று நான் கருதுகிறேன்.