Friday, December 20, 2013

எல்லாவற்றுக்கும் பிறகு...


- Gகோரன் சிமிக் (பொஸ்னியக் கவிஞர்)

எனது தாயாரின் உடலை
அடக்கம் செய்து விட்டு
ஷெல்கள் மழையாகப் பொழிகையில்
மையவாடியை விட்டு ஓடிய பிறகு

சுருங்கிய முரட்டுத் துணியில் 
எனது சகோதரனை 
திரும்பக் கொண்டு வந்த போது
அவனது எஞ்சிய உடைமைகளை 
இராணுவத்தினரிடம்
ஒப்படைத்த பிறகு

நிலக்கிடங்கை நோக்கி ஓடும்
கிலியூட்டும் எலிகளுடன் 
சேர்ந்து ஓடும்
எனது குழந்தைகளின் கண்களில்
சுவாலைகளைக் கண்ட பிறகு

பயத்தில் நடுங்கிய ஒரு மூதாட்டியை
அடையாளம் கண்டு
அவளது முகத்தை
ஒரு கந்தல் துணியால் 
துடைத்து விட்ட பிறகு

தனது காயத்திலிருந்து வழியும் குருதியை
தெருமுனையில் அமர்ந்து
நக்கிக் கொண்டிருக்கும்
பசியுற்ற ஒரு நாயைக் கண்ட பிறகு

இவை அனைத்தையும் மறந்திருக்க -
வெறுமையானதும் உற்சாகமற்றதுமான
செய்தியறிக்கையைப் போல
ஒரு கவிதை எழுத விரும்பினேன்

அந்த வேளை
தெருவில் சிலர் என்னைக் கேட்டார்கள் -

'அக்கறையற்ற செய்தியாளரைப் போல
எதற்காக நீ
கவிதை எழுதுகிறாய்?'

Thursday, December 12, 2013

கொம்பனித் தெரு முஸ்லிம்கள் நடுத்தெருவுக்கு வந்த கதை!


 - லத்தீப் பாரூக் -
மூன்று ஆண்டுகளுக்கு முன், 2010, மே மாதம், 8 ஆம் நாள். பிற்பகல் வேளை. பாதுகாப்பமைச்சின் கீழ் இயங்குகின்ற நகர அபிவிருத்தி அதிகார சபை, கொழும்பின் மத்திய பகுதியான கொம்பனித் தெரு மீவ்ஸ் வீதியில்  இருக்கின்ற வீடுகளைத் தரை மட்டமாக்குவதற்காக, பொலிஸ் மற்றும் விசேட துருப்பினரைக் களத்தில் இறக்கியது.
தமிழர் ஒருவரினால் உரிமை கொள்ளப்பட்டிருந்த ஒரு வீடு தவிரஇவற்றில் ஏனைய சகல வீடுகளுமே முஸ்லிம்களுடையவையாகும். அவர்களது உடமைகள் பாதையில் தூக்கி எறியப்பட்ட நிலையில்அவர்கள் பலவந்தமாக வெளியேற்றப்படுகிறார்கள்.
 காணி உரிமைப் பத்திரம்வீடுகள் சட்டபூர்வமானவை என்பவற்றை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாகவும்பல தசாப்தங்களாக தாம் இவ்விடத்தில் வசித்து வந்ததாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். இவர்கள் பணி புரிந்ததும்அவர்களது பிள்ளைகள் பாடசாலை சென்றதும் இதன் சுற்று வட்டாரத்தில்தான்.
மனிதாபிமானம் அற்ற முறையில் அவர்களது வீடுகள் தகர்க்கப்பட்ட போது,அவர்களது கனவுகளும் இரவோடிரவாகத் தகர்ந்து போயின. மட்டக்குலியில் பலகையால அமைக்கப்பட்ட தற்காலிகக் குடியிருப்புகளுக்கு அவர்கள் அனுப்பப்படுகிறார்கள். 
இவ்வெளியேற்றத்தை நியாயப்படுத்திதேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் விடுத்திருந்த அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. மீவ்ஸ் தெருவில் அமைந்துள்ள பாதுகாப்பு சேவைப் பாடசாலை (Defence Services School)உடன் இணைந்த காணியில் வசித்து வந்தஅனுமதி வழங்கப்படாத குடியிருப்பாளர்களை அகற்றும் பணிமிகவும் நீதியானமனிதாபமானசட்ட ஒழுங்குகளுக்கு இயைபான முறையில் மேற்கொள்ளப்பட்டது. குறித்த இந்நிலம் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு (UDA) சொந்தமானதாகும். முறையான அனுமதி பெறாத நிலையில் குடியிருப்பாளர்கள் வசித்து வந்த போதிலும்மனிதாபமான ரீதியான காரணங்களைக் கருத்திற்கொண்டுஅவர்கள் நஷ்டஈடு வழங்கப்பட்டதோடு,நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலையீட்டோடுமாற்றுத் தங்குமிடங்களும் வழங்கப்பட்டன. சட்ட விரோதக் குடியிருப்பைக் காலி செய்யுமாறு தொடர்ச்சியாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வந்த போதும்அவர்கள் அதனை பொருட்படுத்தவில்லை. இந்நிலையில்நஷ்டஈடும்மாற்றுக் குடியிருப்புக்களும் வழங்கப்பட்டுமே 7 ஆம்திகதி, 2010 வெள்ளிக்கிழமை அன்று அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.
நாட்டைப் பயங்கரவாதத்திடம் இருந்து பாதுகாப்பதற்காக சுயநலமற்ற உறுதியோடும்தியாகத்தோடும் செயல்பட்ட பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகளுக்குப் போதுமான கல்வி வசதிகளை செய்து கொடுக்கும் நோக்கத்துடன்சில ஆண்டுகளுக்கு முன்பு Defence Service Schoolஆரம்பிக்கப்பட்டது. பாடசாலையின் தற்போதைய வசதிகளை மேம்படுத்திஅதனை அபிவிருத்தி செய்வதற்குகுறித்த நிலத்தை சுவீகரிப்பது அவசியமானதாக இருந்தது. எனவேதான்அரசாங்கம் இத்தீர்மானத்தை எடுத்தது. அது மிகவும் நீதியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டது”. இவ்வாறு அவ்வூடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
si evitஎதிர்பார்க்கப்பட்டது போலவேவீடுகள் தகர்க்கப்பட்ட போதுபதட்ட நிலையொன்று உருவானது. குடியிருப்பாளர்களுக்கும்பொலிஸாருக்கும் இடையில் நடந்தமோதலில்,பொலிஸ் அதிகாரியொருவர் காயமடைந்தார். சில நாட்கள் கழித்து, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், இருக்கமான பாதுகாப்பிற்கு மத்தியிலும், வீட்டு உரிமையாளர்கள் வீதிப் போராட்டம் ஒன்றை நடாத்தினார்கள். மே, 14, 2010 அன்று இது தொடர்பாக பின்வருமாறு டெய்லி மிரர் செய்தி வெளியிட்டிருந்தது. லிப்டன் சதுக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது பேசுகையில், நீதி அமைச்சர் ரவூப் ஹகீம் அவர்கள் நகர அபிவிருத்தி அதிகார சபையை வழிநடாத்துகின்ற பாதுகாப்புச் செயலாளருக்கு மக்களைப் பலவந்தமாக வெளியேற்ற எந்த உரிமையும் இல்லை. அவர் தனது சகோதரர் ஜனாதிபதி ராஜபக்ஷவினால் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்துபவரே அல்லாமல், மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் அல்லர். இம்மக்கள் வெளியேற்றப்பட்ட முறை கருணையற்றதாகும். இரண்டு மணித்தியாலத்திற்குப் பதிலாக குறைந்த பட்சம் ஒரு மாதமாவது இவர்கள் காலக்கெடு வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்”.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வீட்டுரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்தார்கள். தெமடகொடவில் மாற்று இட வசதி செய்து தருவதாக இதன் போதுநகர அபிவிருத்தி அதிகார சபையும் இணங்கியது. புதிதாகக் கட்டப்பட்டு வந்த தொடர்மாடிக் குடியிருப்பில் இவர்களுக்கு மாற்று வீடுகள் வழங்கப்படும் என சட்டமா அதிபர் அவர்களும் இணங்கியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அரசாங்கம் சொன்ன மாதிரி தெமடகொடையில் வீடுகளை அமைத்தது. துரதிஷ்டவசமாக ஆளும் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவின் ஆதரவாளர்களான பொரல்லையைச் சேர்ந்த மக்கள் மத்தியில் அவை பங்கு வைக்கப்பட்டன.
பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷகொழும்பு மேயர் A.J.M. முஸம்மில் ஆகியோர் கலந்து கொண்டிருந்த நிகழ்வில்மிஹிந்து சேன்புர என்ற இந்த வீட்டுத் தொகுதிஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது. முன்பு கொழும்பில் சிறு குடில்களில் வசித்து வந்தவர்கள் மத்தியில் இவ்வீடுகள் கட்சி பேதமின்றிப் பங்கு வைக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

Wednesday, December 11, 2013

பெட்டை நாய்


மிருணாள் பாண்டே

நான்கு வயதுப் பெண் பிள்ளைக்கு ஒரு நாயைத் திருமணம் செய்து வைத்ததாகப் பத்திரிகையில் செய்தி ஒன்று வந்திருந்தது. குடும்ப தோஷத்தைக் கழிப்பதற்காக நடத்தப்பட்ட திருமணம் இது.

ஒரு கையில் இரண்டு தும்புத் தடிகளுடனும் மறுகையில் பேணியொன்றுடனும் வீடு சுத்தம் செய்பவளான கௌரி உள்ளே வந்தாள். பெங்காலிக்காரியான கௌரி சட்டபூர்வமற்ற சேரிப்புறக் குடியிருப்பில் வசிப்பவள். நான்கு பிள்ளைகளின் தாயான அவளை அவளது கணவனான ஹரன் கைவிட்டு விட்டுப் போய்விட்டான். அதிகம் உழைக்க வேண்டும் என்பதற்காக எங்கள் வீட்டில் அவள் வேலை செய்யவில்லை. உண்மையில் கௌரியின் மகளான சுமித்ராதான் எங்கள் வீட்டைச் சுத்தம் செய்து வந்தவள். கணவனால் கைவிடப்பட்ட சுமித்ரா வேறொருவனுடன் சேர்ந்து வாழ்வதற்காக யமுனை நதிக் கரையோரத்திலுள்ள சேரிப்புறக் குடிசைப் பகுதிக்குச் சென்று விட்டாள்.

'ரி.வி. மேடம்' வீட்டு வேலையைத் தன்னைப் பொறுப்பெடுக்குமாறும் ஒவ்வொரு அறையாக உனக்குப் பின்னால் வந்து அவங்க பார்த்துக் கொண்டிருக்கமாட்டாங்க என்றும் நீ கொண்டு போகும் பிளாஸ்டிக் பையைச் சந்தேகப்பட்டுச் சோதனை போட மாட்டாங்க என்றும் சுமித்ரா தனக்குச் சொன்னதாக கௌரி என்னிடம் சொன்னாள்.

'ஒதுங்குங்க!'

கௌரி எனக்குக் கட்டளையிட்டாள். நான் எனது கால்களைத் தூக்கி சோபாவில் வைத்தேன். மூங்கிலாலான துடைப்பத்தால் சுத்தப்படுத்தத் தயாரானாள்.

'முதல்ல... இங்க வா!'

அவளை அழைத்துப் பத்திரிகையில் இருந்த சிறிய பெட்டை நாயின் படத்தைச் சுட்டிக் காட்டினேன்.

'பாரு... இவள் உங்க ஏரியாதான்... ஆக நான்கு வயசுதான் ஆகுது இவளுக்கு. இவளுடைய பெற்றோர் இவளுக்கு கல்யாணம் செய்து வச்சிருக்காங்க - ஒரு நாயை!'

நாடகப்பாணியில் ஒரு இடை வெளி விட்டு வசனத்தை முடித்தேன்.

'ஓஹோ...!'

என்றவள் தனது வேலையைச் செய்து கொண்டே சொன்னாள்:-

'இனியென்ன? அவள் அவங்க மகள். அவங்க அவளை அவங்க விரும்பிமாதிரி யாருக்கு வேணுண்ணாலும் கல்யாணம் முடிச்சுக் கொடுக்கலாம்தானே!'

'ஆனா இது சட்ட விரோதம்னு உனக்குத் தெரியாதா? பொலீஸ்...'

'எந்தப் பொலீஸூ?'

'உள்ளூர் பொலீஸ்தான்....'

'இல்ல.. இல்ல.. பொலீஸ் எதுக்குக்குத் தொந்தரவு செய்யணும்?'

'ஏனென்டா.. ஒரு பெண் பிள்ளை 18 வயசாக முந்திக் கல்யாணம் முடிக்க ஏலாது.. அதுதான் சட்டம்..'

'இனியென்ன... அவள் ஒரு ஆம்பிளையை முடிக்கல்லியே...'

'கௌரி... உனக்குத் தெரியாதா... அவளின் பெற்றோர் இப்பவே சிறைக்குப் போற நிலையிலதான் இருக்காங்க... இந்தக் காரியத்துக்காக....'

'அவங்களுக்கெதிரா யாரு பேசுவாங்க... நாயா...?'

கௌரி சிரிப்புத் தாங்காமல் நிலைகுலைந்தாள்.

'இது சிரிக்கிற விஷயமில்லை...'

நான் சொன்னேன். ஆனால் நானும் சிரித்தேன்.
'ஓ......... ம்மா...  குறைஞ்சது குடிச்சிட்டு வீட்டுக்கு வந்து அது அவளை அடிக்காது. ரிஸ்ட் வாட்ச் கேட்டு இல்லாட்டி பைசிக்கிள் வாங்கித் தரச் சொல்லி அவளது கையை முறுக்காது.. எவ்வளவு கெதியா முடியுமோ அவ்வளவு கெதியா அவளைக் கர்ப்பிணியாக்கிப் போட்டு இன்னொருத்தியை இழுத்துட்டு ஓடிப் போகாது. மனிசனின் மகனை விட ஒரு பெட்டை நாயின் மகன் எல்லா நாளும்... ம்மா.. எல்லா நாளும் சிறந்தது...'

'ஆனா அந்தப் பொண்ணு...'

'பொண்ணுக்கு என்ன... அவள் பார்க்கச் சந்தோசமாத்தானே இருக்கிறாள். நிறைய சுவீட்ஸ் சாப்பிட்டிருப்பாள்.. புதிய ஆடை அணிந்திருப்பாள்... இதுக்கு மேல ஒரு பிள்ளைக்கு என்ன வேணும்?'

Friday, December 6, 2013

காலம் என்பது ஒரு கனவு!


30.01.2000 அன்று “விபவி”, வெள்ளவத்தை பெண்கள் ஆய்வு நிறுவகத்தில் புத்தாயிரப் பிறப்பை முன்னிட்டு கவியரங்கு ஒன்றை நடத்தியது. கவிதை படித்தவர்கள் இருவர்தான். ஒருவர் நண்பர் சிதம்பரப் பிள்ளை சிவகுமார். மற்றது நான். இந்தக் கவிதையை எனது பழைய கோப்பு அடுக்குகளிலிருந்து இன்றுதான் கண்டெடுத்தேன். அக்கவியரங்கின் ஞாபகார்த்தமாக அக்கவிதையின் முக்கிய பகுதிகளை இங்கு தருகிறேன்.

ஆண்டுகள் மாறியபோதெல்லாம்
அடையாளம் காட்டியது
நெருப்புத்தான்!

ஒரு பெருந்தீ எழுந்தபோது
ஒரு யுகம் முடிந்து போனது
ஒரு யுகம் மலர்வதானது...

பழைய ஆயிரத்தாண்டும்
புதிய ஆயிரத்தாண்டும்
பெருநெருப்பில்தான்
கைகுலுக்கிக் கொண்டன...

நான் -
வான - வாண வேடிக்கை
விநோதங்களைச் சொல்கிறேன்

நெருப்பு -
ஒரு புதிய விஷயமல்ல
ஆடையற்ற ஆதி விஞ்ஞானியின்
அரிய கண்டுபிடிப்பு அது

நம் முன்னோரை விட
நாம்
அதிகம் வித்தியாசப்பட்டுவிடவில்லை

அவன் ஆடையில்லாதிருந்தான்
நாம்
ஆடையிழக்க அவதிப்படுகிறோம்

அவன் அவித்துச் சாப்பிட்டான்
நாமும்
அவித்துக் கொண்டிக் கொள்கிறோம்

அவன் மிருகங்களைக் கொன்றான்
நாம்
மனிதர்களையும் சேர்த்துக் கொல்கிறோம்

அவன் சிந்தனையில் ஏறுவரிசை
நம் சிந்தனையில் இறங்குவரிசை

அவன் தெரிந்து கொள்ள முயன்றான்
நாம் மறந்துவிட முயல்கிறோம்

அவனுக்கும் அவசியமாயிருந்தது நெருப்பு
நமக்கும் அவசியமாயிருக்கிறது நெருப்பு -
யாருக்கேளும் வைப்பதற்கு!

ஆக நம் முன்னோரை விட 
நாம்
அதிகம் வித்தியாசப்பட்டுவிடவில்லை!

00

ஆகாயத்தில் நெருப்புச் சிரித்த போது
கும்மாளமிட்டுக் குதூகலித்தது 
ஒரு கூட்டம்

அதே நெருப்பு வயிற்றில் சிரித்தபோது
வாழ்த்துச் சொல்வதற்கும் வலுவின்றி
வாடிக் கிடந்தது
ஒரு கூட்டம்

ஆகாயத்தில் நெருப்புச் சிரித்போது
நீரில் மிதந்தது ஒரு கூட்டம்
அது -
மது!

ஆகாயத்தில் நெருப்புச் சிரித்போது
நீரில் மிதந்தது மற்றொரு கூட்டம்
அது- 
கண்ணீர்!

நெருப்பு வாழ்க்கை முழுவதும்
நெருங்கியே இருக்கிறது

நெருப்பு
பயமாகப் பரவி வருகிறது
இன ஒதுக்கலாய் எழுந்து நிற்கிறது
வறுமையாய் வடிவம் எடுக்கிறது
யுத்தங்களாய்
யுகங்கள் தாண்டி வருகிறது

00

புத்தாயிரம் வந்து விட்டதில்
புதுமை என்ன இருக்கிறது

புத்தாயிரம் -
காலம்!

காலத்துக:கு வரவு சொல்லும்
கவியரங்கு இது!

காலம் -
ஒருபோதும் வருவதில்லை
அது -
செல்கிறது!

காலம் என்பது ஒரு கனவு
அது தொடர்வதே இல்லை

காலம் என்பது ஓர் அரிதட்டு
அதில் எதுவும் எஞ்சுவதில்லை

காலம் என்பது
ஓர் ஓட்டைப் பாத்திரம்
அது எப்போதுமே நிரம்புவதில்லை

நாளை என்றொரு நாள்
நம்மைத் தேடி
வருவதேயில்லை!