Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Wednesday, March 25, 2015

நீ படித்த பெரும் படிப்பு!

போகும் போதிருந்ததை விட
இரண்டு சுற்றுப் பருத்திருந்தாய்
பெயருக்குப் பின்னால்
ஏகப்பட்ட ஆங்கில எழுத்துக்கள்
புள்ளிகளுடன்...

பெரும்புள்ளிதான் இனி நீ
தொங்கல் வரை படித்திருக்கிறாய்

விமான நிலையத்துக்கு வந்திருந்த
சொகுசுக் காரில்
ஒரு தேசத் தலைவனைப் போல்
வந்திறங்கினாய் ஊரில்

சில நாட்களில்
கார் அனுப்பிய வீட்டில் இருந்த
பெண்ணிடம் அடைக்கலமானாய்
சொத்துக்களுக்கு அதிபதியானாய்..

அந்நாள் நண்பர்களைக் கண்டால்
ஒரு லேசான தலையாட்டலுடன்
துண்டித்துக் கொண்டாய்

ஊர் அழுக்காக இருப்பதால்
நீ வெளியே வருவதில்லை

அந்நதள் நண்பர்களைக் கண்டால்
ஒரு லேசான தலையாட்டலுடன்
துண்டித்துக் கொண்டாய்

உன்னை மறந்து விடாத பலரை
நீ
மறந்திருந்தாய்!

திருமண வீட்டிலும்
மையித்து வீட்டிலும்
அழைக்கப்படும் பொது நிகழ்வுகளிலும்
பிரமுகரின் கதிரை வரிசையை
எதிர்பார்த்தாய்..

எல்லாமே பழங்காலத்தில் இருப்பதாகத்
தோன்றியது உனக்கு,
பெற்றார், உற்றார், நண்பர் உட்பட
நவீன யுகத்துக்கு மாறாதிருக்கும்
இந்த சமூகத்தின் மீது
சீற்றம் வந்தது உனக்கு!

உனது பாதம் படுமிடங்களிலெல்லாம்
பணம் வரவேண்டுமென்று
நினைத்தாயேயொழிய
நான் என்ன செய்ய வேண்டும்
என்று எண்ண
உன் படிப்பு இடந்தரவில்லை

யார் எந்தச் சிக்கலோடு வந்தாலும்
இறுதித் தீர்ப்பு
உன்னுடையதாக இருக்க வேண்டும்
என்று நினைத்தாய்
ஏனெனில்
உனது படிப்பு அத்தகையது!

உன்னைக் கண்டுகொள்ளத சமூகம்
உருப்படமாட்டாது
என்று தோணுகிறது உனக்கு
ஏனெனில்
தூரநோக்கு உனக்கு மட்டுமே விளங்கும்
அப்பேர்க்கொத்த படிப்பு அது!

நீ மட்டும்
பேசுவதைத்தான்
மற்றவர்கள் கேட்க வேண்டும்
என்று நினைக்கிறாய்
மற்றவர்கள் பேச
நீ கேட்க முடியாது என்பதில்
நியாயம் உண்டு
நீ
தொங்கல் வரை படித்திருப்பதால்!

பிள்ளைகளைத்
தொங்கல் வரை படிப்பிக்க வேண்டுமெனவும்
கற்ற சமூகமே உயிர்க்குமெனவும்
அன்று ஒரு கூட்டத்தில்
உன் குரல் கேட்டது!

நான் சொல்வது என்னவெனில்
உன்னைப் போல் உயர்வதற்கு
தொங்கல் வரை படிப்பதை விட
பம்பாய் முட்டாயோ
பப்படமோ விற்றுப் பிழைப்பது
பெருங் கௌரவம் என்பதைத்தான்!

25.03.2015

Friday, August 1, 2014

நாங்கள்தாம் பலஸ்தீனியர்கள்!


- Gary Corseri -

மூஸா (அலை) வினது அல்லது ரோமர்களது
வருகைக்கு முன்பு
ஈஸா (அலை) வினது அல்லது முஹம்;மது (ஸல்) 
அவர்களது வருகைக்கு முன்பு
துருக்கியருக்கும் ஆங்கிலேயருக்கும் முன்பு
நாங்கள் இந்த நிலத்தில் வாழ்ந்திருந்தோம்!

புழுதியிலிருந்து நாங்கள்
நகரங்களை எழுப்பினோம்
கண்ணீர் கொண்டு நீரிறைத்தோம்
மகிழ்ச்சியில் திழைத்திருந்தோம்
கைவிடப்பட்டிருந்த கடல்களில்
மீன் பிடித்தோம்
குளிர்மிகு ஒலிவ் தோட்டங்களில்
எங்களது பிள்ளைகளின்
திருமணங்களை வாழ்த்தினோம்!

என்றென்றும் சாசுவதமான
'மக்கள்' என்ற சொல்லை
எங்களுக்கு நாங்களே சூட்டிக் கொள்வதில்
ஒருபோதும் கவலை கொண்டதில்லை

ஆக்கிரமிப்பாளர்கள் வருகை தந்தனர்
எங்களது நிலத்தில் அணிவகுத்துச் சென்றனர்
இரும்பு ஆயுதங்களையும்
ஆகாயக் கடவுளரையும் கொண்டு வந்தனர்
எமது குழந்தைகளைப் படுகொலை செய்தனர்

முதிய ஆண்கள் இறைவனை வணங்கினர்
வணங்கிய இடத்திலேயே
அவர்கள் படுகொலையாயினர்
பெண்கள் ஒப்பாரி வைத்தனர்
ஒப்பாரி வைத்த இடத்திலேயே
அவர்கள் படுகொலையாயினர்

உலக சபைக்கு மனுக்கள் எழுதினோம்
சபையே எங்களைப் பார்த்துச் சிரித்தது
கருணை, புரிதல், அமைதி, நீதி
இவையெல்லாம் வேண்டி
சர்வ வல்லமைகளிடம் முறையீடு செய்தோம்
சிலபோது அவர்கள் அமைதியாகச் செவிமடுத்தார்கள்
(நாங்கள் அவர்களது விளையாட்டுக்கென
அடகு வைக்கப்பட்டவர்கள்)
பலபோது எங்கள் காயங்களைப் பார்த்து
அவர்கள் கொட்டாவி விட்டனர்

பாலைச் சூரியன் சுட்ட
எமது தோல் நிறம் கருப்பானது
இளஞ்சிவப்பு நிறத்தோல் கொண்ட
அமெரிக்கர் வந்தனர்
இளஞ்சிவப்பு நிறங்கொண்ட பிள்ளைகளுடன்
வெள்ளை நிறப் பெண்கள்
இங்கிலாந்திருந்து வந்தனர்
இது எமது நிலமென்றனர்
அவர்களே அவர்களை
செமித்தியர் என்றனர்
அவர்களது நிறமோ
செமித்தியர்களின் நிறமாயிருக்கவில்லை
பொன்நிறத் தலை மயிரும்
நீலக் கண்களும் 
செமித்தியருக்குரியவை அல்ல!

நாங்கள் சுதந்திரமற்றிருக்கும் வரை
எல்லா ஆண்களும் சுதந்திரமற்றவர்களே
எமது சிறார்கள்  சுவர்களுக்குள் உள்ள வரை
எல்லாச் சிறார்களும்  
சுவர்களுக்குள்ளேயே இருப்பார்கள்
உங்களது சிறாருக்குத் தேவைப்படுவதைவிட
குறைந்த அளவே
எமது சிறார்களுக்கு
எதிர்பார்க்கிறோம் என்று நினைக்கிறீர்களா?
உங்கள் சிறார்களை விடவும்
குறைந்தளவு பெறவேண்டியவர்கள்
என்றா நினைக்கிறீர்கள்?
எமது அப்பாவிச் சிறுவர்கள்
பெறுமதி குறைந்தவர்களா?
அவர்களது சிரிப்பும் அழுகையும்
மதிப்புக் குறைந்தவையா?
அவர்களும் இந்தப் பூமியின்
குழந்தைகள் இல்லையா?
அவர்களும் இறைவனின்
குழந்தைகள் இல்லையா?
எமது ஆண்கள் குறைந்த வீரமும்
எமது பெண்கள் குறைந்த துணிச்சலும்
கொண்டவர்களா?

நாங்கள் மக்கள் -
இந்த நிலத்துக்குச் சொந்தமுள்ள மக்கள்
அதனால்தான் உங்களிடம்
பெரிய மீனைக் கோருகிறோம்
உங்களை உள்ளாரக் குடையும்
நாடாப் புழு எத்தகையது?
நீங்கள் கௌரவத்தை இழந்து விட்டீர்களா?

நீங்கள் கடவுள் பற்றிப் பேசுகிறீர்கள்
ஆனால் குழந்தைப் பலி கேட்கும்
தெய்வத்திடம் தலை குனிகிறீர்கள்
அந்தத் தெய்வத்துக்கு
உங்கள் குழந்தைகளைப் பலி கொடுக்குறீர்கள்
மற்றவர் குழந்தைகளையும் பலி கொடுக்கிறீர்கள்
உங்களது குழந்தைப் பலி கேட்கும் தெய்வம்
மற்றவர் குழந்தைகளைப் பலி கொண்டு
பெருத்து வளர்ந்து கொண்டிருக்கிறது

பலமும் செல்வமும் 
உங்களை நுகர்கின்றன
மலைகளைத் தகர்க்கிறீர்கள்
பெண்களை அச்சமூட்டிப் பணிவிக்கிறீர்கள்
உங்களது புத்தகங்களில்
உங்களது பெயர்களைக் காண்பிக்கிறீர்கள்
ஆனால்
மரங்களின் வேர்களில் எழுதப்பட்டும்
பழம் பாறைகளில் பொழியப்பட்டும் இருக்கும்
எமது பெயர்களை
உங்களால் கண்டடைய முடியவில்லை

முழங்கும் ஆயிரமாயிரம் யுத்தத் தாங்கிகளால்
எங்களைப் பணிய வைக்க முடியவில்லை
உண்மை கருப்பு நிறம் கொண்டது
நாமும் கருப்பு நிறமான
எமது கண்களால்தான் பார்க்கிறோம்
துருக்கியர் வந்தார்கள்
அவர்க்குப் பிறகு மற்றவர்களும் வந்தார்கள்
ஆங்கிலேயர் வந்தார்கள்
அவர்களுக்குப் பின்
மற்றவர்கள் வந்தார்கள்
கடவுளின் பெயரால்
அவர்கள் கொலை புரிந்தார்கள்
கடவுளின் பெயரால்
கடவுளையே கொலை செய்தார்கள்

நாங்கள்தாம் பலஸ்தீனியர்கள்
எங்கள் வாழ்வாதாரங்களை
எடுத்துக் கொள்ளத வரை...
எம்மை தாழ்மைப்படுத்தாத வரை..
நாங்கள் வாழ்பவர்கள்
வாழவும் விடுபவர்கள்

நாங்கள் சுதந்திரமற்றிருக்கும் வரை
எல்லா ஆண்களும் சுதந்திரமற்றவர்களே
எமது சிறார்கள்  சுவர்களுக்குள் உள்ள வரை
எல்லாச் சிறார்களும்  
சுவர்களுக்குள்ளேயே இருப்பார்கள்
எங்கள் வணிகத்துக்கான உபகரணங்களைக்
காலம் கூர்மைப்படுத்துகிறது
துயரம் எங்களை
மெருகு படுத்துகிறது
நாங்கள் எங்களது கருவிழி கொண்டே
பார்க்கிறோம்!

Saturday, July 26, 2014

நான்தான் யூஸூஃப்!


மஹ்மூது தர்வேஷ்

எனது தந்தையே..
நான் தான் யூஸூப்!

எனது தந்தையே..
எனது சகோதரர்கள் 
என்னை விரும்புகிறார்களில்லை!

அவர்களுக்கிடையில்
நானும் ஒருவனாயிருப்பதை
அவர்கள் விரும்புகிறார்களில்லை!

அவர்கள் என்னைத் தாக்குகிறார்கள்,
கற்களையும் சொற்களையும்
என்னை நோக்கி வீசுகிறார்கள்!

நான் மரணிக்க வேண்டும்
என்பது அவர்களது விருப்பம்,
அப்படி நடந்தால்
அவர்கள் என்னைப் புகழுவார்கள்!

உங்களது வீட்டுக் கதவை
இறுகப் பூட்டுகிறார்கள்,
என்னை வெளியில் விட்டு விட்டு!

வெளிகளிலிருந்து
என்னைத் துரத்தியடிக்கிறார்கள்!

எனது திராட்சைப் பழங்களில்
அவர்கள் நஞ்சு கலக்கிறார்கள்!

என் தந்தையே
எனது விளையாட்டுப் பொருட்களையெல்லாம்
அவர்கள் உடைத்து விட்டார்கள்
எனது தந்தையே...

எனது தலை மயிர்களில்
தென்றல் விளையாடுவதைக் கண்டு
அவர்கள் பொறாமைப்படுகிறார்கள்!

உங்கள் மீதும் என் மீதும்
அவர்கள்
வெறித்தனமாகத் தீ மூட்டுகிறார்கள்!

அவர்களிடமிருந்து
நான் எவற்றைக் களவாடினேன் தந்தையே?

எனது தோளில் 
பட்டாம்பூச்சிகள் வந்தமர்ந்தன
கோதுமை என்பக்கம் தலை சாய்ந்தது
எனது உள்ளங் கைகளில்
பறவைகள் உறங்கின..

நான் என்னதான் செய்து விட்டேன்
என் தந்தையே?
ஏன் எனக்கு இது?

நீங்கள்தான் யூஸூப் என்று
எனக்குப் பெயரிட்டீர்கள்!

அவர்கள் என்னைக்
கிணற்றில் வீசிவிட்டு
ஓநாயைக் குற்றம் சாட்டினார்கள்

ஓநாய்கள்
என் சகோதரர்களை விடவும்
கருணை மிக்கவை!

தந்தையே
பதினொரு நட்சத்திரங்களும்
சூரியனும் சந்திரனும்
என்னைச் சிரம்பணியக் கனவு கண்டேன்
என்று நான் சொன்னதில்
ஏதாவது தவறு செய்து விட்டேனா?

-தமிழில் - அஷ்ரஃப் சிஹாப்தீன்

Friday, December 20, 2013

எல்லாவற்றுக்கும் பிறகு...


- Gகோரன் சிமிக் (பொஸ்னியக் கவிஞர்)

எனது தாயாரின் உடலை
அடக்கம் செய்து விட்டு
ஷெல்கள் மழையாகப் பொழிகையில்
மையவாடியை விட்டு ஓடிய பிறகு

சுருங்கிய முரட்டுத் துணியில் 
எனது சகோதரனை 
திரும்பக் கொண்டு வந்த போது
அவனது எஞ்சிய உடைமைகளை 
இராணுவத்தினரிடம்
ஒப்படைத்த பிறகு

நிலக்கிடங்கை நோக்கி ஓடும்
கிலியூட்டும் எலிகளுடன் 
சேர்ந்து ஓடும்
எனது குழந்தைகளின் கண்களில்
சுவாலைகளைக் கண்ட பிறகு

பயத்தில் நடுங்கிய ஒரு மூதாட்டியை
அடையாளம் கண்டு
அவளது முகத்தை
ஒரு கந்தல் துணியால் 
துடைத்து விட்ட பிறகு

தனது காயத்திலிருந்து வழியும் குருதியை
தெருமுனையில் அமர்ந்து
நக்கிக் கொண்டிருக்கும்
பசியுற்ற ஒரு நாயைக் கண்ட பிறகு

இவை அனைத்தையும் மறந்திருக்க -
வெறுமையானதும் உற்சாகமற்றதுமான
செய்தியறிக்கையைப் போல
ஒரு கவிதை எழுத விரும்பினேன்

அந்த வேளை
தெருவில் சிலர் என்னைக் கேட்டார்கள் -

'அக்கறையற்ற செய்தியாளரைப் போல
எதற்காக நீ
கவிதை எழுதுகிறாய்?'

Friday, December 6, 2013

காலம் என்பது ஒரு கனவு!


30.01.2000 அன்று “விபவி”, வெள்ளவத்தை பெண்கள் ஆய்வு நிறுவகத்தில் புத்தாயிரப் பிறப்பை முன்னிட்டு கவியரங்கு ஒன்றை நடத்தியது. கவிதை படித்தவர்கள் இருவர்தான். ஒருவர் நண்பர் சிதம்பரப் பிள்ளை சிவகுமார். மற்றது நான். இந்தக் கவிதையை எனது பழைய கோப்பு அடுக்குகளிலிருந்து இன்றுதான் கண்டெடுத்தேன். அக்கவியரங்கின் ஞாபகார்த்தமாக அக்கவிதையின் முக்கிய பகுதிகளை இங்கு தருகிறேன்.

ஆண்டுகள் மாறியபோதெல்லாம்
அடையாளம் காட்டியது
நெருப்புத்தான்!

ஒரு பெருந்தீ எழுந்தபோது
ஒரு யுகம் முடிந்து போனது
ஒரு யுகம் மலர்வதானது...

பழைய ஆயிரத்தாண்டும்
புதிய ஆயிரத்தாண்டும்
பெருநெருப்பில்தான்
கைகுலுக்கிக் கொண்டன...

நான் -
வான - வாண வேடிக்கை
விநோதங்களைச் சொல்கிறேன்

நெருப்பு -
ஒரு புதிய விஷயமல்ல
ஆடையற்ற ஆதி விஞ்ஞானியின்
அரிய கண்டுபிடிப்பு அது

நம் முன்னோரை விட
நாம்
அதிகம் வித்தியாசப்பட்டுவிடவில்லை

அவன் ஆடையில்லாதிருந்தான்
நாம்
ஆடையிழக்க அவதிப்படுகிறோம்

அவன் அவித்துச் சாப்பிட்டான்
நாமும்
அவித்துக் கொண்டிக் கொள்கிறோம்

அவன் மிருகங்களைக் கொன்றான்
நாம்
மனிதர்களையும் சேர்த்துக் கொல்கிறோம்

அவன் சிந்தனையில் ஏறுவரிசை
நம் சிந்தனையில் இறங்குவரிசை

அவன் தெரிந்து கொள்ள முயன்றான்
நாம் மறந்துவிட முயல்கிறோம்

அவனுக்கும் அவசியமாயிருந்தது நெருப்பு
நமக்கும் அவசியமாயிருக்கிறது நெருப்பு -
யாருக்கேளும் வைப்பதற்கு!

ஆக நம் முன்னோரை விட 
நாம்
அதிகம் வித்தியாசப்பட்டுவிடவில்லை!

00

ஆகாயத்தில் நெருப்புச் சிரித்த போது
கும்மாளமிட்டுக் குதூகலித்தது 
ஒரு கூட்டம்

அதே நெருப்பு வயிற்றில் சிரித்தபோது
வாழ்த்துச் சொல்வதற்கும் வலுவின்றி
வாடிக் கிடந்தது
ஒரு கூட்டம்

ஆகாயத்தில் நெருப்புச் சிரித்போது
நீரில் மிதந்தது ஒரு கூட்டம்
அது -
மது!

ஆகாயத்தில் நெருப்புச் சிரித்போது
நீரில் மிதந்தது மற்றொரு கூட்டம்
அது- 
கண்ணீர்!

நெருப்பு வாழ்க்கை முழுவதும்
நெருங்கியே இருக்கிறது

நெருப்பு
பயமாகப் பரவி வருகிறது
இன ஒதுக்கலாய் எழுந்து நிற்கிறது
வறுமையாய் வடிவம் எடுக்கிறது
யுத்தங்களாய்
யுகங்கள் தாண்டி வருகிறது

00

புத்தாயிரம் வந்து விட்டதில்
புதுமை என்ன இருக்கிறது

புத்தாயிரம் -
காலம்!

காலத்துக:கு வரவு சொல்லும்
கவியரங்கு இது!

காலம் -
ஒருபோதும் வருவதில்லை
அது -
செல்கிறது!

காலம் என்பது ஒரு கனவு
அது தொடர்வதே இல்லை

காலம் என்பது ஓர் அரிதட்டு
அதில் எதுவும் எஞ்சுவதில்லை

காலம் என்பது
ஓர் ஓட்டைப் பாத்திரம்
அது எப்போதுமே நிரம்புவதில்லை

நாளை என்றொரு நாள்
நம்மைத் தேடி
வருவதேயில்லை!


Wednesday, May 8, 2013

நெருடும் நினைவுகள்!

எத்தனை தூரம்
அன்பாய் இருந்தோம்!

முன்பு இந்தச்
சின்னஞ்சிறிய வீட்டில் நாங்கள்
எத்தனை தூரம் அன்பாய் இருந்தோம்!

ஒரு பாய்த்துண்டில்
ஒன்றாய் உறங்கினோம்
ஒரே கலயத்தில் ஒன்றாய் உண்டோம்!

சின்னஞ் சிறிய எங்கள் வீட்டைச்
சிதைக்க யாரும் சேர்ந்து வந்தால்
உதைப்பது என்று உறுதிகள் செய்தோம்!
இயலாமையால் இடர்பட நேர்கையில்
சாவது என்று சத்தியம் செய்தோம்...!

பனிமழை தூவும் பகல் நிலவிரவில்
பண்பொடு ஒன்றாய்ப் படுத்துக் கிடந்து
சின்னஞ சிறிய எங்கள் வீட்டின்
சிறப்பை உயர்வைச் சிந்தனை செய்தோம்...!

இருந்தாற் போலொரு இரவுப் பொழுதில்
விண் மீன் கூட விழிக்கவும் இல்லை -
எங்களில் ஒருவன் படுத்த இடத்தில்
தீ நாக்கொன்று திடீரென் றெழுந்தது!

நெருப்புச் சுட்ட நண்பன் தனது
குரல்வளை நரம்பு தெறிக்கக் கத்தினான்...
அருகே படுத்தவன் நெருப்பின் புகையில்
கண்களைக் கொஞ்சம் கசக்கிக் கொண்டான்..!
ஒன்றாய் இருசரும் ஒரே மூச்சுடனே
வீட்டிலிருந்து வெளியே பாய்ந்தனர்!

நெருப்புச் சுட்டவன் உடம்பிற் சிற்சில
இரத்தக் காயம் விழித்துப் பார்த்தது..
அருகே படுத்தவன் கைகளிலி கூட
இரத்தம் கசிந்தது... துடைத்துக் கொண்டான்...!

கூக்குரல் வீட்டை விட்டும் வெளியே
வந்தது... பலரை வியக்கச் செய்தது..
ஆச்சரியத்தால் அதிர்ந்து நின்றோம்!

எப்படி நடந்தது...?
இஃது நடந்தது எப்படி என்று
ஆய்வுகள் செய்தோம்!

விளைவாய் நாங்கள்
எங்களுக்குள்ளே எதிரிகளாயினோம்!

சின்னஞ் சிறிய எங்கள் வீடு
போர்க்களமானது... அடிக்கடி புகைந்தது...

எத்தனை தூரம் அன்பாய் இருந்தோம்...

சின்னஞ்சிறிய எங்கள் வீட்டை
சிதைக்க யாரும் சேர்ந்து வந்தால்
உதைப்பது என்று உறுதிகள் செய்த
அந்த நாட்களை நினைத்துப் பார்க்கையில்..

இயலாமையால் இடர்பட நேர்கையில்
சாவது என்று சத்தியம் செய்த
அந்த நாட்களை நினைத்துப் பார்க்கையில்...

ஆத்மா கிடந்து அடித்துக் கொள்ள
அழுகை கண்ணைக் கீறித் துளும்பும்!

சாத்தியமில்லா நினைவுகள் அவைகள்!

இனிமேல்.. இனிமேல்...
கனவுகள் அவைகள்!

(21.07.1985ல் எழுதப்பட்ட இக்கவிதை “காணாமல் போனவர்கள்” என்ற எனது முதலாவது கவிதைத் தொகுதியில் முதற்கவிதையாக இடம்பெற்றுள்ளது)

Monday, April 22, 2013

புரட்சிக் கமால் கவிதை!




நோக்கு

புரட்சிக் கமால்


நான், அண்ணன், தம்பி, தங்கை
நான்கு பேர்! நூறு பேதம்...!

ஒல்லியாய் வடிந்து, கூனி
ஒடிந்த வில் ஆவான், அண்ணன்!
கல்லெனத் திரண்டு, சின்னக்
களிற்றினை ஏய்ப்பான் தம்பி!
முல்லையே தங்கை! நானோ
முருக்கையின் பிரதி! இந்தப்
பல்லுருப் பேதத்தோடு
பயந்தவர் ஒரு தாய், தந்தை!

000

நான், அண்ணன், தம்பி, தங்கை
நான்கு பேர்! நூறு பேதம்...!

நிறத்தினில் அண்ணன் நெய்யை
நிக்த்தவன்! தம்பி சாயல்
வறுத்தநாட் டரிசி! என்றன்
வண்ணமோ கழுகுப் போர்வை!
உரித்தமாங் கனியாள் தங்கை!
ஒரு படிப் பாலில் இந்த
நிறத் தொகை எதனால்? எம்மை
நிறுத்தவர், ஒரு தாய், தந்தை!

000

நான், அண்ணன், தம்பி, தங்கை
நான்கு பேர்! நூறு பேதம்...!

ஓவியப் புலவன் அண்ணன்
ஒளி நிழல் கரைவான்! இந்தப்
பாவியோ, அப்பனோடு
கழனியில் மாடு, தம்பி
சேவைகள், மற்போர், ஆட்டம்
திருவிழாப் பருகும்! எங்கள்
பூவையோ, கூண்டுக் கிள்ளை!
பெற்றவர், ஒருதாய், தந்தை!

000

நான், அண்ணன், தம்பி, தங்கை
நான்கு பேர்! நூறு பேதம்...!

வீட்டுக்குள் - ஒருதாய், தந்தை
விளைச்சலின் ஊழல் கோடி!
நாட்டுக்குள் - மேடு, பள்ளம்
வெயில் - மழை, கூதலென்று
காட்டுக்கூப் பாடு போட்டே
கடவுளில் “நோக்கு” நாட்டி
வேட்டுக்கள் தீர்ப்பான், தம்பி
வெறும்பயல், விடுங்கள் பாவம்!

(நன்றி - புரட்சிக்கமால் கவிதைகள்)

Monday, April 15, 2013

உங்களுக்கான கேள்விகள்!



முப்பது ஆண்டு களாய் முக்கு ளித்த ரத்தத்தில்
மூச்சடங்கிப் போகவில்லையா - உங்கள்
மூர்க்கம் இன்னும் தீரவில்லையா?

எப்போது தீரும் என்று ஏக்கங் கொண்ட நெஞ்சங்களை
ஏமாற்றும் வஞ்சம் இல்லையா - இனியும்
இந்நாட்டில் அமைதி இல்லையா?


நடுக்கடலில் மிதந்திடினும் நாலு மதம் கொண்ட மக்கள்
நண்பரென வாழ்ந்ததி்லலையா - இங்கு
நன்மைகள் விளைந்ததில்லையா?

துடுக்குத் தனத்தோடு நின்று துவேசத்தைக் கக்கிநிற்றல்
துரோகமென்று தெரியல்லையா - நாடு
தூளாகிப் போகுமில்லையா?


குட்டக் குட்டக் குனிவதற்கு குரங்குகளே யானாலும்
விட்டுக் கொடுக்காது அல்லவா? - அதனை
விதியெனக் கொள்ளா தல்லவா?

மட்டுப்பட்டு வாழ்ந்த நிலை மலேயேறிப் போயிற்றென்று
மண்டைக்குள் ஏறவில்லையா - உம்
மனச்சாட்சி பேசவில்லையா?


உள்வீட்டுச் சண்டைகளால் உண்டான வேதனைகள்
உள்ளத்தைச் சுட்டதில்லையா - உமக்கு
உண்மைகளே புரிவதில்லையா?

எள்ளாக இருந்திடினும் எல்லோரும் பகிர்ந்து கொண்டால்
இன்பம் ஒரு கோடியல்லவா - எல்லாத்
துன்பங்களும் ஓடுமல்லவா?


தட்டுக்கெட்டு நடந்து தறிகெட்டு அழிவதனை
தர்மம் புறக் கணிக்கவில்லையா - அதைத்
தவிர்ப்பது நலமில்லையா?

விட்டுக் கொடுத் தோம்பி விரல்களைக் கோப்பதில்
விட்டழியும் வெறுப்பு இல்லையா? - விகற்பங்கள்
வேரறுந்து போகுமில்லையா?


அறங்களைப் போதிப்பவர் அறநெறி பிறழ்வது
அவமான மாகுமில்லையா? - அது
அவலத்தைத் தருமில்லையா?

புறத்திலே புண்ணியமும் போர்வைக்குள் புன்மையுமாய்
புகல்வது வெட்கமில்லையா? - நன்மை
அகல்வது துக்கமில்லையா?