Thursday, March 13, 2014

பெருங்கடலில் தனித்தலையும் குருவி!


எஸ்.போஸ் (போஸ் நிஹாலே)

எனக்கு மிகவும் பிடித்த இந்தக் கவிதையைக்  கிழிந்து துண்டாகிக் கிடந்த வீரகேசரிப் பத்திரிகைத் தாள் ஒன்றிலிருந்து கண்டெடுத்துப் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். பின்பு “யாத்ரா - 20” வது இதழில் 10 மற்றும் 11ம் பக்கங்களில் இக்கவிதையை இடம்பெறச் செய்தேன்.

படுகொலையான கவிஞர் எஸ்.போஸ் அவர்களின் ஆக்கங்கள் தொகுக்கப்படுவதாக நண்பர் கருணாகரன் தனது முகநூல் பக்கத்தில் தகவல் தந்துள்ளார். கவிஞரது படமும் படமும் அவரது பக்கத்திலிருந்து நன்றியுடன் பெற்றுக் கொள்ளப்பட்டு எஸ்.போஸ் எழுதியிருந்த கவிதையுடன் சேர்த்து இடப்படுகிறது.

பெருங்கடலில் தனித்தலையும் குருவி!
------------------------------------------------------
அமரர்.எஸ்.போஸ்

இருள் சூழ்ந்த இந்த நாளை
உனது வாழ்வில் பாங்கொலிக்காத இந்த நாளை
வெடிகுண்டதிர்வில் மேற்கிளம்பிய தூசுப் படலத்தை
உனது சொந்த மண்ணை விட்டு
நீ வெளியேறிய துயரத்தை
கடவுளின் பெயரால் அதை
மறந்து விடாதே நண்பனே

நகரம் முழுவதும் விலங்குகளால் சூழப்பட்டு விட்டது
மனிதர்களுக்காகக் கட்டப்பட்ட எல்லா நகரங்களிலும்
மனிதர்கள் உறைந்து விட்டார்கள்

ரயர்கள் எரிக்கப்பட்ட தெருக்களில்
பிண வீச்சங் கமழும் தெருக்களில்
மனிதர்களுக்காகக் கட்டப்பட்ட எல்லா நகரங்களிலும்
தூசுப் படலமும் மரண ஓலமும்
புறாக்களின் அழுகையும் குழந்தையின் விசும்பலும்
வான்நோக்கி எழுகிறது

யுத்தம்
உனக்குள் ஏற்படுத்திய வலி
யுத்தம் உனக்குள் ஏற்படுத்திய கொடூரம்
சீமான்களின் வாழ்வைப் போலானது அல்ல அது
வீதிகளில் அலைந்து
காடுகளில் குடியேறி
மீண்டும் மீண்டும் அழிவுற்று
மீண்டும் மீண்டும் அழிவுற்று
காயங்களால் இருக்கும் என்னைப் போன்றது

குருதி ஒழுகும் உனது குழந்தையை
இறந்த குழந்தையை
கைகால் துண்டிக்கப்பட்ட குழந்தையை
தோளில் அணைத்தபடி
துப்பாக்கிகளில் சுருண்டொடுங்கும் உனது வாழ்வை
கடவுளின் பெயரால் அதை மறந்து விடாதே
மறந்து விடாதே

மிருகங்கள் 
உனக்கும் எனக்குமான காடுகளை அழித்து விட்டன
குஞ்சுகளையும் புறாக்களையும் கொன்று விட்டன
இன்னும் நமது சிறகுகளால் நெய்யப்படும்
நமது குழந்தைகளுக்கான ஆடைகளை
அவை கனவு காண்கின்றன

இருப்பின் ஒளிதுலங்கும் நமது கவிதை பற்றியோ
நமது வசம் இல்லாத நமது குடிசை பற்றியோ
எது பற்றியும்
அவை கவலை கொள்வதில்லை

மிருகங்கள் அலையும் இந்த நகரத்தில்
நான்
ஒரு பறக்கும் கனவை அடிக்கடி காண்கிறேன்
அது
பெருங்கடலில் தனித்தலையும்
குருவியினுடையதைப் போன்றது

(எஸ்.போஸ்  என்ற சந்திரபோஸ் சுதாகர், போஸ் நிஹாலே என்ற பெயரிலும் கவிதைகளை எழுதி வந்தவர். கவிஞனாக மட்டுமன்றிச் சஞ்சிகை ஆசிரியராகவும் இயங்கியவர். 16.04.2006 அன்று 'இனந்தெரியாத' ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கவிதை 2006 அக்டோபரில் வீரகேசரியில் பிரசுரமானது. நன்றி: வீரகேசரி)

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: