ஹாஜி ஏவி.எம்.ஜாபர்தீனுடன் நான்
முதலில் நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும்.
அல்லாஹ் உங்களை அழைத்துக் கொண்டான் என்ற தகவல் கிடைத்ததும் இங்கிருந்து புறப்பட்டு வந்து உங்கள் முகம் பார்த்து ஸலாம் சொல்ல முடியாமல் போனமைக்காக என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும்.
தாயும் சேயுமாக அண்மித்த தேசங்களாக இருந்த போதும் எட்டிக் கடக்கும் எல்லைகளில் இருந்த போதும் நினைத்தவுடன் புறப்பட்டு வரும் வாய்ப்புகள் அற்ற நிலையில் வாழ்க்கை அமைந்ததானது நமக்கு வாழ்வில் நேர்ந்திருக்கும் துரதிர்ஷ்டங்கள்தாம்!
தங்களது வபாத் செய்தி பேராசிரியர் சேமுமு - ஜின்னாஹ் ஷரிபுத்தீன் வழியாகக் காதை எட்டிய போது காலை ஒன்பதரை மணியிருக்கும். உங்களது அறிமுகம் கிடைத்ததற்கும் உங்களது வபாத்துக்குமிடையிலான பதினைந்து வருடகால உறவின் ஒவ்வொரு கணமும் எனக்குள் சுழல ஆரம்பித்தது. நான் அப்படியே உட்கார்ந்திருந்தேன்.
தங்களது மறைவுக்கு இரண்டு தினங்களுக்கு முன்னர்தான் ஓரு பிராந்திய இலக்கிய மாநாடு சம்பந்தமாக அனுராதபுரம் சென்று திரும்பியிருந்தோம். அந்தப் பயணத்துக்கு நான் புறப்பட்ட போது அணிவதற்கென எடுத்துச் செல்லத் தெரிவு செய்த ஷேர்ட்களில் ஒன்று நீங்கள் எனக்கு அன்பளித்தது. விமானப் பயணங்களுக்கும் சிறப்பு விழாக்களுக்கும் மாத்திரம் அணியும் அந்த ஷேர்ட்டை பயணத்துக்கு எடுத்துச் செல்லாமல் அப்படியே வைத்து விட்டேன். இதோ மடிப்புக் கலையாமல் அப்படியே அது என் கண் முன்னால் இருக்கிறது, உங்களது நினைவுகளைப் போலவே!
நான், ஜே.எம்.சாலி, ஹாஜி ஏவி.எம், அல் அஸூமத், டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன், டாக்டர் தாஸிம் அகமது (சமநிலைச் சமுதாயம் காரியாலயத்தில்)
1999ம் ஆண்டு சென்னைப் பிரசிடன்ட் ஹோட்டலில் உங்களை முதன் முதலாகப் பார்த்தேன். ஓர் உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டை வாழ்நாளில் இரண்டாவது முறையாகவும் இலங்கைக்கு வெளியே முதலாவது முறையாகவும் நான் கண்ட சந்தர்ப்பம் அது. மூன்றாவது தினம் இறுதி நிகழ்வுகளுக்கு முன்னர் மேடை ஏற்பாடுகளை மேற்கொண்டிருக்கும் உங்கள் மீது எனது கவனம் வெகுவாக ஈர்க்கப்படுகிறது. கீழே இறங்கி வந்த உங்களை நானும் ஜின்னாஹ்வும் எதிர் கொண்ட போது எங்களைப் பார்த்துத் தரித்து மலர்ந்து புன்னகைக்கிறீர்கள். ஆர்வமேலீட்டால் உங்களை அறிமுகப்படுத்துமாறு டாக்டர் ஜின்னாஹ்விடம் கேட்கிறேன். நீங்கள் புன்னகை மாறாமல் அப்படியே தரித்து நிற்க ஜின்னாஹ் என்னைப் பார்த்து ஆச்சர்யத்துடன் கேட்டார்:- 'ஹாஜி ஜாபர்தீன்...! இவரைத் தெரிந்து கொள்ளாமலா மூன்று தினங்களாக இங்கிருக்கிறீர்கள்..? இந்த மாநாட்டை நடத்தும் இஸ்லாமிய இலக்கியக் கழகப் பொருளாளர்!'
அந்த மாநாட்டில் நீங்கள் எல்லாமாக இருந்தீர்கள் என்பதைப் பின்னாளில் நான் அறிந்து கொண்டேன். அம்மாநாட்டைப் பொறுத்தவரை நீங்களும் சேமுமுவும் செய்த நிர்வாகம்தான் என்னை வெகுவாகக் கவர்ந்தவை. ஆனால் உங்களது செயற்பாடுகள்; பின்னாளில் நடந்த மாநாடுகள் சிலவற்றில் போல துருத்திக் கொண்டோ இடறிக் கொண்டோ உங்களையே பிரேமுக்குள் வைத்துக் கொண்டோ அமைந்திருக்கவில்லை என்பதுதான் என்னை இன்னும் இன்னும் உங்களருகே இழுத்து வந்து சேர்த்தது என்று சொல்ல வேண்டும்.
நீங்கள் நடத்திக் காட்டிய அந்த மாநாடுதான் அடுத்த மூன்றாவது வருடத்தில் இலங்கையில் கோலாகலமாக ஓர் உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டை நடத்தும் எண்ணத்தையும் ஆர்வத்தையும் எனக்குள் விதைத்தது. உங்களுடன் இலக்கிய மாநாடுகள் பற்றிப் பேசும் போதெல்லாம் இதைச் சொல்லியிருக்கிறேன். அதற்கும் உங்களிடமிருந்து வார்த்தைகள் பதிலாகக் கிடைத்ததில்லை, அந்த... அதே புன்னகைதான்!
இலங்கைக்கு வருகை தந்து விட்டால் எம்மீது அளவு கடந்த பாசமும் நேசமும்காட்டும் சில படைப்பாளிகளும் படிப்பாளிகளும் இரண்டுங்கலந்த சிலரும் நாம் தமிழகத்துக்கு வருந்தோறெல்லாம் கண்டு கொள்ளாமல் போய்க்கொண்டேயிருப்பார்கள். ஆனால் வருந்தோறெல்லாம் வரவேற்று உபசரித்துக் கண்ணியமும் மரியாதையும் வழங்கும் ஒரு சிலரில் நீங்கள் முதன்மையானவராக இருந்தீர்கள். இந்த அரிய பண்புதான் உங்களை எனது மனதில் அழிக்க முடியாத ஓர் இடத்தில் அமர்த்தி வைத்திருக்கிறது.
2002ம் ஆண்டு இலங்கை இஸ்லாமிய இலக்கிய மாநாடு பற்றிய அறிவிப்பு விடுவதற்காகவும் கலந்துரையாடுவதற்காகவும் தமிழகத்துக்கு வருகை தந்திருந்தோம். வந்த அடுத்த தினமே முக்கியஸ்தர்கள் அனைவரையும் உங்களது இல்லத்துக்கு அழைத்து எங்களைச் சந்திக்க ஏற்பாடு செய்து தந்துவிட்டீர்கள். செய்யிது முகம்மது ஹஸன், கவிக்கோ, பேரா. சேமுமு, பேரா. அகமது மரைக்காயர், பேரா. நஸீமா அகமது என்று அழைத்து எங்களையும் இணைத்து ஒரு மாலைப் பொழுதிலேயே எங்கள் பணியை இலகுவாக்கித் தந்துவிட்டீர்கள். அடுத்த தினமே பிரசிடன்ட் ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்து தந்து எங்களை ஆச்சர்யப்படுத்தினீர்கள். மாநாடு முடியும் வரை பெரும் பக்கபலமாக இருந்து எங்களுக்கு வழிகாட்டினீர்கள். இதற்கெல்லாம் நன்றி சொல்ல முடியாமல் நாங்கள் திக்குமுக்காடினோம்.
2002 கொழும்பு மாநாட்டின் இரண்டாம் ஓர் இடைவெளியில் சந்தித்துக் கொண்டோம். 'சமநிலைச் சமுதாயம்' என்ற பெயரில் ஒரு சஞ்சிகையை வெளியிடப்போவது பற்றி அந்த வேளை பேசினீர்கள். 'நம்ம சஞ்சிககைகள் ஒன்று பூமிக்குக் கீழே உள்ளவற்றைப் பேசுகின்றன அல்லது வானத்துக்கு மேலே உள்ளவற்றைப் பேசுகின்றன. இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட உலகில் நமது கதியென்ன, நிலையென்ன என்று யார் பேசுவது? எப்போது பேசுவது? அதைத்தான் இந்தச் சஞ்சிகை செய்யும்!' என்று நீங்கள் சொன்ன போது நமது சமூகம் பற்றிய தெளிவான உங்கள் சிந்தனையை எனக்குள் ஓர் ஒளியைப் பாய்ச்சியது.
சமநிலைச் சமுதாயம் வெளிவர ஆரம்பித்ததும் அதில் உங்கள் எழுத்துக்களைப் படிக்க ஆரம்பித்தேன். அதுவரை ஓர் இலக்கிய ஆர்வலர் என்ற அளவிலேயே உங்களை அறிந்து வைத்திருந்த எனக்கு நீங்கள் எழுதிய 'இங்கும் அங்கும்' பகுதியில் உங்களை ஒரு சிறந்த பத்திரிகையாளனாக, அனுபவம் மிகுந்த கட்டுரையாளனாகக் கண்டு மேலும் ஆச்சரியமடைந்தேன். சில அம்சங்களில் எதைப் பற்றியும் கவலைப் படாமல் சமூக நோக்கோடு மட்டும் கருத்துக்களை முன் வைக்கும் உங்கள் தைரியத்தைப் பார்த்தேன். கலைஞர் கருணாநிதிக்கும் உங்களுக்குமிடையில் ஓர் நெருக்கம் இருந்ததை அறிவேன். 1999ம் ஆண்டு நடந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் கலைஞர் பேசிய சீறாவின் 'மானுக்குப் பிணை நின்ற படலத்தை' 2007ம் ஆண்டு நடந்த மாநாட்டிலும் பேசியதைக் கொண்டு 'கலைஞருக்கு இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தில் மானுக்குப் பிணை நின்ற படலம் மட்டும்தான் தெரியுமா?' என்றவாறு ஒரு போடு போட்டிருந்ததை ரசித்தேன். நேர்மையான ஒரு படைப்பாளிக்குரிய அந்த ஓர்மத்தை வியந்தேன்.
சமநிலைச் சமுதாயத்தில் நீங்கள் எழுதி வந்த 'அங்கும் இங்கும்' பத்திகளில் முக்கியமானவற்றை ஒரு நூலாகத் தொகுக்க வேண்டும் என்று உங்களிடம் ஒரு கோரிக்கையை முன் வைத்தேன். அவ்வப்போது நேரிலும் இலங்கையிலிருந்து தொலைபேசியிலும் அதைச் செய்ய வலியுறுத்தினேன். அவற்றில் கடந்த காலங்களில் நடந்த முக்கியமான அம்சங்கள் பற்றி நீங்கள் எழுதியிருப்பவை அடுத்த பரம்பரைக்குச் அவசியமானவை என்று கருதினேன். நீங்கள் பிடிகொடுக்கவே இல்லை. ஒரு கட்;டத்தில் நான் இங்கே வந்திருந்து பழைய இதழ்களில் தெரிவு செய்து தரட்டுமா? என்று கூட உங்களைக் கேட்டேன். ஆனால் நீங்கள் ஒரு புன்னகையோடு கடந்து சென்று விட்டீர்கள்.
எனது நூல்களின் அறிமுக விழாவில் உரை நிகழ்த்தும் ஹாஜி. ஏவி.எம். ஜாபர்தீன்
நீங்கள் செய்தவைகளைப் பற்றி என்றைக்குமே நீங்கள் எதையும் சொன்னது கிடையாது. நானாகவே அவ்வப்போது சில விடயங்களைக் கேள்விப்பட்டுத்தான் அறிந்து கொள்வேன். அப்படித்தான் 'நூர்ஜஹான் அறக்கட்டளை' பற்றித் தெரிந்து கொண்டதும் நடந்தது.
புலவர்நாயகம் ஷெய்கு அப்துல் காதர் நயினார் லெப்பை இயற்றிய 'திருமணிமாலை', வண்ணக்களஞ்சியப் புலவரின் 'குத்பு நாயகம்' எனும் 'முஹிதீன் புராணம்' ஆகியவற்றையும் நீதிபதி மு.மு. இஸ்மாயில் அவர்கள் ஆய்வு செய்த 'இராஜ நாயகம்', முனைவர் மு. அப்துல் கறீம் அவர்கள் ஆய்வு செய்த 'குத்பு நாயகம்' ஆகியனவும் நீங்கள் நிறுவிய 'நூர்ஜஹான் அறக்கட்டளை' யால் வெளிவந்தவை என்று அறிய வந்தேன்.
சீறாப்புராணம் உயிரோடு உலாவர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் அதனைக் கவி கா.மு.ஷரீப் அவர்கள் மூலம் செய்து முடிக்க முயன்றீர்கள். நுபுவ்வத்துக் காண்டத்தில் 1 - 3 பகுதிகளும் ஹிஜரத்துக் காண்டம் முதலாம் பாகமும் வெளியிடப்பட்ட நிலையில் கவி காமு. ஷரீப் அவர்கள் வபாத்தாக அப் பொறுப்பை முறைவர் அப்துல் கறீம் தம்பதியிடம் ஒப்படைத்திருந்ததைத் தெரிந்து கொண்டேன்.
இவற்றுக்கு அப்பால் பல நூல்கள் வெளிவர மறைகரமாக நின்று செயற்பட்டுள்ளீர்கள் என்பதையும் அறிய வந்தேன். மறைந்த பேராசிரியர் வா.மு.ஆ. நூர் மைதீன் அவர்களால் ஆய்வு செய்யப்பட்ட 'நாகை அந்தாதி', அல்லாமா எம்.எம். உவைஸ் அவர்களின் 'உமறுப் புலவர் ஓர் ஆலிமா?', 'வழியும் மொழியும்', தோப்பில் மீரானின் 'அனந்த சயனம் காலனி', ஹனீப் எழுதிய 'இனிய உதயம்' சிறுகதைத் தொகுதி,செய்யிது ஹஸன் மௌலனா உரை எழுதிய பதுருத்தீன் புலவரி 'முகைதீன் புராணம்' என்று பல நூல்கள்களுக்குப் பின்னால் உங்களது நீண்ட கரங்கள் இருந்ததைக் கேள்விப்பட்டேன்.
திருச்சி ஜமால் முகம்மது கல்லூரிக்கு உங்களது தந்தையாரின் பெயரால் கணிப்பொறி மையம் ஒன்று அமைத்துக் கொடுக்கப்பட்டதையும் பல்வேறு பள்ளிவாசல்கள், கல்விக் கூடங்களுக்கு உங்கள் உதவிகள் சென்று சேர்ந்துள்ளமையும் காதுகளில் விழுந்த செய்திகளே. கொடுத்துவிட்டுக் கொக்கரிக்கும் ஒரு நபராக நீங்கள் இல்லாமல் கொடுத்தையே யாருக்கும் சொல்லாத அற்புதமான மனிதராகவே நீங்கள் வாழ்ந்து சென்றிருக்கிறீர்கள்.
நூல்களின் வெளியீட்டு நிகழ்வின் போது...
2007ல் சென்னையில் நடந்த உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் பிறநாட்டுப் பேராளர்கள் அகௌரவமாக நடத்தப்பட்ட வேளை வெளிநாட்டாரான எமக்குப் பெரும் ஆறுதலாகவும் ஆதரவாகவும் நீங்கள் இருந்ததை எக்காலத்திலும் மறந்துவிட முடியாது. இஸ்லாமிய இலக்கியக் கழகப் பொருளாளராக இருந்த உங்களை அப்புறப்படுத்தத்; தங்களது அரசியல், பொருளாதார நலன்களுக்காகச் சிலர் மேற்கொண்ட நடவடிக்கைகளால் பாரம்பரியம் மிக்க இ;ஸ்லாமிய இலக்கியக் கழகம் பொலிவிழந்ததைப் பார்த்தோம். அந்த நிலையிலும் எமக்குப் பக்கபலமாகவும் உதவியாகவும் இருந்து தமிழக முஸ்லிம்களில் அற்புதமான மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதை உணர்த்தி நின்றீர்கள்.
2011ல் மலேசியாவில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - சரியாயின் உங்களது தலைமையில் நடந்திருக்க வேண்டும். ஆகக்குறைந்தது உங்களது வழிகாட்டலிலாவது நடந்திருக்க வேண்டும். எங்கே சரியான வழி இல்லையோ அங்கே நீங்கள் இருக்கமாட்டீர்கள் என்பதை அதில் நிரூபித்துக் காட்டினீர்கள். சரியான முயற்சிகள் முன்னெடுக்கப்படாமல் வெறும் பெயருக்காகவும் புகழ்ச்சிக்காகவும் காவடியாடும் யாருடனும் - அவர் எப்பேர்ப்பட்ட நபராக இருந்த போதும் சேர்ந்து இருக்கவும் மாட்டீர்கள் என்பதை அதில் புரிய வைத்தீனர்கள். வௌ;வேறு நாடுகளில் நடந்த மாநாடுகளுக்கு மலேசியா சார்பில் நீங்கள் யார் யாரை வழி மொழிந்து முற்படுத்தினீர்களோ அவர்கள் உங்களைத் திரைக்குப் பின்னால் வைத்துக் கொள்ள விரும்பியதையும் அல்லது ஒரு கைத்தடியாக உபயோகிக்க முளைந்ததையும் மலேசிய மாநாட்டில் நாங்கள் பார்த்தோம். ஆனால் அந்த வலைக்குள் சிக்குப் படாமல் கண்ணியத்தைக் காத்து விலகி நின்ற உங்கள் தனித்துவத்தையும் நாங்கள் பார்த்தோம்.
மலேசிய மாநாட்டில் நீங்கள் எந்தவொரு இடத்திலும் இல்லாததை ஒரு குறையாகப் பார்த்து விமர்சிப்பார்கள் என்ற பயத்தில் ஒரு கவிஞர் வெறும் கற்பனையை மலேசிய 'நம்பிக்கை' இதழில் எழுதியபோது அதற்குப் பதிலளித்து நீங்கள் எழுதிய கடிதத்தின் ஒரு பிரதியை எனக்கும் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தீர்கள். திட்டமிட்டு உங்களை ஒதுக்கியதாகவே நான் கருதும் அந்த மாநாட்டு;க்குப் பின்னர் அக்கவிஞர் தெரிவித்திருந்த சால்ஜாப்புக்கும் 'நம்பிக்கை' யின் முக்கியஸ்தருக்கும் நீங்கள் அளித்த பதிலின் இறுதியில் 'இதனால் நமது 40 வருட கால நட்புப் பாதிக்கப்படக் கூடாது' என்றுஒரு வசனம் தெரிவித்திருந்தீர்கள் பாருங்கள்! மனிதப் பழம் நீங்கள்! மனச்சாட்சி என்ற ஒன்று இருக்குமானால் அந்த வசனம் காலாகாலத்துக்கும் அவர்களை அது உறுத்திக் கொண்டேயிருக்கும்!
எனது மூன்று நூல்களை அறிமுகப்படுத்த இரண்டு ஒன்று கூடல்களை நீங்கள் ஏற்படுத்தித் தந்த ஞாபகங்கள் இன்னும் மனதில் பசுமையாக இருக்கின்றன. இரண்டு கவிதை நூல்களை ஒரு முறையும் 'ஒரு குடம் கண்ணீர்' நூல் மறு முறையும் அங்கு அறிமுகப்படுத்தப்பட்டன. பேரா. நண்பர் அகமது மரைக்காயர் மற்றும் ஜாபர் சாதிக் பாக்கவி ஆகியோரின் மூலம் அந்த நிகழ்ச்சிகளைச் சிறப்பாக ஒழுங்கு செய்து தந்தீர்கள். இரண்டாவது நூல் அறிமுக விழாவின் போது கடுமையாக நோயுற்றிருந்த போதும் அங்கு வந்திருந்து சிறப்புச் செய்தீர்கள்.
சென்னைக்கு வருகிறோம் என்று தகவலை மட்டும் சொல்லிவிட்டால் போதும். 'விமான நிலையத்துக்கு வாகனம் அனுப்பட்டுமா?' என்ற வினாவிலிருந்து உங்களது உரையாடல் ஆரம்பமாகும். 'நான் என்ன செய்து தரவேண்டும்... உங்களது நிகழ்ச்சி நிரல் என்ன?' என்று அது தொடர்ந்து கொண்டேயிருக்கும். அங்கு தங்கியிருக்கும் நாட்களில் ஆகக்குறைந்தது தினமும் ஒரு போன் கோல் போட்டு நலம் விசாரித்துக் கொண்டேயிருப்பீர்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒரு விருந்து வழங்கிக் கொண்டேயிருப்பீர்கள்.
ஹாஜி. ஏவி.எம். ஜாபர்தீன் அவர்களுக்குக் கௌரவம் வழங்கப்படுகையில்....
உங்களுடையான உரையாடல் சுவாரஸ்யமானவை. புத்திபூர்வமானவை. தேர்ந்தெடுத்த விடயங்களைத் தேர்ந்தெடுத்த வார்த்தைகளைக் கொண்டே எப்போதும் பேசுவீர்கள். எம்மிடமிருந்து ஏதாவது அறிய வேண்டுமானால் சொல்ல விட்டுக் கேட்டுக் கொண்டிருப்பீர்கள். முடியுந்தறுவாயில் எல்லாவற்றையும் புரிந்து கொண்டு மூன்று அல்லது நான்கு சொற்களில் ஒரு கமன்ட் சொல்வீர்கள். அந்தக் கமன்டுகளில் நான் என்னை மறந்து வாய்விட்டுச் சிரித்து மகிழ்ந்தவை அநேகம்!
டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் தனது 'திப்பு சுல்தான்' காவியத்தை உங்களுக்குச் சமர்ப்பணம் செய்திருந்தார். அதைப் பார்த்ததும், 'இதுக்கு நான் தகுதியானவன் என்று நினைக்கிறீர்களா?' என்று கேட்டீர்களாம். உங்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட எனது 'ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள்' என்ற அரபுக் கதைகளின் மொழி பெயர்ப்புத் தொகுதியை ஜாபர் சாதிக் பாக்கவியிடம் கொடுத்து அனுப்பியிருந்தேன். இரண்டு தினங்களின் பின் உங்களைச் சந்திக்க உங்கள் வீட்டுக்குள் நுழைந்ததும் அந்த நூலைக் கையிலெடுத்த நீங்கள் என்னிடம் 'இதென்னங்க.. இது?' என்று கேட்டீர்கள். ' எங்களில் நீங்கள் கொண்டிருக்கும் அன்புக்கும் பாசத்துக்கும் நிகரான ஒன்றை எங்களால் தரமுடியாது, இதைத்தான் செய்ய முடிந்தது' என்று சொன்ன நான், சென்னையில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் நான் குறிப்பிட்ட - 'சாத்தியப்படுமாக இருந்தால் எனது வாழ்நாளில் சில வருடங்களை உங்களுக்குத் தருவதற்குச் சம்மதமாக இருக்கிறேன்' என்ற வார்த்தையை மீளவும் பதிலாகச் சொன்னேன்.
கடந்த ஆண்டு ஆரம்பப் பிரிவில் நானும் மனைவியும் வந்து உங்களை உங்கள் வீட்டில் சந்தித்ததே நாம் சந்தித்துக் கொண்ட இறுதி நிகழ்வு. ஓய்வில் இருக்க மருத்துவர் பணித்தும் கூட ஒரு மணிநேரம் அமர்ந்து அதே உற்சாகத்துடன் உரையாடினீர்கள். பின்னாட்களில் அங்கு வந்த டாக்டர் ஜின்னாஹ்வும் கவிஞர் அல் அஸூமத்தும் உங்களைச் சத்தித்துத் திரும்பியிருந்தார்கள்.
ஏறக்குறைய பதினைந்து வருட கால உங்களுடனான உறவில் உங்களிடமிருந்து நான் கற்றுக் கொண்டவைகள் ஏராளம். பெரும் கல்வியாளர்களிடம், பெயர் பெற்ற படைப்பாளிகளிடம் காணக் கிடைக்காத அரிய பல நற்பண்புகள் உங்களிடம் இருந்தன. இந்தக் காலப் பிரிவுக்குள் நடந்த எல்லா விடயங்களையும் நினைவு படுத்தி எழுத ஆரம்பித்தால் அது ஒரு நூலாக மாறிவிடும். எல்லாவற்றுக்கும் ஓர் அளவும் எல்லையும் உண்டு என்று கற்றுத் தந்தவர் நீங்கள்.
உங்களிடம் இருந்த செல்வமும் கொடையும் எழுத்தாற்றலும் துணிவும் இன்னொருவரிடம் இருந்திருந்தால் அவர் தன்னை முற்படுத்தி ஒரு பெரும் வரலாற்று நாயகனாகத் தன்னைக் கட்டமைத்திருப்பார். ஆனால் எல்லாச் செல்வங்களையும் உங்களுக்கு இறைவன் வழங்கியிருந்தும் மிகச் சாதாரண ஒரு மனிதனாக இயற்கையாகவே முகத்தில் பூத்திருக்கும் அந்தப் புன்னகையோடு கடந்து சென்றீர்கள்.
நானும் சமநிலைச் சமுதாயம் ஆசிரியர் ஜாபர் சாதிக் பாக்கவியும்
(சமநிலைச் சமுதாயம் காரியாலயத்தில்)
பிரிம்ரோஸ் கார்டனில் இனிமேல் யார் வாழப்போகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. எங்களுக்கு இனிமேல் அங்கு எந்த வேலையும் இல்லை என்பதை நினைக்கும் போது நெஞ்சில் தீப்பிடித்துக் கொள்கிறது.
அடுத்த எனது தமிழகப் பயணத்தின் போது நான் உங்களைச் சந்திக்க முடியாது. அடிக்கொரு தரம் 'எங்கே இருக்கிறீர்கள்?' என்று கைப் பேசிக்கு அழைப்பு வராது. உள்களுக்குத் தருவதற்கென்று எந்த நூலையும் நான் எடுத்து வரவேண்டியிருக்காது. நம்மால் முடிந்ததெல்லாம் நாம் இனிமேல் மறுமையில்தான் சந்தித்துக் கொள்வதுதான்! ஆனால் அடுத்த முறை தமிழகத்துக்கு விமானமேறும் போது நீங்கள் வாங்கி அன்பளிப்புச் செய்த அதே ஷேர்ட் அணிந்துதான் வருகை தருவேன். ஆனால் நீங்கள்தான் வரவேற்கவோ சந்திக்கவோ என் முன்னால் இருக்க மாட்டீர்கள்.
யாத்ரா 18வது இதழில் உங்களைப் பற்றிய ஒரு சிறு கட்டுரையை எழுதியிருந்தது உங்களுக்குத் தெரியும். அந்தக் கட்டுரையின் கடைசிப் பந்தியுடன் இதை நிறைவு செய்கிறேன்.
'எனது நட்சத்திரங்களின் எண்ணிக்கை மிகச் சொற்பமானது. அதற்குள் சகோதரர் ஜாபர்தீனும் ஒருவராயிருக்கிறார். நீங்கள் சந்தித்த கண்ணியமான ஒரு மனிதரைக் குறிப்பிடுங்கள் என்று யாராகிலும் எப்போதாகிலும் என்னைக் கேட்டால் எந்தவிதத் தயக்கங்களுமின்றி, 'ஹாஜி ஏவி.எம். ஜாபர்தீன்' என்று பதில் சொல்லுவேன்!'
(சமநிலைச் சமுதாயம் இதழில் வெளிவந்த கட்டுரை)
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
1 comment:
உங்களது பதிவுகளை தமிழ்24x7.காம் என்னும் பதிவர் தளத்தில் பதிவு செய்து மற்றும் உங்களது நண்பர்களுக்கு அறிமுக படுத்துங்கள் Tamil24x7.Com
இப்படிக்கு
Tamil24x7.Com
Post a Comment