அங்கம் - 3
அண்மையில் எனது கலாசாலைத் தோழர் ஒருவரைச் சந்தித்த போது ஒரு சிங்கள நாவல் பற்றி விதந்தோதினார். நாட்டுக் கோழிகளை வைத்துத்தான் அந்த நாவல் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் அது பேசுவது பக்கா அரசியல்.
நாட்டுக் கோழிகளூடாக இலங்கை அரசியலைப் பேசும் அந்த நாவலைத் தான் தமிழுக்கு மொழிபெயர்க்கும் ஆவலில் இருப்பதாகச் சொன்னார். நாவலாசிரியர் மறைந்து விட்ட போதும் கதை இன்னும் வாழுகிறது. மொழி தாண்டிப் பறக்கும் வல்லமை கொண்டிருக்கிறது.
எழுத்தாளர்களும் கவிஞர்களும் குறியீடுகளாலும் உருவகங்களாலும் பேசுவது ஒன்றும் புதிய விடயமல்ல. மக்கள் முன் வைத்தாக வேண்டிய தனது சிந்தனையை, தனக்கேற்பட்ட தெளிவை நேரடியாகச் சொல்லாமல் குறியீடுகள் மூலமும் உருவகங்கள் மூலமும் சொல்வது ஒன்றும் அதிசயமான விடயமில்லைத்தான். ஆனால் பயன்படுத்தப்படும் உத்திகள் சிறப்பாகவும் பொருத்தமாகவும் அமையுமிடத்து அது உரிய காலத்தின் நிலையை எந்தக் காலத்திலும் புரிந்து கொள்ளக் கூடிய வரலாற்று ஆவணமாக மாற்றம் பெற்று விடுகிறது. மட்டுமன்றி ஆதாரமாகவும் நல்லது அல்லதுகளையும், நல்லவர் அல்லவர்களையும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பையும் தந்து விடுகிறது.
1945ம் ஆண்டு ஜோர்ஜ் ஓர்வெல் எழுதிய 'விலங்குப் பண்ணை' இத்தகைய ஒரு நாவல். மேற்கத்தேய உலகின் அதிசிறந்த நாவல்களில் ஒன்றாகவும் 1923 முதல் 2005 வரையான காலப் பகுதியின் 100 சிறந்த நாவல்களில் ஒன்றாகவும் இந்நாவல் கருதப்படுகிறது. பன்றிகளை வைத்து எழுதப்பட்ட இந்நாவல் மக்கள் புரட்சி என்பது அதன் தலைவர்களாலேயே சிதைக்கப்படுவதை எடுத்துச் சொல்கிறது. ஜோஸப் ஸ்டாலினின் காலம் குறித்துக் கதை பேசுகிறது.
உலகின் எல்லா மொழிகளிலும் குறியீடுகளாலும் உருவகங்களாலும் ஏராளமான சிறு கதைகளும் எழுதப்படுகின்றன. நேரடியாகப் பேச முடியாதவற்றை மாற்று வார்த்தைகளைப் பயன்படுத்தி மிக அழகாகச் சொல்லப்படும் இக்கதைகளை மக்கள் புரிந்து கொள்கிறார்கள்.
சில மாதங்களுக்கு முன்பு குவைத்திய சிறுகதை எழுத்தாளரான யூஸூஃப் கலீபா எழுதிய சின்னஞ் சிறு கதைகள் சிலவற்றைப் படிக்க முடிந்தது. அரேபிய அரசியல், அரேபியர் வாழக்கை போன்றவற்றையும் பொதுவான மனித இயல்புகள் ஆகியவற்றையும் குறித்து ஐந்து அல்லது ஆறு வார்த்தைகளுக்குள் அவரது கதைகள் பேசுகின்றன. ஆனால் ஒவ்வொரு கதையும் நமது சிந்தனையை விரிவாக்கிக் உள்ளார்ந்த காட்சிப் புலனை விரித்துச் செல்லும் சக்தி மிக்கவையாக விளங்குகின்றன.
அறபியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட இந்தக் கதை (இதைக் கதை என்று சிலர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்) ஓர் உரையாடல். மகன் ஒரு வார்த்தை பேசுகிறான், தந்தை ஒரு வார்த்தை பேசுகிறார். கதை முடிந்து விடுகிறது.
'தந்தையே, நான் வாங்கிய ஓவியத்தில் நபிகளின் திருமுகத் தோற்றம் தெரிவதாக அவர்கள் சொல்கிறார்கள்!'
'இறைவன் உனக்கு அருள்பாலிக்கட்டும் மகனே, அதை கவர்னரின் படத்துக்கு இடது புறம் கொளுவி விடு!'
'ஓர் அராபியச் சட்டம்' என்ற தலைப்பில் எழுதப்பட்ட இந்த இரண்டு வசனங்களும் பேசும் விடயம் மிகவும் ஆழமானது. அறேபிய அரசியலையும் அங்கு நடைமுறைப்படுத்தப்படுவதாகச் சொல்லப்படும் மார்க்கத்தையும் சுருக்கமாகவும் இறுக்கமாகவும் தெளிவாகவும் இதைவிட அழகாகச் சித்தரிக்க முடியாது என்றுதான் நான் நினைக்கிறேன்.
இன்னும் இதை விளக்கமாகச் சொல்வதானால் இறை தூதரும் இஸ்லாமும் மன்னர்களின் ஆட்சிக்கு முன்னால் இரண்டாம் தரத்திலேயே பார்க்கப்படுகின்றன என்பதை மாற்று வார்த்தைகளில் இந்த உரையாடல் அல்லது கதை பேசுகிறது. இங்கு மன்னர் என்று சொல்லாமல் ஆளுனர் என்றும் நபிகளாராகவே இருந்தாலும் கவர்னர் இருக்கும் இடத்திலல்லாமல் கவர்னருக்கு வலப்புறத்தில் கூட இல்லாமல் இடப்புறத்துக்குத் தள்ளப்படுவதன் மூலம் எல்லாமே மன்னர்தான் என்பதையும் சொல்லாமல் சொல்லி நிற்கிறது இக்கதை.
அறபிகளின் அரசியலை மட்டுமல்ல, உலகளாவிய முஸ்லிம் உம்மத்தின் மத்தியில் இஸ்லாம் என்ற வாழ்க்கை வழியின் நிலையும் இப்படித்தான் இருக்கிறது என்பதைச் சற்று ஆழச் சிந்திப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும்.
இப்படி ஒரு கதை தமிழ் மொழியிலோ அல்லது அறபு அல்லாத வேறொரு மொழியிலோ வந்திருந்தால் இந்நேரம் எழுதியவரின் கதை கந்தலாகி இருக்கும். கதை என்ன சொல்கிறது என்பதைப் புரிந்து கொள்வதற்குப் பதிலாக கதையில் பயன்படுத்தப்பட்ட வாக்கியங்களில் சர்ச்சனையும் அர்ச்சனையும் தொடங்கி ஒரு யுத்தமே ஆரம்பமாகியிருக்கும். நல்ல காலம், ஓர் அறபியே எழுதியிருக்கிறார்.
இல்லையென்றால் எழுதியவனை ஊர்விலக்குச் செய்வதற்கும் மார்க்கத்திலிருந்த விலக்கி வைப்பதற்கும் நிறையப் பேர் பத்வாப் பைகளைத் திறந்திருப்பார்கள்!
இதை முன் வைத்து எழுதியது கூட அமெரிக்கச் சதி என்று சொல்லாமல் இருந்தாலே உத்தமம்!
(மீள்பார்வை பத்திரிகைப் பத்தி)
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
No comments:
Post a Comment