Thursday, January 22, 2015

மூக்குகளால் சிந்திப்பவர்கள்!


- 12 -

முழுநாளும் வீட்டில் உறைந்து கிடந்த ஒரு தினத்தின் மாலை மயங்கும் வேளை ஒரு சுற்று நடந்து விட்டு வரலாம் என்று வெளிக்கிட்டேன். வழமையான ஒரு சுற்று என்பது ஏறக்குறைய ஒன்றரை கி.மீற்றர் தூரம். இரண்டு முறை நடந்து வந்தால் சோம்பல் கலைந்து விடும்.

அப்படி நடந்து கொண்டிருந்த போது தெருவோரத்தில்  நின்றிருந்த நண்பரைக் கண்டு ஆச்சரியப் பட்டேன். அவர் அப்படி தெருவோரத்தில் நின்று வேடிக்கை பார்க்கும் நபரல்லர். அரச நிதி நிறுவனமொன்றில் கடமை புரிபவர். பென்சன் வயதைத் தொட்டுக் கொண்டிருந்தார். தென்பகுதியில் பிறந்து வளர்ந்தவர். தானும் தன்பாடும் என அமைதியாக வாழ்ந்து வரும் நபர்.

கடைத் தெருவில் அவர் நின்றிருந்த பக்கத்தின் நேர் எதிர்ப் பக்கம் ஒரு பௌத்த விகாரை. வேலி  கிடையாது. மிக அழகாகப் பேணப்படும் அந்த பௌத்த விகாரையில் ஒரு விசேட உபந்நியாசம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. வழமை போல நிறைய வயசான ஆண்களும் வயசான பெண்களும் துணைக்கு வந்த குமரிகளும் வெள்ளுடையில் அமர்ந்து ஆர்வமாகக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

நண்பருடன் ஒரு புன்னகையைப் பரிமாறிக் கொண்டு நான் கடந்த சென்று விட்டேன். ஆனால் நான் நடந்த தெரு நீளத்தக்கும் ஆங்காங்கே இணைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கிகளில் பௌத்த மத குருவின் மத உபந்நியாசம் ஒலித்துக் கொண்டிருந்ததாலும் அவரது பேச்சில் இழையோடிய அமைதியும் சொற்களைப் பயன்படுத்திய நிதானமும் அதில் வெளிப்பட்ட அழகும் நயமும் என்னைக் கவர்ந்ததாலும் வேறு சிந்தனை எனக்குள் எழவேயில்லை.

பிள்ளைகளை எப்படி பொறுப்புள்ளவர்களாகவும் பண்புள்ளவர்களாகவும் வளர்ப்பது என்பதைப் பற்றியே அவரது உபந்நியாசம் அமைந்திருந்தது. சாதாரண சிங்களக் குடும்பங்களை அடிப்படையாகக் கொண்டு நல்லதாகவும் அல்லதாகவும் நடந்தவை, நடப்பவை பற்றி அவர் விளக்கிச் சென்ற விதமும் ஏற்ற இறக்கங்களோடு வார்த்தைகளைப் பயன்படுத்திய அழகும் ரசிக்கத் தகுந்ததாகவும் ஆகர்ஷிக்கத் தக்கதாகவும் இருந்தது. என்னுடைய காதில் விழுந்த வரை பாளி மொழியிலான வாக்குகள் எவற்றையும் அவர் பிரயோகிக்கவில்லை.

மார்க்க உபந்நியாசங்களை ஆகர்ஷிக்கக் கூடிய மொழியில் நிகழ்த்துவதில் கிறிஸ்தவப் பாதிரிமார்தான் முன்னிலை வகிக்கிறார்கள் என்பேன். அதனையடுத்து பௌத்த குருமார். நமது பிரசங்கிகளோ ஒலிபெருக்கியின் சப்தத்தை அதி உச்சஸ்தாயியில் வைத்துக் குதித்துக் குதித்து தன்னால் முடிந்தவரை குரல் கொடுத்து வருவதே வழக்கமாக இருக்கிறது. ஒலிவாங்கி முன்னால் இருப்பது அடுத்தவருக்குக் கேட்கும் அனவு சப்தத்தை அனைவருக்கும் கேட்கும் வண்ணம் பிரதிபலிக்கத்தான் என்ற உணர்வின்றி ஒலிவாங்கி முன்னால் இருக்குமானால் அதில் கர்ஜித்தே ஆக வேண்டும் என்ற உணர்வுடன் பிரசங்கிக்கிறார்கள். எடுத்துக் கொண்ட அம்சமும் அதை வெளிப்படுத்தத் தேரும் நளினமும் பயன்படுத்தப்படும் மொழியும் பொருத்தமாக அமைந்து விடுமானால் ஒலிவாங்கிக்கு முன்னால் நின்று உரக்கக் கத்தும் அவசியம் இருக்காது.

இரண்டாவது சுற்றை சான் ஆரம்பித்து நடந்து கொண்டிருந்த போது எனது நண்பர் அதே இடத்தில் தரித்து நின்றிருக்கக் கண்டேன். நிச்சயமாக அவர் அந்த உபந்நியாசத்தைத்தான் செவிமடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது எனக்கு உறுதியாயிற்று. மீண்டும் புன்னகை பரிமாறிக் கொண்ட நான் நடை தனர்த்திச் சிரித்துக் கொண்டே கேட்டேன்:- 'என்ன பிரசங்கம் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் போலிருக்கிறது?' அவர் பதில் சொன்னார்:- 'இது பாருங்கப்பா... நல்ல விசயம் கொஞ்சம் சொல்றான். எவ்வளவு அழகாச் சொல்றான்... உண்மையில் அதைத்தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்!'

இந்த வழியால் நமது முஸல்மான்கள் குறுக்கிடுகையில் இந்த மனிதரைக் கண்டால் இவரது ஈமான் குறித்து சந்தேகிக்கத் தொடங்கி விடுவார்களே என்று ஓர் எண்ணம் மனதில் ஓடிற்று. பக்குவமாகப் பதில் சொல்லும் படித்த மனிதர்தான் என்றாலும் ஃபத்வாக் காரர்களின் பாதங்களின் கீழ் மிதிபட்டேயாக வேண்டி வரும்.

'நானும் கேட்டுக் கொண்டேதான் நடந்துக்கிட்டிருந்தேன்... அவர் சொன்னது அவ்வளவும் இஸ்லாம்!' என்று நண்பருக்குப் பதில் சொல்லி விட்டுப் புன்னகைத்தேன். அவ்வளவுதான். திடுக்கிட்டு விழித்தவர் போல் திகைப்புடன் அவர் என்னைப் பார்த்தார். நான் புன்னகைத்து விட்டு நடையைத் தொடர்ந்தேன்.

ஆவரது ஆச்சரியமும் திகைப்பும் என்னை எதுவும் செய்யவில்லை. மாற்று இனத்தானோடு ஒன்றாகப் பேசுவது, பழகுவது, தொடர்பு வைப்பது, உறவாடுவது எல்லாம் மார்க்க விரோமதமாகக் கருதிய சமூகத்திலிருந்து வந்த நமக்கு ஒரு பௌத்த மதகுரு பேசிய நல்விடயங்கள் அனைத்தும் இஸ்லாம் என்பதை ஏற்றுக் கொள்வதற்குத் தயக்கமாகத்தான் இருக்கும்.

ஐம்பெரும் கடமைகளும் ஒதுங்கி வாழ்வதுமே நமது வழிமுறையும் புனிதமும் என்று கருதும் நிலையிலிருந்து  தலையாட்டுவது விரலாட்டுவது வரை சண்டை பிடித்துக் கொண்டு தனிப் பள்ளிவாசல் கட்டித் தொழும் நிலைக்கு இப்போதுதானே பரிணாமம் பெற்றிருக்கிறோம்.

கவிக்கோ அப்துல் ரகுமான் ஒரு முறை சொன்னார்:-

'சிந்தித்துப் பார்க்கிறதில்ல... அல்லாஹ் குர்ஆன்ல பல இடங்களில் சிந்தி.. சிந்தி.. என்று மனிதனுக்குச் சொல்கிறான். என்னத்தச் சிந்திக்கிறாங்க.. மூக்கைச்  மட்டும்தான் சிந்திக்குறாங்க!'

(நன்றி - மீள்பார்வை)
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: