Tuesday, April 28, 2015

வினாக்களை விதைக்கும் நூல்


 - 18 -

ஆறுவயது அல்லது ஒன்பது வயதுச் சிறுமியை ரஸூலுல்லாஹ் திருமணம் செய்தார்கள் என்ற விடயத்தை மறுக்கும் ஒரு நூல் தமிழில் அண்மையில் வெளிவந்திருக்கிறது.

'அறபுகளின் நாயகி' என்ற தலைப்பில் அமைந்த இந்த 76 பக்க நூலை ஐரா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அன்னை ஆயிஷா (ரலி) அவர்களது திருமணம் பற்றிய புனைவுகளும் உண்மைகளும் - என்ற உப தலைப்போடு அழகிய வடிவில் வெளிவந்திருக்கும் இந்நூலை எழுதியிருப்பவர் பயாஸ் அப்துர் ரஸ்ஸாக்.

மிகவும் தெளிந்த தமிழில் யாரால் வேண்டுமானாலும் படித்து உடனே புரிந்து கொள்ளும் விதத்தில் அண்மைக் காலத்தில் வெளிவந்த நூல்கள் இரண்டினைப் படித்திருக்கிறேன். ஒன்று நூருத்தீன் எழுதிய ஸஹாபாப் பெண்மணிகள் பற்றிய 'தோழியர்' என்ற நூல். மற்றையது 'அறபுகளின் நாயகி.

'அபூதாலிப் அவர்களைப் பற்றிய ஒரு நூல 2009; ல் பயாஸ் அப்துல் ரஸ்ஸாக் எழுதினார். அதன் பிறகு ஆமினா - அப்துல்லாஹ் என்ற தலைப்பில் 2012ல் மற்றொரு நூலை எழுதி வெளியிட்டுள்ளார். தெளிவான மொழி நடை கைவரப் பெற்ற இவரது நூல்கள் ஆரம்பித்தது முதல் அலுப்பு வராமல் படிக்கத் தூண்டுபவை. 'அறபுகளின் நாயகி' என்ற இந்த நூலும் இலக்கியச் சாமார்த்தியம் கொண்;ட ஒரு கலந்துரையாடல் கதை போலக் கேள்விகளை அடுக்கிக் கொண்டே செல்வது படிக்க ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.

ஆயிஷா நாயகி - றஸூலுல்லாஹ்வின் திருமணம் அன்னையின் ஆறு வயதில் நடந்தது என்பதைக் குறிக்கும் ஒற்றை ஆதாரத்தை நூலாசிரியர் கேள்விக்குட்படுத்துகிறார். அன்னை பாத்திமா (ரலி) அவர்கள் மற்றும் அன்னை அஸ்மா (ரலி) ஆகியோரின்  வயதுக் கணக்குகள் மற்றும் நபித்துவம் அருளப்பட்ட காலப் பிரிவையும் அன்னை ஆயிஷா அவர்களது பிறப்புப் பற்றிய தகவல்களையும்  மேலும் பல அம்சங்களையும் முன் வைத்து இத்திருமணம் அன்னையின் 12 முதல் 21 வயது வரையான காலப் பகுதியில் நடந்திருக்க வேண்டும் என்கிறார் நூலாசிரியர்.

இந்த நூலை வாசித்து முடித்த போது எனது மனதில் ஏகப்பட்ட வினாக்கள் எழுந்து நின்றன. அறபுத் தேசங்களின் பல்கலைக் கழகங்கள் ஒவ்வொரு துறையிலும் ஆய்வுகளை நடத்திக் கொண்டேயிருக்கிறது என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அப்படியெனின் முகம்மது (ஸல்) - அன்னை ஆயிஷா (ரலி) ஆகியோர் திருமணம் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா? ஓர் அஜமியான அப்துல் ரஸ்ஸாக் முன் வைக்கும் கேள்விகள் அறபிகளுக்கும் அறபு ஆய்வாளர்களுக்கும் இஸ்லாமிய சிந்தனையாளர்களுக்கும் எழாதது ஏன்? அவர் எழுப்பும் கேள்விகள், சந்தேகங்களை அவர்கள் எழுப்பி அது குறித்து ஆய்வு செய்துள்ளனரா? இல்லையாயின் ஏன்?

ஆட்சியாளர்களுக்கு ஏற்றவாறு மார்க்கத்தை மாற்றிக் கொள்ளத் தலையசைக்க மறுத்த பல இமாம்கள் சிறைகளில் இருந்திருக்கிறார்கள், சித்திரவதை அனுபவித்திருக்கிறார்கள், நாடுகளை விட்டே தப்பி ஓடியும் இருக்கிறார்கள். இந்த விடயம் ஆய்வுக்குட்படாததின் பின்னணி அங்கிருந்து தொடர்கிறதா? இளவயதுப் பெண்களைத் திருமணம் செய்யவும் அடிமைச் சேவகம் செய்யவும் அரசு கட்டில் முதல் அறிஞர் பெருமக்கள் வரை இதை வசதியாகக் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்களா?  இவ்வாறு பல கேள்விகள் ஒரு சாதாரணனான எனக்கு இதைப் படிக்கும் போது எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஆலிம்கள் அல்லாத சிந்தனையாளர்களால் புத்திஜீவிகளால் ஆதாரங்களோடு முன்வைக்கப்படும் மார்க்கம் மற்றும் வரலாறு பற்றிய விடயங்களைச் சிந்தனைக்கு எடுத்து அது பற்றிய சரியான தெளிவை வழங்குவதற்கு நமது மார்க்க அறிஞர் பெருமக்கள் முன்வர வேண்டும். இது குறித்த ஆய்வுகள் மேலும் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அதை சமூகத்தின் முன் வைக்கப்பட வேண்டும்.

இந்த நூல் இலங்கையில் இஸ்லாமிய சிந்தனை குறித்து ஆழப் Nபுசும் பலருடைய கரங்களுக்குச் சென்று சேர்ந்திருக்கிறது என்று அறியக் கூடியதாக இருக்கிறது. ஆனால் அவர்கள் இது குறித்து பொது வெளியில் முன்வைத்த எந்தக் கருத்தும் இதுவரை எனது கண்களில் படவில்லை.

யாரும் வினாக்களை முன்வைக்கும் போதெல்லாம் பத்வாக்களைக் கொடுப்பதிலும் பயங்காட்டுவதிலும் உனக்கு அறபு தெரியாது, மார்க்கம் தெரியாது என்று எள்ளி நகையாடுவதிலும் ஆர்வம் காட்டுவோர் இங்கு எழுப்பப்படும் கேள்விகளுக்கு விடை கொடுத்துவிட்டும் தொடர்வது நல்லது என்பதை அழுத்திச் சொல்ல விரும்புகிறேன்.
---------------------------------------------------------------------------

குறிப்பு - இந்தப் பத்தி எழுதி அனுப்பப்பட்ட பின்னர் ஒரு சிலர் இந்நூல் குறித்துத் தமது எண்ணங்களை வெளிப்படுத்தியிருந்ததை முகநூல் மூலம் அறியக் கிடைத்தது.


Friday, April 24, 2015

தேவையற்றவை!


கவிஞர் காஜல் அகமட் ஈராக்கின் கிர்குக் நகரில் குர்து இனத்தில் பிறந்தவர். கவிஞர், ஊடகவியலாளர், சமூக ஆய்வாளர். ஐந்து நூல்களை எழுதியுள்ளார். குர்திஸ்தானி பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் குர்து தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளும் நடத்தி வருகிறார். அவரது கவிதை இது!

எனக்கு மலர்களெதுவும் தேவையில்லை
இணைவின் புதிய சகாப்தமோ
அது கலையும் புதிய உதயமோ தேவையில்லை

நானே அதிசயமான ஒரு பூவாயிருப்பதால்
எனக்கு மலர்களெதுவும் தேவையில்லை
எனக்கு முத்தங்கள் தேவையில்லை

உண்மையான முஷ்டியுள்ளதால்
ஒரு பிடியை நான்; வைத்திருக்க வேண்டும்

திருமண சகாப்தமோ
விவாகரத்து உதயமோ தேவையில்லை
என்றைக்குமே விதவையாகத் தேவையில்லை

எனக்கு முத்தங்கள் தேவையில்லை
அன்போடு இணைந்திருப்பதால்
நான் ஒரு தியாகியாக மாறுவேன்

சவப் பெட்டி மீதோ
என் மீது - பிணத்தின் மீதோ
எனக்குக் கண்ணீர் தேவையில்லை

அனுதாபத்துக்காக செர்ரிச் செடியை
எனது புதைகுழி வரை இழுத்துவரத்தேவையில்லை
மலர்களோ முத்தங்கனோ தேவையில்லை
கண்ணீரோ துயரமோ தேவையில்லை

கொண்டு வந்தது எதுவுமில்லை
பற்றியிருந்ததும் எதுவுமில்லை
தேசியக் கொடியில்லாத தேசம் போல
ஒரு குரலற்ற தேசம் போல
நான் மரணித்து விடுகிறேன்

நான் நன்றியுடையவள்
எனக்கு எதுவும் தேவையில்லை
எதையும் ஏற்கப் போவதுமில்லை!

Tuesday, April 21, 2015

எல்லைக்குள்ளும் ஏராளம் இடமுண்டு!


 - 17 -

வார்த்தைகளால்தான் ஆனது கவிதை என்ற போதும் அதனை ரசிக்கின்ற ஆன்மா அனுபவிக்கும் இன்பத்தை வார்த்தைகள் கொண்டு சரியாக விபரிக்க முடியாது என்று நான் அடிக்கடி நினைப்பதுண்டு!

இஸ்லாம் என்பது விரிவாகப் பேசவும் எழுதவும் தெளியவும் என்று ஆன நிலை ஏற்பட்ட பிறகு கவிதையின் எல்லை பற்றிய புரிந்துணர்வு ஓரளவுக்குத் திருப்தி தரக் கூடியதாக மாறியிருக்கிறது. ஆயினும் நீண்ட காலமாக கவிதை என்பது ஒழிக்கப்பட வேண்டிய அம்சமாகவும் அப்படியே பயில வேண்டும் என்ற அவசியம் இருக்குமாயின் அல்லாஹ், நபிகளார், ஸஹாபாக்களைப் போற்றிப் பாடுப்படுவதாகவும் இஸ்லாத்தின் கடமைகளை விவரிப்பதாகவுமே இருக்க வேண்டும் என்ற ஒரு நிலையிலிருந்து வேறு ஒரு தளத்துக்குச் ; செல்வதில் இன்னும் மனத் தடை மற்றும் புரிதல் தடைகள் இருககத்தான் செய்கின்றன.

யார் யார் இஸ்லாத்தை எப்படி விளங்கி வைத்திருக்கிறோமோ அந்த அளவிலேயே நமது கவிதையும், கலைகளும் தரித்து நிற்கின்றன. சற்று அதிகமாகப் போவது என்றால் பலஸ்தீனப் போராளிகளுக்கான ஆதரவு, முஸ்லிம் சமூகத்தின் அவலங்கள் வரை அது நீள்கிறது.

விலக்கப்பட்ட அம்சங்களைப் புகழ்ந்தோ வேண்டியோ சிலாகித்தோ பாடுவதைத் தவிர்த்தால் ஏனையவை அனைத்தும் இஸ்லாம் என்ற வரையறைக்குள் வந்து விடும். ஆனால் 'எல்லை' மற்றும் 'வரையறை' ஆகியவற்றை ஒரு பூதம் போல நினைத்து மறுகிக் கொண்டிருப்பதால் நமது சிந்தனைகள் மேற்கொண்டு நகர்வதாயில்லை. கடந்த காலத்தில் இஸ்லாமியக் கவிதை என்று நினைத்துக் கொண்டு வெறும் அறபுச் சொற்களையும் வரலாற்றுச் சம்பவங்களையும் எந்த ரசனையும் இல்லாமலே எழுதி வருவது போலவே இன்றும் எழுதி வருகிறோம். சோடிக்கப்பட்ட, வலிந்த சம்பவங்களும் வார்த்தைகளும் எல்லைக்குட்பட்ட கவிதை இலக்கியத்தைச் சிதைத்தே வந்திருக்கின்றன, வருகின்றன.

இங்கே பிரபல பலஸ்தீனக் கவிஞர் மஹ்மூது தர்வேஷ் அவர்களது கவிதை ஒன்றைத் தருகிறேன். யூஸூப் (அலை) அவர்களைப் பலஸதீனர்களாகவும் யூதர்களை, யூஸூப் நபியைக் கிணற்றில் தள்ளிய சகோதரர்களாகவும் அவர் இந்தக் கவிதையில் சித்தரிக்கும் அழகைப் பாருங்கள். இறுதியில் அல்ஆன் வசனம் ஒன்றுடன் கவிதையைப் பொருத்தமாக நிறைவு செய்கிறார். இந்தக் கவிதை பலஸ்தீனத்துக்கு மட்டுமன்றி எந்த ஒரு நாட்டிலும் ஓர் இனம் இன்னொரு இனத்தைக் கருவறுப்பதை எடுத்துச் சொல்லப் பொருத்தமான கவிதையாக இது அமைந்திருக்கிறது.

எனது தந்தையே..
நான் தான் யூஸூப்!

எனது தந்தையே..
எனது சகோதரர்கள் 
என்னை விரும்புகிறார்களில்லை!

அவர்களுக்கிடையில்
நானும் ஒருவனாயிருப்பதை
அவர்கள் விரும்புகிறார்களில்லை!

அவர்கள் என்னைத் தாக்குகிறார்கள்,
கற்களையும் சொற்களையும்
என்னை நோக்கி வீசுகிறார்கள்!

நான் மரணிக்க வேண்டும்
என்பது அவர்களது விருப்பம்,
அப்படி நடந்தால்
அவர்கள் என்னைப் புகழுவார்கள்!

உங்களது வீட்டுக் கதவை
இறுகப் பூட்டுகிறார்கள்,
என்னை வெளியில் விட்டு விட்டு!

வெளிகளிலிருந்து
என்னைத் துரத்தியடிக்கிறார்கள்!

எனது திராட்சைப் பழங்களில்
அவர்கள் நஞ்சு கலக்கிறார்கள்!

என் தந்தையே
எனது விளையாட்டுப் பொருட்களையெல்லாம்
அவர்கள் உடைத்து விட்டார்கள்
எனது தந்தையே...

எனது தலை மயிர்களில்
தென்றல் விளையாடுவதைக் கண்டு
அவர்கள் பொறாமைப்படுகிறார்கள்!

உங்கள் மீதும் என் மீதும்
அவர்கள்
வெறித்தனமாகத் தீ மூட்டுகிறார்கள்!

அவர்களிடமிருந்து
நான் எவற்றைக் களவாடினேன் தந்தையே?

எனது தோளில் 
பட்டாம்பூச்சிகள் வந்தமர்ந்தன
கோதுமை என்பக்கம் தலை சாய்ந்தது
எனது உள்ளங் கைகளில்
பறவைகள் உறங்கின..

நான் என்னதான் செய்து விட்டேன்
என் தந்தையே?
ஏன் எனக்கு இது?

நீங்கள்தான் யூஸூப் என்று
எனக்குப் பெயரிட்டீர்கள்!

அவர்கள் என்னைக்
கிணற்றில் வீசிவிட்டு
ஓநாயைக் குற்றம் சாட்டினார்கள்

ஓநாய்கள்
என் சகோதரர்களை விடவும்
கருணை மிக்கவை!

தந்தையே
பதினொரு நட்சத்திரங்களும்
சூரியனும் சந்திரனும்
என்னைச் சிரம்பணியக் கனவு கண்டேன்
என்று நான் சொன்னதில்
ஏதாவது தவறு செய்து விட்டேனா?