Tuesday, June 9, 2015

அவளுக்கும் அழுகை என்று பெயர்!


 - 21 -

ராபியா வழமையைப் போல உரிய நேரத்துக்கு ஆசிரியையின் வீட்டுக்குள் நுழைந்தாள். ஆனால் அவளது முகம் வியர்த்திருந்ததை ஆசிரியை அவதானித்தார். ஆசிரியையின் வீட்டுக்கும் அவளது வீட்டுக்கும் வெறும் இருபது யார் தூரம்தான். இப்படி வியர்க்க விருவிருக்க அவள் வரவேண்டிய அவசியம் கிடையாது. இதற்கு முன்னர் அப்படி நிகழ்ந்ததும் இல்லை.

இம்முறை கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்ற இருக்கிறாள் ராபியா. குடும்பத்தில் ஒரேயொரு பிள்ளை. படிப்பில் 70 வீதத்துக்கு மேல். பொது அறிவு - சமூக அறிவு 90 வீதத்துக்கும் மேல். தேசத்தின் பெருந்தலைநகருக்கு வெளியே புறநகரொன்றின் 'ஏனோதானோ' முஸ்லிம் பாடசாலை ஒன்றின் மாணவி.

இன்று அவளுக்கும் ஆசிரியையிடம் 'எலொகேஷன்' கல்வி கற்கும் மாணவ, மாணவிகளுக்கும் பரீட்சை தினம். பரீட்சை 9.30க்கு ஆரம்பமாகி விடும். ஆசிரியையின் வீட்டிலிருந்து கணக்கிட்டால் ஏறக்குறைய 25 கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள பிரபல அரச பாடசாலையில்தான் பரீட்சை நடக்கிறது.

பல பெற்றோர் தமது பிள்ளைகளைத் தாமே பரீட்சைக்கு அழைத்துச் செல்லப் பொறுப்பேற்றுக் கொள்ள எஞ்சியது ராபியாவும் ஆசிரியையின் சகோதரியும் மாத்திரமே. அன்றைய வேறு தவிர்க்கவே முடியாத குடும்பச் சிக்கல் காரணமான ஆசிரியைக்குப் பரீட்சை நிலையம் வரை செல்ல முடியவில்லை. எனவே ஒரு முச்சக்கர வண்டியொன்றைப் பேசி இருவரையும் அனுப்பிப் பரீட்சை முடிவடைந்ததும் மீளக் கொண்டு வர ஆசிரியை தீர்மானித்தார்.

முதல் நாளிரவு ஆசிரியையினால் முச்சக்கர வண்டி பேசித் தீர்மானிக்கப்பட்டது. அந்த முச்சக்கர வண்டிக்குரியவர் ராபியாவின் தந்தை. காலை மகள் பரீட்சைக்குப் புறப்படும் மகளைக் கண்ட பிறகுதான் ஆசிரியையால் பேசப்பட்ட முச்சக்கர வண்டியில் பயணம் செய்ய இருக்கும் மாணவிகளில் ஒருத்தி தனது மகள் என்பது தெரிய வந்தது. என்ன நடந்ததோ தெரியவில்லை, காலை ஏழு மணிக்கெல்லாம் முச்சக்கர வண்டி வராது என்று ஆசிரியைக்குத் தகவல் தரப்பட்டது.

முச்சக்கர வண்டிக்காரரின் முடிவு ஆசிரியைச் சிக்கலில் மாட்டி விட்டது. பரீட்சை மண்டபத்துக்குச் செல்ல குறைந்தது ஒரு மணி நேரமாவது எடுக்கும். இன்னும் அரை மணி நேரத்தில் வேறு ஒரு முச்சக்கர வண்டி ஒன்றைத் தேடும் அவசரத்தில் பலருக்குத் தொலைபேசியில் அழைப்பு எடுத்துக் கொண்டு தடுமாற்றத்துடன் நின்றிருந்த வேளையில்தான் ராபியா வியர்த்து விருவிருக்க ஆசிரியை வீட்டுக்குள் நுழைந்திருந்தான். அவள் எந்த வழியிலாவது பரீட்சைக்குச் சென்று விட வேண்டும் என்ற ஆர்வத்துடன் வந்திருந்ததை அந்த இக்கட்டான நிலைமைக்குள்ளும் ஆசிரியையால் உணர முடிந்திருந்தது.

ஆசிரியையைப் பொறுத்த வரை ஒரு நல்ல சிநேகிதியைப் போல் பழகுபவள் ராபியா. கற்க வேண்டும் என்ந பேரவா கொண்டவள். பாடசாலையின் புறக்கிருத்தியச் செயற்பாடுகளில் பெரும் அர்ப்பணம் கொண்டவள். எந்த ஒரு விடயத்தையும் மிகுந்த ஈடுபாட்டுடன் செய்யும் சின்னப் பெண்.

ராபியா ஆசிரியையின் வீட்டுக்குள் நுழைந்து விருட்டென காரியாலய அறைக்குள் நுழைந்து விட்டாள். அவள் வீட்டுக்குள் நுழைவதற்கு முன்னரே வேறு ஒரு நம்பிக்கையான நபரின் முச்சக்கர வண்டி தேடும் முயற்சியில் ஆசிரியை ஈடுபட்டுக் கொண்டிருந்து தோல்வியடைந்து மனம் சலித்த நிலையில் காரியாலய அறைக்குள் நுழைந்த போது 'திக்' என்றது. ஆம் ராபியா பிழியப் பிழிய அழுது கொண்டிருந்தாள். தனது தந்தையார் செல்ல மறுத்த காரணத்தால் இவ்வளவு அழ வேண்டியதில்லை என்று நினைத்த ஆசிரியை அவளைச் சமாதானப்படுத்த முயன்றார்.

ஆனால் அழுகை நிற்கவில்லை. ராபியா அழுது ஆசிரியை பார்த்ததில்லை. புன்னகையும் சிரிப்புமாக ஒரு பட்டாம்பூச்சி போல் வளைய வரும் சின்னப் பெண் அவள். பரபரப்பும் உற்சாகமுமாகவே கண்டு பழகிய ராபியா தேம்பித் தேம்பி அழுவதைக் காணச் சகிக்கவில்லை ஆசிரியைக்கு. மிகுந்த போராட்டத்துக்குப் பின்  அவளது அழுகை தணிந்ததே தவிர முடிவடையவில்லை. எதுக்காக இப்படி அழுகிறாய்? என்று ஆசிரியை கேட்ட போது அவள் தேம்பிய படியே சொன்னாள்:-

'வாப்பா... வாப்பா... சோதினையும் தேவல்ல.. படிப்பும் தேவல்ல என்டு சொல்லுறாரு... பொம்புளைகள் படிச்சி என்னத்த செய்யப் போறீங்க என்டு சத்தம் போட்டாரு... என்னத்தப் படிச்சாலும் குசினிக்குள்ளதானே இருக்கப் போறாயென்டு சொன்னாரு...' என்றவள் மீண்டும் உரக்க அழ ஆரம்பித்தாள்.

அதைக் கேட்ட ஆசிரியைக்குக் கோபம் வந்தது. பஸ்ஸின் இலக்கங்களைச் சொல்லிக் கொடுத்து 'போங்க.. இரண்டு பேரும் பஸ்ஸில் போய் நல்லா சோதினைய எழுதிட்டுத் தைரியாமாத் திரும்பி வாங்க..' என்று அனுப்பி வைத்தார்.

இறுகிய உறுதியான முகத்துடன் ராபியாவும் மற்றைய மாணவியும் படியிறங்கினார்கள்.

'கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் இருவருக்கும் கட்டாயக் கடமையாகும் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்' - என்று மௌலவியான ராபியாவின் தந்தை எங்கோ ஒரு பள்ளிவாசலில் உபந்நியாசம் செய்யும் காட்சி ஒரு நிமிடம் ஆசிரியையின் மனக்கண்ணில் விஸ்தாரமாக விரிந்து மறைந்தது.

நன்றி - மீள்பார்வை
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: