(2016 டிசம்பர் 11,12,13 ஆகிய திகதிகளில் கொழும்பில் இலங்கை மன்ற அரங்கில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பொன்விழா மாநாட்டின் 3ம் நாள் நிகழ்வுகளுக்குத் தலைமை வகித்து ஆற்றிய உரை!)
உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நின்று நிலவுவதாக!
வரலாற்றுப் பதிவான இந்த நிகழ்வின் நிறைவு விழாவில் - உங்கள் முன் உரையாற்றும் வாய்ப்பைத் தந்த - அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறேன்!
அதிலும் சிறப்பாக - இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகளை முன்னெடுத்துச் சென்ற - தமிழக இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் பொருளாளரும் தொழிலதிபரும் பத்திரிகையாளரும் - எழுத்தாளருமான மர்ஹூம் அல்ஹாஜ் ஏவி. எம். ஜாபர்தீன் அரங்குக்குத் - தலைமை வகிக்கும் வாய்ப்புக் கிடைத்ததில் - மிகப் பெரும் ஆத்ம திருப்திக்கு ஆளாகியிருக்கிறேன்.
கண்டங்களாக, தேசங்களாக, மாநிலங்களாக, இனங்களாக, மதங்களாக மனிதகுலம் பிரிந்து கிடப்பதற்கு - ஆயிரங் காரணங்கள் இருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் அப்பால் சேர்ந்தே வாழ வேண்டும் என்று - இறைவன் சில விதிகளை வகுத்தளித்திருக்கிறான். அதில் ஒன்றுதான் கலையும், இலக்கியமும்.
நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளமலே - மனிதர்களுக்கிடையிலான இணைப்புப் பாலமாகக் கலையும் இலக்கியமும் - அவை தோன்றிய காலம் முழுவதும் இயங்கி வருகிறது. நவீன தொழில் நுட்பம் நம்மை - வெகு அண்மையில் கொண்டு வந்து வைத்து விட்டது.
அண்மையில் மறைந்த புரட்சிக் கவிஞர் இன்குலாப்,- 'அரசுகள் சண்டையிட்டுக்கொள்ளும், மனிதர்கள் கைகுலுக்கிக் கொள்ள விரும்புவார்கள்' என்று - ஒரு முறை சொன்னார். வித்துவக் காய்ச்சலால் பீடித்துக் கிடந்தாலும், காலங்காலமாக - விமர்சனங்களுடாகச் சச்சரவு கொண்டு விலகி இருந்தாலும் - கலைஞர்களும் இலக்கியப் படைப்பாளிகளும் மனித நேயத்தைப் பாடுவதிலும் - உலகில் நீதி நிலைநாட்டப்படுவதற்கான குரலை எழுப்புவதிலும் - எல்லாமே சரியாக இருக்க வேண்டும் என்று உரத்துச் சொல்லும் - ஒரு புள்ளியிலே இணைந்து கொள்வார்கள். அதைத்தான் இந்த மாநாடும் - உறுதிப் படுத்திக் கொண்டிருக்கிறது.
இந்த மாநாட்டினதும் - இந்த மாநாட்டை நடத்தும் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தினதும்; பொதுச் செயலாளராக மட்டுமன்றி - ஓர் இலக்கியப் படைப்பாளியாகவும் சேர்ந்தே நான் பேச வேண்டியிருக்கிறது.
அறபுத் தீபகர்ப்பத்தில் இஸ்லாம் தோன்றிய பிறகு - மனித வழிகாட்டலுக்காக தேசங்கள் கடந்து - நற்செய்தியை ஏந்தி வந்தவர்கள் - ஒரு தொடர் இணைப்பைக் கொண்டிருந்தார்கள். இது ஓர் அஞ்சலோட்டம் போல அமைந்திருந்தது. தமக்குக் கிடைத்த செய்தியை - இறுதியாக மக்களுக்கு எடுத்தியம்பியவர்கள் - அந்தந்த பிரதேசத்தில் வாழ்ந்த மக்களின் மொழியில் எடுத்துச் சொன்னார்கள்.
அக்காலத்தில் தொடர்பூடக வசதிகள் என்று எதுவும் கிடையாது. தொலைபேசி கிடையாது, இணையம் கிடையாது. பேஸ்புக் கிடையாது, வட்ஸ் அப், வைபர் எதுவும் கிடையாது. செய்தியைப் பெற்றுக் கொண்டவர்கள் - தம்மோடு வாழும் மக்களிடம் செய்தியை எடுத்துச் சொல்ல ஓர் அற்புதமான வழியைக் கையாண்டார்கள். அதுதான் கவிதையும் பாடலும்.
கவிதையும் பாடலும் மனித ஆத்மாவுடன் பின்னிப் பிணைந்தது என்ற இரகசியத்தைக் கண்டு பிடித்தவர்கள் அவர்கள்தாம். எனவேதான் அவர்கள் தமது செய்தியை - மக்கள் மனதில் பதிய வைக்க செய்யுள் வடிவத்தை - பாடல் வடிவத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள்.
இதுதான் இஸ்லாமிய தமிழ் இலக்கியம் என்று அடையாளப்படுத்தப்பட்டது. முன்னோரின் இந்த இலக்கிய வகையானது - எங்கெல்லாம் முஸ்லிம்கள் வாழ்ந்தார்களோ - அங்கெல்லாம் - பாடப்பட்ட இடம், சூழல், வாழ்வு முறை, வாழ்ந்த காலம் ஆகியவற்றை - உறுதிபட நிரூபித்துக் கொண்டிருக்கிறது.
இன்றும் கூட இந்த வடிவங்களின் நவீனப் படுத்தப்பட்ட முறைகளை - அவைதாம்; சரியான முறை - என்று கண்டு கொண்டவர்கள் அவற்றைப் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் அறபு உலக அரசியலோடும் - ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலை - மார்க்கமாகப் பின்பற்றி வருவோரும் இந்த வழியை நிராகரித்து நிற்கிறார்கள்.
நமது முன்னோரது இலக்கியத்தைப் பற்றி செய்யித் ஹஸன் மௌலானாவும் அவருடைய நண்பர்களும் 1966ம் ஆண்டு - மருதமுனையில் எடுத்துச் சொன்னார்கள். பிறகு 1945ம் ஆண்டு சுவாமி விபுலானந்தர் இதை அல்லாமா உவைஸ் அவர்களுக்குச் சுட்டிக் காட்டினார். உவைஸ் அவர்களின் அயராத பணி விசாலமாகி - பல உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகள் நடைபெறவும் - முஸ்லிம்களின் கடந்த கால இலக்கியப் பதிவுகளின் ஆய்வுகள் தொடரவும் வழி செய்தது.
காலம் செல்லச் செல்லப் - பழைய இலக்கியங்களில் பெருமளவில் - ஆய்வும் பதிவும் மேற்கொள்ளப்பட்ட பின்னர் - ஒவ்வொரு மாநாட்டிலும் இடம்பெற்ற ஆய்வரங்கங்கள்- முஸ்லிம்களின் பின்னரான இலக்கியப் பதிவுகள் பற்றிப் - பேச ஆரம்பித்தன. கடந்த கால மாநாட்டு மலர்களும் ஆய்வரங்கக் கோவைகளும் - இவற்றுக்குச் சான்றாக இருக்கின்றன.
இம்முறை எமது மாநாட்டில் தற்கால இலக்கியம் - முஸ்லிம்களின் வாழ்வியல் இலக்கியம் பற்றி மிகவும் கரிசனை கொண்டோம். அதற்குரிய ஆய்வரங்குத் தலைப்புக்களைத் தந்தோம். இணையத் தளங்கள் முதற்கொண்டு சமூக ஊடகங்களில் முஸ்லிம்கள் எழுதி வருவது குறித்தெல்லாம் - தலைப்புக்கள் வழங்கியிருந்தோம். ஆயினும் இரண்டே இரண்டு கட்டுரைகள் மாத்திரமே கிடைக்கப்பெற்றோம்.
இது கவலைக்கிடமான ஒரு நிலை என்பதை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
கவிதை என்ற பெயரில் அவ்வப்போது வசனங்கள் சிலவற்றை எழுதிவிட்டு - பாரதிக்கு நிகராகத் தம்மைக் கட்டமைத்துக் கொள்ளுகிற - எல்லா கௌரவங்களுக்கும் பாராட்டுக்களுக்கும் பாத்தியதை கொண்டவர்கள் - என்ற எண்ணத்தோடுதான் பெரும்பாலான இளம் முஸ்லிம் படைப்பாளிகள் இன்று வாழ்ந்து வருகிறார்கள் - என்பதைத்தான் இந்த அவல நிலை - நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
இருந்தும் கூட - இந்த மாநாட்டில் வெளியிடப்பட்ட ஏறக்குறைய 500 பக்கங்களிலான மாநாட்டு மலர்;, ஆய்வுக் கோவை ஆகியன - நம்பிக்கை தருவனவாக அமைந்திருக்கின்றன. 100 வீதமும் மிகக் காத்திரமான படைப்புக்களை நாம் பதிப்பித்தோம் என்று - சொல்ல வரவில்லை. கவிதைக்கு அப்பால், கவிதை பற்றி, வாழ்வியல் பற்றி, கதைகள் பற்றி, இன்றைய மார்க்கப் போக்கும் இலக்கியப் புரிதலும் பற்றி, மற்றவரின் ஆளுமை பற்றியெல்லாம் எழுதப்பட்டவற்றில் ஓரளவு திருப்தி இருந்தது என்று கண்டால் நாம் அதைப் பதிப்புக்கு எடுத்துக் கொண்டோம்.
கொடுக்கப்பட்ட தலைப்புக்களில் எழுதக் கூடிய தகை சார்ந்த - ஆனால் அசிரத்தையாக இருக்கின்றவர்களை விட - புதிதாக எழுதிப் பழகுபவர்கள், எழுத வேண்டும் என்று முனைப்போடு - இந்த நிகழ்வில் பங்களிக்க வேண்டும் என்று எழுதியவர்கள் - எமக்கு மிக முக்கியமானவர்களாத் தெரிகிறார்கள்.
இது ஒரு குழுச் செயற்பாடு. தனிமனித நிகழ்ச்சிநிரல் அல்ல என்பதை - நான் இங்கு அழுத்திச் சொல்ல விரும்புகிறேன்.
இந்த மாநாடு பற்றி அறிவித்தல் விடுக்கப்பட்டு நாள் நெருங்கும் நிலையில் பல்வேறு இடைஞ்சல்கள் - கண்களுக்குப் புலப்படாதவாறு ஒரு சிலரால் ஏற்படுத்தப்பட்டன. அந்ந இடைஞ்சல் கரங்கள் - இலங்கையில் மட்டுமன்றி, தமிழகம், மலேஷியா வரை நீண்டிருந்தது. ஆயினும் எந்தப் பிரதிபலனையும் லாபத்தையும் எதிர்பாராமல் - மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி - அவற்றையெல்லாம் தாண்டிப் பயணித்தது.
1999ம் ஆண்டு சென்னை பிரசிடன்ட் ஹோட்டலில் துவங்கப்பட்ட இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகமானது 2002ல் ஒரு உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டை நடத்தியது. 1970களில் பிறந்த இலக்கியத் தலைமுறைக்கு தமது வாழ்நாளில் காணக்கிடைத்த முதலாவது மாநாடு அது ஒன்றுதான். ஆனால் அந்த மாநாடு பற்றிய விமர்சனங்கள் அடங்க 4 மாதங்கள் எடுத்தன.
அந்த விமர்சனங்களை எழுதிய பத்திரிகை நிருபர்கள், இலக்கியப் படைப்பாளிகள், இலக்கிய ஆர்வலர்களால் 14 வருடங்களில் - ஒரு தேசிய இலக்கிய விழாவைத் தானும் - ஏன் தமது பிராந்தியத்தை உள்ளடக்கிய ஓர் இலக்கிய விழாவைத்தானும் நடத்த முடியவில்லை என்பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
14 வருடங்கள் கழிந்து சென்ற பிறகும் கூட ஓர் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டை நடத்துவதற்கு இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தால் மாத்திரமே முடிந்தது என்பதை - இந்த மாநாடு முடிந்ததும் விமர்சனம் எழுத நினைத்திருப்பவர்களுக்கு நான் ஞாபமூட்ட ஆசைப்படுகிறேன்.
மனிதர்களாகிய நாம் பூரணத்துவம் பெற்றவர்கள் அல்லர். பூரணத்துவம் என்பது இறைவனின் பண்பு. முழு நிறைவாக எல்லோரையும் திருப்திப்படுத்த - குறிப்பாக எழுத்துத் துறையோடு சம்பந்தப்பட்டவர்களைத் திருப்திப்படுத்த - எந்தவொரு அமைப்பாலும், எந்தவொரு நிறுவனத்தாலும் ஒரு போதும் முடியாது என்பதை உறுதியுடன் தெரிவிக்க விரும்புகிறேன்.
என் அன்புக்குரிய தமிழக, மலேஷிய, சிங்கப்பூர் தொப்பூழ்க் கொடி உறவுகளே,
நீங்கள் இந்த மாநாட்டுக்கு வழங்கிய பங்களிப்பை - நாங்கள் என்றென்றும் மனதில் பசுமையாக வைத்திருப்போம். இந்த நிகழ்வுகளும் - எங்கள் நினைவுகளும் உங்கள் மனதில் - பசுமையாக இருக்கட்டும்.
எங்கள் தேசம்தான் சிறியது. எங்கள் இதயங்கள் விசாலமானவை.
இந்த மாநாடு வெற்றியடைய எங்களுக்குப் பெரும் பலமாக இருந்த மாண்புமிகு அமைச்சர்களான ரிஷாத் பதியுதீன், எம்.எஸ்.எம். அமீர் அலி ஆகியோருக்கு இந்த இடத்தில் பெரும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
இலங்கை முஸ்லிம் படைப்பாளிகளான நாங்கள் - ஒரு வகையில் கொடுத்து வைத்தவர்கள். காலத்துக்குக் காலம் - எங்களது அமைச்சர்களது பங்களிப்பு இப்படியான பதிவுகளை மேற்கொள்ளப் - பெரும் பக்கபலமாக அமைந்து வந்திருக்கிறது.
1979ல் நடந்த மாநாட்டுக்கு - முன்னாள்; சபாநாயகர் எம்.ஏ.பாக்கிர் மாக்கார் அவர்கள் பக்க பலமாக இருந்திருக்கிறார். அதன் பிறகு அல்ஹாஜ் ஏ.எச். எம் அஸ்வர் அவர்கள் - நூற்றுக் கணக்கான படைப்பாளிகளுக்கு - விருதும் பணமுடிப்பும் வழங்கி சரித்திரம் படைத்தார். பின்னால் 2002ம் ஆண்டு மாநாட்டுக்குப் பின்னணியில் - அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் இருந்தார். 14 வருடங்களுக்குபி பின்னர் - அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் அமைச்சர் அமீர் அலியும் உந்து சக்தியாகியிருக்கிறார்கள்.
இந்த முயற்சியில் - என்னுடன் நிர்வாக ஏற்பாடுகளில் - அரசு தொடர்புகளில் - கண்ணுக்குத் தோன்றாத பாரிய பங்களிப்புக்களைச் செய்துள்ளார்கள். சகோதரர்கள் இர்ஷாத் ரஹ்மதுல்லாஹ், சுஐப் எம். காஸிம், நளீம், எஸ்.எம். தௌபீக், முகம்மது ரிஸ்மின், முகம்மது ரிபான், ஷெய்க் ஹியாஸ் நளீமி, திருமதி துஷ்யந்தி உட்பட்ட அமைச்சர்களின் ஆளணிக்கு நாங்கள் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோம்.
சிங்கப்பூரில் எமக்குரிய ஏற்பாடுகளைச் செய்துதந்த அண்ணன் முஸ்தபா, ஷாநவாஸ், நஸீர் அகமட், மலேஷியாவில் எந்தக் குறைவும் இல்லாமல் கவனித்துக்கொண்ட ஹாஜி ஏவி.எம் ஜாபர்தீன் அவர்களின் புதல்வர்களான ராஸிக் பரீட், காஸிம் பரீட் ஆகியோருக்கும் அந்த ஏற்பாடுகளைச் செய்து தந்த எழுத்தாளர் சடையன் அமானுல்லாஹ்வுக்கும் எமது நன்றிகள்.
பொன்விழா ஆண்டைக் கண்டு பிடித்த டாக்டர் தாஸிம் அகமது - இதை ஒரு சர்வதேச மாநாடாக மாற்ற நகர்வுகளை மேற்கொண்ட நண்பர் நாச்சியாதீவு பர்வீன் - அழகிய மலரையும் ஆய்வரங்குக் கோவையையும் முழுமை பெற - இரவு பகல் பாராதுழைத்த கவிஞர் அல் அஸூமத் ஆகியோருக்கும் - ஒவ்வொருவரும் அவ்வப்போது எடுத்த தற்றுணிவு முடிவுகளை பொதுவான முடிவுகளாக அங்கீகரித்த இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத் தலைமை முதல் - இறுதி நிர்வாக உறுப்பினர் வரை நன்றிக்கு உரியவர்களாவர்.
அடுத்த இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு இலங்கையில் எப்போது நடைபெறும் என்றோ எப்படி நடைபெறும் என்றோ யார் நடாத்துவார்கள் என்றோ என்னால் சொல்ல முடியாது. யார் நடத்துவதாக இருந்த போதும் அர்ப்பணிப்பும், தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலும் வைத்திருப்போரால் அதைச் சாதிக்க முடியாது என்பதை மட்டும் இங்கு அழுத்திக் குறிப்பிட விரும்புகிறேன். அப்படியான ஒரு இளைஞர் படை முன்வரும் போது மட்டுமே அது சாத்தியப்படும். அவ்வாறு முன்வரும் அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
1999ம் ஆண்டு சென்னையில் நடந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் செயலாளராக இயங்கிய - பேராசிரியர் சேமுமு. முகமதலி அவர்களின் கண்களில் நான் படித்த அசதியையும் ஆயாசத்தையும் - 2002 முதல் 2016 வரை உள்ள காலப்பகுதியில் - நான் மூன்று முறை அனுவித்த போதும் -
அந்த அசதியும் ஆயாசமும் - கிழக்குலக முஸ்லிம்களை நோக்கி - சேர் அல்லாமா இக்பால்; எழுதிய - ஒர் அழகிய கவிதையைப் படிப்பது போல உணர்கிறேன்.