Wednesday, May 2, 2018

ஷாமிலா ஷெரிபின் 'மறைக்கப்பட்ட சொற்களின் அழகு'


ஷாமிலா ஷெரிபின் 'மறைக்கப்பட்ட சொற்களின் அழகு'

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கவிதை நூல் பற்றிய உரையை எழுதிக் கொண்டு வந்து படிப்பதற்கு ஷாமிலாவின் 'மறைக்கப்பட்ட சொற்களின் அழகு' என்னைத் தூண்டியிருக்கிறது.


ஷாமிலாவின் முதலாவது கவிதைத் தொகுதியான 'நிலவின் கீறல்க'ளுக்கும் இன்று அறிமுகப்படுத்தப்படும் மறைக்கப்பட்ட சொற்களின் அழகு'க்குமிடையில் ஷாமிலாவின் கவிதைப் பரப்பின் எல்லை விசாலித்திருப்பதை உணர்கிறேன். இந்த நூலில் உள்ள கவிதைகள் ஷாமிலாவிடம் பெற்றுக் கொண்டு வெளிவந்திருக்கும் வார்த்தைகள் மிகத் தெளிவானவை. ஷாமிலாவின் கல்வியியல், சமூகவியல், குடும்பவியல் செயற்பாடுகள் விரிவாக்கம் பெற்றுக் கொண்டு வந்திருப்பதைப் போலவே அவரது கவிதை வெளியும் விசாலித்துச் செழித்து வளர்ந்திருக்கிறது.

கவிதைகளை ஒவ்வொன்றாகப் படித்துக் கொண்டு போகும் போது 28ம் பக்கத்தில் நான் தரிக்க நேர்ந்தது. 'என் இலக்கிய நிலம்' என்ற கவிதையின் முதற் பந்தி என்னைத் தரிக்க வைத்தது. அந்தக் கவிதை இப்படி ஆரம்பிக்கிறது.

எழுத்தில் உடல் விதைத்து
அதைக் கொண்டாடியபடி
கவிதை அறுவடை நடக்கிறதெனில்
என்னுடைய இலக்கிய நிலம்
தரிசாய்க் கிடக்கட்டும்

இந்த வார்த்தைக்குப் பின்னால் ஒரு பாரிய எல்லை கொண்ட ஒரு சிந்தனை வெளி உருக்கொள்கிறது. உடலுக்குள்; இருக்கும் மனமும் அதன் எண்ணங்களும் அது தூண்டும் செயற்பாடுகளும் எழுதித் தீர்க்க முடியாத நிலையில் ஒரு பேரழியாய் பெருஞ் சமுத்திரமாகக் கிடக்கையில் எங்கோ ஓர் இடத்தில் ஆற்றின் நடுவே, அல்லது கடலின் நீர் குறைந்த நீர்ப்பரப்பின் மத்தியில் இருக்கும் ஒரு தீவு பற்றிப் பேசுவதே உடல் விதைக்கும் எழுத்து.

உடல் விதைக்கும் எழுத்து தப்பா என்றால் இல்லை. எப்போது இல்லை என்றால் சகதிக்கு அருகே சகதி படாமல் நடக்கும்போது அது தப்பாக இருக்காது.

இது அவசர உலகம். எல்லாமே அவசமாக நடக்க வேண்டும், எதுவுமே அவசரமாகக் கிடைக்க வேண்டும் என்று தூண்டல் கொண்ட இடத்துக்கு வாழ்க்கையைத் தள்ளிக் கொண்டு வந்து விட்டிருக்கிறது நவீன உலகம். உடனடியாகவே கவிதை எழுதி, உடனடியாகவே கட்டுரை எழுதி, உடனடியாகவே சிறுகதை எழுதி உடனடியாகவே உலகப் புகழ் பெறவேண்டுமானால் அதற்கு மிகவும் பொருத்தமானது உடல் விதைக்கும் எழுத்து.

இந்த எழுத்து ஒன்றும் புதியதல்ல. இப்போதும் உடல் விதைக்கும் எழுத்தை படைப்பாளிகள் 'சரோஜா தேவி' எழுத்து என்று சொல்வது வழக்கத்தில் இருக்கிறது. ஏறக்குறைய 35 வருடங்களுக்கு முன்னர் இத்தகைய எழுத்துக்கள் அடங்கிய பிரசுரங்கள் பெட்டிக் கடைகளில் விற்பனைக்காகத் தொங்க விடப்பட்டிருந்ததை நான் பார்த்திருக்கிறேன். இவற்றை எழுதுவதற்கென ஒரு எழுத்தாளர் குழு இருந்தது. அச்சிடவும் வெளியிடவும் ஒரு பட்டாளமே இயங்கியது.

அன்று அந்த எழுத்து பணத்தை அடிப்படையாகக் கொண்டது. இன்று நவீன இலக்கியம் என்ற பெயரால் உடனடிக் கவனம் பெறவும் உடனடிப் புகழ் பெறவும் இந்த எழுத்துப் பயன்படுத்தப்படுகிறது. நோக்கம் பன்முகமானது இல்லை என்பதாலும் எல்லா மக்களாலும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்பதாலும் இந்த எழுத்து ஒரு சிறிய சுழல் காற்றுக்கு மேலெழும் சருகுபோல் எழுந்து சட்டெனக் கீழே வந்து விடுகிறது.

அதைத்தான் அதே கவிதையில் இப்படிச் சொல்கிறார்:-

எனது நிலம் ஒரு போதும் துண்டாடப்பட முடியாதது
பருவம் கடந்தாலும் பயிர் விளையும்
பக்குவத்தைக் கொண்டுள்ளது.

ஒரு சிறு காற்றில் விதை பரவி
செழித்து எழுந்து வீச்சு மிக்கதாய்
என் நிலம் வளங்கொழிக்கும்.

எழுத்து வல்லமையும் மொழி வாலாயமும் இருக்கும் எவரும் அவசரப் புகழுக்கு ஆசைப் பட்டு அசூசை கொண்ட இலக்கியம் படைக்கத் தேவையில்லை என்பதுதான் இதன் அர்த்தம்.

இந்நூலின் 35ம் பக்கத்தில் இதை இன்னும் உறுதியாகவும் தெளிவாகவும் பேசுகிறது மற்றொரு கவிதை. 'கவிதை எழுத்து' என்ற அந்தக் கவிதை.

மௌனத்தைக் கலைத்து
விரதத்தை உடைத்து
சமயத்தை அடகு வைத்து
சாக்கடைகளை
எழுத்தில் கொண்டுவரவேண்டிய தேவையை
ஒருக்காலும் உணரப் போவதில்லை
ஒழுக்கமற்ற எழுத்துக்களை
யார்தான் விரும்பப் போகின்றனர்
விரும்புவோர் குறித்தும் கவலையில்லை
மருந்து குடித்தால் குணமாகிவிடும்
வருத்தமல்லவே எழுத்து

நானும் மீன்காரனும் என்றொரு கவிதை நூலின் 63ம் பக்கத்தில் உள்ளது. ஷாமிலாவுக்கு ஏற்பட்ட அதே அனுபவம் எனக்கும் 25 வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்டது. தன்னிடம் கற்ற மாணவன் கற்றலை விட்டதற்காக அவனிடம் கவலைப்பட்ட போது உங்களது மாதச் சம்பளத்தை நான் நான்கு நாளில் உழைக்கிறேன் என்கிறான். நான் கற்பித்த காலத்தில் துடுக்குத் தனம் மிகுந்த ஒரு மாணவனால் நான் பட்ட அவஸ்தை சொல்லுந்தரமன்று. எனது பாடசாலைக் கற்பித்தல் நேரத்தில் பாதி நேரம் அவன் சம்பந்தப்பட்;ட பஞ்சாயத்திலேயே கழிந்திருக்கிறது. பாடசாலையை விட்டு விலகிய அவன் மூன்று வருடங்களுக்குப் பிறகு பாடசாலை விளையாட்டுப் போட்டியைக் கேள்விப்பட்டு என்னை வந்து சந்தித்தான். நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான். விளையாட்டு விழா பற்றிய அழைப்பு அடங்கிய நிகழ்ச்சி நிரலை அச்சிட்டுத் தருமாறு கேட்டுக் கொண்டேன். எவ்வளவு வரும் என்று கேட்டான். 600 ருபாயளவில் வரும் என்றேன். பணப்பையைத் திறந்து ஆயிரம் ருபாய்த் தாளை உருவி என் முன் மேசையில் வைத்து விட்டுப் போனான். அப்போது எனக்கு மாதச் சம்பளமே 600 தான்.

ஷாமிலாவின் கவிதை பேசுவது கல்வியை விட அவசரமாகப் பணம் உழைப்பதற்கு ஆர்வப்படும் நிலைதான் பெரும்பாலும் இளைஞர்கள் மத்தியில் காணப்படுகிறது என்ற கவலையை. இன்றைய அவசர பண உழைப்பு எப்போதும் நிலையாக இருக்காது. ஆனால் கற்றுத் தேர்ந்து ஒரு நிலைக்கானபின் அதன் மூலம் கிடைக்கும் ஒரு தொழில் போனால் மற்றொரு தொழிலை அக்கல்வி பெற்றுத் தரும் என்ற அறிவு அல்லது தெளிவு இன்றைய இளைஞர் தலைமுறையினரிடம் மிகக் குறைவாகவே இருக்கிறது. இதைத்தான் ஷாமிலாவின் நானும் மீன்காரனும் கவிதை சொல்லுகிறது.

இந்த நூலில் அரசியல் என்று ஒரு சிறிய கவிதை உண்டு. இதைப் படித்ததும் மருதமுனை ஹரீஸாவின் பெண் பூச்சி என்ற கவிதை ஞாபகம் வந்தது. இரண்டு கவிதைகளும் பூச்சியைக் குறியீடாகக் கொண்டு பேசுகின்றன. இரண்டு கவிதைகளினதும் இறுதி வரிகள் ஒரு கஸல் கவிதையைன் ஈற்றடியை ஒத்தனவாக அமைந்திருக்கின்றன. ஹரீஸாவின் கவிதை இப்படிப் பேசுகிறது..

விறகுக் கட்டுகளிலும்
ஒத்தாப்புத் திண்ணையிலுமாய்
அடிபட்டு அடிபட்டு
தன் தலையை முட்டி மோதி
ராவெல்லாம் ஓங்கியடித்தது கதவை

ராவு ஒழிந்தபின்
தகட்டுக் கதவைத் திறந்து பார்த்தேன்
முதுகைத் தேய்த்தபடி
மல்லாக்கக் கிடந்தது பூச்சியொன்று

சிறகுண்டு
எட்டுக் கால்களுண்டு
ராவுண்டு பகலுண்டு
வானமுண்டு எல்லையில்லை
பின்
உனக்கென்ன பூச்சி?

பூச்சி சொன்னது
நான் பெண் பூச்சி என்று!

ஆனால் ஷாமிலாவின் பூச்சி அரசியலைக் குறியீடாகக் கொண்டது.

காற்றுவரத் திறந்துவைத்த கதவிடுக்கால்
கரப்பான் பூச்சி
பாதணி கொண்டும்
தும்புத்தடி கொண்டும் அடிக்க முயற்சித்து
புரட்டி விட்டேன்
ஓட முடியவில்லை மல்லாந்து கிடக்கிறது
நிமிர்ந்து விடத் துடிக்கிறது
தானாகப் புரண்டு கொள்ளவியலாது
வட்டமிட்டு நேரத்தைக் கடத்துகிறது
காலால் மிதித்துவிட
அருவருப்பால்
வெளியே எத்தி விடுகிறேன்
காகம் கொத்திச் செல்கிறது.

ஹரீஸாவின் கவிதை படித்தவுடன் புரிந்து கொள்ளக் கூடியதான இருக்கிறது. ஷாமிலாவின் கவிதை என்னை நிறையச் சிந்திக்க வைத்தது. அரசியல்வாதியைப் பேசுகிறதா, அரசியலில் புகுந்து கொள்ள இடுக்குகளுக்குள்ளால் நுழைந்து கொள்ள முனைவோரைப் பேசுகிறதா என்று என்னால் முடிவுக்கு வர முடியவில்லை. ஆனால் வெளியே போட்டால் காகத்தால் கொத்திச் செல்லத் தக்கதான ஒருவரையோ பலரையோ இது குறிப்பதாகத்தான் நினைக்க முடிகிறது.

மறைக்கப்பட்ட சொற்களின் அழகு கவிதைத் தொகுதியில் எனக்கு மிகவும் பிடித்தமான கவிதையாக அமைந்திருப்பது 'என்னாடை' என்ற கவிதை. அதில் பெரிதாகக் கவித்துவம் வழிந்தோடவில்லை. ஆனால் அக்கவிதை பேசுகின்ற விடயமும் பேசுகின்ற முறையும் உண்மையில் நயக்கத் தக்கதாகத்தான் இருக்கிறது. நயக்கத்தக்கதாக அமைந்து விட்டால் அது ஒரு நல்ல கவிதைதான்.

இக்காலத்தில் மிகவும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கும் முஸ்லிம் பெண்களின் ஆடை பற்றி அந்தக் கவிதை பேசுகிறது.

என்னுடைய தனிப்பட்ட கருத்தில் இந்த ஆடையில் எனக்கு உடன்பாடு கிடையாது. அதற்காக இன்னொருவரின் சுதந்திரத்தில் தலையிட்டு அதை நிராகரிக்கச் சொல்லும் உரிமையும் எனக்குக் கிடையாது.
பாதி மார்பகங்களும் அரைவாசி அடித்தொடைகளும் தெரிய அணிந்து செல்லும் ஆடைகள் பற்றி யாருக்கும் எந்த உறுத்தல்களும் இல்லை. முஸ்லிம் பெண்களை நோக்கி இலங்கையருக்குரிய ஆடைகளை அணியுங்கள் என்று சொல்லும் யாருக்கும் அரை குறை ஆடையணிவோரைப் பார்த்து அப்படிச் சொல்லத் துணிவு வருவதில்லை. இந்த விடயத்தைத்தான் ஷாமிலா மிக வினயத்துடன் மனிதனுக்குரியஆடைத் தெரிவுச் சுதந்திரத்துக்கான நியாயத்தை முன் வைத்துக் கேள்விகளாக எழுப்புகிறார். அந்தக் கேள்விகளுக்கூடே முஸ்லிம் பெண்களுக்குரிய ஆடையை விமர்சிப்பதானது குறிப்பாக முஸ்லிம் பெண்களது சுதந்திரத்தில் அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது என்பதைப் புரிய வைக்கிறார்.

அந்தக் கவிதையில் இப்படி வருகிறது:-

என் சுதந்திரத்தில்
என் விருப்பத்தேர்வில்
எனக்குப் பிடித்தமானதில்
மற்றவர் விருப்பு வெறுப்புக்களை
ஏன் திணித்துவிட முயல்கின்றார்கள்

உங்கள் பிரச்சனைதான் என்ன
நானா
நான் அணிகின்ற ஆடையா
அல்லது பின்பற்றும் மதமா?

உங்கள் சுதந்திரத்தில்
நான் தலையிடாமல் இருப்பது போல்
என் சுதந்திரத்திலும் நீங்கள்
தலையிடாதிருங்கள்

இது என் வாழ்க்கை
எனக்குப் பிடித்தமான மாதிரித்தான்
வாழ முடியும்

என் ரசனைக்கேற்பவே நான்
ஆடையணிகிறேன்
உங்கள் ரசனைக்கேற்ப
நீங்கள் அணிந்து கொள்ளுங்கள்!

இந்தத் தொகுதியிலிருந்து பதச்சோறாகச் சில கவிதைகளை முன் வைத்துப் பேசியிருக்கிறேன். எல்லாக் கவிதைகளையும் ஒரே உரையில் கொண்டுவருவதும் சாத்தியம் அல்ல.

கவிதை என்பது மிகச் சுருக்க மொழியாலானது. சொல்ல வந்த விடயத்தைச் சொல்வதற்குத் தேவையான சொற்களை மாத்திரம் பயன்படுத்தும் போது அது அழகுபெறும். ஷாமிலாவின்  கவிதைகளில் துருத்திக் கொண்டு நிற்கும் சொற்கள் இல்லை என்ற போதும் ஒரு சில கவிதைகளில் தவிர்த்திருக்க வேண்டிய சொற்;கள் இருக்கின்றன என்று காண்கிறேன். இன்னொருமுறை இக்கவிதைகளை ஷாமிலா வாசிக்கும் போது அவற்றை அடையாளம் காண முடியும்.

பொதுவாக ஷாமிலாவின் கவிதைகளின் அடிநாதமாக அறச்சீற்றத்தை நான் உணர்கிறேன். இது முழு மனித சமூகத்தையோ அல்லது தனது சமூகத்தையோ நோக்கிய அறச்சீற்றமாக அல்லாமல் ஒரு சில தனி நபர்கள், ஒரு சில குழுமங்களை நோக்கியதாகவே இருக்கக் காண்கிறேன். இது வழமையாக கவிதைத் தொகுதிகளில் காணக் கிடையாக்கத ஒரு பண்பு.

அறச்சீற்றமானது பொதுவாகப் படைப்பாளிகளுக்குள்ள ஒரு பொதுப் பண்பாயிருப்பினும் எல்லோரும் அதை வெளிக்காட்டுவதில்லை. தன் பெயர் கெட்டுவிடும், தனது பொன்னாடை தவிர்க்கப்பட்டுவிடும், எனது இடம் கீழே சென்று விடும், எனக்குக் கிடைக்கவிருக்கின்ற பட்டம் தவறிவிடும் அவர் என்ன நினைப்பார், இவர்கள் என்ன நினைப்பார்கள், என்னைக் கண்டு கொள்ள மாட்டார்கள் என்பன போன்ற அற்பத் தனங்களை மனதில் கொண்டோர் எந்த விதமான ஒரு குற்றத்தையும் பாவத்தையும் பார்த்துக் கொண்டு அமைதியாக இருப்பார்கள். இது அந்தப் பாவத்துக்குக் குற்றத்துக்கு இணையான ஒரு செயலாகும்.

எதுவும் ஆகிறதோ இல்லையோ நூறு எதிர்க்குரல்களில் என்னுடைய குரலும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பதும் அதற்காக இயங்குவதுமே உன்னதமான இலக்கியத்தின் அச்சாகவும் அசைவாகவும் இருக்கும். மனித குலத்துக்காகக் குரல் தரும் அதிசிறந்த மனத்தின் செயற்பாடாக இருக்கும். அந்த மனம் ஷாமிலாவிடம் இருக்கிறது என்பதை இந்தத் தொகுதியின் கவிதைகள் நமக்கு உணர்த்தி நிற்கின்றன.

29.04.2018
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: