முன்னோடி ஒலிபரப்பாளர்களில் ஒருவரான பி.எச். அப்துல் ஹமீத் அவர்கள் நேற்று 13.02.2020 அன்று கொழும்பு எல்பின்ஸ்டன் அரங்கில் நடைபெற்ற வானொலி அரச விருது விழாவில் 'பிரதீபா பிரணாம' என்ற வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். இலங்கை அரசின் காசார அமைச்சின் கீழ் இயங்கும் கலாசாரத் திணைக்களம் இதனை வழங்கியிருக்கிறது.
இந்த விருது எப்போதோ அவருக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மிக அண்மித்த காலங்களில்தான் இவ்வாறான விருதுகள் வழங்கப்பட ஆரம்பித்தன என்ற வகையில் ஆறுதலடைய முடியும். இன்னொரு வகையில் அவர் தொடர்ந்தும் ஒலிபரப்புத் துறையோடு இயங்கிக் கொண்டிருக்கிறார் என்ற அடிப்படையிலும் தாமதத்துக்காகக் கவலை கொள்ள வேண்டியதில்லை.
அப்துல் ஹமீத் அவர்களை ஓர் அறிவிப்பாளன் என்ற வகையில்தான் பலரும் மேலோட்டமாக அறிந்து வைத்திருக்கிறார்கள். அவர் ஓர் அற்புதமான கலைஞர், நடிகர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர், தொகுப்பாளர், பாடலாசிரியர் என்ற விடயங்கள் பற்றிப் பெருமளவில் யாரும் அறிந்திருக்கவில்லை. அதற்கு ஒரு பிரதான காரணம் தன்னைப் பற்றி அவர் எடுத்துக் காட்ட முனைந்ததில்லை.
1985இல்தான் நான் அவரை முதன் முதலாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தாழ்வாரத்தில் சந்தித்தேன். யாரோ ஒருவர் என்னை அறிமுகம் செய்தார். அப்போது 'யாவரும் கேளிர்' என்ற நிகழ்ச்சியை முஸ்லிம் சேவையில் நடாத்திக் கொண்டிருந்தேன். அப்போது அவர் வர்த்தக சேவையில் 'ஒலி மஞ்சரி' என்ற சஞ்சிகை நிகழ்ச்சியைச் செய்து கொண்டிருந்தார். 'உங்களது கவிதையொன்று ஒலி மஞ்சரி'யில் ஒலிபரப்பாகியிருந்தது கேட்டீர்களா?' என்று கேட்டார். 'நான் ஒலிமஞ்சரிக்குக் கவிதை அனுப்பவில்லையே' என்றேன். நண்பர் கிண்ணியா அமீர் அலி வீரகேசரி வார மஞ்சரியில் வெளி வந்த 'குழந்தைகளுக்கு மாத்திரம்' என்ற கவிதையை இரசித்த கவிதையாக 'ஒலி மஞ்சரி'க்கு அனுப்பியிருந்த விடயத்தை எனக்குச் சொன்னார்.
வர்த்தக நிகழ்ச்சிகளூடாக இலக்கியத் தரத்துடனான ஒரு நிகழ்ச்சியாக 'ஒலி மஞ்சரி' இருந்தது. மிக அதிகமான இளைய தலைமுறை அதில் எழுதி வந்தது. கவிதையாக இல்லாத போதும் அதைத் தனது வாசிப்பின் மூலம் கவிதையாக்கி விடுவார் அப்துல் ஹமீத் என்று அந்நிகழ்ச்சி பற்றிப் பேசும் போது ஒலிபரப்புத் துறை சாராத ஒரு நேயர் எனக்குச் சொல்லியிருக்கிறார். அதை ஒரு பல்சுவை நிகழ்ச்சியாக அவர் நடாத்தி வந்தார்.
அக்காலங்களில் இன்று போல் உடனடியாக ஒருவரோடு தொடர்பு கொள்ளும் எந்த வாய்ப்பும் இல்லை. ஒருவரைப் பற்றிய முழுத் தகவல்களும் பத்திரிகைகளில் வந்தால்தான் உண்டு. ஒலிபரப்பாளர்களின் பேட்டிகள் கூட வருவதில்லை. அறிவிப்பாளர்கள் பற்றிய சில செய்திகளை அவர்களாகக் கற்பனை செய்து கொண்டு எப்போதாவது அவர்களுடன் தொடர்பு பட்டவர்களிடம் கேட்பார்கள். ஒரு பகுதிநேர அறிவிப்பாளனாகச் சேர்ந்த பிறகு விசாலாட்சி ஹமீத் தான் பி.எச். அப்துல் ஹமீதின் மனைவியா என்று என்னிடம் கேட்டிருக்கிறார்கள். என்னைப்போல் எத்தனை பேரிடம் யார் யார் கேட்டிருப்பார்களோ?
அவரிடமுள்ள சிறப்பம்சங்களில் ஒன்று, யாரையும் பற்றி யாரிடமும் அவர் பேசமாட்டார். விமர்சிக்கவும் மாட்டார். இதை இப்படிச் செய்ய வேண்டும் என்று யாருக்கும் இலவச அறிவுரை வழங்குவதும் இல்லை. அவரிடம் எதையாவது கேட்டால் மாத்திரமே அது பற்றிய விபரங்களையும் ஆலோசனையையும் நமக்குத் தருவார். 'என்னுடைய சக தொழிற் பயணியாக ஒருவர் வந்து விட்டால் அவர் என்னைப் போல் ஒருவர்தான்' என்று அவர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
தொண்ணூறுகளில் தொலைக் காட்சிச் செய்தி வாசிப்புக்குச் சென்ற பிறகு ஒரு நாள் என்னைக் கண்டு சொன்னார், 'அஷ்ரஃப்... மீசை ரொம்பப் பெரிதாகத் தெரிகிறதே.. சிறிதாகக் கத்தரித்துக் கொள்ளக் கூடாதா?' அவர் சொல்லும் வரை நான் அதுகுறித்துச் சிந்தித்திருக்கவில்லை. அவர் அப்படிச் சொன்னதே ஓர் அபூர்வமான விடயம். அது பற்றிப் பிறகு யோசித்தால் இளவயதில் நறுக்கப்படாத மீசை திரையில் நமது முகத்தில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது என்பது புரிந்தது மட்டுமல்ல, அது குறித்து அவரது நுணுக்கமான அவதானிப்பை நினைத்தும் வியந்தேன்.
அப்போதைய அவருடைய ஒலிபரப்புத் துறைசார் இளைய சகோதரர்களில் அவருடைய முரட்டுச் சகோதரனாக நான் இருந்திருக்கிறேனா என்று பிற்காலத்தில் நிறைய எண்ணிப் பார்த்திருக்கிறேன். பட்டென்று பட்டதைச் சொல்லும் எனது சுபாவத்தை என்னால் இன்னும் மாற்றிக் கொள்ள முடியவில்லை. அக்காலப் பிரிவில் அது இன்னும் அதிகமாக இருந்திருக்கும். ஆனால் ஒரு நாள் கூட அவர் அது குறித்து என்னுடன் கோபித்துக் கொண்டதில்லை.
எந்தவொரு புது நிகழ்ச்சியைத் தொடங்கப் போகிறேன் என்ற போதும் முதலில் நான் அவருக்குச் சொல்லும் வழக்கம் என்னிடம் இருந்தது. அதே போல எந்தவொரு விடயத்திலும் அவரிடம் ஒரு வார்த்தை கேட்டுக் கொள்வதை என்னையறியாமலேயே நான் செய்து வந்தேன். ஒரு முறை ஓர் அதிகாரி என்னை வெருட்டி வெருட்டி வந்தார். ஒரு கட்டத்துக்கு மேல் தாங்காமல் அப்துல் ஹமீதிடம் முறையிட்டேன். 'எனக்கு வரும் கோபத்துக்கு இந்தாளை அடித்தாலும் அடிப்பேன்' என்று சொன்னேன். என்னைத் தனியே ஓரிடத்துக்கு அழைத்துச் சென்று நீண்ட நேரம் ஆசுவாசப்படுத்தியிருக்கிறார்.
ஒலிபரப்புத் துறைசார் நிபுணத்துவத்தில் அவர் மிக வல்லவராக இருந்திருக்கிறார். நான் நடத்திய அறிவுக் களஞ்சியம் முதலாவது நிகழ்ச்சியை ஒலிபரப்பு முன்னர் 'அறிவுக் களஞ்சியம்' என்ற சொல்லை 'எக்கோ' எதிரொலி வருமாறு செய்ய தயாரிப்பாளர் இர்பான் விரும்பியிருந்தார். அதற்கான கருவிகள் அப்போது கூட்டுத்தாபனத்தில் இருக்கவில்லை. நான் இதை அப்துல் ஹமீதிடம் கேட்டேன். அவர் எனக்கு 'எக்கோ' உருவாகும் முறைமையை இருபது நிமிடங்கள் விளங்கப்படுத்தினார். அப்போது ஒலிபரப்புத் துறை சார் நிபுணத்துவம் குறித்து மிகுந்த ஆச்சரியம் ஏற்பட்டது.
பாடல்கள் ஒலிபரப்பும் போது பாடலின் பல்லவிக்குப் பின்னர் வரும் இடையிசைக்குள் அறிவிப்பாளர்கள் பேசுவது பற்றிய ஒரு சர்ச்சை ஒருபோது ஏற்பட்டது. நானறிந்த காலம் முதல் ராஜேஷ்வரி சண்முகம் - குறிப்பாகப் பொங்கும் பூம்புனல் நிகழ்ச்சியில் பாடல்களின் இடையிசைக்குள் கவிதையாக இரண்டு வரிகளைச் சொல்லி வருவது வழக்கமாக இருந்தது. ஏனைய அறிவிப்பாளர்கள் எப்போதாவது தாம் பாடல் நிகழ்ச்சி அறிவிப்புச் செய்யும் போது இப்படிப் பேசுவதும் உண்டு. இந்த அறிவிப்பு பல அறிவிப்பாளர்களுக்கு உவப்பாக இருக்கவில்லை. இப்படிப் பேசுவது குறித்து நேயர்கள் புகார் செய்வதாகச் சொல்லப்பட்ட காரணத்தால் விளக்கமளிப்பதற்காக ஹமீத் ஒரு நிகழ்ச்சி செய்தார். இடையில் பேசப்பட முடியாத பாடல்கள், பேசுவதற்கு வாய்ப்புள்ள பாடல்கள் என்று ஒரு பதினைந்து நிமிட நிகழ்ச்சியைச் செய்தார். ஜே.பி. சந்திரபாபுவின் கண்மணி பப்பா பாடலை ஒலிபரப்பி பல்லவிக்கும் அனுபல்லவிக்கும் இடைப்பட்ட 22 செக்கன்களில் பேசியும் காட்டினார். அந்த ஒலிப்பதிவை நான் பார்த்துக் கொண்டு நின்றேன். இது குறித்து யாரிடமும் பேசாமலும் யார் பக்கமும் சாராமலும் சர்ச்சையை வளர விடாமலும் இந்த நிகழ்ச்சியைச் செய்து தீர்த்தமை எனக்குப் பிடித்திருந்தது.
அப்துல் ஹமீதுக்குள் இருந்த கலைஞனை வெறும் சினிபாப் பாடல்களுக்குள்ளும் 'பாட்டுக்குப் பாட்டு;' நிகழ்ச்சிக்குள்ளும் கொண்டு செருகி விட்டுக் கைகளைக் கழுவிவிட்டுப் போவதில் எனக்கு என்றைக்குமே உடன்பாடு இருந்ததில்லை. முஸ்லிம் நிகழ்ச்சியில் அவர் 'இறைதாசன்' என்ற பெயரில் நிறையப் பாடவ்களை எழுதியிருக்கிறார். மெல்லிசைப் பாடல்களும் எழுதியிருக்கிறார். தமிழ், முஸ்லிம் நிகழ்ச்சிகளில் அவர் நடித்த நாடகங்கள் ஏராளம். எம்.எச். பௌஸூல் அமீர் எழுதிய 'அபுல் காஸிமின் அற்புதப் பாதணிகள்' நாடகத்தில் அப்துல் ஹமீதின் நடிப்புக் குரலைக் கேட்காதவர்கள் கொடுத்து வைக்காதவர்கள். நான் ஒலிபரப்புக்குள் நுழைவதற்கு முன்னரே அவர் நடித்திருந்த கேட்டு நெஞ்சிலிருந்து அழிக்க முடியாத நாடகங்கள் அநேகம்.
வர்த்தக சேவையில் ஒலிபரப்பான விளம்பரத்துடனான நாடகங்கள் பலவற்றை இந்திய நாடகக் கலைஞர்கள் கொண்டு பாதியும் இலங்கைக் கலைஞர்களைக் கொண்டு மீதியுமாக நடித்து எடிற் செய்து தயாரித்து வழங்கியிருக்கிறார். அதாவது நாடகத்தின் பாத்திரங்கள் சிலவற்றுக்கான குரலை சென்னையில் பதிவு செய்து மீதியை இங்கே ஒலிப்பதிவு செய்து வழங்கியிருக்கிறார்.
அவரோடு ஒரு வானொலி நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு 2013ல்தான் எனக்குக் கிட்டியது. நானே எழுதிய 'மொகலாய சாம்ராஜ்யத்தின் முழுமதி;' என்ற அந்த நாடகத்தில் நடிக்க தயாரிப்பாளர் ஏ.எல். ஜபீர் அப்துல் ஹமீத் அவர்களைச் சம்மதிக்க வைத்திருந்தார். அவுரங்கஸீப் பாத்திரத்தில் அப்துல் ஹமீத் நடித்தார். நாடக ஒத்திகை ஆரம்பிக்கும்போது ஸ்கிறிப்டைக் கண்டதும் இது முப்பத்தைந்து நிமிடங்களுக்கு மேல் செல்லும் என்றார். அதுதான் அவரது அனுபவம். நானும் அவருமாகச் சேர்ந்து அந்த நாடகத்தை 30 நிமிடங்களுக்குப் பொருந்தும் வகையில் குறைத்தோம். யூ டியூபில் அந்த நாடகம் இன்னும் இருக்கிறது. அவுரங்கஸீப் - ரேடியோ ட்ராமா என்று ஆங்கிலத்தில் தட்டித் தேடினால் கண்டடைவீர்கள்.
எதிர்காலத்தில் எத்தகையதொடு நவீன ஒலிபரப்பு நிலையம் உருவாகி சக்கை போடு போட்டாலும் கூட இலங்கை வானொலி - இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் செய்திருக்கும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க இயக்கத்தை ஒரு போதும் மிஞ்ச முடியாது. குறிப்பாகத் தமிழ் ஒலிபரப்பு உன்னதமான ஒரு வரலாற்றைக் கொண்டிருக்கிறது. அந்த வரலாற்றின் அழிக்க முடியாத பக்கங்களில் அங்கு கடமை புரிந்த எல்லா ஒலிபரப்பாளர்களும் இடம்பெற்றிருப்பார்கள். அதில் சிறப்பிடம் பெறுவோரின் முன்னணி வரிசையில் அப்துல் ஹமீத் அமர்ந்திருப்பார்.
நவீன வசதி வாய்ப்புகள் இல்லாத கால கட்டத்தில் தமது ஒலிபரப்புத் திறமையால் கடல் கடந்து பேசப்பட்டவர்களில் அப்துல் ஹமீத் முக்கியமானவர். இன்றைக்குப் போல் லண்டனிலோ கனடாவிலோ சுவிஸிலோ நடக்கும் நிகழ்ச்சியில் ஒலிவாங்கியோடு நிற்கும் அப்துல் ஹமீதை நீங்கள் கற்பனை செய்வீர்கள். நான் சொல்ல வருவது வேறு.
1993க்குப் பிறகு நான் விமான நிலையத்தில் குடிவரவு, குடியகல்வு அதிகாரியாகக் கடமை புரிந்து வந்தேன். மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரிந்து விட்டு நாடு திரும்பும் தமிழ் நாட்டவர் கடவுச் சீட்டுக்களை வருகைப் பகுதியில் நாங்கள் பொறுப்பேற்று அவர்கள் செல்லும் போது ஒப்படைப்போம். இது செல்கைப் பகுதியில் உள்ள கடமை அதிகாரியின் கடமைகளில் ஒன்று.
இந்தக் காலப் பகுதியில் அப்துல் ஹமீத் சென்னை செல்ல வருவார். நான் கடமை அதிகாரியாக இயங்கும் போது அவரை எங்களுக்குரிய காரியாலய அறைக்குள் அமர்த்தி விமானத்துக்கான நேரம் வரும் வரை பேசிக் கொண்டிருப்போம். காலை நேர விமானத்தில் இணைய வரும் தமிழ்நாட்டுப் பயணிகளுக்கு நான் கடவுச் சீட்டை வழங்கும் போது அங்கே அப்துல் ஹமீதைக் காண்பார்கள். அவரைக் கண்டதும் அவர்களுக்கு உண்டாகும் மகிழ்ச்சி சொல்லித் தீராதது. கடவுச் சீட்டைக் கையில் எடுத்துக் கொண்டு அவர் அருகே சென்று அவரோடு கதைக்கவும் கைலாகு கொடுக்கவும் துடிப்பார்கள். என்னால் கட்டுப்படுத்த முடியாத நிலைமை வரும் போது 'அவர் உங்களோடுதான் பயணிக்கிறார். முன்னால் செல்லுங்கள், பின்னால் வருவார்' என்று சொல்லி அவர்களைத் திருப்பி அனுப்பப் பெரும்பாடு பட்டிருக்கிறேன்.
அப்பேதெல்லாம் இலங்கை வானொலியின் சக்தியை, வலிமையை, ஒலிபரப்பின் மேன்மையை மட்டுமன்றி அப்துல் ஹமீத் சம்பாதித்து வைத்திருக்கும் நேயக் கூட்டத்தையும் கண்டு ஆச்சரியப் படுவேன்.
பிற்காலங்களில் எங்காவது சந்தித்துக் கொள்ளும் போதெல்லாம் அவரது பாடல்களை நூலாக்குமாறு கேட்டு வந்திருக்கிறேன். அதற்குப் பிறகு சந்திக்கக் கிடைத்த சந்தர்ப்பத்தில் அவரது ஒலிபரப்பு அனுபவங்களைத் தொகுத்து எழுதக் கோரியிருக்கிறேன். ஆனால் அவர் எனக்குப் பதிவ் சொல்லாமலேதான் போய்க் கெண்டிருந்தார்.
கடந்த கால ஞாபகங்களில் அவர் சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பான அவதானங்களில் நினைவுகளில் மறந்து போனவை போக எஞ்சியவற்றைத்தான் இங்கு எழுதியிருக்கிறேன். பின்னால் ஏதாவது ஞாபகத்துக்கு வந்தால் இதில் சேர்த்துக் கொள்வேன்.
மிக அண்மையில் அவர் எதையோ எழுதிக் கொண்டிருப்பதாகவும் அது லண்டனில் வெளியிடப்பட விருப்பதாகவும் தற்செயலாக அறிய வந்தேன். அப்படியொன்று நடக்கும் பட்சத்தில் அது அவரது ஒலிபரப்பு அனுபவங்களாக இருக்கும் பட்சத்தில் நான் மிகவும் மகிழ்வேன்.
கவிக்கோ அப்துல்ரகுமானின் கவிதையொன்றை அவரு நூல் வெளியீடு சம்பந்தமாகச் சொல்ல விரும்புகிறேன். 'வானம்பாடி' என்ற தலைப்பில் கவிக்கோ எழுதினார்..
என் கானங்கள்
ஆகாயத்தில் என்றாலும்
எனது முட்டைகள்
மண் மீதே!
14.02.2020
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
1 comment:
காலங்கள் உருண்டோடியும்
கரையாத நினைவுகளோடு
உணர்வுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள
அருமையான கண்ணோட்டம்...
உங்கள் பார்வையின் இன்னும் பல
உண்மைகளை அறிய ...
தொடர்ந்து எதிர்பார்த்தவனாய்
Fawzer
Post a Comment