Wednesday, February 26, 2020

ஓர் எழுத்தாளனுக்கு வாசிப்பும் வாழ்வனுபவமும் மிக அவசியம்!

ஒலி, ஒளிபரப்பாளர், கவிஞர், பன்னூலாசிரியர், கலைஞர் என்று பல் துறை ஆளுமையான அஷ்ரஃப் சிஹாப்தீன் அண்மையில் அகில இலங்கை கம்பன் கழகத்தினால் கவிதைக்கான 'மகரந்தச் சிறகு' விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார். அவருடனான நேர்காணல்.
நேர்கண்டவர் - நாச்சியாதீவு பர்வீன்

01. கேள்வி:

அண்மையில் அகில இலங்கை கம்பன் கழகம் - கவிக்கோ நினைவு - மகரந்தச் சிறகு விருதை உங்களுக்கு வழங்கியிருக்கிறது. இது பற்றிய உங்களது எண்ண வெளிப்பாடு என்ன?

பதில்:
இது ஓர் உயர்ந்த விருது. அப்படித்தான் நான் இதனைக் கருதுகிறேன். அகில இலங்கை கம்பன் கழகத்தின் பார்வையும் அவதானமும் என் மீது விழுந்திருக்கிறது என்பதையே ஒரு பெரு மதிப்பாக நினைக்கிறேன். நுணுகி ஆய்ந்துதான் அவர்கள் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்வார்கள். அந்த வகையில் இந்த விருது எனக்குக் கிடைத்ததையிட்டு அதிலும் அவர்களது வெள்ளி விழா ஆண்டில் இந்த விருது வழங்கப்பட்டதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கம்பன் கழகத்துக்கும் அதன் உயிர் மூச்சாக இயங்கும் கம்பவாரிதி ஜெயராஜ் அவர்கள் மற்றும் நிர்வாகம் என சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

02. கேள்வி:

இலக்கியத்தை நோக்கி உங்களை உந்திய காரணிகள் எவை?

பதில்:

எனது தாய் வழிப் பாட்டனார் ஒரு புலவராயிருந்தார். கிண்ணியா நாச்சிக் குடாவைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர் ஒலுவிலில் திருமணம் செய்து ஓட்டமாவடியில் வாழ்ந்து வந்தார். அவர் மூன்று விடயங்களில் ஈடுபட்டார். ஒன்று, ஒரு குர்ஆன் மத்ரஸாவை நடத்தினார். இரண்டு, அறபு எழுத்தணியைக் கண்ணாடிகளில் எழுதி விற்பனை செய்து வந்தார். கண்ணாடியில் வலது புறமாக எழுத வேண்டிய அறபு எழுத்துக்களை அவர் இடது புறமாக எழுதினால்தான் அடுத்த பக்கம் சரியான முறையில் தெரியும் என்பதைக் கவனிக்க வேண்டும். மூன்றாவதாக, சிறு சிறு காப்பியங்களைப் படைத்தார், இஸ்லாமிய இலக்கிய நூல்களைப் பதிப்பித்தார், அவற்றை விற்பனை செய்தும் வந்தார். எனவே அவரது புத்தகங்களில்தான் அதுவும் இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பாடல்களை வாசிப்பதில் எனது ஆர்வம் மிகச் சிறிய வயதிலேயே ஆரம்பித்தது.

03. கேள்வி:

இலக்கியத் துறைக்குள் நீங்கள் நுழைந்த காலப் பிரிவு, அப்போதைய சூழல் பற்றிச் சொல்லுங்கள்?

பதில்:

1976ல் நான் பேருவளை ஜாமிஆ நளீமியாவுக்குள் மாணவனாக நுழைகிறேன். அங்கு நிறைய வாசிக்க முடிந்தது. சத்தியத் தீபம் என்னொறு கையெழுத்துப் பத்திரிகையை நடத்தினோம். அக்காலப் பிரிவில் பலப்பிட்டி அரூஸ் அவர்கள் ஜூம்ஆ என்று ஒரு பத்திரிகை வெளியிட்டார். அதில்தான் எனது முதலாவது சிறிய வசன கவிதை வெளிவந்தது. இன்று அதைக் கவிதை என்று சொல்ல முடியாது. (அந்தக் காலத்து வசன கவிதைகள் இன்று கவிதைகளே இல்லை என்பது வேறு விடயம்) காலியைச் சேர்ந்த எம்.எச்.எம். ஹாரிஸ் அவர்கள் தமிழாசிரியர். இவர் ஆசிரிய கலாசாலைத் தமிழ் விரிவுரையாளராக இருந்த தமிழறிஞர். இவர்தான் மரபுக் கவிதையில் எதுகை மோனை சொல்லித் தந்தவர். மற்றொருவர் எனது வகுப்புத் தோழன் எம்.எம். முகம்மத். தேர்தல் திணைக்களத்தில் மேலதிக ஆணையாளராக இருந்தவர். அவர் ஒரு நல்ல மரபுக் கவிதைக் காரர். ஓசை நயத்தைக் கண்ணதாசனின் கவிதைகளில் கற்றேன்.

அக்காலத்தில் தினபதி பத்திரிகையில் 'தினபதி - கவிதா மண்டலம்' என்று ஒரு பகுதி. அதில் தினமொரு மரபுக் கவிதை வெளிவரும். 1977 இறுதிப் பகுதி அல்லது 78ன் ஆரம்பப் பிரிவில் எனது முதலாவது மரபுக் கவிதை அதில் பிரசுரமானது. அதில் கவிதை வரவேண்டுமாயின் அக்கவிதையை சிபார்சு செய்யவென்று சிலர் பத்திரிகையினால் அடையாளப்படுத்தப்பட்டிருந்தனர். அந்த சிபார்சு இல்லாமலே எனது கவிதைகள் பிரசுரமாயின.

தொடர்பு சாதனங்கள், வசதி வாய்ப்புகள் என்று எதுவுமற்ற காலப் பிரிவு அது. நான் 17 வயது இளைஞன். லீவில் வந்தால் ஊரில் உள்ள இலக்கியவாதிகளோடுதான் உறவு இருந்தது. அவ்வேளை பிரதான இலக்கியவாதிகள் மூவர் இருந்தனர். வை. அகமத் அவர்கள் நாவலாசிரியராகவும் சிறுகதையாளராகவும் அறியப்பட்டவர். எஸ்.எல்.எம். ஹனிபா சிறுகதையாளர். ஓட்டமாவடி ஜூனைத் எனக்கு முன்பே கவிதைத் துறையில் ஈடுபட்டவர். அவருடைய நிறையக் கவிதைகள் பத்திரிகை, சஞ்சிகைளில் வந்திருக்கின்றன. இதற்கப்பால் யூசுப் ஆசிரியர், யூ.அகமட், எஸ்.எம்.தலிபா, ஓட்டமாவடி இஸ்மாயில் என்று சிலர் இலக்கிய ஆர்வத்துடன் இயங்கி வந்தார்கள். இவர்கள் அனைவரும் எனக்கு முந்திய தலைமுறையினர். எனக்குப் பிற்பாடு வாழைச்சேனை அமர், ஏ.ஜி.எம். ஸதக்கா, வாழை மயில் (இஸ்மாயில்) ஆகியோர் கவிதை, கதை, பத்திரிகை, சஞ்சிகை என்று இயங்கி வந்தவர்கள். பின்னால்  எஸ்.நளீம், ஓட்டமாவடி அறபாத், ஜிப்ரி ஹஸன், சல்மான் வஹாப், சல்மானுல் ஹாரிஸ் என்று ஒரு படை உருவாகியது. இதற்குள் சில பெயர்கள் ஞாபக மறதியால் விடுபட்டிருக்கலாம். இங்கே நான் குறிப்பிட்டவர்கள்  எனது இலக்கியத் தொடக்கத்தின் சற்று முன்னும் பின்னுமானவர்களாவர்.

இதற்கெல்லாம் அப்பால் ஒருவரை நான் குறிப்பிட்டாக வேண்டும். அவர்தான் பொது நூலகராக இருந்த சமத் நானா அவர்கள். நூலகத்துக்கு நல்ல நூல்களைக் கொள்வனவு செய்து வைத்திருப்பார். நல்ல நூல்களை எனக்குத் தெரிந்து வைத்திருந்து தருவார். எல்லாருக்கும் இரண்டு புத்தகங்கள்தாம் வழங்குவார். எனது வாசிப்பு வேகத்தைக் கண்டு எனக்கு மூன்று நூல்கள் தருவார். அவரை என்னால் மறக்க முடியாது.

04. கேள்வி:

உங்களது முதலாவது கவிதை தொகுதிபற்றியும், அதற்கு கிடைத்த அங்கீகாரம் பற்றியும் பகிர்ந்து கொள்ள முடியுமா?

பதில்:

முதலாவது கவிதைத் தொகுதியான 'காணாமல் போனவர்கள்' 1999ல் வெளி வந்தது. இதில் இடம்பெற்ற இரண்டு கவிதைகளைத் தவிர ஏனைய அனைத்தும் 1978க்கும் 1986 க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப் பெற்றவை. ஒரு நூலுக்கான கவிதைகளை 1984லேயே தொகுத்து வைத்திருந்தேன். ஆனாலும்  வெளியிடும் அளவு வசதி வாய்ப்பு எனக்கிருக்கவில்லை. பயிற்றப்பட்ட ஆசிரியனாக இருந்த நான் 1992ல் குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரம் பெற்ற அலுவலர் தெரிவுக்கான அகில இலங்கை ரீதியான பரீட்சையில் சித்தியடைந்ததுடன் 1993ல் அதில் இணைக்கப்பட்டேன். 1996 அளவில் எனது முதல் நூலைக் கொண்டு வந்திருக்கலாம். அப்போதும் அதுபற்றி ஆர்வம் இருக்கவில்லை.
1998ம் ஆண்டு எனது முதற்தொகுதியைக் கொண்டு வர பலவந்தப் படுத்தியவர்கள் இருவர். ஒருவர், மறைந்த கவிஞர் ஏ.ஜி.எம். சதக்கா. மற்றையவர் வாழைச்சேனை அமர் என்கிற அப்துல் ரகுமான். இதற்காகவே அவர்கள் ஊரிலிருந்து கொழும்புக்குப் புறப்பட்டு வந்து ஒரு முழுநாளும் நின்று என்னை ஊக்கப்படுத்தினர். இதன் விளைவாக 1999ல் முதற் தொகுதி வெளியாயிற்று. என்னை மீண்டும் அவர்கள் இலக்கியத்துக்குள் இழுத்துக் கொண்டு வந்தவர்கள் என்ற அடிப்படையில் பின்னால் எழுதப்பட்ட அனைத்து எழுத்துக்களுக்குமான தோற்றுவாயை உண்டு பண்ணியவர்கள் அவர்கள் இருவரும்தாம்.  'காணாமல் போனவர்கள்' முதற்பதிப்பாக ஆயிரம் பிரதிகளும் இரண்டாம் பதிப்பாக அறுநூறு பிரதிகளும் வெளியிடப்பட்டன.

நாச்சியாதீவு பர்வீன் 

அங்கீகாரம் பற்றிக் கேட்டீர்கள் அல்லவா? யாருடைய அங்கீகாரத்துக்காகவும் நான் எதையும் எழுதவில்லை. யாருடைய அங்கீகாரத்தையும் நான் எதிர்பார்ப்பவனும் அல்லன். இன்னின்னார் பாராட்ட வேண்டும், பல்லக்கில் ஏற்ற வேண்டும் என்ற எந்தவிதமான எதிர்பார்ப்பும் எனக்குக் கிடையாது. எனக்குக் கவிதை எழுதத் தோன்றினால் எழுதுகிறேன். கதை, கட்டுரை, பத்தி, மொழிபெயர்ப்புகள் - இவையெல்லாமே நானே தீர்மானித்து நானே எழுதினேன், எழுதுகிறேன். வாய்ப்புக் கிடைத்தால் இன்னும் எழுதுவேன்.

05. கேள்வி:

ஆரம்பத்தில் கவிதைக்கூடாக ஆரம்பித்த உங்களது இலக்கியப் பயணம் பத்தி எழுத்து, கட்டுரை, சிறுவர் இலக்கியம், சிறுகதை, மொழிபெயர்ப்பு  என்று இலக்கியத்தின் எல்லாத் தளத்திலும் பயணித்தது எவ்வாறு?

பதில்:
இதில் எந்த மாயமோ மந்திரமோ இல்லை. எனக்கு முன்னரும் கவிதையில் ஆரம்பித்து பல் துறைகளில் ஜொலித்தவர்கள் இருக்கிறார்கள். ஓர் எழுத்தாளனுக்கு வாசிப்பும் வாழ்வனுபவமும் கிடைக்கக் கிடைக்க அவனது தளம் விரிந்து செல்லும். சிலர் எனக்கு ஒரு துறையே போதும் என்று அதிலேயே தொடர்ந்து ஈடுபடுவார்கள். இதுவும் வாலாயமாகும் என்ற நம்பிக்கையுள்ளவர்கள் ஏளைய துறைகளுக்குள்ளும் கால் பதிப்பார்கள்.
சிறுவர் இலக்கியத்தில் ஈடுபட்டது எதிர்பாராமல் நடந்நதது. ரூம் டு ரீட் என்ற நிறுவனத்தில் தமிழ்ப் பிரிவில் கடமை புரிந்த ராஜா மகள் என அறியப்பட்ட லதா சிறுவர் இலக்கியம் பற்றிய பயிலரங்குக்கு அழைத்து இதில் ஈடுபட வைத்தவர். இந்த இடத்தில் ஒரு முக்கியமான விடயத்தை நான் சொல்ல வேண்டும். இந்தியரான சுபீர் சுக்ளா என்ற பயிற்றுவிப்பாளர்தான் இந்தப் பயிலரங்கை நடத்தியவர். இந்திய கல்வியமைச்சின் ஆலோசனைக் குழு உறுப்பினர் அவர். சிறுவர் இலக்கியத்தில் மிகத் தேர்ச்சி பெற்றவர். கடந்த காலங்களில் ஈஸாப்பு நீதிக் கதைகள், தந்திரக் கதைகள் போன்றவற்றைச் சிறுவர்களுக்குக் கற்பித்தது பிழை என்று அவர் சொன்னார். தந்திரம், ஏமாற்று ஆகியவற்றைக் கதைகள் மூலம் இளம் பிஞ்சுகளுக்குச் சொல்லிக் கொடுக்கக் கூடாது என்றும் முயற்சி மூலம் இலக்கை அடைவதைப் பற்றியே கதைகள் எழுதப்பட வேண்டும் என்று சொல்லிக் கொடுத்ததுடன் அதன் படி எழுதவும் தூண்டினால். ஆனால் துரதிர்ஷ்டமாக இன்று விற்பனைக்கிருக்கும் சிறுவர் கதைகள் இந்த நியமங்கள் அடிப்படையில் எழுதப்படுவதில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தப் பயிலரங்குக்குப் பின் நான் மூன்று கதைகளை எழுதினேன். சிறார்களுக்கென இலக்கியம் படைப்பது ஏனைய படைப்பாங்களைச் செய்வதை விட முற்றிலும் வேறு பட்டது, சவாலானது, சிரமம் மிக்கது என்பதே எனது கணிப்பாகும்.

06. கேள்வி:

இலங்கை அரசினால் இலக்கியத்திற்காக வழங்கப்படுகின்ற உயர் விருதான சாகித்திய மண்டலப்பரிசினை மூன்று தடவைகள் பெற்றவர் என்ற வகையில் அந்த விபரங்ளை பகிர்ந்து கொள்ளமுடியுமா?

பதில்:

முதல் விருது 'என்னைத் தீயில் எறிந்தவள்' என்ற எனது இரண்டாவது கவிதை நூலுக்கு 2009ம் ஆண்டு கிடைத்தது. இரண்டாவது விருது அறபுக் கதைகளின் மொழிபெயர்ப்புச் சிறுகதை நூலான 'ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள்' நூலுக்கு வழங்கப்பட்டது. பல்வேறு எழுத்தாளர்களின் மொழிபெயர்ப்புச் சிறுகதை நூலான 'பட்டாம் பூச்சிக் கனவுகள்' தொகுதிக்கு 2016ம் ஆண்டு கிடைத்தது.

இது தவிர, ஏனைய நான்கு நூல்கள் இறுதிச் சுற்றுக்குள் வந்த மூன்று நூல்களில் ஒன்றாக இடம்பிடித்துச் சான்றிதழ் பெற்றன. 2011ல் 'ஒரு குடம் கண்ணீர்', 2014ல் எனது சிறுகதைகளின் தொகுதியான 'விரல்களற்றவனின் பிரார்த்தனை', 2017ல் மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுதியான 'யாரும் மற்றொருவர் போல் இல்லை', 2018ல் எனது மூன்றாவது கவிதைத் தொகுதியான 'தேவதைகள் போகும் தெரு' ஆகியனவாகும்.

கேள்வி

07. இலங்கை இந்திய தமிழ் பரப்புக்கு பெரிதும் பரிச்சயமற்ற அரேபிய சிறுகதைகளை மொழி பெயர்க்கும் ஆர்வம் எவ்வாறு ஏற்பட்டது?

என்னுடைய அவதானத்தின் படி உலகத்தை ஆகர்ஷிக்கும் இலக்கியப் படைப்புகள் லத்தீன் அமெரிக்க, அரேபிய, ஆபிரிக்க நாடுகளிலேயே வெளிவருகின்றன. அதிகமாகப் பேசப்படும் இலக்கியங்களாக இவையே இருக்கின்றன. தமழ் சூழலில் என்ன காரணம் பற்றியோ லத்தீன் அமெரிக்க, ஆபிரிக்க இலக்கியங்கள் மொழிபெயர்க்கப்படுமளவுக்கு, பேசப்படுமளவுக்கு அறபு இலக்கியங்கள் மொழிபெயர்க்கப்படுவதுமில்லை, பேசப்படுவதுமில்லை.

அறபு மொழி இலக்கியச் செழுமையும் ஆழ வேருன்றிய இலக்கியச் சிறப்பும் கொண்டது. 14 நூற்றாண்டுகளுக்கு முன்னரே கவிதைகளை எழுதி கஃபா என்ற இறை ஆலயத்தில் தொங்க விட்டவர்கள் அவர்கள். கவிதையிலேயே பொருதிக் கொண்டவர்கள். கதையும் அப்படித்தான். ஆயிரத்தொரு அராபியக் கதைகள் இன்று வரை பேசப்பட்டுக் கொண்டுதானே இருக்கின்றன.

மேற்கு நாடுகளில் குடியேறிய பல அறபு எழுத்தாளர்கள் ஆண்களும் பெண்களுமாக ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மன் போன்ற மொழிகளில் அற்புதமான இலக்கியங்களைப் படைக்கிறார்கள். 1998லிருந்து லண்டனில் 'பானிபால்' என்றொரு சஞ்சிகை அறபு நாடுகளின் இலக்கியத்தை ஆங்கிலத்தில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. இதை நிறுவியவர்கள் மார்கிரட் ஒபாங் என்ற பிரிட்டிஷ் பெண்மணியும் சாமுவேல் சிமோன் என்ற ஈராக்கிய எழுத்தாளருமாவர். இருவருமே முஸ்லிம்கள் அல்லர். தேடல்கள் மூலமே இவற்றை நான் அறிந்து கொண்டேன். எனவே அவற்றில் எனக்குப் புரிந்தவற்றில் சிறந்தவற்றைத் தேர்ந்து மொழி பெயர்க்க ஆரம்பித்தேன். நான் மொழிபெயர்த்த சிறுகதை ஒன்றை எழுதியவர் ஜோக்ஹா அல் ஹார்த்தி. ஓமானைச் சேர்ந்த இப்பெண்மணியின் அறபு நாவல் ஒன்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு மேன் புக்கர் விருது பெற்றிருக்கிறது. ஓமானில் இருந்த வேளை நமது முன்னோடி எழுத்தாளர் மானா மக்கீன் அவரைச் சந்தித்ததாக அறிந்தேன்.

எனக்கு மொழிபெயர்ப்புக்கான நூல்களை வாங்கித் தரும் இருவர் லண்டனில் வசிக்கின்றனர். சட்டத்தரணி ஷர்மிலா ஜெய்னுலாப்தீன், ஒலிபரப்பாளர் ஷைபா அப்துல் மலிக் ஆகிய இருவருமே அவர்களாவர்.

அறபு மொழி துறைபோகக் கற்றவர்கள் அந்த மொழியிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்க ஆர்வம் காட்டுவதில்லை. காரணம் இது லாபமீட்டும் துறையல்ல. அறபு மொழியில் பாண்டித்தியம் பெற்று அரச பதவிகளில் இருப்பவர்களும் இவ்விடயத்தில் ஆர்வம் செலுத்துவதில்லை. எல்லாருக்கும் இலக்கியத்தில் ஆர்வம் இருக்கும் என்று எதிர்பார்க்கவும் முடியாது. ஏனையவர்கள் அறபு நாடுகளில் வாழும் பணிப்பெண்களின் 'பாபா'வுக்குக் கடிதம் எழுதுவனுடன் தமது திறமையை மட்டுப் படுத்திக் கொண்டார்கள்.

எனது அறிவுக்கெட்டியவரை உஸ்தாத் எம்.ஏ.எம். மன்ஸூர், ஷெய்க் ஏ.பி.எம். இத்ரீஸ், ஷெய்க் ஏ.சீ. மஸாஹிர் போன்றோர் சற்றுப் பங்களிப்புச் செய்திருக்கிறார்கள். எனக்குத் தெரியாமலும் வேறு சிலரும் இருக்கக் கூடும்.

கேள்வி

08. ஒலி, ஒளிபரப்பத் துறைகளில் உங்கள் நிகழ்ச்சிகள், இலக்கியப் பங்களிப்புகள் பற்றிச் சொல்லுங்கள்?

பதில்:

எழுத ஆரம்பித்த காலங்களில் பத்திரிகைகளில் பிரசுரமான கவிதைகளை மாத்திரமே கத்தரித்துச் சேமித்து வந்திருக்கிறேன். பிற்காலங்களில் அவற்றின் பிரதியை வைத்திருப்பேனே தவிர பத்திரிகை தேடிக் கத்தரித்துப் பத்திரப்படுத்தும் வழக்கம் என்னிடம் இருக்கவில்லை. அதே போல் தொலைக் காட்சியாகட்டும், வானொலியாகட்டும் பங்கெடுத்த எந்த நிகழ்ச்சியையும் குறித்து வைத்திருக்கவில்லை.

வானொலியில் 2016 பிற்பகுதியில் நான் ஒரு பகுதிநேர அறிவிப்பாளனாகச் சேர்வதற்கு முன்னர் முஸ்லிம் சேவையில்  'யாவரும் கேளிர்' என்று ஒரு நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறேன். வானொலிக்குள் நுழைந்த பின் 'இளைஞர் இதயம்' என்ற சஞ்சிகை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினேன். கல்விச் சேவையில் ஒரு வருடம் தயாரிப்பாளராகக் கடமையாற்றினேன். அக்காலப் பகுதியில் பாட நிகழ்ச்சிகளுக்கு அப்பால் 'கல்விக் களஞ்சியம்' என்று ஒரு சஞ்சிகை நிகழ்ச்சியையும் நடாத்தி வந்திருக்கிறேன்.

ராவுத்தர் நெய்னா முகம்மத் அவர்களுக்குப் பின்னும் ஏ.ஆர்.எம். ஜிப்ரிக்கு முன்னும் 'அறிவுக் களஞ்சியம்' நிகழ்ச்சியை நான் நடத்தி வந்தேன். மறைந்த எம்.எம். இர்பான் அதைத் தயாரித்து வழங்கினார். அவரே ராவுத்தர் காலத்திலும் இதைத் தயாரித்து வழங்கியவர். இது போல அவ்வப்போது விசேட கவியரங்கங்கள், நாடகங்கள் என்று நிறையப் பங்கெடுத்திருக்கிறேன். அநேகமாக கவிஞர் சோலைக் கிளி எழுதிய நாடங்களில் எல்லாவற்றிலும் நடித்திருக்கிறேன். அதே போல மபாஹிர் மௌலானா தயாரித்த இரண்டு தொலைக் காட்சி நாடங்களில் நடித்த ஞாபகமும் உண்டு. ஒன்றா இரண்டா என்று சரியாக ஞாபகம் இல்லை. இதே வேளை எண்பதுகளின் நடுப்பகுதியில் எம்.எச்.பௌஸூல் அமீர் எழுதிய 'தோட்டத்து ராணி; மேடை நாடகத்திலும் கொழும்பில் நடித்துள்ளேன். இந்த நாடகத்தை மானா மக்கீன் அவர்கள் நெறிப்படுத்தினார்.

கேள்வி:

09. தமிழ் இலக்கியப்பரப்பில் வெளிவந்த கவிதைகளுக்கான  இதழ்கள் வரிசையில் யாத்ரா கவிதை இதழ்; காத்திரமாக இருந்தது. யாத்ராவின் கவிதை யாத்திரையை பற்றி விரிவாக கூறமுடியுமா? அதன் மீள்வருகை சாத்தியமா?

பதில்:

ஒலிபரப்புக்குள் நுழைந்த பின்னரும் எனது தொழில் மாற்றத்தின் பின்னருமான ஏறக்குறைய பத்து வருடங்கள் எனக்கும் இலக்கியத்துக்குமான இடை வெளி அதிகரித்திருந்ததை ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறேன். 1999ல் எனது முதல் நூல் வெளியான பிறகு மீண்டும் இலக்கியத்துள் நுழையும் ஆர்வத்தின் பலனாகத்தான் 'யாத்ரா' என்ற கவிதை ஏட்டைத் தொடங்கினேன். இந்தத் தலைப்பை எனக்குத் தந்தவர் மறைந்த கவிஞர் ஏ.ஜி.எம். சதக்கா அவர்கள்.

பத்தொன்பது இதழ்கள் வரை கவிதை இதழாக இதனை நடத்திச் சென்றிருக்கிறேன். ஆனாலும் கவிஞர்கள், எழுத்தாளர்கள், வாசகர்களது ஆதரவு போதாமலிருந்தது. கலாநிதி நுஃமான், கே.எஸ். சிவகுமாரன், ஏ. இக்பால், பண்ணாமத்துக் கவிராயர் போன்ற முன்னோடிகளும் அதில் பங்களிப்புச் செய்தார்கள் என்ற போதும் ஏனைய கவிஞர்கள், எழுத்தாளர்களது ஆதரவு பெருமளவில் கிடைக்கவில்லை.

கவிதை இதழ் மட்டுமல்ல, சிறு சஞ்சிகை ஒன்றை நடாத்துவதே மிகப்பெரும் சவாலான விடயமாகத்தான் இன்னும் இருந்து வருகிறது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஒரு சஞ்சிகை குறைந்தது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையாவது இடைவெளியின்றி வெளிவர வேண்டும். அதற்கு காத்திரமாக எழுதக்கூடிய கவிஞர்கள், எழுத்தாளர்களின் பங்களிப்பு வேண்டும். நட்டமடைந்து கொண்டே போனாலும் விடாப் பிடியாக வெளியிட்டுக் கொண்டிருக்கும் பொருளாதாரம் வேண்டும். இவற்றில் இடைவெளி விழும்போது சஞ்சிகை நின்று விடுகிறது. மிக முக்கியமான விடயம் என்னவெனில் இயல்பான கவிதை எல்லாருக்கும் தொடர்ந்து வாய்ப்பதில்லை. செய்யப்படும் கவிதைகளை வேண்டுமானால் தொடர்ந்து செய்யலாம். ஆனால் அதில் உயிர் இருக்காது.

கலாநிதி நுஃமான் வெளியிட்ட 'கவிஞன்' சஞ்சிகைகளின் ஐந்து பிரதிகளையும் கொழும்பு பொது நூலகத்தில் நான் பார்த்திருக்கிறேன். அந்தக் காலம் பெரு கவி விண்ணர்கள் இருந்த காலம். ஆயினும் கூட அதைத் தொடர்ந்து நடத்த முடியாமல் போயிருக்கிறது என்பது துரதிர்ஷ்டமே.
யார் என்ன நிகைத்தாலும் சொல்லியாக வேண்டிய ஒரு விடயம் உண்டு. இது வரை வந்த 'யாத்ரா' இதழ்களில் நான் பல கவிஞர்கள் பற்றிய குறிப்புகளை எழுதியிருக்கிறேன். ஆனால் அவர்கள் மற்றொரு கவிஞனைப் பற்றியோ மற்றொரு கவிஞனின் கவிதை நூல் ஒன்றைப் பற்றியோ ஒரு குறிப்பு எழுதியது கிடையாது. இன்னொரு வகையில் சொல்வதானால் மற்றொருவரைப் பற்றி, மற்றொருவரின் கவிதை நூல் பற்றி ஒரு குறிப்பை எழுதுமளவுக்கு நமது இலக்கியப் பரப்பில் விசாலமான மனது இன்னும் பலருக்கு வாய்க்கவில்லை.

மிக அண்மையில் 'யாத்ரா' மீண்டும் வரவேண்டும் என்று பல குரல்கள் கிளம்பின. ஒரு சிலர் பண உதவி செய்வதற்கும் முன் வந்திருந்தார்கள். இருவரோ மூவரோ ஓர் இதழை அல்லது இரு இதழ்களைக் கொண்டுவர உதவ முடியும். பின்னால் வரும் இதழ்களைக் கொண்டு வருவது எப்படி என்று நான் யோசிக்க வேண்டும் அல்லவா?
கவிதை இதழ் என்ற நிலையிலிருந்து பொதுவான ஒரு சஞ்சிகையாக அதை மாற்றிய போது நாச்சியாதீவு பர்வீன் முயற்சியாலும் சிலரின் பண உதவியாலும் மூன்று இதழ்களைக் கொண்டு வர முடிந்தது. பின்னர் அது சாத்தியமற்றுப் போனதை அனுபவப் பட்ட நான் மீண்டும் ஏன் நெருப்புக்குள் கை வைப்பான்?
'யாத்ரா' வுடனான யாத்திரை' என்ற தலைப்பில் சஞ்சிகை பற்றிய முழுக் கட்டுரையொன்று எனது 'நாட்டவிழி நெய்தல்' வலைத்தளத்தில் உள்ளது. அதைப் படித்துப் பார்த்தால் இதிலுள்ள சிரமங்கள் விளங்கும்.

கேள்வி:

10.  2002, 2016 ஆகிய ஆண்டுகளில்  உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகள்  இடையில் 2011 இல் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு போன்றவற்றில் செயலாளராக பணியாற்றிய அநுபவம் பற்றி விரிவாக பகிர்ந்து கொள்ள முடியுமா?

பதில்:

முதன் முதலாக 1979ல் கொழும்பில் நடைபெற்ற - இஸ்லாமிய இலக்கியக் கழகம் நடத்திய உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் ஒரு பேராளராகப் பங்கு பற்றியிருக்கிறேன். அப்போது நான் மாணவன். அதற்குப் பிறகு 1999ல் சென்னையில் நடைபெற்ற ஆறாவது மாநாட்டில் கலந்து கொண்டேன். இந்த ஆறாவது மாநாட்டின் போது இலங்கையில் இப்படியொரு மாநாட்டை நடாத்த வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. இது பற்றி அந்த மாநாட்டின் இலங்கை இணைப்பாளர்களில் ஒருவரான டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீனிடம் தெரிவித்தேன். அங்கேயே இலங்கையரைக் கொண்டு ஓர் அமைப்பை ஸ்தாபித்தோம். இலங்கை வந்த பின்னர் சர்வதேச மாநாடு ஒன்று நடத்தப்பட வேண்டுமானால் அதற்கு நிறையப் பணம் தேவை என்பதால் தேசிய ரீதியில் ஒரு மாநாட்டை நடத்தக் கலந்துரையாடல்கள் நடத்தி வந்தோம். இந்தத் தகவலை இளநெஞ்சன் முர்ஷிதீன் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்குத் தெரிவிக்க அவர் எம்மை அழைத்து சர்வதேச மாநாடாகவே நடாத்துங்கள், அதை அரச நிகழ்ச்சியாகவே நடத்துவோம் என்றார். இதன்படி 2002ம் ஆண்டு இந்த மாநாட்டை வெகு சிறப்பாக நடத்தினோம்.

இதில் மூத்த படைப்பாளிகள் 32 பேருக்கு கௌரவம் அறிவிக்கப்பட்டது. இவர்களில் மருதூர்க் கொத்தன், எஸ்.எல்.எம். ஹனிபா ஆகிய இருவரும் இதே காலத்தில் விடுதலைப் புலிகள்  யாழ்ப்பாணத்தில் நடத்திய இலக்கிய மாநாட்டுக்குச் சென்றிருந்த காரணத்தால் 30 பேருக்கு கௌரவமும்  நாற்பது பேர் பாராட்டவும் பட்டனர். இவர்களுக்குள் அடங்காத ஐவருக்குப் பொற்கிழி வழங்கப்பட்டது. மாநாட்டு மலர், கட்டுரைக் கோவை தவிர்ந்த பதினாறு பழைய இஸ்லாமிய இலக்கிய நூல்களும் பதிப்பித்து வெளியிடப்பட்டன.

2011ல் சர்வதேச எழுத்தாளர் மாநாடு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடத்தப்பட்டது. இந்த முயற்சியில் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் லெ.முருகபூபதி மிகுந்த பிரயாசைப் பட்டார். மாநாட்டுக் குழுவுக்கு டாக்டர் தி. ஞானசேகரம் தலைமை வகித்தார். நான் இடை நடுவில் உள்வாங்கப்பட்டவன். மாநாட்டின் செயலாளர் பொறுப்பைக் குழு என்னிடம் ஒப்படைத்தது. என்னால் முடிந்த பங்களிப்பை நான் இதற்கு வழங்கினேன். மாநாட்டு மலர், ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பு ஆகியன வெளியிடப்பட்டன.  யாருக்கும் பொன்னாடையோ கௌரவமோ வழங்கப்படாமல் நான்கு நாட்கள் நடந்த மாநாடு இது.

மருதமுனையில் முதலாவது இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழா நடைபெற்ற காலத்தை வைத்துப் பார்த்தால் 2016ம் ஆண்டு 50வது ஆண்டு நிறைவடைகிறது என்ற தகவலை முதலில் சொன்னவர் கவிஞர் தாஸிம் அகமது. எனவே மீண்டும் ஒரு தேசிய அளவில் ஒரு மாநாட்டை நடத்துவோம் என்று முயற்சித்தோம். இந்தத் தகவலை அமைச்சர் ரிஷாத் பதியுதீ;ன் அவர்களிடம் தனிப்பட்ட ரீதியில் எடுத்துச் சொன்னேன். மாநாட்டுக்கான செலவில் மூன்றில் ஒரு பகுதியை வழங்க அவர் ஒத்துக் கொண்டார். மீதிப் பணத்துக்காக நானும் நண்பர் நாச்சியாதீவு பர்வீனும் பிரதேசம் பிரதேசமாக அலைந்தோம். 2002 மாநாட்டில் கௌரவிக்கப்படாத எழுத்துத் துறையோடு சம்பந்தப் பட்டவர்கள் பெருந் தொகையினர் இந்த மாநாட்டில் கௌரவிக்கப்பட்டனர். மாநாட்டு மலர், ஆய்வுக் கட்டுரைத் தொகுதி ஆகியன வெளியிடப்பட்டன. பணந் தருவதாக வாக்களித்த சிலரை சிலர் புகுந்து இடையில் குழப்பி விட்டார்கள். இதனால் இன்னும் தீர்க்கப்படாத ஐம்பதாயிரம் கடனில்தான் இருக்கிறோம்.

ஒரு சர்வதேச மாநாடு என்பதை பலர் ஒரு விளையாட்டு விழா போல் அல்லது மீலாத் விழா போல்தான் இன்னும் பார்க்கிறார்கள். இந்த எல்லா மாநாடுகளிலும் இனிப்பானதும் கசப்பானதுமான அனுபவங்கள் எனக்கு நிறைய உண்டு. பொது விடயம் என்று இறங்கி விட்டால் அவற்றையெல்லாம் பொருட்படுத்த முடியாது. மூன்று சர்வதேச மாநாடுகளுக்கு செயலாளராக நான் இருந்தேன் என்ற போதும் என்னை வழி நடத்தியவர்கள் மூத்த படைப்பாளிகளே. அதே வேளை முயற்சிகளைக் கொச்சைப்படுத்த முயன்றவர்கள்தாம் எனக்குப் பெரிதும் உந்துகோலாக இருந்தவர்கள். இவர்கள் அனைவருக்கும் நான் நன்றிக் கடனுடையவன்.

கேள்வி:

11. சிறுவர் இலக்கிய நூல்களைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் இதுவரை பல்வேறு விடயங்களிலான பதின்மூன்று நூல்களை எழுதி வெளியிட்டுள்ளீர்கள். வாசிப்பு மந்தமான ஒரு நிலையில் எப்படிச் சமாளிக்கிறீர்கள்?

பதில்:

வாசிப்புப் பெருமளவில் இல்லாத நிலை என்ற போதும் வாசிப்பவர்களும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இதுவரை நான் எழுதிய நூல்களால் நான் நஷ்டமடைந்ததில்லை. ஒரு வெளியீட்டு விழாவை நடத்தினால் அதில் கிடைக்கும் தொகை அந்த வெளியீட்டு விழாச் செலவுகளுக்குத்தான் போதுமானது. ஆனால் எனது நூல்களை வாங்குகிறார்கள், வாசிக்கிறார்கள்.
ஒரு குடம் கண்ணீர், ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள் ஆகிய நூல்கள் தற்போது இரண்டாவது பதிப்பு விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. பட்டாம் பூச்சிக் கனவுகள் வெளிவந்த சில மாதங்களுக்குள்ளேயே விற்றுத் தீர்ந்து விட்டது. தினகரன் பத்திரிகையில் நான் எழுதி வந்த 'தீர்க்க வர்ணம்' ஒரு கட்டம் வரை விற்பனையாகாமல் கிடந்தது. இப்போது என்னிடம் இரண்டே இரண்டு பிரதிகள்தாம் உள்ளன. புத்தகங்கள் மெது மெதுவாகவே விற்பனையாகும்.

கேள்வி:

12. தற்போது கிடைத்துள்ள 'மகரந்தச் சிறகு' விருது, தேசிய சாஹித்திய விருதுகளுக்கு அப்பால் உங்களுக்குக் கிடைத்த விருதுகள் பற்றிச் சொல்வீர்களா?

பதில்:

2011ல் காயல்பட்டினத்தில் தமிழ்நாடு இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகம் நடத்திய மாநாட்டில் 'தமிழ் மாமணி;' என்ற விருதை வழங்கியிருக்கிறார்கள். மறைந்த இசைக்கோ நூர்தீன் - கலைவாதி கலீல் ஆகியோரின் கலைஞர் அமைப்பு 'நவயுக கவிச்சுடர்' என்ற விருதை வழங்கியிருக்கிறது. மன்னார் தமிழ்ச் சங்கம் 2013ம் ஆண்டு தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழாவில் 'எழுத்தியல் கோன்' என்ற விருதை வழங்கியது. ஆனாலும் இவற்றைப் போர்வையாகப் போர்த்திக் கொள்வதில் எனக்குக் கூச்சம் உண்டு.

கேள்வி:

13. தற்போது எழுதிக்கொண்டிருக்கும் இளம் எழுத்தாளர்கள் ஆரோக்கியமற்ற வெறும் சடத்துவப் போக்கில் எழுதுவதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது அது பற்றி உங்களது அபிப்பிராயம் என்ன?

பதில்:

ஒரேயடியாக அப்படிச் சொல்லி விட முடியாது. நாம் ஏணியின் மேலே நின்று கீழே பார்த்து விட்டு அவர்கள் நமக்குச் சமமாக இல்லை என்று சொல்லி விட முடியாது. நாமும் கூட இந்தக் கட்டங்களைத் தாண்டித்தான் வந்திருக்கிறோம். ஆரம்ப எழுத்துக்களில் பெருமளவில் போதாமைகள் இருக்கவே செய்யும். அதே வேளை ஒரேயிடத்தில் சிலர் தரித்து நிற்பதையும் அவதானிக்கிறோம். ஒரே ஒரு நூலை வெளியிட்டு விட்டு மேற்கொண்டு நகராமல், முன்னேறாமல் அதை வைத்து எல்லாக் காலமும் எழுத்தாளனாகப் படம் காட்டுவோரும் இருக்கவே செய்கிறார்கள். ஒருவரின் எழுத்து மேம்பாட்டில்  அவரது அனுபவம், வாசிப்பு, தன்னை இற்றைப்படுத்துவது, அவரது பொருளாதாரம், குடும்பம், தொழில் என்று பல காரணிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. எல்லாச் சிக்கல்களும் அறுத்து மேலே வராதவர்களால் இத்துறையில் வெற்றி பெற முடியாது.

உங்களது கேள்வியின் பின்னணியில் இன்னொரு விடயம் உண்டு. இளந் தலைமுறையினர் சிலர் யாராவது இந்திய எழுத்தாளர் ஒருவரின் புத்தகத்தை வாங்கி அதை டீப்போயில் வைத்து, ஒரு தேனீர் கோப்பையும், பேனையும் வைத்துப் படம் எடுத்து முகநூலில் அப்டேற் செய்யும் நோய் உள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்களில் பலர் அந்தப் புத்தகத்தை வாசிப்பது கூடக் கிடையாது. இவர்கள் இலங்கை எழுத்தாளர்களுக்கு ஒரு செய்தியைச் சொல்ல விழைகிறார்கள். 'இலங்கை எழுத்தாளரெல்லாம் எழுதுவதை நாங்கள் படிப்பதில்லை, இதுதான் இலக்கியம். இதைத்தான் நாங்கள் படிப்போம்' என்பதுதான் அந்தச் செய்தி. இது முகநூல் வந்த பிறகு சிலருக்குத் தொற்றிய குணப்படுத்தவே முடியாத வைரஸ் கிருமி.

இன்னும் சிலர் தமிழக முன்னணிச் சஞ்சிகைகளில் வரும் கவிதைகள் போல் எழுதுவதே இலக்கியத்தின் உச்சம் என்று கருதி எழுத முனைந்து சுயம் அற்றுப் போனவர்கள். மற்றும் சிலர் இலக்கியத்தில்  உடனடியாக உச்சத்தை அடைந்து விட வேண்டும் மற்றவரின் கவனத்தைக் கவர வேண்டும் என்ற ஆர்வத்தில் அவர்களுக்கும் புரியாமல் வாசிப்பவனுக்கும் புரியாமல் எதையாவது கிறுக்கிக் கொண்டிருப்பார்கள்.  மேலும் சிலர் எதுவும் எழுதாமல் முன்னோடி எழுத்தாளர்களை சீண்டிப் பார்ப்பவர்கள். இவையெல்லாம் தம்மை ஓர் அறிவாளியாக, புத்தி ஜீவியாக, எல்லாம் அறிந்த ஏகாம்பரமாகக் காட்டிக் கொள்ள மேற்கொள்ளும் வெட்கங்கெட்ட முயற்சிகள். கவிதை, கவிதை என்று கிறுக்கிக் கொண்டிருக்கும் பலர் பாரதியார் கவிதைகளைக் கூடப் படிக்காதவர்களாக இருக்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை எனது பேரப்பயல் எனது கட்டில் மெத்தையில் பாய்ந்து குஸ்தியடிப்பதைப் பார்ப்பதுபோல் இவற்றைப் பார்த்து நான் ரசித்துக் கொண்டிருக்கிறேன்.

கேள்வி:

14. இன்றைய இளைய தலைமுறையினருக்காக உங்களைப்பற்றி கூறமுடியுமா?

பதில்:

நான் பிறந்தது 1960ம் ஆண்டு. எனது சொந்த ஊர் ஓட்டமாவடி. ஆரம்பக் கல்வியை அப்போது ஓட்டமாவடி முஸ்லிம் மகாவித்தியாலயமான தற்போதைய தேசிய, மத்திய கல்லூரியாக விளங்கு ஓட்டமாவடி மத்திய கல்லூரியில். பிறகு ஏ.எல். வரை வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் கற்றேன். (தற்போது இந்தக் கல்லூரிக் கட்டடத்தில்தான் கிழக்குப் பல்கலைக் கழகம் அமைந்துள்ளது.) 1976ல் பேருவளை ஜாமிஆ நளீமியாவில் நுழைந்து 1979ல் வெளியேறினேன். அதே ஆண்டில் ஆசிரியர் பணியில் அமர்ந்தேன். பண்டாரவளை கல்வி வலயத்துக்குட்பட்ட பஸறைப் பாடசாலைகளில் கற்பித்தேன். 1983ல் பலாலி அரசினர் ஆசிரிய கலாசாலையில் உடற்கல்விப் போதனாசிரியனாகப் பயின்றேன். பயிற்சிக்குப் பிறகு 1985ல் கொழும்புப் பாடசாலையில் கற்பித்தேன்.

1993ல் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தில் அதிகாரம் பெற்ற அலுவராகத் தெரிவானேன். 2005 வரை அதில் கடமை புரிந்தேன். 2007 முதல் 2010 வரை அனர்த்த நிவாரண அமைச்சரின் இணைப்புச் செயலாளராகப் பணியாற்றினேன். 2015 முதல் 2017 வரை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ். அமீ;ர் அலியின் நாடாளுமன்றச் செயலாளராகப் பணியாற்றினேன். அவர் எனது இளைய சகோதரருமாவார்.

இதற்கிடையில் 1986ல் இலங்கை வானொலி தமிழ்ச் சேவையில் ஒரு பகுதி நேர அறிவிப்பாளனாகச் சேர்ந்தேன். 1991 முதல் 2002 வரை இலங்கை ரூபவாஹினியில் செய்தி வாசிப்பாளராக இருந்தேன். இதே காலப் பகுதியில் சர்வதேச கிரிக்கற் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளின் நேர்முக வர்ணனையாளராகவும் இருந்தேன். இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் இப்போது பிரதி சனிக்கிழமையும் ஒலிபரப்பாகும் இலக்கிய மஞ்சரி நிகழ்ச்சியை நடத்தி வருகிறேன்.

கேள்வி:

15. இளம் எழுத்தாளர்களுக்கு நீங்கள் கூறும் ஆலோசனைகள் என்ன?

பதில்:

வாசியுங்கள். வாசிக்காமல் எழுதாதீர்கள்.


(தினகரன் - வாரமஞசரியில் 23.02.2020 அன்று வெளிவந்த நேர்காணலின் முழுமையான வடிவம்)



இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: